கவனித்துக்கொள்வோரின் சுமைகளை ஆதரவுக்குழுக்களால் தீர்க்கலாம்

என்னுடைய முந்தைய கட்டுரையில், கவனித்துக்கொள்வோர்மீது சுமத்தப்படும் சுமைகளை அடையாளம் காண்பதன் முக்கியத்துவம், அதனால் அவர்களுடைய மன நலத்தில் ஏற்படும் தாக்கங்களைப்பற்றிப் பார்த்தோம். கவனித்துக்கொள்வோரை இவ்வாறு அங்கீகரித்து, சரியான நேரத்தில் ஆதரவளிப்பதால் அவர்களுடைய நலன் மேம்படும், முன்பைவிடச் சிறப்பாகத் தங்கள் அன்புக்குரியவரைக் கவனித்துக்கொள்வார்கள். அத்துடன், அவர்களுடைய உணர்வு அழுத்தங்கள், மன அழுத்தங்கள் பெரிய மன நலப் பிரச்னைகளாக மாறாமல் காக்கலாம்.

இந்த ஆதரவை வழங்கக்கூடிய சிறந்த நபர்கள்: வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது சக ஊழியர்கள். சமூகத்தில் உள்ள எல்லாரும் தங்களுக்குத் தெரிந்த கவனித்துக்கொள்வோரின் ஆரோக்கியத்தைக் காக்கத்தொடங்கினால், அவர்களுடைய உடல்நலம், மனநலம் இரண்டுமே மேம்படும். அவர்கள் ஆரோக்கியமாக உண்ணவேண்டும், தினமும் போதுமான அளவு தூங்கவேண்டும். உங்களுக்குத் தெரிந்த யாரேனும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு ஒருநாள் மதிய உணவோ இரவு உணவோ சமைத்துத்தரலாம், அவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம், நீங்கள் வளர்த்த அல்லது வாங்கிய காய்கறிகள், பழங்களை அவர்களுக்குத் தரலாம். தூக்கமின்மையால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். அவர்களுடைய தூக்கம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது என்றால், அதைச் சரிசெய்ய நீங்கள் உதவலாம், உதாரணமாக, வாரத்தில் ஓர் இரவுமட்டும் வேறு யாராவது அவர்களுடைய அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்ள இயலுமா? அவர்கள் பகல் நேரத்தில் தூங்க இயலுமா? ஒருவர் தொடர்ந்து உடற்பயிற்சிகளைச் செய்கிறார் என்றால், அதுவும் அழுத்தத்தைக் குறைக்கும். ஆகவே, நீங்கள் அவர்களுடன் பேசுங்கள், 'உங்கள் அன்புக்குரியவரை நான் கவனித்துக்கொள்கிறேன், நீங்கள் யோகாசன வகுப்புக்குச் சென்றுவாருங்கள், அல்லது, சிறிதுதூரம் நடந்து திரும்புங்கள்' என்று சொல்லுங்கள். அவர்கள் தனியே வெளியே செல்லத் தயங்கினால், நீங்களும் அவர்களுடன் செல்லுங்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் ஒருவருடன் ஒருவர் பேசலாம், அவர்கள் தங்களுடைய கவலைகளைப் பகிர்ந்துகொள்ளலாம், முக்கியமாக, கவனித்துக்கொள்ளுதலுடன் சம்பந்தமே இல்லாத பிற விஷயங்களை அவர்கள் பேசலாம்.

அதேபோல், கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களைப்போன்ற பிற கவனித்துக்கொள்கிறவர்களைச் சந்தித்தால், அவர்களது மன நலம் மேம்படும். காரணம், அவர்களுடைய அனுபவங்கள் ஒரேமாதிரியானவை, அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கேரர்ஸ் வேர்ல்ட்வைட் அமைப்பு இந்தியாமுழுவதிலுமுள்ள தனது கூட்டாளி அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றி, கவனித்துக்கொள்வோருக்கான ஆதரவுக்குழுக்களை உருவாக்கிவருகிறது, அவர்களை ஒருங்கிணைக்கிறது. உள்ளூர்த் தேவைகள், புவியியல் மற்றும் எண்ணிக்கைகளின் அடிப்படையில் இந்தக் குழுக்கள் உருவாகின்றன. சில குழுக்கள் கிராமங்களில் உருவாகியுள்ளன, இவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சந்திக்கிறார்கள், மற்ற குழுக்கள் மாதம் ஒருமுறை சந்திக்கிறார்கள். எங்களுடைய கூட்டாளி அமைப்புகளைச்சேர்ந்த அனுபவமிக்க சமூகப் பணியாளர்கள் இந்தக் குழுக்களை ஒருங்கிணைக்கிறார்கள். இந்த அமைப்புகள் மாற்றுத்திறனாளிகள் அல்லது மனநலப் பிரச்னை கொண்டோருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்ற உள்ளூர் NGOக்கள் ஆகும். இந்த NGOக்கள் கேரர்ஸ் வேர்ல்ட்வைடுடன் இணைந்து, கொள்திறனை மேம்படுத்தும் பயிற்சியில் பங்கேற்பதன்மூலம், கவனித்துக்கொள்வோரின் முக்கியப் பங்களிப்பை அடையாளம் கண்டுள்ளன, பாதிக்கப்பட்டவரைமட்டும் கவனித்தால் போதாது, அவரைக் கவனித்துக்கொள்வோரின் தேவைகளையும் பூர்த்திசெய்யவேண்டும் என்று புரிந்துகொண்டுள்ளன.

இந்தக் குழுக்களில் பங்கேற்கிற கவனித்துக்கொள்ளும் பலர், பல ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் வீட்டிலிருந்து வெளியே வருகிறார்கள். இந்தக் குழுக்கள் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையையும் வாய்ப்பையும் தந்துள்ளது. இந்தக் குழுக்களின் முதல் சில கூட்டங்கள் உணர்ச்சிமயமாக இருக்கும். கவனித்துக்கொள்ளும் பலர் தங்களுடைய மனத்தில் ஒளித்துவைத்திருந்த உணர்வுகளைக் கொட்டுவார்கள். காரணம், ஒருவர் இன்னொருவரைக் கவனித்துக்கொள்ளும்போது, கவனிக்கப்படுகிறவர்மீதுதான் எல்லாரும் அக்கறை காட்டுவார்கள், கவனித்துக்கொள்கிறவரின் பிரச்னைகளைக் கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தக் குழுக்களில் கவனித்துக்கொள்கிறவர்தான் நாயகர். அவர் எப்படி உணர்கிறார், அவருடைய தேவைகள் என்ன என்று பிறர் கேட்கும்போது, அவர்கள் மனம் நிம்மதியடைகிறது, பேசத்தொடங்குகிறார்கள். இந்தக் குழுக்களில் இணையும் கவனித்துக்கொள்வோர் அனைவரும், இதில் 100% ஈடுபடுவதாக வாக்குக்கொடுத்துள்ளார்கள். இந்த உணர்வு ஆதரவு, நட்பு, 'நாம் தனியாக இல்லை' என்கிற எண்ணம் ஆகியவை அவர்களுக்குப் பெரிய மதிப்பைத் தருகின்றன. இது அவர்களுடைய தன்னம்பிக்கையைப் பெருக்குகிறது, சுய மதிப்பைக் கூட்டுகிறது, தாங்கள் ஆற்றல்மிகுந்தவர்கள் என்று உணரச்செய்கிறது.

கவனித்துக்கொள்வோரின் குழுக்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும், இத்தகைய தாக்கத்தை உண்டாக்கும் என்று நாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம், அது நல்லபடியாக நடக்கும் என நம்பியிருந்தோம், ஆனால், உண்மையில் அவை அதைத்தாண்டி இன்னும் பல நன்மைகளைத் தரத்தொடங்கிவிட்டன. வட கர்நாடகக் கிராமங்களில் உள்ள ஒரு குழுவில், உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து மொபைல் போன் அடிப்படையிலான ஒரு வலைப்பின்னலை உருவாக்கியுள்ளார்கள், இதன்மூலம் குழுவினர் கூடிப்பேசாதபோதும் இவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க இயலுகிறது. ஒருவர் ஒரு கூட்டத்துக்கு வரவில்லையென்றால், மற்ற உறுப்பினர்கள் அவரை உடனே அழைத்துப்பேசுகிறார்கள். அவர் எப்படி இருக்கிறார் என்று விசாரிக்கிறார்கள், ஏன் கூட்டத்துக்கு வரவில்லை என்று கேட்கிறார்கள். உறுப்பினர்களுக்கு எந்தப் பிரச்னை என்றாலும் சரி, எந்த நெருக்கடி என்றாலும் சரி, அதனைச் சரிசெய்வதற்கு இவர்கள் உதவுகிறார்கள், ஒருவரையொருவர் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார்கள். கூட்டங்கள் இல்லாதபோதும், உறுப்பினர்கள் ஒருவரோடொருவர் பேசுகிறார்கள், மற்றவர்களுடைய பிரச்னைகளைக் கேட்கிறார்கள், ஆலோசனை சொல்கிறார்கள். கவனித்துக்கொள்கிறவர் ஒருவருக்கு ஏதோ எதார்த்தமான தேவை அல்லது கோரிக்கை இருக்கிறது என்றால், உறுப்பினர்கள் எல்லாரும் சேர்ந்து அவருக்கு உதவுகிறார்கள், அல்லது, கூட்டாளி அமைப்பின் ஆலோசனையைக் கோருகிறார்கள். உறுப்பினர்களுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைப்பதற்கும் இவர்கள் உதவுகிறார்கள். ஜார்கண்டில் வசிக்கும் திலோத்தமா, எங்களுடைய குழுவொன்றில் உறுப்பினராக இருக்கிறார். மற்ற உறுப்பினர்கள் சந்தைக்குச் சென்றுவருவது போன்ற பணிகளுக்காக, இவர் அவர்களுடைய அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்கிறார். சமீபத்தில் நாங்கள் இந்த ஆதரவுக்குழுக்களைச் சந்தித்துப்பேசினோம். அப்போது, அவற்றில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களில் 100% பேரும் 'இந்தக் குழுவில் சேர்ந்தபிறகு எங்கள் மனநலம் மேம்பட்டுள்ளது' என்றார்கள்.

கவனித்துக்கொள்வோர் சிலர் குறிப்பிடத்தக்க அளவு அழுத்தத்துடன் அல்லது பதற்றத்துடன் வாழ்கிறார்கள், இவர்களுக்கு நிபுணரின் ஆலோசனை மிகவும் அவசியம் என்பதை நாங்கள் கண்டுள்ளோம். இப்படிச்செய்தால் சமூகம் என்ன நினைக்குமோ என்று அவர் கவலைப்படக்கூடாது, அவர் சரியான ஆலோசகரைக் கண்டறிவதற்குப் பிறர் உதவவேண்டும், அப்போதுதான் அந்த நிபுணர் அவருடன் இணைந்து பணியாற்றி அவர்களுடைய பிரச்னையை எப்படித் தீர்க்கலாம் என்று கண்டறிவார்.

கவனித்துக்கொள்வோர் நம் சமூகத்தில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றுகிறார்கள். கவனித்துக்கொள்வதால் ஏற்படும் சுமையை நாம் அங்கீகரிக்கவேண்டும், கவனித்துக்கொள்வோருக்குத் தேவைப்படும் மன மற்றும் உணர்வு ஆதரவை அளிக்கவேண்டும். ரஷிதா பேகம் எங்கள் குழுவொன்றின் உறுப்பினர். தீவிர தசைத் தேய்வு கொண்ட தன்னுடைய மூன்று குழந்தைகளைக் கவனித்துக்கொள்கிறார். "வாழ்க்கை இப்போதும் கஷ்டம்தான். என் பிரச்னைகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால், இந்தக் குழுவால் எனக்கொரு புதிய தைரியத்தைத் தந்திருக்கிறது, என் பிரச்னைகளைச் சந்திக்க இயலும் என்று நம்பிக்கை பிறந்துள்ளது" என்கிறார்.

என்னுடைய அடுத்த கட்டுரையில், கவனித்துக்கொள்வோர் சிறு இடைவெளிகள் எடுத்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தைப்பற்றியும், சமூகத்தில் மாற்றுப் பராமரிப்பு ஏற்பாடுகளை எப்படி உருவாக்கலாம் என்பதுபற்றியும் பேசுவோம்.

டாக்டர் அனில் பாடில் 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பின் நிறுவனர், செயல் இயக்குநர். 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பு, பணம் பெற்றுக்கொள்ளாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வோர் சந்திக்கும் பிரச்னைகளை முன்வைத்துப் பேசுகிறது, கையாள்கிறது. 2012ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, UKயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வளரும் நாடுகளைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்வோருடன் இணைந்து பணிபுரிகிறது. டாக்டர் பாடில் இந்தப் பத்தியை ருத் பாடிலுடன் இணைந்து எழுதுகிறார். ருத் படீல் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் அமைப்புடன் இணைந்து பணிபுரியும் தன்னார்வலர் ஆவார். இவர்களுக்கு எழுத விரும்புவோர் இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

இந்தப் பத்தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகள் ஆசிரியருடையவை. வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின் கருத்துகளை அவை பிரதிநிதித்துவப்படுத்தாமலிருக்கலாம்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org