தூக்க அப்னியா

Q

தூக்க அப்னியா என்றால் என்ன?

A

தூக்க அப்னியா (தூக்கத்தில் மூச்சு நின்று, நின்று வருதல் / விட்டு விட்டு வருதல்) என்பது தூக்கம் தொடர்பான ஒரு குறைபாடு. இதனால் பாதிக்கப்பட்டிருப்பவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவருடைய மூச்சு பலமுறை நின்று மீண்டும் இயங்கத் தொடங்குகிறது.

தூக்க அப்னியாவில் இரண்டு வகைகள் உண்டு:

தடை செய்யும் தூக்க அப்னியா (OSA): இந்தப் பிரச்னை கொண்டவர்களுடைய மூச்சுக் குழாய் (ட்ராச்சியா) அடைக்கப்படுகிறது, அதனால் அவர்கள் குறட்டை விடத் தொடங்குகிறார்கள். இதுதான் இந்தக் குறைபாட்டின் மிகப்பொதுவான வடிவம்.

மையத் தூக்க அப்னியா (CSA): இந்தப் பிரச்னை கொண்டவர்களுடைய மூளை, அவர்களுடைய மூச்சுவிடுதலைக் கட்டுப்படுத்துகிற தசைகளுக்கு உரிய சமிக்ஞைகளை அனுப்புவதில்லை, அதனால் அவர்களுடைய மூச்சுவிடுதல் நின்றுபோகிறது.

OSA பிரச்னைகொண்ட பலர், தங்களுக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதையே அறிந்திருப்பதில்லை, இந்தப் பிரச்னை வரும்போது அவர்கள் தொடர்ந்து குறட்டைவிடுகிறார்கள், சற்றே திரும்பிப் படுத்தவுடன் பழையபடி மூச்சுவிடத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஆனால் CSA என்பது சற்றே தீவிரமானது, பொதுவாக, இந்தப் பிரச்னை கொண்டவர்கள் தங்களுக்கு இப்படி ஒரு பிரச்னை வந்திருக்கிறது என்பதை உணர்வார்கள், மூச்சுத் திணறுவதுபோலவோ மூச்சு அடைபட்டிருப்பதுபோலவோ உணர்வார்கள், தூக்கத்திலிருந்து விழித்து எழுந்துவிடுவார்கள்.

தூக்க அப்னியா பிரச்னை கொண்ட எல்லாருக்கும் குறட்டைப் பிரச்னை இருக்கும் என்றோ, குறட்டைப் பிரச்னை கொண்ட எல்லாரும் தூக்க அப்னியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றோ நினைத்துவிடக்கூடாது. இது தீவிரமான பிரச்னைக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு குறைபாடுதான், ஆனால் இதனைக் குணப்படுத்த இயலும்.

Q

தூக்க அப்னியாவின் அறிகுறிகள் என்ன?

A

தூக்க அப்னியா பிரச்னை கொண்ட ஒருவரால் தனக்கு இந்தப் பிரச்னை வந்திருப்பதைத் தானே கண்டறிய இயலாது, காரணம் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதுதான் இந்த அறிகுறிகள் பெரும்பாலும் நிகழ்கின்றன. அதே சமயம் சில அறிகுறிகளை வைத்து அவர்கள் இதனைக் கண்டறியலாம்:

  • பகல் நேரத்தில் தூக்கக்கலக்கமாக உணர்தல்: இரவு நன்றாகத் தூங்கியபிறகும் ஒருவர் பகல் நேரத்தில் மிகவும் தூக்கக் கலக்கமாக உணர்கிறார் என்றால், அவர் தூங்கும்போது அவருக்கே தெரியாமல் சுவாசத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம், அதனால் அவர்களுடைய தூக்கம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
  • தூக்கத்தின்போது மூச்சுத் திணறுதல் அல்லது மூச்சடைப்பு:  இந்தப் பிரச்னை கொண்டவர்கள் இரவு நேரத்தில் திடீரென்று மூச்சுத் திணறி அல்லது மூச்சடைப்போடு எழுந்து உட்கார்வார்கள், அல்லது அவர்களோடு அதே அறையில் உள்ளவர்கள் 'நீங்கள் தூக்கத்தின்போது அடிக்கடி மூச்சுத் திணறுவது போல் அல்லது மூச்சு அடைப்பதுபோல் ஒலி எழுப்புகிறீர்கள்' என்று சொல்வார்கள்.
  • காலை நேரத்தில் தலைவலிகள், உலர்ந்த வாய்: இந்தப் பிரச்னை கொண்டவர்கள் தூங்கி எழுந்திருக்கும்போது அவர்களுக்குத் தலைவலி அடிக்கடி வரும், வாய் உலர்ந்து காணப்படும் அல்லது தொண்டை புண்ணாகி இருக்கும்; இவை அனைத்தும் அவர்கள் தூங்கும்போது அவர்களுடைய சுவாசம் பாதிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.
  • சத்தமாகக் குறட்டைவிடுதல்: இந்தப் பிரச்னை கொண்டவர்கள் அடிக்கடி சத்தமாகக் குறட்டைவிடுகிறார்கள் என்று அவர்களோடு அதே அறையில் உறங்குபவர்கள் சொல்லக்கூடும்.
  • அடிக்கடி எரிச்சலுடனும் மோசமான மனோபாவத்துடனும் காணப்படுதல்: இந்தப் பிரச்னை கொண்டவர்கள் அடிக்கடி பிறர்மீது எரிச்சல்படுவார்கள் அல்லது மோசமான மனோபாவத்துடன் நடந்துகொள்வார்கள், இதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய தூக்கம் பாதிக்கப்படுவதுதான்.

உங்களுக்குத் தெரிந்த யாராவது தொடர்ந்து அதிகமாகக் குறட்டை விடுகிறார்கள் அல்லது மூச்சுத் திணறல், மூச்சடைப்பு அறிகுறிகளுடன் தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுந்துவிடுகிறார்கள் என்றால் நீங்கள் அவர்களிடம் இதுபற்றிப் பேசவேண்டும், தூக்க அப்னியா பற்றி விளக்கி, அதற்கான நிபுணரின் ஆலோசனையை அவர்கள் பெறவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும்.

Q

தூக்க அப்னியா எதனால் ஏற்படுகிறது?

A

தூக்க அப்னியாவின் மிகவும் பொதுவான வகை தடை செய்யும் தூக்க அப்னியா அல்லது OSA.

ஒருவருடைய மேல் சுவாசக்குழாயின் தசைகள் தளர்வடைந்து, அவருடைய நாக்கு பின்னே சென்று, அவர் உள்ளிழுக்கக்கூடிய காற்றின் அளவைக் கட்டுப்படுத்தும்போது OSA நிகழ்கிறது. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் குறட்டைவிடத் தொடங்குவார். காரணம் கூடுதல் விசை காரணமாக அவருடைய நாக்கின் பின்பகுதியில் இருக்கும் திசு அதிரத் தொடங்குகிறது, அதுவே குறட்டையாக வெளிப்படுகிறது.

சில நேரங்களில் இந்தப் பிரச்னை கொண்டவர்கள் மூச்சுத் திணறியோ அல்லது மூச்சடைத்தோ எழுந்து உட்காரலாம், சிறிதுநேரம் கழித்து மீண்டும் தூங்கத் தொடங்கலாம்.

கழுத்துப் பகுதியில் கூடுதல் கொழுப்பு உள்ளவர்களுக்கு OSA பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம், காரணம் இந்தக் கொழுப்பு அவர்களுடைய மூச்சுக் குழாயில் அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது; புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் OSA அடிக்கடி வரும்.

OSAவை உண்டாக்கக்கூடிய மற்ற அம்சங்கள் உயர் ரத்த அழுத்தம், உடல் எடை அதிகமாக இருத்தல் மற்றும் முதுமை.

OSAஉடன் ஒப்பிடும்போது மையத் தூக்க அப்னியா குறைவாகதான் காணப்படுகிறது. மையத் தூக்க அப்னியா அல்லது CSA வயதானவர்களில் அதிகம் காணப்படுகிறது, ஆனால்  CSAன் முக்கிய காரணங்கள் இதய நோய், பக்கவாதம் மற்றும் சில நரம்பியல் நோய்கள் போன்ற தீவிரப் பிரச்னைகளாக உள்ளன. CSA பிரச்னை கொண்டவர்கள் பெரும்பாலும் தங்களுடைய தூக்கப் பிரச்னையைப்பற்றி அறிந்திருப்பார்கள், காரணம் இந்தப் பிரச்னை வரும்போது அவர்களுடைய மூச்சு முழுவதுமாக நின்றுவிடுகிறது, அவர்கள் முழுமையாக எழுந்து உட்கார்ந்துவிடுகிறார்கள்.

Q

தூக்க அப்னியாவிற்குச் சிகிச்சை பெறுதல்

A

ஒருவருக்கு வந்திருக்கும் தூக்க அப்னியா மிகவும் தீவிரமானதாக இல்லாவிட்டால் மருத்துவர் அவருக்குச் சில எளிய வாழ்க்கைமுறை மாற்றங்களை தான் பரிந்துரைப்பார், உதாரணமாக அவருடைய உடல் எடையைக் குறைக்கச் சொல்வார், அல்லது அவருடைய புகைப்பிடிக்கும் பழக்கத்தை அல்லது மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தச் சொல்வார். சிலருக்குத் தூக்க அப்னியா பிரச்னை அவர்கள் மல்லாக்கப் படுத்துத் தூங்கும்போதுதான் ஏற்படும். அதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்களுக்கு நிலை சார்ந்த சிகிச்சை வழங்கப்படும், அதாவது அவர்கள் பக்கவாட்டில் திரும்பிப் படுப்பதற்கு வழிவகை செய்யப்படும். இந்த எளிய நிலைகளைக் கடந்து ஒருவருடைய தூக்க அப்னியா பிரச்னை தீவிர நிலையை அடைந்துவிட்டால் அவருக்குப் பின்வரும் சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்று சிபாரிசு செய்யப்படலாம்:

  • தொடர்ச்சியான, நேர்விதமான மூச்சுக் குழாய் அழுத்தம் (CPAP): இந்தச் சிகிச்சையில், பாதிக்கப்பட்டவருக்கு ஒரு முகமூடி தரப்படுகிறது, அந்த முகமூடியில் காற்று தொடர்ந்து பாய்ந்துகொண்டே இருக்கும், அது அவருடைய மூச்சுக் குழாயை எப்போதும் திறந்த நிலையில் வைக்கும். இதன்மூலம் அவர் இரவு முழுவதும் சௌகர்யமாக மூச்சுவிட இயலும், ஆனால் இப்படி முகமூடி அணிந்துகொண்டு தூங்குவதற்கு அவர் பழகுவதற்குச் சில நாள்கள் ஆகலாம்.
  • வாயில் செலுத்தப்படும் கருவிகள்: சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டென்ட்டல் ரீடெய்னர்ஸ் போன்ற ஒரு கருவி தரப்படும், இதை அவர்கள் தங்களுடைய வாயில் பொருத்திக் கொள்ளவேண்டும், இந்தக் கருவி அவர்களுடைய நாக்கை அதன் இடத்தில் வைக்கிறது, அது மூச்சுவிடுவதைத் தடை செய்யாதபடி பார்த்துக்கொள்கிறது, இதே கருவி அவர்களுடைய தாடையையும் முன்னோக்கி நகர்த்துகிறது.
  • அறுவைச் சிகிச்சை: சில நேரங்களில் பாதிக்கப்பட்டவருடைய நாக்கிற்குப் பின்பக்கத்தில் இருக்கும் திசுவை அறுவைச் சிகிச்சை செய்து நீக்கிவிடுவார்கள் அல்லது குறைத்துவிடுவார்கள். அப்போது, அவர் தூங்கும்போது நாக்கின் பின்பகுதியில் உள்ள திசு அவருடைய மூச்சுக் குழாயைத் தடுக்காது. சில நேரங்களில் பாதிக்கப்பட்டவருடைய தாடையையும் இடம் மாற்றி அமைப்பார்கள், அதன்மூலம் நாக்கிற்குப் பின்னால் போதுமான அளவு இடம் இருக்கும், அவரால் எளிதில் மூச்சுவிட இயலும்.

Q

தூக்க அப்னியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

தூக்க அப்னியா பிரச்னை கொண்ட பலர், தங்களுக்கு இப்படி ஒரு குறைபாடு இருப்பதையே உணர்வதில்லை, பெரும்பாலான நேரங்களில் அவர்களோடு தூங்கும் குடும்ப உறுப்பினர்கள்தான் அவர்கள் குறட்டை விடுவதையும், மூச்சுத் திணறல், மூச்சடைப்போடு எழுந்து உட்கார்வதையும் கவனிக்கிறார்கள், அல்லது அவர்களுடன் பணிபுரிகிறவர்கள் பகல் நேரத்தில் அவர் தூக்கக் கலக்கத்துடன் இருப்பதைக் கவனிக்கிறார்கள். இந்தப் பிரச்னை கொண்ட ஒருவரை நீங்கள் கவனித்துக் கொள்ளவேண்டுமென்றால் நீங்கள் அவர்களிடம் இந்தக் குறைபாட்டைப்பற்றிப் பேச வேண்டும், இதற்கு நிபுணரின் உதவி பெறவேண்டும் என்று ஊக்கப்படுத்தவேண்டும். இந்தப் பிரச்னை கொண்டவர்கள் பிறர் மீது எரிச்சல்படுவது இயல்பு என்பதால், அவர்கள் சிகிச்சை பெறும்போது நீங்கள் மிகவும் பொறுமையுடன் இருக்கவேண்டும், அவர்களுக்கு ஆதரவும் அரவணைப்பும் வழங்கவேண்டும்.

Q

தூக்க அப்னியாவைச் சமாளித்தல்

A

தூக்க அப்னியா என்பது தீவிரமான பிரச்னையைக் கொண்டுவரக் கூடிய ஒரு குறைபாடு. இதனால் பாதிக்கப்பட்டவருடைய செயல்திறனையே இது குறைத்துவிடும்.

தூக்க அப்னியா பிரச்னை கொண்டவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து, அதன் அழுத்தத்தைக் குறைக்கலாம். உதாரணமாக அவர்கள் ஆரோக்கியமான உடற்பயிற்சிப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், அவர்களுடைய உடல் எடை கட்டுக்குள் வரும், இது அவர்களுடைய OSA பிரச்னையை ஓரளவு கட்டுப்படுத்தும்.

தூக்க அப்னியா பிரச்னை கொண்டவர்களுக்கு புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கம் இருந்தால்  அவர்கள் அதை விட்டுவிடுவது நல்லது. அவர்கள் தூங்கும்போது மல்லாக்கப் படுத்துத் தூங்காமல் பக்கங்களில் திரும்பித் தூங்குவதற்கு முயற்சி செய்யவேண்டும், அப்போதுதான் அவர்களுடைய நாக்கு பின்னே நகர்ந்து அவர்களுடைய மூச்சுக் குழாயின் மேல்பகுதியைத் தடுக்காமல் இருக்கும்.

இங்கே சொல்லப்பட்டிருக்கும் மாற்றங்கள் அனைத்தும் இரண்டாம்பட்சம்தான், இந்தப் பிரச்னை கொண்ட ஒருவர் அதற்காகச் செய்யவேண்டிய முதல் வேலை ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதுதான்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org