குழந்தைப்பருவம்

துன்புறுத்தப்பட்ட குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளுதல் : செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்ட ஒரு குழந்தையின் பெற்றோர் அல்லது குழந்தையைக் கவனித்துக்கொள்கிறவர் அந்த நிகழ்வை எண்ணி அதிர்ச்சியடைவதும், மரத்துப்போனதுபோல் உணர்வதும் இயல்புதான். அதேசமயம், இந்தச் சூழ்நிலையில் அவர்கள் அமைதியாக இருப்பது முக்கியம்; அவர்களுடைய ஆதரவும் உறுதிப்படுத்துதல் குழந்தையின்மீது துன்புறுத்தலின் தாக்கத்தைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கக்கூடும் என்பதை அவர்கள் தங்களுக்குத் தாங்களே நினைவுபடுத்திக்கொள்வது முக்கியம். NIMHANS குழந்தைகள் உளவியலாணரான டாக்டர் ப்ரீத்தி ஜேக்கப், துன்புறுத்தலைச் சந்தித்துள்ள ஒரு குழந்தைக்குச் செயல்திறனோடு ஆதரவை வழங்க உதவும் சில குறிப்புகளைப் பகிர்ந்துகொள்கிறார்.


செய்யக்கூடியவை:

  • குழந்தையை நம்பவேண்டும்; குழந்தை மீண்டும் பாதுகாப்பாக உணர்வதற்கு உதவவேண்டும்.

  • தன்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு குழந்தையை ஊக்கப்படுத்தவேண்டும். சரியான மற்றும் தவறான உணர்வுகள் என்று ஏதுமில்லை, உணர்வுகளை நம்பத்தகுந்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது உதவிகரமாக இருக்கும் என்பதைக் குழந்தை புரிந்துகொள்ளும்படி செய்யவேண்டும். துன்புறுத்தியவரைப்பற்றிக் குழந்தைக்கு ஒன்றுக்கொன்று மாறுபட்ட மற்றும் தெளிவற்ற உணர்வுகள் இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும், குறிப்பாக, குழந்தையைத் துன்புறுத்தியவர் குடும்பத்துக்குள் இருப்பவராக இருந்தால் இந்த உணர்வுகள் குழம்பிக் காணப்படுவது இயல்புதான். தொடக்கத்திலிருந்தே, தங்களுடைய உணர்வுகளை ஒரு சரியான முறையில் அடையாளம் காணவும் வெளிப்படுத்தவும் குழந்தைகளுக்குக் கற்றுத்தருவது முக்கியம்.

  • தனக்கு ஆதரவை நாடவேண்டும். இதுபோன்ற ஒரு பயங்கரமான அனுபவத்தை ஏற்றுக்கொள்வது எளிதில்லை. தீர்க்கவேண்டிய பல எதார்த்தமான பிரச்னைகளும் இருக்கலாம். இதனால் திகைப்பு உண்டாவது இயல்புதான்; பெற்றோர் அல்லது குழந்தையைக் கவனித்துக்கொள்வோர் தங்களுக்காக ஓர் ஆதரவு வலைப்பின்னலைக் கண்டறிவது முக்கியம்; தேவைப்பட்டால், அவர்கள் நிபுணர்களுடைய உதவியையும் நாடலாம்.

செய்யக்கூடாதவை:

  • துன்புறுத்தல் அனுபவத்தை, அதன் தாக்கத்தை மிகையாகப் பெரிதுபடுத்திப் பயங்கரமான தோற்றத்தை உண்டாக்கவேண்டாம். எடுத்துக்காட்டாக, இந்த அனுபவத்தால் தங்கள் குழந்தைக்குத் திருமணம் ஆவது தடைப்படுமோ என்று தாய்மார்கள் உணரக்கூடும். துன்புறுத்தல் அனுபவம் அல்லது அனுபவங்களைப் பெற்றோர் எப்படிப் பார்க்கிறார்களோ, அதன் அடிப்படையில் குழந்தைகள் தங்களுடைய பார்வைகளை அமைத்துக்கொள்ளக்கூடும். ஆகவே, பெற்றோர் தங்களுக்குள் இருக்கக்கூடிய எந்தவோர் எதிர்மறை எண்ணங்களையும் அடையாளம் காண்பது முக்கியம். பெற்றோர் "இன்றைக்கு"க் குழந்தைக்கு உதவுவதற்கும், குழந்தை நிலைமையைச் சமாளிப்பதற்கான செயல்திறன் மிக்க முறைகளை நிகழ்த்திக்காட்டுவதற்கும் இது முக்கியமாகும்.

  • துன்புறுத்தல்பற்றிய உரையாடல்களைத் தவிர்க்கவேண்டாம், குறிப்பாக, குழந்தை அதைப்பற்றிப் பேசவோ பகிர்ந்துகொள்ளவோ விரும்பினால். பல குழந்தைகள் துன்புறுத்தலின் ஓர் அம்சத்தைப்பற்றி அல்லது துன்புறுத்தலின் விளைவைப்பற்றிப் பேச விரும்புகிறார்கள். எடுத்துக்காட்டாக, பள்ளிக்குத் திரும்பச் செல்வது, தன்னுடைய வகுப்புத்தோழர்களை எதிர்கொள்வதுபற்றி ஒரு குழந்தைக்குப் பதற்றம் இருக்கலாம். இந்தச் சூழ்நிலையில், பெற்றோர் இந்த அம்சத்தைப்பற்றி விவாதிக்கவேண்டும். குழந்தை தன்னுடைய கவலைகள் மற்றும் அச்சங்களை வெளிப்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கலாம்; இந்தப் பிரச்னையை அவர்கள் ஒன்றாகச் சமாளிப்பதற்கான வழிகளை விவாதிக்கலாம். தங்களுடைய சொந்த இழப்பு, துக்கத்தைக் கையாளும் அதே நேரத்தில், பெற்றோர் கோபத்தை வெளிப்படுத்தலாம் அல்லது, அந்த அனுபவத்தைப்பற்றிப் பேசத் தயங்கலாம்; இதைப்பற்றிப் பேசினால் குழந்தைக்கு அந்த நடுங்கவைக்கும் அனுபவம்/அனுபவங்கள் மீண்டும் நினைவுக்கு வரலாம் என்று உணரலாம், அல்லது, என்ன சொல்வது, குழந்தையிடம் எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியாமல் திகைக்கலாம்; தங்களுடைய சொந்தப் பதற்றத்தால் இந்தத் தலைப்பை முற்றிலுமாகத் தவிர்த்துவிடலாம். இதுபோன்ற நிகழ்வுகளால், குழ்னதை அதைப்பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிடலாம்; ஒருவேளை தான் இதைப்பற்றிப் பேசினால் பெற்றோர் வருந்துவார்கள் அல்லது கோபப்படுவார்கள் என்று அந்தக் குழந்தை கவலைப்படலாம். பெற்றோரால் குழந்தைக்கு உதவ இயலாவிட்டால், நிபுணர் உதவியை நாடுவது முக்கியம்.

  • துன்புறுத்தல்பற்றி முன்பே சொல்லவில்லை என்பதற்காகக் குழந்தைமீது கோபப்படவேண்டாம். குழந்தைகள் பலவிதமான காரணங்களால் துன்புறுத்தலைப்பற்றிப் புகார் சொல்வதில்லை. எடுத்துக்காட்டாக, தன்மீதே குற்றம் சாட்டப்படும் என்ற அச்சம், குடும்பத்துக்குள் நிகழும் துன்புறுத்தலின்போது, குற்றம் புரிந்தவரைத் தங்களிடமிருந்து விலக்கிவிடுவார்கள் என்ற அச்சம்/பதற்றம் போன்றவை. சில குழந்தைகள் ஒரு குறிப்பிட்டமுறையில் "வளர்க்கப்பட்டிருக்கலாம்", இதனால், எல்லை மீறல்களை தெளிவாக அடையாளம் காண்பது அவர்களுக்குச் சிரமமாக இருக்கலாம். துன்புறுத்தியவரால் மற்ற குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம்; அவர் தன்னையோ தன்னுடைய குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையோ துன்புறுத்திவிடுவாரோ என்கிற அச்சத்தால் இந்தக் குழந்தை அதனை ரகசியமாக வைத்திருக்கலாம். துன்புறுத்தலானது நெடுநாள் முன்பாக நடைபெற்றது என்பதால்மட்டும் பெற்றோர் குழந்தையை நம்பாமலிருக்கக்கூடாது; இப்படிப்பட்ட நுண்ணுணர்வான மற்றும் துயரமளிக்கும் தகவலை முன்கூட்டியே சொல்லாததற்காகக் குழந்தைமீது கோபப்படவோ வருந்தவோ கூடாது.

  • இயல்பான எதிர்பார்ப்புகள் மற்றும் வரம்புகளை மாற்றவேண்டாம். பல நேரங்களில், இப்படிப்பட்ட ஓர் அனுபவத்தின் பின்விளைவாக, தங்களுடைய சொந்தக் குற்றவுணர்வினால் பெற்றோர் குழந்தையிடம் மிகவும் தாராளமாக நடந்துகொள்ளக்கூடும். எடுத்துக்காட்டாக, குழந்தை நிறையத் தொலைக்காட்சி பார்க்கலாம் அல்லது நிறையப் பொருட்களை வாங்கலாம்/நிறைய உண்ணலாம் என்று பெற்றோர் அனுமதிக்கக்கூடும். இது குழந்தைக்கும் உதவுவதில்லை, பெற்றோருக்கும் உதவுவதில்லை. இதனால் மற்ற பழக்கவழக்கப் பிரச்னைகள் உருவாகக்கூடும்.

பார்வைகள்:
1996ல் கலிஃபோர்னியா, USAவைச் சேர்ந்த சேஜ் பதிப்பகம் வெளியிட்ட 'நபர்களுக்கிடையிலான வன்முறை: பயிற்சி வரிசை' (ஜான் ஆர் கான்டெ, வரிசையின் ஆசிரியர்) என்ற தொகுப்பில் (ISBN 0-8039-5929-X pbk). எஸ்தர் டிப்ளிங்கெர் மற்றும் அன்னெ ஹோப் ஹெஃப்ளின் எழுதிய ‘பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குற்றம் செய்யாத பெற்றோருக்குச் சிகிச்சை வழங்குதல்: ஓர் அறிவாற்றல் பழகுமுறை அணுகுமுறை’யிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. இந்த அருமையான புத்தகம் மன நல நிபுணர்கள், பெற்றோர்கள் இருவருக்குமானது; பாலியல் துன்புறுத்தலைச் சந்திக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரைக் கையாள்வதுபற்றி விளக்குகிறது.

டாக்டர் ப்ரீத்தி ஜேக்கப், NIMHANSல் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் மனநலனுக்கான துணைப் பேராசிரியர்.

புகைபிடிப்பதை நிறுத்துவது எப்படி?

மீள்திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?

தன் கதையைச் சொல்லுவது எப்படி?

தனக்கோ தன் அன்புக்குரிய ஒருவருக்கோ மனநலப் பிரச்னை இருப்பதை ஒருவர் எப்படித் தெரிந்துகொள்வது?

கற்றல் குறைபாடு