கவனித்துக்கொள்ளுதல்

பிரகாசமான எதிர்காலங்களை உருவாக்குதல்:பிறரைக் கவனித்துக்கொள்ளுதலின் பொருளாதாரத் தாக்கங்களைக்கையாளுதல்

டாக்டர் அனில் படீல்

உடல்நலமில்லாத, அல்லது உடல் ஊனமுற்ற உறவினர் ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல் மிகச் சிரமமான ஒரு பணி, அதேசமயம் அது மனத்துக்கு நன்கு நிறைவுதரக்கூடியது என நாம் ஏற்கெனவே பேசியுள்ளோம். ஒருவர் இன்னொருவரைக் கவனித்துக்கொள்கிறார் என்றால், அவரது வாழ்வின் எல்லாப் பகுதிகளும் தாக்கத்துக்குள்ளாகும். அதேசமயம், பிறரைக் கவனித்துக்கொள்ளுகிற பலருடன் நாங்கள் பேசியபோது ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டோம். அவர்கள் மிகப்பெரிய சவாலாக எண்ணுவது, இதனால் அவர்களுடைய குடும்பங்கள் சந்திக்கும் கூடுதல் பொருளாதாரச் சிரமங்களைதான். தனிநபர்கள் பிறரைக் கவனித்துக்கொள்ளும்போது, பொதுவாக அவர்கள் மிகுந்த பொருளாதாரச்சுமைக்கு ஆளாகிறார்கள்.  ஒருவேளை அவர்களுடைய குடும்பம் ஏற்கெனவே ஏழைமையில் இருந்தால், இதன் விளைவுகள் மிகமோசமாக இருக்கக்கூடும். 2015ம் ஆண்டு 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' நிறுவனம் இதுபற்றி ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் இந்தியாமுழுக்க உள்ள நமது திட்டப்பணிப் பகுதிகளில் இருக்கும் குடும்பங்கள் பங்கேற்றன. இந்தக் குடும்பங்களில் எதிலெல்லாம் இன்னொருவரைக் கவனித்துக்கொள்கிற ஒருவர் உள்ளார் என்று கவனித்து ஆராய்ந்தபோது, அந்தக் குடும்பங்களில் 93% வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பது தெரியவந்தது. இன்றைய சூழ்நிலையில் இது ஒரு பெரிய அதிர்ச்சிதரும் புள்ளிவிவரம் ஆகும். சரி. இவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? அவற்றை எப்படிச் சமாளிப்பது?

ஒருவரைக் கவனித்துக்கொள்வதால் ஏற்படும் அழுத்தமும் பதற்றமும் மிக அதிகம். அப்படிக் கவனித்துக்கொள்கிறவரிடம் பணம் இல்லாவிட்டால், இந்த அழுத்தம், பதற்றம் இன்னும் பெரிதாகிவிடுகிறது. பல நேரங்களில், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய வேலையிலிருந்து விலகவேண்டியிருக்கும். இதனால் அவருடைய வருவாய் நின்றுபோகும். இது அவரது குடும்பத்தில் பல தீவிர விளைவுகளை ஏற்படுத்தும்.  இத்துடன், பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர் (பொதுவாக அவரது கணவர்/மனைவி அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர்) வேலைக்குச் செல்வதை நிறுத்தவேண்டியிருக்கலாம், அப்போதுதான் அவரால் முழுநேரக் கவனிப்புப்பணியில் ஈடுபட இயலும். ஆக, ஒரே நேரத்தில் இரட்டை வருவாய் இழப்பு. இது அவர்களது குடும்பத்தைக் கடுமையாகப் பாதிக்கும். இத்துடன், அவர்கள் தவிர்க்க இயலாத பல கூடுதல் மருத்துவச் செலவுகளையும் சந்திக்கவேண்டியிருக்கும். இதுவும் பொருளாதாரப் பிரச்னையைப் பெரிதாக்குகிறது.  ஒருவேளை ஏற்கெனவே அந்தக் குடும்பத்துக்குச் சில பொருளாதாரப் பிரச்னைகள் இருந்திருந்தால், இப்போது அது மேலும் அதிகமாகிவிடுகிறது. குடும்பத்தின் பொருளாதாரச்சூழல் திடீரென்று மோசமாகிவிடுவதால், ஏற்கெனவே சிரமநிலையில் இருப்பவர்கள் இப்போது எதையும் சமாளிக்க இயலாமல் கஷ்டப்படுகிறார்கள்.

இந்தியாவில், பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் பல அரசுத் திட்டங்கள் உள்ளன. உதாரணமாக, தீவிர ஊனத்தைக்கொண்டோரின் மருத்துவ மற்றும் தெரபிச் செலவுகளுக்கு மாநில ஊனமுற்றோர் ஓய்வூதியம் மற்றும் தேசிய அறக்கட்டளைத் திட்டம் ஆகியவை உதவுகின்றன. அதேசமயம், அவருடைய குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கிறதே, அவரைக் கவனித்துக்கொள்கிற உறவினர்களும் பொருளாதாரச் சிரமங்களுக்கு ஆளாகிறார்களே, இதையெல்லாம் யாரும் அங்கீகரிப்பதும் இல்லை, அவர்களுக்கு ஆதரவளிப்பதும் இல்லை.

பிறரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அந்தப் பணியைச் செய்தபடி வருவாய் பெறுவதற்கும் வாய்ப்புகள் வேண்டும் என்கிறது 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பு. இதற்கான வழிவகை செய்வது எங்களுடைய திட்டங்களின் ஒரு முக்கியப் பகுதியாகும். இந்தியாமுழுவதுமுள்ள தொழில்கூட்டாளிகளின் உதவியுடன் நாங்கள் இதனைச் செயல்படுத்திவருகிறோம். இதற்காக, நாங்கள் கவனித்துக்கொள்பவரை மையமாகக்கொண்ட ஓர் அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம். அவர்களுடைய தனிப்பட்ட ஆர்வங்கள், திறமைகள், குடும்பத் தேவைகள் மற்றும் கவனித்துக்கொள்ளும் பொறுப்புகளின் அடிப்படையில் இதனை அமைக்கிறோம். இத்துடன், உள்ளூர்ச் சந்தைகள், வாய்ப்புகளைக் கவனமாகக் கருத்தில்கொள்கிறோம். அவருக்கும் குடும்பத்துக்கும் பொருந்தக்கூடிய, நீடித்துநிற்கக்கூடிய வாழ்வாதாரங்களை அடையாளம் காண்கிறோம். கவனித்துக்கொள்வோர் ஒரு புதிய வாழ்வாதாரத்தைத் தொடங்க உள்ளூர் அரசுப் பணித் திட்டங்கள், பயிற்சித் திட்டங்கள் அல்லது கடன்களை அணுகலாம். இல்லாவிட்டால், உள்ளூர் NGOக்கள் வழங்கும் வாழ்வாதாரச் செயல்பாடுகளை முயற்சிசெய்யலாம். கவனித்துக்கொள்வோரின் சமூக மற்றும் பொருளாதாரச் சூழல்காரணமாக, இதில் அவர்கள் முதன்மைப் பலன்பெறுவோராகக் கருதப்படுவார்கள்.

கவனித்துக்கொள்வோரைப் பணியில் சேர்ப்பதுமட்டும் முக்கியமில்லை. அவர்கள் யாரைக் கவனித்துக்கொள்கிறார்களோ அவர்களுக்குக் கிடைக்கும் கவனிப்பின் தரம் இதனால் பாதிக்கப்படக்கூடாது. இதையும் உறுதிப்படுத்துவது அவசியம். இதற்காக, மாற்றுக் கவனிப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்; உதாரணமாக, பிற குடும்ப உறுப்பினர்கள் அல்லது பக்கத்துவீட்டுக்காரர்களை இதில் ஈடுபடுத்துவது, அல்லது, சமூகம் சார்ந்த மையங்களில் அவர்களைக் கவனித்துக்கொள்வது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பு இந்தச் சமூகம் சார்ந்த மையங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்கூட்டாளிகளின் உதவியுடன் முன்னின்று நடத்திவருகிறது.

கவனித்துக்கொள்வோர்மத்தியில் காணப்படும் பொருளாதாரச் சிரமங்களை நாங்கள் முன்கூட்டியே சிந்தித்து அணுகுவதால், கடந்த ஆண்டில்மட்டும் கிட்டத்தட்ட 900 கவனித்துக்கொள்வோர் மீண்டும் சம்பளம்பெறும் பணிக்குத் திரும்பியிருக்கிறார்கள், தங்களுடைய குடும்பங்களை வறுமைநிலையிலிருந்து மீட்டிருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியுடன், இவர்களின் சுயமதிப்பும் மேம்பட்டுள்ளது, சமூகத்தினர் இவர்களை அதிகம் இணைத்துக்கொள்ளத்தொடங்கியுள்ளார்கள்.

இந்த அணுகுமுறையால் பலருடைய வாழ்க்கைகளே மாறக்கூடும். உதாரணமாக, நிர்மலாவின் கதையைப் பார்ப்போம். நிர்மலாவின் கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு, அவர் தன்னுடைய நான்கு குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு வாழ்ந்தார். அவருடைய மூத்த மகளான வித்யாவுக்கு செரிப்ரல் பால்ஸி பிரச்னை உள்ளது. இந்நிலையில் நிர்மலாவுக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை. நிர்மலாவால் வேலைக்குச் செல்ல இயலவில்லை. அவரது குடும்பம் வறுமையில் மூழ்கியது. அப்போது, ஆந்திராவில் உள்ள எங்களது தொழில்கூட்டாளி நிறுவனமொன்றை அணுகினார் நிர்மலா. கேரர்ஸ் வேர்ல்ட்வைட் நடத்தும் கவனித்துக்கொள்வோருக்கான திட்டத்தில் இணைந்தார். அவருக்கு ரூ 10,000 கடன் கிடைத்தது. இதைக்கொண்டு அவர் ஒரு சிறிய தையல் தொழில் தொடங்கினார். அதன்பிறகு, அவர் உள்ளூரில் இருக்கும் கவனித்துக்கொள்வோருக்கான குழுவில் இணைந்தார். அங்கே அவர் குழுச் சேமிப்புத் திட்டத்தில் பங்கேற்கிறார், அவரது குடும்பத்தின் வருங்காலத்தை உறுதிப்படுத்த இது உதவுகிறது. வித்யாவுக்குத் தெரபி வழங்கப்பட்டது, அவர் உள்ளூர்ப்பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு ஆவன செய்யப்பட்டது. இதன்மூலம் அவர் கல்வி கற்கிறார், சுதந்தரமாக வாழக் கற்றுக்கொள்கிறார். நிர்மலா இப்போது வேலைக்குச்செல்லமுடிகிறது, அவரது வருவாய் குடும்பத்துக்கு உதவுகிறது.

கவனித்துக்கொள்வோருக்கு வழங்கப்படும் இதுபோன்ற ஆதரவுகள் நிர்மலாவைப்போன்றோருக்குப் பெரிதும் உதவுகின்றன. அவர்கள் நீடித்துநிற்கும் வாழ்வாதாரங்களை அமைத்துக்கொள்ள இயலுகிறது, தங்களது குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பைக் கவனித்துக்கொள்ளவும் வலுப்படுத்தவும் இயலுகிறது, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைச் சரிசெய்யவும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் இயலுகிறது.

* பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

டாக்டர் அனில் பாடில் 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பின் நிறுவனர், செயல் இயக்குநர். 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பு, பணம் பெற்றுக்கொள்ளாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வோர் சந்திக்கும் பிரச்னைகளை முன்வைத்துப் பேசுகிறது, கையாள்கிறது. 2012ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, UKயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வளரும் நாடுகளைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்வோருடன் இணைந்து பணிபுரிகிறது. டாக்டர் பாடில் இந்தப் பத்தியை ருத் பாடிலுடன் இணைந்து எழுதுகிறார். ருத் படீல் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் அமைப்புடன் இணைந்து பணிபுரியும் தன்னார்வலர் ஆவார். இவர்களுக்கு எழுத விரும்புவோர் இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org