பேறுகாலத்துக்குப்பிந்தைய மனச்சோர்வு: தெரிந்ததும் தெரியாததும்

ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றால், அவருக்குப் பலரும் பல விஷயங்களைச் சொல்வார்கள். இங்கே 'பலர்' என்றால், குடும்பத்தினர், புத்தகங்கள், இணையத்தளங்கள், ஏற்கெனவே குழந்தை பெற்ற நண்பர்கள்... கர்ப்பமாக இருக்கும் பெண் என்ன சாப்பிடவேண்டும், என்ன சாப்பிடக்கூடாது... எப்படி உடற்பயிற்சி செய்யவேண்டும், எவ்வளவு உடற்பயிற்சி செய்யவேண்டும்... எதை உடுத்தலாம், எதைத் தவிர்க்கவேண்டும், எந்தெந்த மருந்துகளைச் சாப்பிடவேண்டும், எந்தச் செயல்முறைகளைப் பின்பற்றவேண்டும்... இப்படி அவர்கள் பல விஷயங்களைச் சொல்வார்கள். ஆனால், பேறுகாலத்துக்குப்பிந்தைய மனச்சோர்வுபற்றி அவர்கள் ஒரு வார்த்தைகூடச் சொல்வதில்லை.

எனக்கு மகள் பிறந்தாள், சுகப்பிரசவம்தான். அவள் பிறந்து சிலநாள்களுக்குப்பிறகு, குழந்தைக்குத் தேவையான அளவு என்னிடம் பால் சுரக்கவில்லை என்பதை நான் அறிந்துகொண்டேன். அதே நேரத்தில், அவளுக்குக் 'காலிக்' எனும் பிரச்னை இருப்பதும் தெரியவந்தது. ஒருவேளை, தாய்ப்பால் போதாததால்தான் அந்தப் பிரச்னை வந்ததோ என்று ஒரு கேள்வி எழுந்தது, அப்படி இருக்காது என்று தெரியவந்தது. என்னுடைய பிரச்னைக்கும் அவளுடைய பிரச்னைக்கும் வெவ்வேறு தீர்வுகள் முன்வைக்கப்பட்டன, நாங்களும் அதையெல்லாம் முயன்றுபார்த்தோம், எதுவும் சரிப்படவில்லை. இனிமேல், வேறு எதுவும் செய்ய இயலாது, இரவு நேரத்தில் குழந்தை ஏழுமணிநேரம் தொடர்ந்து அழுவாள், அதற்கு எந்த மருந்தும் கிடையாது, மூன்று மாதம் கழித்து, அந்தப் பிரச்னை தானாகக் குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதேபோல், எனக்குப் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காததும் என்னுடைய பிரச்னை அல்ல என்று அவர்கள் தெரிவித்தார்கள். குழந்தைக்குத் தரப்படும் செயற்கை உணவுகளும் தாய்ப்பால்போல் நல்லவைதான் என்றார்கள். எனக்குத் தாய்ப்பால் அதிகம் சுரக்காததற்குக் காரணம், நான் அதைப் "போதுமான அளவு விரும்பவில்லை" என்று ஊகித்தார்கள். பொதுவாகப் படித்த பெண்கள் "இதைப்பற்றி மிக அதிகம் சிந்திப்பதால்" அவர்களிடம் சுரக்கும் தாய்ப்பாலின் அளவு குறைந்துவிடுவதாகச் சொன்னார்கள். குறிப்பாக, அந்தக் கடைசிக் கருத்து... அதைச் சொன்னவர் ஒரு பிரபலமான, அனுபவமிக்க குழந்தை மருத்துவர், அவர் முதியவரும்கூட. நீங்கள் ஊகித்தது சரிதான், அவர் ஓர் ஆண்.

அப்போது, பலரும் பல விஷயங்களை என்னிடம் சொன்னார்கள். ஆனால், ஒரு பெண் இதையெல்லாம் கேட்டு முழுமையாக உடைந்துபோவது இயல்புதான் என்று என்னிடம் யாரும் சொல்லவில்லை. யோசித்துப்பாருங்கள், ஒருபக்கம் பிரசவம் தந்த வலி, இன்னொருபக்கம் களைப்பு, உடல்நிலை சரியில்லாத குழந்தை, இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய போதாமைதானோ என்கிற உணர்வு... இவை அனைத்தும் ஒரு வினோதமான அழகிப்போட்டியில் நடந்துவருகிறவர்களைப்போல் அடுத்தடுத்து என் மனத்தில் வந்துபோயின. இதனால் நான் மிகவும் களைத்துப்போனேன். இந்த உணர்வுகள் இயல்புதான் என்று எனக்கு யாரும் சொல்லவில்லை.

ஆகவே, எனக்குக் குற்றவுணர்ச்சியும் வந்தது. மற்ற பல பெண்களோடு ஒப்பிடும்போது, எனக்குச் சிக்கலில்லாத பிரசவம் கிடைத்தது, அதையெண்ணி நான் மகிழ்ந்தேனா? இப்போது, அதை நினைத்து எனக்குக் குற்றவுணர்ச்சியாக இருந்தது. அழுதுகொண்டிருக்கும் என்னுடைய மகளை முதன்முறையாகக் கையில் வாங்கியபோது, தடையற்ற மகிழ்ச்சியை நான் உணர்ந்தேனா? இப்போது, அதை நினைத்து எனக்குக் குற்றவுணர்ச்சியாக இருந்தது. என் பிரசவத்தின்போது என் பெற்றோர் எனக்கு உதவினார்கள், அதற்கு நான் நன்றியுணர்ச்சியோடு இருந்தேனா? இப்போது, அதை நினைத்து எனக்குக் குற்றவுணர்ச்சியாக இருந்தது. என்னிடம் எந்த பதில்களும் இல்லை. அதை நினைத்து எனக்குக் குற்றவுணர்ச்சியாக இருந்தது. எனக்கு உதவ யாருமே இல்லை என்று நான் உணர்ந்தேன், சோர்ந்துபோனேன், களைத்துப்போனேன், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநாடியும் சிரமமாக இருந்தது. இதற்குக் காரணம், குழந்தை பிறந்தவுடன் நான் கலப்படமற்ற மகிழ்ச்சியை உணரவேண்டும் என்று என் குடும்பத்தினர், நண்பர்கள், புத்தகங்கள் எனக்குச் சொல்லியிருந்தார்கள். அந்த மகிழ்ச்சியில் சிறிது குறைந்தாலும் தவறு என்று அவர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனால் நானோ, வருத்தத்திலும் கோபத்திலும் இருந்தேன். இது இன்னும் பெரிய தவறல்லவா? அநேகமாக என்னிடம்தான் ஏதோ பிரச்னை இருக்கவேண்டும்.

அந்த "ஏதோ பிரச்னை" என்பது, பேறுகாலத்துக்குப் பிந்தைய மனச்சோர்வாக இருக்கலாம் என்று எனக்கு ஒருமுறைகூடத் தோன்றவில்லை. பிரசவம், குழந்தைவளர்ப்புபற்றிய புத்தகங்களில் நான் அதைப்பற்றிப் படித்திருந்தேன். ஆனால் அது எனக்கு நடக்காது என்று நான் நம்பினேன். நான்தான் எல்லாம் சரியாகச் செய்துவிட்டேனே! சரியான உணவுகளை உண்டேன், கர்ப்பகால யோகாசனங்களைச் செய்தேன், பிரசவ நாள்வரை சுறுசுறுப்பாக இருந்தேன், தவிர்க்கவேண்டிய எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டேன். எல்லாம் சரியாகதான் இருந்தது. தவிர, நான் உண்மையிலேயே மனச்சோர்வோடு இருக்கிறேனா என்ன? கொஞ்சம் மனம் சரியில்லை. அவ்வளவுதான். அது இயல்பான விஷயம்தானே?

பிரசவம், குழந்தைவளர்ப்புபற்றிய புத்தகங்கள், இணையத்தளங்கள் போன்றவை "குழந்தை பிறந்தபிறகு கொஞ்சம் ப்ளூ-வாக உணர்வது சகஜம்தான்" என்கின்றன. காரணம், கர்ப்பகாலத்தின்போது பெண்ணுக்குள் சுரந்த மகிழ்ச்சி ஹார்மோன்கள் எல்லாம், குழந்தை பிறந்ததும் வெளியே வந்துவிடுகின்றன. எனக்கு அந்தக் குழப்பமான பதம் பிடித்திருந்தது. "கொஞ்சம் ப்ளூ". அதாவது, "இன்றைக்கு நான் ஷாப்பிங் செல்ல விரும்பவில்லை. கொஞ்சம் ப்ளூவாக உணர்கிறேன். ஆகவே, இங்கேயே உட்கார்ந்து நான் ஒரு கப்கேக் சாப்பிடப்போகிறேன்." ஆனால், நான் அனுபவித்தது "கொஞ்சம் ப்ளூ" அல்ல. மிக மிகத் தீவிரமான உணர்வுகள் அவை, மிகவும் கடினமான தினங்கள். "கடவுளே, என்னால் இனிமேலும் இதைத் தாங்கமுடியவில்லை. நான் ஒரு மோசமான தாய். நான் நிறைய பப்பாளிப்பழம் சாப்பிடவேண்டும்" என்று நான் உணர்ந்த நாள்கள் அவை. (காரணம், பப்பாளிப்பழம் நிறைய சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும் என்று எல்லாரும் என்னிடம் சொல்லியிருந்தார்கள். ஆனால் எனக்கு, பப்பாளிப்பழமே பிடிக்காது. முன்பைவிட, இப்போது இன்னும் அதிகம் பிடிக்காமல்போய்விட்டது.)

உண்மையாகச் சொல்வதென்றால், அப்போது எனக்குப் பேறுகாலத்துக்குப்பிந்தைய மனச்சோர்வு வந்திருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்தில் என்னைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது என்று என் கணவர் சொல்கிறார். நான் அவரை நம்புகிறேன். நானும் அதை அனுபவித்திருக்கிறேன், இல்லையா? இன்னொரு விஷயம், ஒருவேளை எனக்குப் பேறுகாலத்துக்குப்பிந்தைய மனச்சோர்வு வந்திருந்தால், நான் அதிலிருந்து எளிதில் விடுபட்டுவிட்டேன் என்று நம்புகிறேன். அந்தக் காலகட்டத்தில் ஒருமுறைகூட நான் என் மகள்மீது கோபப்படவில்லை. அவளைக் காயப்படுத்தவேண்டும் என்று நான் ஒருமுறைகூட நினைக்கவில்லை. பேறுகாலத்துக்குப்பிந்தைய மனச்சோர்வைத் தீவிரமாக அனுபவிக்கும் சில பெண்கள் அப்படிதான் எண்ணுவார்களாம். மற்றவர்களைவிட, அந்தத் தாய்க்கு அது மிகக்கொடூரமான அனுபவமாக இருக்கும். அத்துடன், சமூகமும் அவர்மீது பல அழுத்தங்களைச் சுமத்துகிறது: பிரசவத்துக்குப்பின் அவருடைய உடல் சரியாக இல்லை என்கிறது, பேறுகால விடுமுறை முடிந்துவிட்டதால், அலுவலகத்தில் சம்பள இழப்பு ஏற்படுகிறது, இதற்குநடுவே சிலர் கொஞ்சமும் வெட்கமில்லாமல், 'அடுத்த குழந்தை எப்போ?' என்று கேட்கிறார்கள்.

இப்படி இன்னும் ஏதேதோ அனுபவங்கள்.

பேறுகாலத்துக்குப் பிந்தைய மனச்சோர்வைக் கொஞ்சம் அனுபவித்திருக்கிறேன் என்பதால் சொல்கிறேன், கர்ப்பமாக இருக்கும் எல்லாப் பெண்களுக்கும் அவர்களுடைய கணவன்மார்களுக்கும் இதுபற்றிய ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும். ஆம், தந்தைமார்களும் இதற்குத் தயாராகவேண்டும். இதனால் பெண்களுக்கு வரும் மனச்சோர்வைத் தடுத்துவிட இயலாதுதான். ஆனால், அவர்கள் அதில் மூழ்கிவிடாதபடி காக்கலாம்.  

வேதஶ்ரீ கம்பெடெ-ஷர்மா "There May Be An Asterisk Involved" என்ற புத்தகத்தின் ஆசிரியர், மும்பையில் ஒரு விளம்பர நிறுவனத்தில் படைப்பாளி இயக்குநராகப் பணிபுரிகிறார், இரண்டு வயதுக் குழந்தையொன்றின் தாய். இதற்காகத் தனக்கொரு பதக்கம் வழங்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால், யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை.  

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org