கர்ப்பம், பிரசவம், குழந்தை: சில தவறான நம்பிக்கைகள்

கர்ப்பம், குழந்தை தொடர்பான பல சடங்குகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆபத்தில்லாத விஷயங்கள். அவை பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகின்றன. பல குடும்பங்கள் இந்தச் சடங்குகளைத் திவீரமாகப் பின்பற்றுகிறார்கள். இவற்றில் சில சடங்குகள் தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஓர் உறுதியான அறிவியல் அடிப்படையைக் கொண்டுள்ளன. உதாரணமாக: தாய் 'ஓய்வெடுப்பது' மற்றும் 'குழந்தைக்கு மசாஜ் செய்வது' போன்றவை.

ஆனால், வேறு சில சடங்குகள், செயல்முறைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றினால், தாய், சேய் நலன் மிகவும் பாதிக்கப்படக்கூடும்.

தவறான நம்பிக்கை: பிள்ளைப்பேறுக்குப்பிறகு நிறைய தண்ணீர் குடித்தால் ஆபத்து.

உண்மை: குழந்தைப்பேறுக்குப்பின் தாயின் உடலுக்குத் தண்ணீர் தேவை. அப்போதுதான் அவருக்கு மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்னைகள் வராமலிருக்கும். அவருக்குத் தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் இது உதவுகிறது. உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாவிட்டால், தீவிர நரம்பியல் பிரச்னைகள் வரக்கூடும். இவை சைக்கோசிஸ் அல்லது சித்தப்பிரமையாக வெளிப்படக்கூடும்.

தவறான நம்பிக்கை: புதிதாகக் குழந்தை பெற்ற பெண்கள் இருவருக்காக உண்ணவேண்டும்.

உண்மை: புதிதாகக் குழந்தை பெற்ற சில தாய்மார்களுக்கு அதிகம் பசிக்கும். இந்த நம்பிகைக்கும் அதற்கும் தொடர்புண்டு என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், தாய்மார்கள் சரிவிகித உணவை உண்ணவேண்டும் என்றுதான் நிபுணர்கள் சொல்கிறார்கள். இத்துடன், அவர்கள் போதுமான அளவு உடற்பயிற்சியிலும் ஈடுபடவேண்டும், அப்போதுதான் அவர்களுடைய எடை அதிகரிக்காமல் இருக்கும், அதனால் வேறு ஆரோக்கியப் பிரச்னைகள் வராது.

தவறான நம்பிக்கை: கர்ப்பிணிப்பெண்கள் வெண்மையான, அதிகக் காரமில்லாத உணவுகளையே உண்ணவேண்டும். 'கருப்பான உணவுகளை' உண்டால், குழந்தையின் தோலின் நிறம் பாதிக்கப்படும்.

உண்மை: உணவின் நிறத்துக்கும் குழந்தையின் தோல் நிறத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதேசமயம், மசாலாப்பொருள்கள் அதிகமுள்ள உணவுகளை உண்டால், புதிய தாய்மார்களுக்கு அசிடிட்டி பிரச்னை வரலாம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.     

தவறான நம்பிக்கை: சில கலாசாரங்களில், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வெற்றிலையும் சுண்ணாம்பும் தரப்படுகிறது.

உண்மை: சுண்ணாம்பில் கால்சியம் உள்ளது. அது தாயின் உடல்நலத்துக்கு நல்லது. இதனை அளவாகக் கொடுப்பது ஒரு நல்ல பழக்கம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

தவறான நம்பிக்கை: கர்ப்பிணிப்பெண்கள் மாலை 6 மணிக்குமேல் வெளியே செல்லக்கூடாது. அப்படிச்சென்றால் தாயையும் குழந்தையையும் பேய் பிடித்துவிடும்.

உண்மை: இந்த வாசகத்தை ஆதரிக்கக்கூடிய அறிவியல் சான்று ஏதும் இல்லை.

தவறான நம்பிக்கை: கர்ப்பமான ஏழாவது மாதத்தில் செய்யப்படும் சீமந்தம்/வளைகாப்பு குழந்தையின் காதுகேட்கும் திறனை மேம்படுத்தும்.

தவறான நம்பிக்கை: சீமந்தம்/ வளைகாப்பின்போது தாய்க்குக் கண்ணாடி வளையல்களைத் தருவார்கள். இதனால் குழந்தையின் அனிச்சைசெயல்கள் மேம்படும்.

உண்மை: சீமந்தத்துக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் இடையே உறவு இருப்பதாக நிரூபிக்கும் அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை. இந்தச் சடங்கு பெரும்பாலும் தாயின் மனமகிழ்ச்சிக்காக, நலனுக்காக நடத்தப்படுகிறது.

தவறான நம்பிக்கை: தலையைச்சுற்றித் துணிகளைக் கட்டினால், நோய்த்தொற்று வராது, தாயின் வயிற்றைச்சுற்றி ஒரு துணியைக்கட்டினால் இடுப்புத்தளப்பகுதி தொங்காமலிருக்கும்.  

உண்மை: தலையைச்சுற்றி இறுக்கமாகத் துணிகளைக் கட்டினால், கழுத்துப்பகுதியின் அருகே ரத்த ஓட்டம் தடைப்படலாம், இதனால் பெரிய ஆபத்து வரலாம். இதேபோல், வயிற்றைச்சுற்றி ஒரு துணியைக் கட்டுவது இடுப்புச் சதைகள் பதப்படுவதற்கு உதவாது. இடுப்புத்தளச் சதைகளைப் பதப்படுத்துவதற்கு இடுப்புத்தளப் பயிற்சிகள் மற்றும் கெகெல் பயிற்சிகளைச் (http://www.mayoclinic.org/healthy-lifestyle/womens-health/in-depth/kegel-exercises/art-20045283) செய்யலாம்.

ஒரு பெண், கர்ப்பத்தைப்பற்றிய எந்தவொரு தீவிரச் சடங்கையும் பின்பற்றுவதற்குமுன், தன்னுடைய மகப்பேறு மருத்துவரிடம் பேசுவது நல்லது. குறிப்பாக, அவரது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் சடங்குகளைப்பற்றிக் கண்டிப்பாகப் பேசவேண்டும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org