குழந்தைக்கு மனநலப் பிரச்னையா?

நோய்கள் கொடுமையானவைதான். ஆனால், ஒருவிதத்தில் ஒருவருக்கு ஏதோ நோய் வந்திருக்கிறது அல்லது அவரது கணவர்/மனைவி/பெற்றோர்/அண்ணன்/தம்பியைத் தாக்கியிருக்கிறது என்றால் அதைச் சமாளிப்பது கொஞ்சம் எளிது. மாறாக, அவருடைய குழந்தைக்கு ஒரு நோய் அல்லது குறைபாடு வந்துள்ளது என்றால், அது தாளமுடியாத ஒன்றாகிவிடுகிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகளுக்கு வரும் மனநலப் பிரச்னைகளைச் சமாளித்தல் மிகவும் சிரமம். மற்ற பிரச்னைகளைவிட, இந்தப் பிரச்னையைச் சமாளிப்பதில் ஒரு கூடுதல் அடுக்குச் சிக்கல் சேர்ந்துகொள்வதாகத் தோன்றுகிறது. அதற்கு அவசியமே இல்லை. இதைக் கொஞ்சம் தெளிவாகப் புரிந்துகொள்வோம்.

ஒருவருடைய குழந்தைக்கு மனநலப் பிரச்னை வந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவர் எப்படி உணர்கிறார்? பலவிதமான உணர்ச்சிகள் அவரை அலையாகத் தாக்கும்: பயம், பதற்றம், வெட்கம், சங்கடவுணர்வு, குழப்பம், திகைப்பு, நம்பிக்கையின்மை, வலி. இத்துடன் அவருக்குப் பலவிதமான அச்சங்கள் வருகின்றன: அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சம், உலகம் தன்னிடம், தன்னைப்பற்றி, தன் குழந்தையிடம், தன் குழந்தையைப்பற்றி என்னவெல்லாம் சொல்லுமோ என்கிற அச்சம். காலுக்குக்கீழே உலகம் நழுவுகிறது என்பதுபோன்ற உணர்வு. எனக்கு ஏன் இப்படி நடக்கிறது? என் குழந்தைக்கு ஏன் இப்படி நடக்கிறது? மற்றும், குற்றவுணர்ச்சி. அடடா, இதை எப்படி நான் மறந்தேன்? ஒரு பெற்றோர் என்றமுறையில் தான் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்கிற குற்றவுணர்ச்சி, தவறான ஜீன்களை அதற்குத் தந்துவிட்டோமோ என்கிற குற்றவுணர்ச்சி; பிரச்னைக்குக் காரணமாக இருக்கிறோமே என்கிற குற்றவுணர்ச்சி; தான் ஒரு சரியான சூழலை உருவாக்கவில்லையே என்கிற குற்றவுணர்ச்சி; குழந்தைக்கு இப்படியொரு பிரச்னையைத் தந்துவிட்டோமே என்கிற குற்றவுணர்ச்சி.

அப்பாடா! எத்துணை எத்துணை உணர்ச்சிகள்! பெரும்பாலானோர் தங்களுக்கு இப்படிப்பட்ட உணர்ச்சிகள் இருப்பதை அடையாளம் காண்பதுகூட இல்லை, அப்புறம் எப்படி அதைக் கையாளமுடியும்?

ஒருபக்கம் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்ற எண்ணத்துடன் அவர்கள் இருக்கிறார்கள், இன்னொருபக்கம் குழந்தையைப்பற்றித் தாங்கள் கண்டிருந்த கனவுகளையெல்லாம் தாங்களே பாழாக்கிவிட்டோமே என்கிற கவலையோடு இருக்கிறார்கள். என் குழந்தை சுதந்தரமாக வளருமா? அதனால் எண்ணியதையெல்லாம் சாதிக்க இயலுமா? என் குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதன் தந்தை/தாய் என்றமுறையில் என் வருங்காலம் எப்படி மாறும்? ஒரு தனிநபர் என்றமுறையில் என் வருங்காலம் எப்படியிருக்கும்? ஒரு கணவர்/மனைவி என்றமுறையில் என் வருங்காலம் எப்படியிருக்கும்? பல நேரங்களில், இந்தப் பிரச்னையால் திருமண உறவுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன. பெற்றோர் இருவரும், யாரிடமிருந்து 'தவறான' ஜீன் வந்தது என்று சிந்தித்து நோகிறார்கள், ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டத்தொடங்குகிறார்கள். இந்தப் பயனில்லாத விளையாட்டு எல்லார்மத்தியிலும் நடக்கிறது: மிகவும் நன்றாகப் படித்தவர்கள், புத்திசாலிகள்கூட இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை நம்புவது சிரமம்தான்.

'எந்தப் பிரச்னையும் இல்லை' என்று தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்வதால், அவர்களால் சூழ்நிலையை நேருக்கு நேர் சந்திக்க இயலுவதில்லை. இதுபோன்ற நேரங்களில் அவர்கள் செய்யவேண்டியவை: குழந்தைக்கு என்ன பிரச்னை என்பதைப் புரிந்துகொள்வது, இன்னொரு மருத்துவரிடம் பேசி அதனை உறுதிப்படுத்துவது, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பது. இந்தப் பிரச்னையைப்பற்றி அவர்கள் நிறையப் படிக்கவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும், இதை எப்படிக் கையாள்வது, குழந்தைக்கு எப்படி விளக்குவது என்று அறியவேண்டும். அத்துடன், இதனைக் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள், ஆதரவு வலைப்பின்னலில் இருக்கும் பிறருக்கும் விளக்கவேண்டியிருக்கும், அப்போதுதான் குழந்தையைக் கவனிப்பதற்கான ஆதரவு கிடைக்கும். அடுத்தபடியாக, இதனைப் பொதுவான நபர்களுக்கும் விளக்கவேண்டியிருக்கும்.

இதெல்லாம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போது, அவர்கள் தங்கள் மனத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொள்ளவேண்டும், "இது யாருடைய பிழையும் இல்லை: என் பிழை இல்லை, என் குழந்தையின் பிழை இல்லை. இதை ஏற்றுக்கொண்டால்மட்டுமே முன்னோக்கிச் செல்ல இயலும்!" இதை விளக்குவதற்கு, நிபுணர்கள் ஒரு மலர்ச்செடியின் உதாரணத்தைப் பயன்படுத்துவார்கள்: பெரும்பாலான குழந்தைகள் வழக்கமான மலர்ச்செடியைப்போன்றவர்கள், அவர்கள் எங்கேயும் வேரூன்றி வளர்வார்கள். ஆனால், மனநலப் பிரச்னை கொண்ட குழந்தைகளோ, ஆர்ச்சிட் மலர்ச்செடிகள்: அவர்கள் அழகானவர்கள், ஆனால், அவர்களைக் கவனமாகக் கையாளவேண்டும், அவர்களுக்குத் தேவைப்படும் விசேஷ கவனத்தைக் கொடுத்து வளர்த்தால், அவர்கள் மிக அழகாக மலர்வார்கள். 'ஆர்ச்சிட்' வகைக் குழந்தைகளைச் சரியாக வளர்க்கவேண்டும், அவர்களுக்குச் சரியான சூழலைத் தரவேண்டும், அப்போது அவர்கள் படைப்புணர்வுமிக்க, வெற்றிகரமான, அன்பான சமூக உறுப்பினர்களாக வளர்வார்கள்.

இதன் பொருள் என்ன? ஆர்ச்சிட்களை வளர்ப்பதற்கு ஏற்ற சரியான சூழலை எப்படி உருவாக்குவது?

  • இதற்கு முக்கியமான தேவை, ஏற்றுக்கொள்ளுதல் - குழந்தையை ஏற்றுக்கொள்ளவேண்டும், அதற்கு வந்துள்ள பிரச்னையை ஏற்றுக்கொள்ளவேண்டும், தான் ஏதும் தவறுசெய்யவில்லை என்று குழந்தைக்கு உணர்த்தவேண்டும்.
  • குழந்தையின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும், அதன்மீது தீர்ப்புச்சொல்லக்கூடாது. குழந்தைகள் பள்ளியிலும் பிறர்முன்னாலும் தங்களை எப்படியோ சமாளித்துவிடுவார்கள். ஆனால், வீட்டில் அவர்கள் 'உடைந்துபோகக்கூடும்', அதற்குப் போதுமான இடம் வேண்டும், சுதந்தரம் வேண்டும், அனுமதி வேண்டும். குழந்தைகள் இப்படி நடந்துகொண்டால், 'சும்மா நடிக்கிறார்கள்' என்றோ, 'பாதிக்கப்பட்டவர்களைப்போல் பாசாங்கு செய்கிறார்கள்' என்றோ எண்ணிவிடக்கூடாது. அவர்களுடைய தனிநபர் உணர்வுத் தேவைகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும்.
  • அவர்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்கவேண்டும்
  • நிபந்தனையற்ற அன்பை வழங்கவேண்டும்
  • தொடர்ந்து அவர்களுடன் உரையாடியபடியிருக்கவேண்டும். குழந்தைகளிடம் எந்நேரமும் படிப்பைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கக்கூடாது. உணர்வுகள், யோசனைகள், நீதிசார்ந்த குழப்பங்கள், தோல்வியைப்பற்றிக்கூடப் பேசலாம்.
  • குழந்தைகளைத் தாராளமாகப் பாராட்டவேண்டும், உடனடியாகப் பாராட்டவேண்டும், எல்லார்முன்னாலும் பாராட்டவேண்டும், அவர்களுடைய சிறு சாதனைகளைக்கூடப் பாராட்டவேண்டும். ஒருவேளை அவர்களுக்கு ஏதேனும் தண்டனை தரவேண்டியிருந்தால், தனியிடத்தில் தரலாம், மென்மையான தண்டனையாகத் தரலாம்; எதிர்மறைப் பேச்சைவிட, நேர்விதக் கருத்துகள் நல்ல பலன் தரும்.
  • ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது, ஒவ்வொரு குழந்தையின் பலங்களும் மாறுபடும். ஆகவே, பெற்றோர் தங்கள் குழந்தையின் பலங்களைக் கண்டறிவதில் கவனம் செலுத்தவேண்டும்,  இதைப்பற்றி அடிக்கடி பேசவேண்டும்.
  • சமூகரீதியில் குழந்தையை ஆதரிக்கவேண்டும், அவர்கள் உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதில் சிரமப்படக்கூடும். அவர்களுக்குச் சக மனிதர்களுடன் உறவுகளே ஏற்படாவிட்டால், சமூகத்தில் மிகவும் சிரமப்படுவார்கள் அந்தக் கடலில் அவர்கள் பாதுகாப்பாக நீந்துவதற்கு ஒரு கவசம் தேவை, அந்தக் கவசம், பெற்றோர்தான்.
  • மிக முக்கியமாக, குழந்தைக்கும் சரி, பெற்றோருக்கும் சரி, சிறந்த நிபுணரின் ஆலோசனை தேவை.

ஆம், பெற்றோருக்கும் நிபுணரின் ஆலோசனை தேவைப்படும். குழந்தைக்காக இவை அனைத்தையும் செய்வதற்குப் பெற்றோர் தயாராகவேண்டும், அவர்கள் தங்களுடைய உணர்வுகளை ஏற்றுக்கொண்டு, நண்பர்களாக்கிக்கொள்ளவேண்டும். அவர்கள் தங்களைத்தாங்களே கவனித்துக்கொள்ளவேண்டும், தங்களுடைய மனம் சோரும்போதெல்லாம் அதனைப் புதுப்பிக்க முனையவேண்டும். இதையெல்லாம் பார்த்து அவர் மனம் கலங்கிவிடக்கூடாது, 'நான் ஒரு நல்ல தந்தை/தாய் இல்லை, நல்ல கணவன்/மனைவி இல்லை, நல்ல மனிதன் இல்லை, எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம், நான் தோற்றுப்போய்விட்டேன்' என்றெல்லாம் எண்ணக்கூடாது. அவர்களுக்குள் ஏற்படக்கூடிய இதுபோன்ற தேவையில்லாத, பயனில்லாத உணர்வுக் கொந்தளிப்புகளை அவர்கள் நிறுத்தவேண்டும். வாழ்க்கையில் எல்லாருக்கும் பிரச்னைகள் இருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது. எல்லாரும், வாழ்க்கையின் ஏதோ ஒருகட்டத்தில் ஒரு பிரச்னையைச் சந்திக்கிறார்கள், ஆகவே, தாங்கள் தனியாக இல்லை என்பதை அவர்கள் அறியவேண்டும். இப்படி நடந்துவிடுமோ, அப்படி நடந்துவிடுமோ என்றெல்லாம் சிந்தித்துக் கவலைப்படுவதை அவர்கள் நிறுத்தவேண்டும், இந்தக் கணத்தில் வாழப் பழகவேண்டும். காரணம், அவர்கள் என்னதான் முயன்றாலும் வருங்காலத்தைக் கட்டுப்படுத்த இயலாது. மற்ற விஷயங்களுக்குநடுவே, வீட்டிலுள்ள மற்ற குழந்தைகள் இதனைச் சரியாக எடுத்துக்கொள்கிறார்களா என்பதையும் அவர்கள் கவனிக்கவேண்டும், இயன்றால், தங்கள் திருமண உறவும் பாதிக்கப்படாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும். இத்தனையையும் செய்வதற்கு அவர்களுக்கு நிபுணரின் உதவி தேவை.

மௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். மனநலத்துறையில் பணிபுரிவதற்காகத் தனது கார்ப்பரேட் பணியை விட்டவர். பெங்களூரில் உள்ள தி ரீச் க்ளினிக்கில் மௌலிகா பணிபுரிகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு எழுதுங்கள். அதற்கான மின்னஞ்சல் முகவரி: columns@whiteswanfoundation.org. இந்தப் பத்தி பதினைந்து நாளைக்கு ஒருமுறை பிரசுரிக்கப்படும், அப்போது உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org