கவனித்துக்கொள்ளுதல்

கவனித்துக்கொள்வோரைக் கவனித்தல்

டாக்டர் அனில் பாடில்

நம் சமூகத்தில் பணம் பெற்றுக்கொள்ளாமல் நம் குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களால் ஏற்படும் பல்வேறு தாக்கங்களைப்பற்றி முந்தைய கட்டுரையில் பேசினோம். இந்தக் கட்டுரையில், ஒரு குறிப்பிட்ட தாக்கத்தைப்பற்றிப் பேசுவோம். ஒருவகையில் இது நகைமுரணான தாக்கமாகும்: ஒருவர் இன்னொருவரைக் கவனித்துக்கொள்கிறார், அதனால் இவருடைய உடல் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள். இது ஒரு முக்கியமான பிரச்னை. காரணம், இவ்வாறு உடல்நலம் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிற பலர் ஆரோக்கியமற்றுக் காணப்படுகிறார்கள். அதாவது, ஆரோக்கியமற்ற ஒருவரைக் கவனித்துக்கொள்வதால் இவர்களுடைய ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.

மனநலம் பாதிக்கப்பட்டோர் அல்லது வலிப்பு போன்ற பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்பவர்கள்மத்தியில் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பொன்றில், 69% பேருக்கு முதுகுவலி, உடல் வலி, தலைவலி, இருமல், ஜலதோஷம் போன்ற உடல்சார்ந்த பிரச்னைகள் அடிக்கடி வருவதாகவும், அவற்றிலிருந்து அவர்களால் எளிதில் குணமாக இயலுவதில்லை என்றும், அவர்கள் பொதுவாகவே களைப்புடன் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், மற்றவர்களுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கிறது, இவர்களுக்குக் கிடைப்பதில்லை, ஆகவே, இவர்களே நினைத்தாலும் விரைவில் அந்தப் பிரச்னையிலிருந்து குணமாக இயலுவதில்லை, அதற்குத் தேவையான அளவு அவர்களுடைய உடல் ஓய்வெடுப்பதில்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும், 24 மணி நேரமும் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்ளவேண்டும், அவர்களது தினசரிப் பணிகளில் உதவவேண்டும்... ஓய்வு என்பது இவர்களுக்கு இல்லவே இல்லை என்று சொல்லலாம்.

ஒருவேளை அவர்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்னை வந்தாலும், பெரும்பாலானோர் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதில்லை. அது ஏன் என்று கேட்டபோது, அவர்கள் பலவிதமான பதில்களைச் சொல்கிறார்கள்: “எனக்கு நேரமில்லை”, “நான் மருத்துவமனை சென்றுவிட்டால் என் உறவினரை யார் கவனித்துக்கொள்வார்கள்?”, “இன்னும் மருந்து வாங்க என்னிடம் பணம் இல்லை”, “சில நாள் நன்றாகத் தூங்கினால் போதும், நான் சரியாகிவிடுவேன்.” ஆகவே, எங்கள் அமைப்பு உள்ளூர் மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. மனநலம் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்களுடைய பிரச்னைகளை, அவர்கள் சந்திக்கும் சவால்களை இந்த மருத்துவர்களுக்குப் புரியவைக்கிறது. உதாரணமாக, மாற்றுத்திறனாளியான தன் குழந்தையை ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துவருகிறார் என்றால், அந்தக் குழந்தையைக் கவனித்தபின், ‘நீங்க எப்படி இருக்கீங்க?’ என்று விசாரிக்க அந்த மருத்துவருக்கு எவ்வளவு நேரமாகிவிடும்? பெரும்பாலான நேரங்களில், விழிப்புணர்வும் நேர்வித மனப்போக்கும்தான் தேவைப்படுகிறது.

ஆனால், மனநலம்/உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிற எல்லாரையும் இப்படி அணுக இயலாது. மனநலம்/உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதுபற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் முதலில் உள்ளூர்ச் சமூகத்தில் ஏற்படவேண்டும். என்னுடைய முந்தைய கட்டுரையில், ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த ஒருவரைப்பற்றி யோசிக்கவேண்டும் என்று நான் சொன்னேன்: உறவினர்கள், அக்கம்பக்கத்துவீட்டுக்காரர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள்... அவர்களில் யாரேனும் மனநலம்/உடல்நலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறார்களா என்று சிந்திக்கச்சொன்னேன். ஒவ்வொருவரும் இப்படி யோசித்தால், மனநலம்/உடல்நலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிற ஒருவராவது தென்படுவார். ஆனால், அவர்களை அணுகுவதோ, எதார்த்தமாக அவர்களுக்கு உதவுவதோ அவ்வளவு எளிதல்ல. இதைப்பற்றிப் பேசுவதே சிரமமான ஒன்று: பலருக்கு என்ன பேசுவது என்றே தெரிவதில்லை, அப்படியே பேசினாலும் அவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்று எண்ணித் தயங்குகிறார்கள். ஆகவே, முதல்படியாக, அவர்களுக்காகச் சிறிது நேரத்தைத் தரலாம், ‘நீங்கள் யாரைக் கவனித்துக்கொள்கிறீர்களோ அவரை நான் சிறிதுநேரம் பார்த்துக்கொள்கிறேன், அந்த நேரத்தில் நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட வேலை எதையேனும் கவனியுங்கள்’ என்று சொல்லலாம். இது ஒரு பெரிய விஷயமா என்று எண்ணாதீர்கள். இந்தச் சிறிய இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் தங்கள் மருத்துவரைச் சந்தித்து இருமலுக்கோ முதுகுவலிக்கோ சிகிச்சை பெறலாம். அவர்களுடைய பிரச்னைகளுக்குத் தன்னால் இயன்ற தீர்வுகளைப் பகிர்ந்துகொள்ளலாம். உதவி எதுவானாலும் சரி... ஒருவர் தன்மீது அக்கறை காட்டுகிறார் என்பதை அவர் உணர்வார், தனக்காக ஒருவர் இருக்கிறார் எனப் புரிந்துகொள்வார். ஒரு சின்னப் புன்னகை, ஓர் அக்கறையான சொல்... அது போதும், அவர்களுடைய களைப்பு காணாமல் போய்விடும். ‘நான் உங்களுக்கு உதவலாமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களுடைய சுமை குறையும்.

அப்படியில்லாமல், அவர்கள் தங்களுடைய உடல்நலப் பிரச்னைகளைக் கவனிக்காமலே விட்டுவிட்டால், அதற்குப் பிறர் அவர்களுக்கு உதவாவிட்டால், இந்த உடல்நலப் பிரச்னைகள் தீவிரமாகிவிடக்கூடும். நாள்கள் செல்லச்செல்ல, இன்னொருவரைத் தொடர்ந்து கவனித்துக்கொள்வதால் அவர்களுடைய உடலில் சேர்கிற சுமையும் அழுத்தமும், எப்போதும் “கடமையை”ச் செய்யவேண்டிய கட்டாயமும், தூக்கமின்மையும் சேர்ந்து பெரிய பாதிப்புகளைக் கொண்டுவரக்கூடும், அவர்களால் தங்களுடைய அன்புக்குரியவருக்குத் தேவையான அளவு கவனிப்பை வழங்க இயலாமலும் போகலாம். அப்போது, ஒரு மோசமான சுழல் தொடங்குகிறது. மனநலம்/உடல்நலம் பாதிக்கப்பட்டவர், அவரைக் கவனித்துக்கொள்கிறவர் என இருவருடைய நலனும் கெடத்தொடங்கும், யாராவது குறுக்கிடாவிட்டால் அது ஒரு மிகத் தீவிரமான நிலையை எட்டிவிடக்கூடும். இந்த நிலை வருவதற்குமுன்னால், பிறர் அவர்களுக்கு உதவவேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும், அந்தச் சுழலைத் திருப்பிவிடவேண்டும்.

அடுத்த கட்டுரையில், பணம் பெற்றுக்கொள்ளாமல் தங்கள் குடும்பத்தினரைக் கவனித்துக்கொள்கிறவர்களுடைய மனநிலை அதனால் எப்படிப் பாதிக்கப்படக்கூடும் என்பதைப்பற்றியும், நிறுவனங்கள், அதிகார அமைப்புகள், சமூகத்தினர் அவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதுபற்றியும் பார்ப்போம்.

டாக்டர் அனில் பாடில் 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பின் நிறுவனர், செயல் இயக்குநர். 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பு, பணம் பெற்றுக்கொள்ளாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வோர் சந்திக்கும் பிரச்னைகளை முன்வைத்துப் பேசுகிறது, கையாள்கிறது. 2012ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, UKயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வளரும் நாடுகளைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்வோருடன் இணைந்து பணிபுரிகிறது. டாக்டர் பாடில் இந்தப் பத்தியை ருத் பாடிலுடன் இணைந்து எழுதுகிறார். ருத் பாடில் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் அமைப்புடன் இணைந்து பணிபுரியும் தன்னார்வலர் ஆவார். இவர்களுக்கு எழுத விரும்புவோர் இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

இந்தப் பத்தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகள் ஆசிரியருடையவை. வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின் கருத்துகளை அவை பிரதிநிதித்துவப்படுத்தாமலிருக்கலாம்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org