யோகாசனம் எனக்கு ஆரோக்கியத்தைத் தந்தது

கர்ப்பகாலம் என்பது நிறைய மகிழ்ச்சியும் குறிப்பிடத்தக்க பதற்றமும் நிறைந்த காலகட்டம். கர்ப்பமாக உள்ள ஒரு பெண் தன் குழந்தைக்கு எதுவெல்லாம் சரியோ அதையெல்லாம் செய்ய விரும்புகிறார். குழந்தைக்கு எது சரி என்பதைப்பற்றி அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் அறிவுரை சொல்லத்தொடங்குகிறார்கள், அவரைச்சுற்றியுள்ள எல்லாரும் அவரை மேலும் அக்கறையுடன் கவனித்துக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ, அவர் தன்னைவிடத் தன்னுடைய குழந்தைமீது அதிக கவனம் செலுத்தத் தொடங்குகிறார்.

எனக்கும் இதே அனுபவம்தான். நான் முதன்முறையாகக் கர்ப்பமானபோது, நான் ஓர் MNCயில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன், அத்துடன், யோகாசனமும் சொல்லித்தந்துகொண்டிருந்தேன். யோகாசன வகுப்புக்கு நெடுநேரம் பயணம் செய்யவேண்டியிருந்தது. ஆகவே, நான் அதை நிறுத்திவிட்டேன். இப்படித் திடீரென்று என் வாழ்க்கைமுறை மாறியதாலும், என் அலுவலகத்தில் எனக்கு வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்புகளாலும், கர்ப்பமான சில மாதங்களில் எனக்கு ஹைபோதைராய்டிஸம் வந்தது. இதற்காக எனக்குச் சில மருந்துகள் தரப்பட்டன.

நான் கர்ப்பமானபோது என் எடை 50கிலோ. அடுத்த சில மாதங்களில், நான் 78கிலோவைத் தொட்டேன். என்னுடைய ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தது. குழந்தை பிறந்தபிறகு என்னைப் பார்க்கவந்த நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாரும் என் எடையைப்பற்றிதான் பேசினார்கள். கொஞ்சம்கொஞ்சமாக, என்னுடைய தன்னம்பிக்கை குறைந்தது.

பிரசவத்தின்போது நிகழ்ந்த சில தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளால் எனக்குச் சிசேரியன்தான் செய்திருந்தார்கள். ஆனாலும், குழந்தை பிறந்து எட்டே வாரங்களில் நான் யோகாசனத்தைத் தொடங்கினேன். மன உறுதி, யோகாசனத்தைப் பயன்படுத்தி நான் விரும்பியதை ஆரோக்கியமானமுறையில் எட்டுவேன் என்று நான் எனக்கும் பிறருக்கும் நிரூபிக்க விரும்பினேன். என் மகனுக்கு ஒரு வயதானபோது, என் தைராய்ட் அளவுகள் இயல்பான நிலையை எட்டியிருந்தன, நான் மருந்துகள் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தேன், கர்ப்பத்தின்போது என் உடலில் சேர்ந்த எடையில் பெரும்பகுதியைக் குறைத்திருந்தேன்.

நான் இரண்டாவதுமுறை கர்ப்பமானபோது, யோகாசனத்தையே முழுநேரத் தொழிலாக ஏற்றுக்கொண்டேன். இதனால், என்னால் ஆரோக்கியமாக இருக்கமுடிந்தது. இந்தமுறை தைராய்ட், BP, எடை உயர்வு என்று எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லாம் நல்லபடியாக நடந்தது. பிரசவம் நடந்து எட்டு வாரங்களில் நான் மீண்டும் வகுப்புகளைத் தொடங்கினேன்.

அழுத்தத்தைக் கையாளுதல்

பல பெண்களால் கர்ப்பக்காலகட்டத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள இயலுவதில்லை. அவர்கள் அதனை ஒரு நோய்போல நினைக்கிறார்கள். இதற்குக் காரணம், அழுத்தம்தான். இந்த ஒன்பது மாதங்களில் அழுத்தத்தை உண்டாக்கும் பொதுவான சிந்தனைகள், உடல் செயல்பாடுகள் இவை:

முதல் ட்ரைமெஸ்டர்: உடல்சார்ந்த ஆரோக்கியப்பிரச்னைகள் (குமட்டல், களைப்பு, காலைநேரத்தில் வாந்தி, மயக்கம்). தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்ற உண்மையை அந்தப்பெண் ஜீரணித்துக்கொளவே சிறிதுகாலமாகும், அதன்பிறகுதான் அவர் அதற்காகத் தன்னுடைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளத் தொடங்குவார். முதன்முறையாகக் குழந்தை பெறப்போகும் பெண்கள் கர்ப்பம், பிரசவத்தை எண்ணிப் பதற்றம்கொள்ளக்கூடும்.

இரண்டாவது ட்ரைமெஸ்டர்:  முதுகுவலி, குழந்தை நல்லபடியாகப் பிறக்கவேண்டுமே என்கிற பதற்றம்

மூன்றாவது ட்ரைமெஸ்டர்: முதுகுவலி, கால், கைகள் வீங்குதல், படபடப்பு, பிரசவத்தை எண்ணிப் பதற்றம்

மகிழ்ச்சியான தாய், மகிழ்ச்சியான குழந்தை

கர்ப்பமாக உள்ள ஒரு பெண் தன்னுடைய குடும்பத்தினரின் உடல் மற்றும் உணர்வு ஆதரவைப் பெறவேண்டியது அவசியம். கர்ப்பமாக உள்ள சில பெண்கள், முதல் ட்ரைமெஸ்டரின்போது களைப்பாக, குமட்டலாக உணர்வார்கள், மூன்றாவது ட்ரைமெஸ்டரின்போது கனமாக, உப்பியிருப்பதுபோல் உணர்வார்கள். இரண்டாவது ட்ரைமெஸ்டரின்போதுதான் பெரும்பாலான பெண்கள் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியோடும் இருப்பார்கள். அதுதான் உடற்பயிற்சியைத் தொடங்கவேண்டிய நேரம். இதுபோன்ற நேரத்தில் மிக நல்ல, மிகப் பாதுகாப்பான உடற்பயிற்சி, யோகாசனம்.

கர்ப்பகாலத்தில் யோகாசனம் செய்தால், நோய் எதிர்ப்புச்சக்தி மேம்படும், தன்னம்பிக்கை பெருகும், ரத்தவோட்டம் அதிகரிக்கும். இதனால் மூச்சும் ஒழுங்காகும். ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனத்துக்கு வழிவகுக்கும், அதேபோல் ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடலுக்கு வழிவகுக்கும். கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணுக்குள் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன. சில பெண்களுக்குத் தைராய்ட் பிரச்னைகள் வருகின்றன, கர்ப்பகால நீரிழிவுப்பிரச்னை வருகிறது, அல்லது, அவர்களுடைய ரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தும் அழுத்தம் தொடர்பானவை, இவற்றை யோகாசனத்தால் குணப்படுத்தலாம்.

"மனஹ் ப்ரசன்ன உபாய யோகா": யோகா என்பது, மகிழ்ச்சியான மனத்துக்கான பாதை. கர்ப்பமாக உள்ள ஒரு பெண் ஆசனங்கள், பிராணாயாம உத்திகள் மற்றும் க்ரியாக்களைக் கற்றுக்கொண்டு தன்னுடைய எண்ண வேகத்தைக் கட்டுப்படுத்தினால், அவரது பதற்றம் குறையும். நேர்விதமான மனப்போக்கினால் அழுத்தத்தை வெல்லும் ஒரு பெண் தன்னம்பிக்கையாகவும் சுறுசுறுப்பாகவும் உணர்கிறார்.

கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு உதவக்கூடிய சில ஆசனங்கள், பிராணாயாமங்கள் இவை:

(குறிப்பு: கர்ப்பகாலத்தில் யோகாசனம் செய்ய விரும்பும் பெண்கள் முதலில் தங்களுடைய மகப்பேறு மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசவேண்டும். அவர்கள் தங்களால் இயன்ற ஆசனங்களைமட்டுமே செய்யவேண்டும், பயிற்சிபெற்ற நிபுணர் ஒருவருடைய கண்காணிப்பில்மட்டுமே யோகாசனத்தில் ஈடுபடவேண்டும்.)

படகோனாசனம் அல்லது பட்டாம்பூச்சி ஆசனம்

இந்த ஆசனத்தைக் கர்ப்பத்தின் ஒன்பது மாதங்களிலும் செய்யலாம்

முறை:

  • தரைக்குச் செங்குத்தாக அமரவேண்டும்

  • இப்போது, முழங்கால்களை வளைத்துத் தங்களுடைய பாதங்களை ஒன்றாகக் கொண்டுவர முயற்சிசெய்யவேண்டும்.

  • தொடைகளை மேலும் கீழும் நகர்த்தவேண்டும். மூச்சைக் கவனிக்கவேண்டும்

உபவிஸ்ட கோனாசனம் அல்லது இழுக்கப்பட்ட கோணம்

இந்த ஆசனத்தை முதல் மற்றும் இரண்டாவது ட்ரைமெஸ்டரின்போது செய்யலாம். மூன்றாவது ட்ரைமெஸ்டரின்போது இந்த ஆசனத்தைச் செய்தால், முதுகுக்கு ஆதாரம் கொடுக்கவேண்டும், உதாரணமாக, சுவரில் சாய்ந்து உட்காரவேண்டும்.

முறை:

  • தரைக்குச் செங்குத்தாக அமரவேண்டும். கால்களை இயன்றவரை அகல விரிக்கவேண்டும்.

  • மெதுவாக, இரண்டு கைகளையும் தொடைகளில் வைக்கவேண்டும், முதுகுத்தண்டுக்கு ஆதரவளிக்கவேண்டும்

  • இப்போது, இடக்கையை உயர்த்தி மெல்ல வலப்பக்கம் உடலை நீட்டவேண்டும்

  • அடுத்து, வலக்கையை உயர்த்தி, இதையே இடப்பக்கம் செய்யவேண்டும்

  • இது ஒரு சுற்று ஆகும். இப்படி தினமும் 5 சுற்றுகள் செய்யலாம்

பூனை அல்லது புலி மூச்சுவிடல்:

இந்த ஆசனத்தைப் பிரசவக்காலம்முழுவதும் செய்யலாம்.

முறை:

  • இரண்டு கைகள், இரண்டு கால்களால் நிற்கவேண்டும். கைகள், தொடைகள், குதிகால்கள் ஆகியவை தோள்களுக்கு நேர்கோட்டில் இருக்கவேண்டும்

  • இப்போது, மூச்சை நன்கு வெளிவிடவேண்டும், கழுத்தைக் கீழே நகர்த்தி முதுகெலும்பைக் குழிக்கவேண்டும்

  • மூச்சை உள்ளிழுக்கவேண்டும், மேலே கூரையைப்பார்க்கவேண்டும்

  • மூச்சை ஒழுங்குபடுத்தவேண்டும்

  • இது ஒரு சுற்று ஆகும். இப்படி ஒரு நாளைக்குச் சுமார் 5-7 சுற்றுகள் செய்யலாம்

குழந்தை பிறந்தபிறகு

ஒன்பது மாதம் காத்திருந்து குழந்தை பிறந்துவிட்டது, இப்போது, வீட்டுக்குத் திரும்பும் பெண் தன்னுடைய உலகமே தலைகீழாக மாறியிருப்பதை உணர்வார். பொதுவாகப் புத்தகத்தில் படிப்பதும் நிஜத்தில் நிகழ்வதும் ஒன்றோடொன்று பொருந்துவதில்லை, குறிப்பாக, குழந்தை வளர்ப்பைப் பொறுத்தவரை இது சற்றும் பொருந்தாது, தன்னைக் கவனித்துக்கொள்வது, குழந்தையைக் கவனிப்பது என அனைத்திலும் அவர் திகைப்பைச் சந்திப்பார்.

இந்தக் காலகட்டத்தில், ஒரு பெண்ணுக்கு நிறைய ஆதரவு தேவை. அடுத்த சில வாரங்கள், அவருடைய வாழ்க்கையே குழந்தையைக் கவனித்துக்கொள்வதைச் சுற்றிதான் அமையும். உடலளவிலும் உணர்வளவிலும் அவர் களைத்துப்போவார். ஒருவேளை அவருடைய குழந்தை புதிய சூழலைச் சமாளித்து வளர்கிறது என்றால், தாய்க்குக் கொஞ்சம் சிரமம் குறைவு. இல்லையென்றால், குழந்தைவளர்ப்பு பெரிய சிரமமாகிவிடும். இதுபற்றி நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின்படி பார்த்தால், பத்தில் ஒரு பெண்ணுக்குப் பேறுகாலத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு வருகிறது. குழந்தை பிறந்த முதல் வாரத்திலேயே இந்தப் பிரச்னை வரலாம், அல்லது, அடுத்த ஆறு மாதங்களுக்குள் எப்போதுவேண்டுமானாலும் வரலாம், பொதுவாக இதனை யாரும் கவனிப்பதே இல்லை. சமூகம் அமைத்திருக்கிற தர அளவுகோல்களின்படி, தாய்மார்களால் சரியான நேரத்தில் உதவிகோர இயலுவதில்லை. 'என்னால் என் குழந்தையைக் கவனித்துக்கொள்ள இயலவில்லை' என்று சொன்னால் சமூகம் என்ன நினைக்குமோ என்று அவர் கவலைப்படுகிறார். மற்றவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்களோ என்ற பயத்தில், உதவிகோராமலிருந்துவிடுகிறார். இதுபோன்ற நேரத்தில் அந்தத் தாய்க்குப் போதுமான ஆதரவு கிடைக்காவிட்டால், அவர் குழந்தையிடமிருந்து மனத்தளவில் விலகியிருப்பதாக உணரக்கூடும், அல்லது, குழந்தையைக் கையில் எடுக்கவோ, கவனித்துக்கொள்ளவோ விருப்பமில்லாமலிருக்கக்கூடும். பல தாய்மார்கள் தாங்கள் தங்களுடைய குழந்தையைக் கொன்றுவிடுவோமோ, காயப்படுத்திவிடுவோமோ என்றுகூட நினைக்கிறார்கள். அவர்கள் சத்தம்போட்டுக் கத்த விரும்புகிறார்கள், அல்லது, காரணமில்லாமல் அழ எண்ணுகிறார்கள். கர்ப்பகாலத்தில் யோகாசனம் செய்கிற பெண்களுக்கு இந்தப் பிரச்னைகள் வரும் வாய்ப்புக் குறைவு. காரணம், அவர்கள் அமைதியாக இருக்கவும், எதையும் வற்புறுத்தாமல் வாழ்க்கையை அதன்போக்கில் விடவும் கற்றுக்கொள்கிறார்கள்.

குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் ஆறு அல்லது எட்டு வாரங்களில் யோகாசனம் செய்யத்தொடங்கலாம். இதனால், அவர்கள் அமைதியாவார்கள், உடல் அவர்கள் பேச்சைக்கேட்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சில யோகாசனங்கள் கர்ப்பப்பையைச் சுருக்க உதவுகின்றன, கர்ப்பகாலக் கொழுப்பை ஒழுங்குபடுத்துகின்றன. கர்ப்பமாக உள்ள பெண்ணின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது, ஹார்மோன் நிலைகளைச் சமநிலைப்படுத்துவது ஆகியவற்றுக்கும் யோகாசனம் உதவுகிறது.

பல நேரங்களில், மருத்துவர்கள் கர்ப்பிணிப்பெண்களின் உடல்நலத்தைமட்டுமே கவனிப்பார்கள், அவரது உணர்வுத் தேவைகளைப்பற்றி அதிகப்பேர் பேசுவதில்லை. பிரசவத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஒரு பெண்ணுக்கு ஆதரவு தேவைப்பட்டால், அவர் சரியான நபரை அணுகவேண்டும். அவருக்கு அசாதாரணமான எண்ணங்கள் ஏற்பட்டால், அல்லது, அவரது நடவடிக்கைகள் அசாதாரணமாக அமைந்தால், அவர் தனது மருத்துவரிடம் பேசவேண்டும், அந்த மருத்துவர் அவரை ஓர் ஆலோசகர், ஒரு பயிற்சிபெற்ற யோகா ஆசிரியரிடம் அனுப்பி வழிகாட்டுவார். இதன்மூலம், தாய், குழந்தை இருவருடைய நலனும் காக்கப்படுகிறது. யோகாசனத்தைப் பின்பற்ற, நல்லநேரத்தைத் தேடிக் காத்திருக்கவேண்டியதில்லை. எல்லா நேரமும் நல்லநேரம்தான்! கர்ப்பமாக இருக்கும் ஒருவர் யோகாசனம் செய்ய விரும்பினால், பயிற்சிபெற்ற தெரபிஸ்ட் ஒருவரை அணுகுவது நல்லது.

கர்ப்பகாலத்தில் யோகாசனம் செய்ய விரும்பும் பெண்கள் முதலில் தங்களுடைய மகப்பேறு மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசவேண்டும். பயிற்சிபெற்ற நிபுணர் ஒருவருடைய கண்காணிப்பின்கீழ்மட்டுமே இந்த ஆசனங்களைச் செய்யவேண்டும், தங்களால் இயன்ற ஆசனங்களைமட்டுமே செய்வது நல்லது.

நயனா காந்த்ராஜ், 'பிம்பா யோகா'வின் நிறுவனர். பெங்களூரில் கர்ப்பகால யோகா வகுப்புகளை வழங்கிவருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் யோகாசனம் கற்றுத்தருகிறார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org