உளவியல் குறைபாடுகள்

கடந்த 100 ஆண்டுகளாக, மனநலத்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு அறிவியல் ஆய்வுகள், நடவடிக்கை ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு, கவனத்தையும் சிகிச்சையையும் கோருகிற பல்வேறு மனநலச் சூழல்கள் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. ஒருவரிடம் காணப்படும் அறிகுறிகளை வைத்து, அவருக்கு ஒரு குறிப்பிட்ட குறைபாடு இருப்பதாக மருத்துவர் தீர்மானிக்கலாம். ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மூளையின் எந்தப் பகுதி பொறுப்பாக உள்ளது என்பதும் நமக்கு இப்போது தெரிகிறது.

சர்வதேச அளவில், மனநலக் குறைபாடுகளை அடையாளம் கண்டு வகைப்படுத்தும் இரு முக்கிய அமைப்புகள் உள்ளன: உலகச் சுகாதார அமைப்பு பதிப்பிக்கும் சர்வதேச நோய் வகைபாட்டின் (ICD-10) அத்தியாயம் V மற்றும் அமெரிக்க மனநல அமைப்பு பதிப்பிக்கும் மனநலக் குறைபாடுகளைக் கண்டறிதல் மற்றும் புள்ளிவிவரக் கையேடு (DSM-5). 250க்கும் மேற்பட்ட தனித்துவமான மனநலக் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுப் பெயரிடப்பட்டுள்ளன.

மனநலம் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகளை எல்லாரும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, இந்தப் பகுதி இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. 'பொதுவான குறைபாடுகள்' என்பதன்கீழ் மனச்சோர்வு சார்ந்த குறைபாடுகள், பதற்றம் சார்ந்த குறைபாடுகள் ஆகியவை இடம்பெறுகின்றன. 'வாழ்க்கை நிலைக் குறைபாடுகள்' என்பதன்கீழ் குழந்தைப்பருவக் குறைபாடுகள், முதுமைப்பருவக் குறைபாடுகள் இடம்பெறுகின்றன. ஸ்கிஜோஃப்ரெனியா அல்லது குறுகியகால உளவியல் குறைபாடு போன்றவை 'பிற குறைபாடுகள்' என்பதன்கீழ் விளக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள ஒவ்வொரு தலைப்பிலும் வொய்ட் ஸ்வான் குழுவினர் விரிவான ஆய்வுகளை நிகழ்த்தி, அந்தந்தத் துறைசார்ந்த நிபுணர்களுடன் பேசி, இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இதுபோல் இன்னும் பல தலைப்புகள் இங்கே சேர்க்கப்படும். இவற்றின் நோக்கம், மனநலக் குறைபாடுகளைப்பற்றிய கேள்விகள் அனைத்துக்கும் எளிமையாகப் பதிலளிப்பதுதான். ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மருத்துவ விளக்கம், அதுசார்ந்த தனிப்பட்ட கதைகள், உதாரண ஆய்வுகள், நிபுணர்களின் கட்டுரைகள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

இவை வாசிப்பவர்களுக்கு அந்தப் பிரச்னைகளை எளிதில் புரியவைக்கும். இங்கே முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம், இந்தப் போர்ட்டலைப் படிக்கிற ஒருவர் தானே தன்னுடைய பிரச்னையைத் தெரிந்துகொண்டுவிட இயலாது, அது இந்தப் போர்ட்டலின் நோக்கமும் இல்லை.

பொதுமக்கள் மனநலப் பிரச்னைகளைப்பற்றிய விழிப்புணர்வைப் பெறவேண்டும், அவை தங்களைச்சுற்றி இருப்பதை அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடனே இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

மற்ற பல உடல்சார்ந்த பிரச்னைகளைப்போலவே, மனநலப் பிரச்னைகளையும் முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை கொடுத்தால் நல்ல பலன் இருக்கும். இந்தக் கட்டுரைகளை வாசித்தபிறகு, மனநலனைப் புரிந்துகொள்ளுதல் என்ற பகுதிக்கு வரலாம், நிபுணர்களின் பங்களிப்பைப்பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளலாம், அந்த விவரங்களைப் பயன்படுத்தி, தனக்கு வந்துள்ள பிரச்னையைத் தீர்க்க உதவி பெறலாம்.