பொதுப் பதற்றக் குறைபாடு (GAD)

Q

பொதுப் பதற்றக் குறைபாடு (GAD) என்றால் என்ன?

A

ஏதேனும் ஒரு பரீட்சை அல்லது நேர்முகத் தேர்வு என்றால் நம் எல்லாருக்கும் பதற்றம் ஏற்படும், சிலர் நிதி விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவார்கள், சிலர் அலுவலகத்தில் கொடுத்த வேலையை நேரத்திற்குச் செய்வது பற்றிக் கவலைப்படுவார்கள். இந்த வகையாக தினந்தோறும் நாம் சந்திக்கும் பதற்றம் இயல்பானது, சொல்லப்போனால் அது நாம் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. ஆனால் பொதுப் பதற்றக் குறைபாடு (GAD) கொண்ட ஒருவர் நீண்ட காலக் கட்டத்துக்கு தன்னுடைய கவலை தொடர்வது போல் உணர்கிறார், எந்தக் காரணமும் இல்லாமல் கவலைப்படுகிறார். இந்த உணர்வுகளை அவர்களால் கட்டுப்படுத்த இயலாது. பெரும்பாலான சூழ்நிலைகளில் தங்களுடைய பதற்றத்துக்கு அவசியமே இல்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. உதாரணமாக தினசரி வேலைகளைப் பூர்த்தி செய்வதுப் பற்றிச் சிந்தித்தால் கூட அவர்களுக்குப் பதற்றம் ஏற்படும்.

Q

GADயின் அறிகுறிகள் என்ன?

A

GADயின் அறிகுறிகள் மற்ற பதற்றக் குறைபாடுகளின் அறிகுறிகளைப் போலவே அமையும். மிகப் பொதுவான அறிகுறிகள்:

  • பழகுமுறை அறிகுறிகள்: அந்த நபருக்கு எளிதில் எரிச்சல் ஏற்படும், எளிதில் திடுக்கிடுவார், கவனம் செலுத்துதலில் அவருக்குச் சிரமம் ஏற்படும்.

  • உடல் சார்ந்த அறிகுறிகள்: உடல் சார்ந்த அறிகுறிகளாவன களைப்பு, குமட்டல், தலைவலி, உடல்வலி, வியர்வை, மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம்.

உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது இந்த அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் அவர்களுடன் பேசி அவர்கள் நிபுணர்களின் உதவியைப் பெறவேண்டும் என்று சொல்ல முயற்சி செய்யலாம்.

Q

GADக்கான காரணங்கள் என்ன?

A

மற்ற பல மனநலப் பிரச்னைகளைப் போலவே GADயின் சரியான காரணமும் அறியப்படவில்லை. ஆராய்ச்சிகளை வைத்துப் பார்க்கும்போது மூளையின் சில பகுதிகளும் நரம்புக் கடத்திகளும் பயம், பதற்றத்தை உண்டாக்குவதில் பங்கு பெறலாம் எனத் தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் பெற்றோரில் ஒருவருக்கு மன நலப் பிரச்சனை இருந்திருந்தால் குழந்தைக்கும் பதற்றப் பிரச்னை வர வாய்ப்புண்டு. உளவியல் சார்ந்த காரணிகளான தினசரி அழுத்தம், பணி அழுத்தம், நிதிப் பிரச்னைகள் போன்றவையும் GADஐ உண்டாக்கலாம். அதே சமயம் GADக்கு இது தான் காரணம் என உறுதியாக எதனையும் சொல்ல இயலாது.

Q

GADக்குச் சிசிச்சை பெறுதல்

A

GAD ஒருவருக்கு மிகுந்த சிரமங்களை உண்டாக்கலாம், ஆனால் அதைக் குணப்படுத்த இயலும். GADஐக் குணப்படுத்துவதற்கு மருந்துகள் அல்லது உளவியல் சிகிச்சை அல்லது இரண்டும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சை (CBT) GADஐக் குணப்படுத்துவதற்கான ஒரு மிகச்சிறந்த சிகிச்சை என அறியப்பட்டுள்ளது. மருந்துகளைச் சாப்பிடுவது ஒருவர் பதற்றத்தின் பிடியைக் கையாள உதவும்.

Q

GADகொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்வது

A

உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது GADயின் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் குணமாவதற்கு நீங்கள் நிறைய உதவி செய்ய இயலும். முதலில் நீங்கள் இந்தக் குறைபாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும், அதன்மூலம் அவர் எப்படிப்பட்ட உணர்வுகளை அனுபவிக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். அவரிடம் நிபுணருடைய உதவியைப் பெறுமாறு சொல்லி ஊக்கம் தாருங்கள்; அவருக்குச் சிகிச்சை எப்படிச் சிறப்பாக உதவும் என்பதைப் பற்றி அவருக்குச் சொல்லுங்கள். மருத்துவரைச் சந்திக்கச் செல்லும்போது நீங்களும் உடன் வருவதாகச் சொல்லி ஆதரவு தாருங்கள்.

Q

GADஐச் சமாளித்தல்

A

GADயின் அறிகுறிகளைச் சமாளிக்க பல சுய உதவி உத்திகள் இருந்தாலும் அவர்கள் முதலில் ஒரு மன நல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெற்றுத் தங்களை முழுமையாகப் பரிசோதித்துக் கொண்டு தேவைப்படுகிற சிகிச்சைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வது நல்லது. அவர்கள் சிகிச்சையுடன் சமாளிக்கும் உத்திகளைப் பயன்படுத்தலாம், சிகிச்சைக்குப் பதிலாக சமாளிக்கும் உத்திகளைப் பயன்படுத்தக் கூடாது. பதற்றத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு மருந்துகளும், தன்னை இயல்பாக்கிக் கொள்கிற உத்திகளும் நன்கு பயன்படும். தொலைநோக்கில் பார்த்தால் ஒட்டுமொத்தமாகப் பதற்ற நிலைகளைக் குறைப்பதற்கும் இது உதவும். ஆரோக்கியமாகச் சாப்பிடுவது, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூங்குவது போன்ற பழக்கங்களின் மூலம் அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொண்டால் அது இந்தப் பிரச்னையின் மீது நேர்விதமான தாக்கத்தை உண்டாக்கும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org