கவனித்துக்கொள்வோருக்கும் ஓய்வு தேவை!

கவனித்துக்கொள்வோருக்கும் ஓய்வு தேவை!

இந்தக் கட்டுரையில், கவனித்துக்கொள்வோருக்கு அவர்களுடைய குடும்பங்கள், சமூகத்தினர், உள்ளூர் அமைப்புகள் எப்படி எதார்த்தமான ஆதரவை அளிக்க இயலும் என்று தெரிந்துகொள்வோம். குறிப்பாக, அவர்களுடைய கவனித்துக்கொள்ளும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல், முதன்மையாகக் கவனித்துக்கொள்கிறவருக்கு அவசியம் தேவைப்படும் ஓய்வை வழங்குதல் ஆகியவற்றைப்பற்றிப் பேசுவோம்.

இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷில் உள்ள பல கவனித்துக்கொள்வோருடன் நாங்கள் பேசினோம். அவர்கள் தினந்தோறும் சந்தித்துவரும் பிரச்னைகளைப்பற்றியும், அவர்களைத் தூங்கவிடாமல்செய்யும் கவலைகளைப்பற்றியும் தெரிந்துகொண்டோம். அப்போது அவர்கள் திரும்பத்திரும்பச் சொன்ன ஒரு விஷயம்: அவர்களுக்குக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்து ஓய்வு கிடைப்பதே இல்லை, தங்களைக் கவனிக்க நேரமில்லை, வேலைக்குச்சென்றாலும்கூட, தாங்கள் கவனித்துக்கொள்ளும் ஊனமுற்ற அல்லது மனநிலை பாதிக்கப்பட்ட உறவினரின் நலனைப்பற்றியேதான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள எங்களது தொழில்கூட்டாளிகளிடையே நாங்கள் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்த ஒரு விஷயம், கவனித்துக்கொள்கிறவர்களில் 90% பேர் தங்களுடைய கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்து ஓய்வெடுக்கவே இயலாதே எனக் கவலைப்படுகிறார்கள்.

இது மிகப் பெரிய பிரச்னைகளைக் கொண்டுவரக்கூடும். சாந்தம்மாவின்* மகன் கங்கப்பா*, அவனுக்கு செரிபெரல் பால்ஸி உள்ளது. சாந்தம்மாதான் அவனை முழுநேரமும் கவனித்துக்கொள்கிறார். ஒருவேளை அவர் எங்கேயாவது வேலைக்குச் செல்லவேண்டுமென்றால், கங்கப்பாவை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டுதான் செல்லவேண்டும். ஆனால், அப்படிச் செல்லும்போது, அவரால் தன் வேலையைக் கவனிக்க இயலாது. நாள்முழுக்கத் தன் மகனைப்பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருப்பார். திரும்பிவந்தால், அவன் உடலளவிலும் மனத்தளவிலும் நொந்துபோயிருப்பான். இதனால், சாந்தம்மா இப்போதெல்லாம் வேலைக்குச்செல்வதே இல்லை. சாந்தம்மாவின் வருவாய் நின்றுவிட்டதால், கங்கப்பாவும், பிற குடும்பத்தினரும் சிரமப்படுகிறார்கள், சிலசமயங்களில் அவர்களுக்குத் தினமும் ஒருவேளைதான் சாப்பாடு கிடைக்கிறது. இதில் சோகமான, அதிர்ச்சிதரும் விஷயம், இப்படி லட்சக்கணக்கான சாந்தம்மாக்கள், கங்கப்பாக்கள் இருக்கிறார்கள்.

கேரர்ஸ் வேர்ல்ட்வைட் மாதிரியின் ஒரு முக்கியமான அம்சம், மாற்றுக் கவனிப்பு வாய்ப்புகளை அடையாளம் காணுதல், செயல்படுத்துதல். பாதிக்கப்பட்டவர், அவரைக் கவனித்துக்கொள்கிறவர், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என எல்லாருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். அதன்மூலம், கவனிப்புப்பணியைப் பகிர்ந்துகொள்வதற்கான வழிகளைக் கண்டறிகிறோம். பல சூழ்நிலைகளில், பிற உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் அல்லது பக்கத்துவீட்டுக்காரர்களின் உதவியுடன் இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம். அவர்களுக்குப் பயிற்சி தந்து, பாதிக்கப்பட்டவரைச் சிலமணிநேரங்கள் பார்த்துக்கொள்ளச்செய்யலாம், இதன்மூலம் அவரை வழக்கமாகக் கவனித்துக்கொள்கிறவருக்கு ஓய்வு கிடைக்கிறது,  அவர் தன்னுடைய வீட்டுவேலைகளைக் கவனிக்கலாம், அல்லது கடைகளுக்குச் சென்று திரும்பலாம். முக்கியமாக, இப்படி வேறு பணிகளைக் கவனிக்கிறநேரங்களில் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர் தனியாக இருப்பாரே என்று கவலைப்படமாட்டார்கள், எங்கும் அவரைக் கூட்டிக்கொண்டு செல்லவேண்டிய அவசியமும் இருக்காது.

ஆனால், சில சமயங்களில் இந்த உதவிகள் போதாது. இதற்குமேலும் தேவைப்படலாம். இதற்காக, நாங்கள் ஒரு புதுமையான, சமூகத்தால் வழிநடத்தப்படும் மாற்று ஏற்பாட்டை முயல்கிறோம். இது எங்களுடைய திட்டப் பகுதிகளில் இரண்டு இடங்களில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதன் பெயர், "சமூகப் பராமரிப்பு மையங்கள்." இந்த மையங்கள் சமூகத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றன. கவனித்துக்கொள்வோரும் சமூக உறுப்பினர்களும் இணைந்து இவற்றை வழிநடத்துகிறார்கள், உள்ளூர் NGOக்கள் இவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். இவை பாதிக்கப்பட்டோரை வரவேற்கும்விதமாக அமைகின்றன, இங்கே பொம்மைகள், தெரபிப் பொருள்கள் இருக்கும், பயிற்சிபெற்ற உள்ளூர் மக்கள் இவற்றில் பணியாற்றுவார்கள். இவை பாதிக்கப்பட்டவருக்கும் நன்மை தருகின்றன, அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கும் மகிழ்ச்சியளிக்கின்றன. தினந்தோறும் இந்த மையங்களைப் பயன்படுத்த ஒரு சிறிய கட்டணம் உண்டு. கவனித்துக்கொள்கிறவர்கள் தாங்கள் கவனித்துக்கொள்ளும் குழந்தை அல்லது பெரியவரை இந்த மையங்களில் விட்டுச்செல்லலாம், தங்களுடைய அன்புக்குரியவர்கள் பத்திரமாக இருப்பார்கள், அவர்களுக்கு வேளாவேளைக்கு உணவு ஊட்டப்படும், நல்லுணர்வு தூண்டப்படும் என்கிற நம்பிக்கையுடன் அவர்கள் தங்களுடைய தினசரிப் பணிகளைச் செய்யலாம். இந்த மையங்களுக்கு வரும் குழந்தைகள், பெரியவர்கள் சிறிதுநேரமேனும் தங்கள் வீட்டிலிருந்து வெளியே வருவார்கள், அவர்களது உடல் மற்றும் உணர்வுத்தேவைகளை ஆதரிக்கக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இது எல்லாருக்கும் நன்மைதரும் விஷயமாகும். கவனித்துக்கொள்கிறவர்களுக்கும் அந்தக் கடமையிலிருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கும், அவர்கள் வேலைக்குச் செல்லலாம், தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றும் அளவுக்குச் சம்பாதிக்கலாம், தங்கள் அன்புக்குரியவரின் நலனைப்பற்றிய கவலையின்றிப் பணிபுரியலாம். இந்த மையங்களுக்கு வரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு இங்கே நண்பர்கள் கிடைப்பார்கள், விளையாடுவார்கள், சிகிச்சை பெறுவார்கள், அவர்களுக்குத் தரமான கவனிப்பு வழங்கப்படும். இதற்கெல்லாம் மேலாக, இந்த மையங்களில் பணிபுரியும் உள்ளூர்ப் பெண்களுக்குப் பயிற்சியும் வேலையும் கிடைக்கும்.

இது ஓர் எளிய முயற்சிதான். ஆனால், கவனித்துக்கொள்வோரின் சுமை குறைவதற்கு இது நன்கு உதவும். இந்த மையங்களைப்பற்றி எங்களுக்கு வரும் கருத்துகளைவைத்துப் பார்க்கும்போது, இவை மிகவும் அவசியம் என்பது எங்களுக்குப் புரிகிறது. முழு நேரத் தையல்தொழிலுக்குத் திரும்பிய ஒரு தாய் கூறியது, “என் சமூகம் என் திறன்களை மதிக்கிறது, மீண்டும் எனக்கு ஒரு மதிப்பு வந்திருப்பதாக நான் உணர்கிறேன். என் மகனை அவர்கள் நன்கு கவனித்துக்கொள்கிறார்கள்: நான் நிம்மதியாக இருக்கிறேன்.” இதுபற்றி அவருடைய மகனிடமும் கேட்டோம். அவன் சொல்வது, “எனக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருக்கிறது! இங்கே எனக்கு ஒரு புதிய நண்பன் கிடைத்திருக்கிறான்.”

* பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

டாக்டர் அனில் படீல், ‘கேரர்ஸ் வேர்ல்ட்வைட்’ அமைப்பின் நிறுவனர், செயல் இயக்குநர். சம்பளம் பெறாத, குடும்பம் சார்ந்த கவனித்துக்கொள்வோரின் பிரச்னைகளை வெளிச்சம்போட்டுக்காட்டிக் கையாள்கிறது கேரர்ஸ் வேர்ல்ட்வைட். 2012ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, UKல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வளரும் நாடுகளில் உள்ள கவனித்துக்கொள்வோருடன்மட்டும் இணைந்து பணிபுரிகிறது. டாக்டர் படீல் இந்தப் பத்தியை ருத் படீலுடன் இணைந்து எழுதுகிறார். ருத் படீல் கேரர்ஸ் வேர்ல்ட்வைடின் தன்னார்வலர். மேலும் விவரங்களுக்கு நீங்கள் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் இணையத்தளத்துக்குச் செல்லலாம். இந்தப் பத்தியின் ஆசிரியர்களுடன் மின்னஞ்சல்மூலம் உரையாட columns@whiteswanfoundation.orgக்கு எழுதலாம்

இந்தப் பத்தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகள் ஆசிரியருடையவை, வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின் பார்வைகளை அவை பிரதிநிதித்துவப்படுத்தாமலிருக்கலாம்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org