செரிபரல் பால்சி என்றால் என்ன?
செரிபரல் பால்சி என்பது ஒரு குழந்தையின் மூளை வளர்ந்து கொண்டிருக்கும்போது அதற்கு ஏற்படும் காயம் அல்லது தவறான உருவாக்கத்தின் காரணமாக ஏற்படுகின்ற ஒரு நரம்பியல் குறைபாடு ஆகும். செரிபரல் பால்சி உடல் அசைவுகள், தசைக் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு, அனிச்சைச் செயல்கள், நிற்கிற, உட்கார்கிற நிலை மற்றும் சமநிலை ஆகியவற்றைப் பாதிக்கிறது. குழந்தைப் பருவத்தில் சிலர் தீவிர ஊனம் அடைவதற்கு மிகவும் பொதுவான காரணங்களில் செரிபரல் பால்சி ஒன்றாகும்.
செரிபரல் பால்சிக்குப் பின்வரும் தனித்துவமான பண்புகள் உண்டு:
இந்த நிலையில் உள்ளவர்களுக்கு அதோடு தொடர்புடைய பின்வரும் பிரச்னைகள் வரக்கூடும்:
முக்கிய உண்மைகள்
குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் மிகத் தீவிரமான உடல்/இயக்கவியல் குறைபாடு செரிபரல் பால்சி. உலக அளவில் சுமார் 17 மில்லியன் பேர் செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
செரிபரல் பால்சிக்கான அடையாளங்கள் என்ன?
செரிபரல் பால்சிக்கான அடையாளங்கள் மூளைக் காயம் அல்லது தவறான உருவாக்கம் காரணமாக ஏற்படுகின்றன. இந்த அடையாளங்கள்தான் ஒரு குழந்தைக்கு செரிபரல் பால்சி வந்திருக்கக் கூடும் என்று காட்டுகிற முறைகள் ஆகும். காரணம் செரிபரல் பால்சி பிரச்னை உள்ள குழந்தை மிகவும் இள வயதாக இருக்கும், அதனால் தன்னுடைய பிரச்னைகளைச் சிறப்பாக விவரித்துச் சொல்ல இயலாது. ஆகவே இந்த அடையாளங்களை வைத்துத் தான் அந்தக் குழந்தைக்கு செரிபரல் பால்சி வந்திருக்கக் கூடும் என்று பெற்றோர், நிபுணர்கள் கண்டறிகிறார்கள். பொதுவாகக் குழந்தையின் இயக்கவியல் முன்னேற்றத்தில் தாமதம் இருப்பதைப் பெற்றோர் கண்டறியலாம், மருத்துவர் அந்தக் குழந்தைக்கு வேறு ஏதாவது பிரச்னைகள் இருக்குமா என்று பரிசோதித்து, அவை இல்லை என உறுதி செய்து கொண்டு அதன்பிறகு தான் அதற்கு செரிபரல் பால்சி உள்ளது எனக் கண்டறிவார். இதற்கு மருத்துவ மதிப்பீடுகள் மற்றும் பரிசோதனைகள் பயன்படுகின்றன.
மருத்துவர் இந்தப் பிரச்னை எந்த அளவு குழந்தையைப் பாதித்திருக்கிறது, எந்த இடத்தில் பாதித்திருக்கிறது, எவ்வளவு தீவிரமாகப் பாதித்திருக்கிறது என்பதையும் அதோடு இருக்கக் கூடிய பிற நிலைகளையும் கண்டறிவார். மூளைக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சேதத்தைப் பொறுத்து செரிபரல் பால்சியின் அடையாளங்கள் குழந்தைக்குக் குழந்தை மாறுபடலாம்.
செரிபரல் பால்சியின் அறிகுறிகள் என்ன?
ஒரு குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகளுக்குள் செரிபரல் பால்சியின் அறிகுறிகளைக் காணலாம். செரிபரல் பால்சி வெவ்வேறு குழந்தைகளை வெவ்வேறு உடல் பகுதிகளில் வெவ்வேறு தீவிரத் தன்மையுடன் பாதிக்கக் கூடும். சில குழந்தைகளுக்குச் சிறிய பிரச்னைகள் இருக்கலாம், வேறு சில குழந்தைகள் மிகத் தீவிரமாகப் பாதிக்கப்படலாம். இந்தப் பிரச்னை உள்ள ஒரு குழந்தை தன்னுடைய வளர்ச்சி இலக்குகளை மெதுவாக எட்டலாம். உதாரணமாக தவழக் கற்றுக் கொள்ளுதல், உட்காரக் கற்றுக் கொள்ளுதல், நடத்தல் அல்லது பேசுதல் போன்றவை.
பெற்றோர் தங்களுடைய குழந்தையை கவனமாகப் பார்த்துப் பின் வருவன போன்ற அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும்: அடைத்துக் கொள்ளுதல், பொருள்களைப் பற்றுவதில் சிரமம், உணவுப் பொருள்களை விழுங்குவதில் சிரமம், களைப்பு, எதையும் பிடித்துக் கொள்ளாமல் அமர்வது அல்லது நிற்பது ஆகியவற்றில் பிரச்னைகள், கேட்டல் குறைபாடு அல்லது உடலின் சில பகுதிகளில் காயம் ஏற்படுதல் போன்றவை. இது முழுமையான பட்டியல் அல்ல. இப்படிப் பல அறிகுறிகளைப் பெற்றோர் கவனிக்க வேண்டியிருக்கும்.
செரிபரல் பால்சி எதனால் உண்டாகிறது?
செரிபரல் பால்சியின் சரியான காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது அல்லது அவருடைய பிரசவத்தின் போது அல்லது அவருக்குக் குழந்தை பிறந்து முதல் மூன்று ஆண்டுகளுக்குள் ஏற்படக்கூடிய மூளைச் சேதம் செரிபரல் பால்சியை உண்டாக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செரிபரல் பால்சி குறைபாடு கொண்ட குழந்தைகளில் சுமார் எழுபது சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை வர முக்கிய காரணம் அவர்கள் கர்ப்பத்தில் இருந்தபோது அவர்களுடைய மூளைக்கு ஏற்பட்ட காயம் தான். இந்தக் காயத்தின் தன்மை மற்றும் தீவிரம் ஆகியவை அந்தக் குழந்தையின் இயக்கவியல் செயல்பாடுகள் மற்றும் புத்திசாலித்தனத் திறன்கள் எந்த அளவு பாதிக்கப்படுகின்றன என்பதைத் தீர்மானிக்கின்றன.
மூளைக் காயத்தை உண்டாக்கக் கூடிய சில சாத்தியமுள்ள காரணங்கள்:
செரிபரல் பால்சி எப்படிக் கண்டறியப்படுகிறது?
செரிபரல் பால்சியை உறுதியாகக் கண்டறிவதற்கு எந்தப் பரிசோதனையும் இல்லை. குழந்தையின் மருத்துவ வரலாறை ஆராய்வது, உடல் பரிசோதனைகள் போன்றவற்றின் மூலம் இந்தப் பிரச்னை பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. இந்தப் பிரச்னையை எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டறிவது நல்லது, அப்போதுதான் குழந்தைக்குத் தேவையான சிகிச்சையைத் தந்து பயன்பெற இயலும். பல நேரங்களில் இந்தப் பிரச்னை தாமதமாகவே கண்டறியப்படுகிறது, காரணம் இந்தக் குறைபாட்டைக் கண்டறிவது சிரமம். அத்துடன் முதல் சில ஆண்டுகளில் குழந்தைக்கு வேறு ஏதாவது உடல் சார்ந்த நோய்கள் இருந்தால் அதனால் அறிகுறிகள் மாறக்கூடும், செரிபரல் பால்சியைக் கண்டறிவதற்கு இன்னும் அதிக நாளாகும். சில குழந்தைகள் செரிபரல் பால்சியால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருக்கும்போது அதைக் கண்டறிவது எளிது; குழந்தை பிறந்து ஒரே மாதத்திற்குள் இதனை நிபுணர்கள் கண்டறிந்துவிடுவார்கள். சில குழந்தைகளுடைய பிரச்னை அந்தக் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்குள் கண்டறியப்படுகிறது, மிதமான பாதிப்பைக் கொண்ட குழந்தைகளுடைய பிரச்னை அவர்களுக்கு 3-4 வயதாகும்வரை கண்டறியப்படாமல் போகலாம். மருத்துவர்கள் குழந்தையின் அனிச்சைச் செயல்கள், தசை இறுக்கம், உடல் நிலை, தசைச் சுருக்கம் மற்றும் பிற பண்புகளைப் பரிசோதிப்பார்கள், இவை அனைத்தும் சில மாதங்களில் அல்லது சில ஆண்டுகளில் மேம்படலாம். ஒரு குழந்தைக்குத் தொடக்கநிலை நலப் பராமரிப்பை அளிக்கும் மருத்துவர்கள், அக்குழந்தையின் பெற்றோர் இந்தத் துறை சார்ந்த நிபுணர்களைச் சந்திக்க வேண்டும் என்றோ மூளையின் படத்தைப் பெறுவதற்காகச் சில பரிசோதனைகளைச் செய்யவேண்டும் என்றோ சிபாரிசு செய்யலாம். உதாரணமாக MRI (Magnetic Resonance Imaging), கிரானியல் அல்ட்ரா சவுண்ட்கள் அல்லது CT ஸ்கேன்கள் (Computed tomography ஸ்கேன்கள்) போன்றவை.
ஒரு குழந்தை உரிய நாளுக்கு முன்பாகவே பிறந்திருந்தால் அதனை விரைவில் MRI ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் அதற்கு மூளையில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவரலாம். ஆனால் அதன் தாக்கம் இப்படித்தான் இருக்கும் என அப்போதே சொல்லிவிட இயலாது. ஒரு குழந்தைக்கு "செரிபரல் பால்சி வருகிற ஆபத்து" இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தால் அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே தேவையான சிகிச்சைகளைத் தொடங்கலாம்.
பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்கள்
ஒரு குழந்தைக்குச் செரிபரல் பால்சி உள்ளதா என்று சந்தேகிக்கும்போது அதைப் போலவே அறிகுறிகளைக் கொண்ட மற்ற பிரச்னைகள் அந்தக் குழந்தைக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காகச் சில பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
செரிபரல் பால்சிக்குச் சிகிச்சை பெறுதல்
ஒரு குழந்தை தனது வளர்ச்சி நிலைகளில் ஒன்றை எட்டாவிட்டால் அதை முதலில் கவனிப்பவர்கள் அதன் பெற்றோர் தான். ஏதாவது ஒரு வளர்ச்சி நிலையைத் தங்கள் குழந்தை எட்டாவிட்டால் பெற்றோர் தங்களுடைய குழந்தை மெதுவாகக் கற்றுக் கொள்வதாகவும் விரைவில் அதைக் கற்றுக் கொண்டுவிடும் என்றும் நினைக்கலாம். அதே சமயம் அவர்கள் இதைப்பற்றித் தங்களுடைய குழந்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
செரிபரல் பால்சிக்கு எந்தச் சிகிச்சையும் இல்லை, ஆனால் அதற்கான அறிகுறிகளைக் குணப்படுத்துவதற்குப் பலவிதமான சிகிச்சைகள் உள்ளன. செரிபரல் பால்சியின் வகை, இடம் மற்றும் பாதிப்பின் தீவிரத் தன்மை குழந்தைக்குக் குழந்தை மாறுபடும் என்பதால் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு இணைந்து பணியாற்றி செரிபரல் பால்சி பிரச்னை உள்ள குழந்தைக்கான ஓர் ஒட்டு மொத்த சிகிச்சைத் திட்டத்தை உருவாக்கும். குழந்தை மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், ஆர்த்தோடிஸ்ட்கள் (ஒழுங்காக உருவாகாத பகுதிகளைத் திருத்துவதற்கும் பலவீனமான மூட்டுகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும் சாதனங்களைப் பொருத்திப் பயன்படுத்தச் செய்யும் நிபுணர்கள்), பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளர்கள், பணி சார்ந்த சிகிச்சையாளர்கள், சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி செரிபரல் பால்சி பிரச்னை கொண்ட குழந்தை தன்னுடைய அறிகுறிகளைக் கையாளவும் இயன்றவரை சுதந்திரமாகச் செயல்படவும் உதவுகிறார்கள்.
செரிபரல் பால்சி கொண்ட குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல்
ஒரு குழந்தை பிறக்கும்போது குடும்பத்தில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். அந்தக் குழந்தைக்கு செரிபரல் பால்சி உள்ளது என்பதை அதன் பெற்றோர் தெரிந்து கொள்ளும்போது அது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கலாம், வருங்காலம் பற்றி பெற்றோர் கொண்டிருக்கிற கற்பனைகள் முற்றிலுமாக மாறிவிடலாம். இந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் வெளியே வரச் சிறிது நேரம் ஆகலாம், ஆனால் அவர்கள் கொஞ்சங்கொஞ்சமாக இந்த எதிர்பாராத சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். அவர்கள் முதலில் தங்களுடைய குழந்தையின் நிலையைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும், அதன்மூலம் அவர்கள் விரைவில் சிகிச்சையைத் தொடங்கி நல்ல பலன் பெறலாம்.
செரிபரல் பால்சி கொண்ட ஒரு குழந்தையை வளர்ப்பதும் பார்த்துக் கொள்வதும் மிகவும் சிரமமான பணிகளாக இருக்கலாம், ஆனால் அதை எண்ணி நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. பெற்றோர்தான் தங்கள் குழந்தையின் மிகப்பெரிய ஆதரவாளராக இருக்கவேண்டும், செரிபரல் பால்சியைப்பற்றி அவர்கள் நன்றாகத் தெரிந்துகொண்டால், தங்களுடைய குழந்தைக்கு அவர்கள் பல விதங்களில் உதவலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதரவுக்குழு ஒன்றிலும் அவர்கள் இணையலாம், அங்கே தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களையும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம், பிற பெற்றோரிடமிருந்து அவர்களுடைய அனுபவங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சாத்தியங்களை அதிகப்படுத்துதல்
செரிபரல் பால்சி ஒருவருக்கு வந்துவிட்டால் அது மேலும் மோசமாக வாய்ப்பில்லை. தற்போது இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை எதுவுமில்லை. அதே சமயம் செரிபரல் பால்சி கொண்டவர்கள் மிகப் பெரிய சவால்களைச் சந்தித்துள்ளார்கள், தங்களுடைய திறன்களைப் பயன்படுத்தி லட்சியங்களை எட்டுவது எப்படி என்று கற்றுக்கொண்டுள்ளார்கள். இப்போதெல்லாம் செரிபரல் பால்சி பிரச்னை கொண்ட குழந்தைகள் படிப்பதற்கும் தங்களுடைய பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களில் ஈடுபடுவதற்கும் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் பல மாற்று ஏற்பாடுகள், உதவிக் கருவிகள் உள்ளன.
செரிபரல் பால்சி கொண்ட குழந்தைகள் ஆரம்ப மதிப்பீடுகளை மிகவும் விஞ்சிச் செல்கிறார்கள் என்பதற்குச் சான்று உள்ளது. இந்தக் குழந்தையால் நடக்க இயலாது என்று கண்டறியப்பட்ட ஒரு குழந்தை, நடக்கக் கற்றுக் கொள்ள இயலாமல் தவித்த ஒரு குழந்தை மலையேறும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது. இன்னும் சில குழந்தைகளால் பேசவே இயலாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் நன்கு பேசி, புத்தகங்களை எழுதி, தங்களுடைய புத்திசாலித்தனமான பேச்சின் மூலம் பிறரை நல்லவிதமாகப் பாதித்து முன்னேற்றியுள்ளார்கள். செரிபரல் பால்சி கொண்ட ஒரு குழந்தை தனக்கு ஆர்வம் உள்ள விஷயங்களில் ஈடுபடுவது, அடிப்படையான வாழ்க்கைத் திறன்களை நன்கு கற்றுக் கொள்வது ஆகியவற்றில் பெற்றோர் ஒரு முக்கிய பங்காற்றலாம். இதன் மூலம் அந்தக் குழந்தை ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற இயலும்.
செரிபரல் பால்சியின் வகைகள்
செரிபரல் பால்சியில் நான்கு வகைகள் உள்ளன.