'மனநலப் பிரச்னை' என்று முதன்முறை சொல்லுதல்

என் தாய் வன்முறையாக நடந்துகொள்வதை நான் பார்த்த தினத்தன்றுதான், நான் முதன்முறையாக "மனநலப் பிரச்னை" என்ற சொற்களைச் சொன்னேன், அதுவும் கிசுகிசுப்பாகதான்.

என் தாய் வன்முறையாக நடந்துகொள்வதை நான் பார்த்த தினத்தன்றுதான், நான் முதன்முறையாக "மனநலப் பிரச்னை" என்ற சொற்களைச் சொன்னேன், அதுவும் கிசுகிசுப்பாகதான். நான் நடுங்கிப்போனேன். அப்போது என் நண்பர்கள் என்னருகே இருந்தார்கள். நாங்கள் கூகுளுக்குச் சென்று எந்த மருத்துவ நிறுவனங்களில் உதவி பெறலாம் என்று தேடினோம். அந்தத் தேடல் பெட்டியில் நாங்கள் எந்த அறிகுறிகளைத் தட்டச்சு செய்து தேடவேண்டும்? அதுவே எங்களுக்குத் தெரியவில்லை. அதை நான் ஊகிக்க விரும்பவில்லை, என்னுடைய அறியாமை எனக்குத் தெரிந்திருந்தது. நாங்கள் சிலரைத் தொலைபேசியில் அழைத்தோம். என் தாயின் வரலாற்றை விளக்கி நீண்ட மின்னஞ்சல்கள் எழுதினோம். இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, எங்களால் இயன்றவரை பலரிடம் பேசினோம். நாங்கள் நேரடியாக அணுகக்கூடிய சில மனநல மருத்துவர்களின் தொலைபேசி எண்களை நாங்கள் திரட்டினோம்.

நிலைமை மிகவும் ஆபத்தாக இருந்தது, நாங்கள் உடனே செயல்பட விரும்பினோம். நிறைவாக, நாங்கள் NIMHANSக்குச் செல்லத் தீர்மானித்தோம். அது ஒரு நம்பகமான அமைப்பு, இந்தத்துறையில் மிகச்சிறந்த அமைப்புகளில் ஒன்று என்று பலர் எங்களுக்குச் சொன்னார்கள். நாங்கள் என் தாயிடம் பேசினோம், மறுநாள் நாம் ஒரு மருத்துவரிடம் செல்லவேண்டும் என்று சொல்லிச் சம்மதிக்கவைத்தோம். அவர் காத்திருக்கச் சம்மதிப்பாரா என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகவே, அடுத்தநாளே செயல்படத் தீர்மானித்தோம். அங்கே செல்ல ஒரு குறிப்பிட்ட நேரம் இருந்தது: காலை 7மணிமுதல் 11மணிவரை.

ஆகவே, ஒரு பிரகாசமான காலைப்பொழுதில், 8 மணிக்கு நாங்கள் NIMHANS வந்தோம், அங்கிருந்த நீண்ட வரிசையில் சேர்ந்துகொண்டோம், நாங்கள் யாரைச் சந்திக்கப்போகிறோம், அவர்கள் எங்களுக்கு என்ன சொல்வார்கள் என்று எதுவும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கானோர் செய்கிற அதே வேலையை நாங்களும் செய்தோம்: ஒரு நீண்ட வரிசையை நம்பிக் காத்திருப்பது, அந்த வரிசையின் நிறைவில், மருத்துவர்கள் இருப்பார்கள், அவர்கள் நமக்கு உதவுவார்கள் என்று நம்புவது. அந்த நீண்ட வரிசை வினோதமாக இருந்தது: நீண்ட அறைகள், அதில் கூண்டுகள், நூற்றுக்கணக்கான இருக்கைகளுடன் காத்திருப்பு அறைகள், ரயில் நிலையத்தில் நகர்வதுபோல் நகரும் மக்கள். வெளியே சில பெஞ்ச்கள் இருந்தன, அங்கே மக்கள் ஓர் எளிய படிவத்தை நிரப்பிக்கொண்டிருந்தார்கள். அதற்காக அவர்கள் தங்களுடைய பேனாக்களைப் பரிமாறிக்கொண்டார்கள். அந்தப் படிவத்தை எல்லாரும் கண்டிப்பாக நிரப்பவேண்டும். அதில் நோயாளியின் வயது, பாலினம் மற்றும் பெயர் ஆகியவை கேட்கப்பட்டிருந்தன. இத்தனை பேரில் யாரெல்லாம் நோயாளிகள், யாரெல்லாம் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் என்பதே புரியவில்லை. மக்கள் அவ்வப்போது அங்குமிங்கும் நகர்ந்தார்கள், காத்திருப்பதை எண்ணி எரிச்சலடைந்தார்கள், பொறுமையாக இருப்பதுபோல் நடித்தார்கள்.

மருத்துவப் பராமரிப்பை அணுகுவதற்காக இப்படியொரு செயல்முறை வடிவமைக்கப்பட்டிருக்கிறது; இதில் ஒருவிதமான நிம்மதியும் இருக்கிறது. முதலில், நம்மைப்போலவே பலர் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறோம், அவர்களும் யாரிடம் உதவி கேட்பது என்று புரியாமல் திகைக்கிறார்கள், எதுவும் விளங்காமல் இருக்கிறார்கள், களைத்திருக்கிறார்கள் என்பதைக் காண்கிறோம். இரண்டாவதாக, நாம் நம்முடைய நிறைவு இலக்கைச் சென்றுசேரும்வரை, அதாவது, மருத்துவரைக் காணும்வரை, இந்தச் செயல்முறைகள் நம்மை ஒரு வேலையிலிருந்து இன்னொன்றுக்கு நகர்த்திக்கொண்டே இருக்கின்றன, அது ஒருவிதமான சவுகர்யத்தைத் தருகிறது. மருத்துவமனையில் நாங்கள் ஒரு பெரிய வரிசை சிறிதாகக் காத்திருந்தோம், அனுமதிக்கப்படும் கூண்டை அடைந்தோம், தேவையான படிவங்களை நிரப்பினோம், பிறகு, எங்களை மீண்டும் காத்திருக்கச்சொன்னார்கள். இப்போது, நாங்கள் இன்னொரு வரிசையில் சேர்ந்துகொண்டோம், எங்கள் கையில் ஒரு கூப்பன் இருந்தது. வங்கியில் காசாளர் பணம் கொடுக்கக் காத்திருப்பதுபோல் நாங்கள் காத்திருந்தோம். அந்த வரிசையும் சிறிதானது, விரைவில் நாங்கள் இன்னொரு கூண்டை அணுகினோம். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நாங்கள் ஓர் இளைய உள் மருத்துவரை அடைந்தோம், நான் நிம்மதிப்பெருமூச்சு விட்டேன்.

நாங்கள் ஒரு சிறிய அறைக்குள் நுழைந்தோம், அங்கே ஒருவர் அமர்ந்திருந்தார், அவர்முன்னே ஒரு மேசை, அவருடைய கையில் ஒரு கோப்பு இருந்தது. நான் இந்த மனிதனை நம்பியாகவேண்டும், அவர் தனது பணியைச் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், அது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. அவர் சரியான கேள்விகளைக் கேட்கிறாரா? என் தாய் எப்படி உடுத்துகிறார் என்று அவர் கேட்கிறாரே, உண்மையில் அவருக்கு என்ன தெரியவேண்டும்? அது எப்படி எனக்குத் தெரியும்? இந்த நிலைமையில், அவருடைய கேள்விகளைக் கேள்விகேட்க எனக்கு ஏதேனும் அதிகாரம் உண்டா?

இப்போது யோசித்தால், ஒரு மனநல மருத்துவரைச் சந்திப்பதும், மற்ற மருத்துவர்களைச் சந்திப்பதும் ஒன்றல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. உதாரணமாக, ஒரு பல் மருத்துவரிடம் செல்வதும் ஒரு மனநல மருத்துவரிடம் செல்வதும் ஒன்றாகிவிடாது. பல்மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் உண்மைகள்: ஆமாம், என்னுடைய கடைவாய்ப்பல் வலிக்கிறது, நான் புகைபிடிக்கிறேன், தினமும் இருமுறை பல் துலக்குகிறேன். ஒரு மனநல மருத்துவரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது இப்படியல்ல, அது உங்களை ஒரு விநோதமான, தற்காப்புப் பிரதேசத்துக்குக் கொண்டுசென்றுவிடுகிறது. அதிலும் குறிப்பாக, இன்னொருவருடைய சார்பாகக் கேள்விகளுக்குப் பதிலளிப்பது மேலும் சிரமம்: ஆமாம், அவர் குளிக்கிறார், அதைப்பற்றி உங்களுக்கென்ன? அவர் எப்போதும் இப்படிதான் உடுத்துவார், அதற்கும் இந்தப் பிரச்னைக்கும் என்ன சம்பந்தம்?

இப்படிதான் எங்களுடைய பேச்சு தொடர்ந்துகொண்டிருந்தது: கேள்விகள் வந்தன, பதில்கள் வந்தன, பதற்றம் அதிகரித்தது. எங்களுக்கு இருந்தது ஒரே ஒரு தெரிவுதான்: இந்தச் செயல்முறையை நாங்கள் நம்பவேண்டும், இதைத் தொடரவேண்டும். நிறைவாக, என் தாயை "இன்னும் கவனிக்கவேண்டும்" என்றார் அவர். நாங்கள் அதே வளாகத்தின் இன்னொரு பகுதிக்கு அனுப்பப்பட்டோம். மிருகக்காட்சிச்சாலைகள், பூங்காக்களில் பயன்படுத்தப்படுவதுபோன்ற ஒரு வண்டியில் அவர்கள் எங்களை அழைத்துச்சென்றார்கள். நாங்கள் ஒரு கூண்டிலிருந்து ஒரு நிஜமான மருத்துவமனையின் அறைக்குள் சென்றோம், அங்கே நாங்கள் மீண்டும் காத்திருந்தோம். இன்னும் சில மருத்துவர்கள் வந்தார்கள், எங்களை இன்னும் கேள்வி கேட்டார்கள், இப்படி அந்த ஆராய்ச்சி தொடர்ந்தது. இந்தச் செயல்முறையின் நிறைவில், எங்கள் தாயை இங்கே அனுமதிக்கவேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள்.

அது ஒரு நீண்ட நாளாக அமைந்தது, அதன்பிறகு அப்படிப் பல நீண்ட நாள்கள் வந்தன, அவருக்கு என்ன பிரச்னை என்பது விரைவாகக் கண்டறியப்படவில்லை, அதற்கான தீர்வுகளும் விரைவாக வரவில்லை. அப்போதைக்கு முக்கியமான விஷயம், நாங்கள் பொறுமையாக இருந்தோம். எப்படிப்பார்த்தாலும் அது ஒரு நீண்ட, ஒன்றும் தெரியாத பயணம்தான். கொஞ்சம் அதிகம் காத்திருந்தால்தான் என்ன?

முதல்நாள் காலை, மருந்துகளால் உண்டாக்கப்பட்ட தூக்கத்திலிருந்து நான் எழுந்தேன். பயத்தாலும் பதற்றத்தாலும் நான் களைத்துப்போயிருந்தேன், மருத்துவர்கள் எனக்கொரு தூக்கமாத்திரையைத் தந்திருந்தார்கள். நான் எழுந்தபோது, என் தாயைக் காணவில்லை. நான் அழத்தொடங்கினேன், பலர் வந்து எனக்கு அன்பாக ஆறுதல் சொன்னார்கள். அவர்களும் என்னைப்போல் அதே அறையில் இருந்தவர்கள்தான், மனநலப் பிரச்னை கொண்ட மற்றவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தவர்கள்தான், ஆனால், அவர்கள் என்னைப்போல் கவலைப்படவில்லை, இந்த மருத்துவமனை வராண்டாக்களில் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்திருந்தார்கள், புரிந்துகொண்டிருந்தார்கள். 'அவரை ஏதோ பரிசோதனைக்காக அழைத்துச்சென்றிருக்கிறார்கள்' என்று அவர்கள் சொன்னார்கள், 'நீ படுத்துக்கொள், எல்லாம் சரியாகிவிடும்.'

இப்படிப் பயமும் பொறுமையும் சேர்ந்த கலவையாக ஒவ்வொரு நாளும் சென்றது. சில பரிசோதனைகள். பல மணிநேரம் கேள்விகளுக்குப் பதில்சொல்லுதல். என் தாயின் உணர்வு வரலாற்றைப்பற்றிய நுணுக்கமான விவரங்களை நிரப்பிய கோப்புகள். மருத்துவமனையிலிருந்த ஆசிரியர்கள் எங்களுக்கு எந்த அவசரமான விளக்கங்களையும் அளிக்கவில்லை, என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய அவர்கள் நிறைய நேரம் எடுத்துக்கொண்டார்கள்.

நான் வீட்டுக்குச் செல்ல விரும்பினேன். எனக்குப்பதிலாக வேறு யாராவது அங்கே வருவார்கள் என்றேன், நான் இதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறேன் என்று சொன்னேன். ஆனால், நான் அங்கேயே இருக்கவேண்டும் என்றார்கள் அவர்கள். அவருடைய செயல்பாடுகளை, பழக்கவழக்கங்களை யோசித்துச் சொல்வதற்கு நான் அங்கே இருக்கவேண்டும், அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் அவருக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறிவதற்கு, அந்தப் புதிரை விடுவிப்பதற்கு நான் உதவவேண்டும்.  என் தாய் எதார்த்தமில்லாத உலகில் இருக்கிறார், அவருக்கு நான்தான் எதார்த்தம், அவர் மறுபக்கம் சென்றுவிட்டதற்கான சாட்சி.

பல நாள்கள் சென்றன, மருத்துவர்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் அவர்கள் திரட்டுவதற்கு நான் உதவினேன், அதற்கு எனக்கு என் நண்பர்கள் உதவினார்கள். இந்த நண்பர்கள்தான் என்னுடைய ஒரே குடும்பம், அவர்கள் எனக்காகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். ஒரு நண்பர் எனக்காக இரவுமுழுக்க மருத்துவமனையில் இருந்தார், ஆகவே, நான் அங்கிருந்து விலகியிருக்கமுடிந்தது. நான் ஒழுங்காகச் சாப்பிடுகிறேனா, சிரிக்கிறேனா, தூங்குகிறேனா என்பதையெல்லாம் அவர்கள் எல்லாரும் கவனித்து உறுதிசெய்தார்கள், ஒவ்வொரு சுவாசத்திலும் நான் உணர்ந்த பயம் என்னை ஏதும் செய்துவிடாதபடி பார்த்துக்கொண்டார்கள்.

இப்படி என் தாய்க்கு என்ன பிரச்னை என்பதை அவர்கள் கண்டறிந்துகொண்டிருந்த காலகட்டம் தேவையில்லாத ஓர் அழகோடு இருந்தது. டபேபூயா மரங்கள் நன்கு பூத்திருந்தன, அந்த NIMHANS மனவியல் பிரிவு Bயின் முற்றத்திலிருந்த பூங்காவில் இரண்டு உயரமான மரங்கள் மென்மையான இளஞ்சிவப்பு வண்ணத்தால் நிரம்பியிருந்தன. வானமும் தேவையில்லாத நீலமாக இருந்தது, சூரிய அஸ்தமனங்கள் அழகாக இருந்தன. மாலை நேரங்களில், டபேபூயா மலர்கள் மெதுவாகக் கீழே விழும், பட்டைப்போல் மென்மையான அந்த மலர்கள் சுற்றிச்சுற்றி விழும், தரையில் ஒரு மென்மையான கம்பளத்தை விரிக்கும். வளாகத்தின் மற்ற பகுதிகளில், ஜகரண்டா மரங்கள் இருந்தன, ஊதாக் கம்பளங்களும் மஞ்சள் கம்பளங்களும் ஆங்காங்கே காணப்பட்டன.

ஆனால், என்னுடைய தலைக்குள்ளேயோ எல்லாமே இருண்ட பழுப்பு நிறமாக இருந்தது. உலகமும் ஏன் அப்படி இல்லை என்று நான் நினைத்தேன். நான் வீட்டைநோக்கி நடப்பேன், ஹோஞ்ச் மரங்களையும் அவற்றின் சிகுரு இலைகளையும் பார்ப்பேன். (சிகுரு என்பது ஒரு கன்னடச்சொல், அதை மொழிபெயர்க்கக்கூடாது என்று நான் உணர்கிறேன். காரணம், அந்த மொழிபெயர்ப்பு 'மொட்டு' என்பதுபோல் சாதாரணமாக அமைந்துவிடக்கூடும்).  இந்த மரத்தின் நிறமானது ஒரு தாயின் அணைப்பைப்போன்றது என்று என் தாய் எப்போதும் சொல்வார். கன்னடத்தில் அதை தாயிய மடிலு என்பார் அவர்.

அந்த மருத்துவமனை அனுபவம்முழுவதுமே கனவுபோல்தான் இருந்தது. குறிப்பாக, அந்த அழகிய மரங்களுக்குக்கீழே என் தாயோடு அமர்ந்து நேரம் செலவிடுவது அதனை மேலும் கனவுபோலாக்கியது. அது ஒரு திருடப்பட்ட நேரம்போல், காத்திருப்பு நேரம்போல் தோன்றியது. வருங்காலத்தில் அவர் குணமாகிவிடுவாரா? அல்லது, அவருடைய நிலைமை இன்னும் மோசமாகுமா? எனக்குத் தெரியவில்லை. நான் யார் என்பதே எனக்குத் தெரியவில்லை, இந்த அனுபவத்திலிருந்து திரும்பவரப்போகும் பெண் எப்படியிருப்பாரோ, அதுவும் எனக்குத் தெரியவில்லை. விழும் மலர்கள் ஒருவிதமான பறவையைப்போலிருந்தன, அவை விழுவதைப் பார்த்தபடி நான் என் தாயருகே அமர்வேன், ஆனால் அவரிடம் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியாது.

நேரம் ஓடியது, நிறைவாக, அவருக்கு என்ன பிரச்னை என்று மருத்துவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்: சைக்கோசிஸ். முதன்முறையாக நான் அந்தச்சொல்லைக் கேட்டபோது, அதற்குப் பல பொருள்கள் இருப்பதாகத் தோன்றியது. அந்தச் சொல்லைக் கேட்டாலே பயம் வந்தது, அதன் பொருள் என்ன என்று எனக்குப் புரியவில்லை. உடல்நலப் பிரச்னை என்றால், அது இப்படிப்பட்டதுதான் என்று என்னால் எண்ணமுடியும், ஆனால் இந்த மனநலப் பிரச்னை அப்படியில்லை, அதன் விவரிப்பு ஓர் உவமை, உருவகத்தின் தன்மையைக்கொண்டிருந்தது, நிஜம்போல் தோன்றவில்லை.

அது என்னுடைய உலகத்தை மொத்தமாகப் பாதித்துவிட்டது. என் தாயின் எதார்த்தமின்மையோடு நான் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தேன், அவருடைய தலையில் உள்ள உலகமும், என்னுடைய தலையில் உள்ள உலகமும் ஒன்றல்ல என்பதை உணர்ந்திருந்தேன். ஆனால், இது எப்படி நிகழ்ந்தது? அவருடைய 'உண்மையான' ஆளுமை (அப்படி ஒன்று இருந்தால்) இப்போது என்முன்னே இருக்கும் நபராக எப்போது மாறத்தொடங்கியது? இந்த நபர் மருத்துவமனையில் சேர்வதை எண்ணிக் கோபப்படுகிறாரே, அவருடைய அனுமதியில்லாமல் நாங்கள் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறோம் என்று உணர்கிறாரே, நான் அவருடைய மகள் இல்லை என்று சொல்கிறாரே?

தலையில் கேட்கும் இந்தக் குரல்கள் என்ன? சிறுநீரகம், இதயம்போல ஏதேனும் ஓர் உடல்பாகத்தில் பிரச்னையா? 'தலையில் குரல்கள்' என்று நான் ஒரு நண்பரிடம் சொன்னபோது, நாங்கள் அப்பாவித்தனமாக எங்கள் தலைகளுக்குள் குரல்களைப்பற்றி விவாதித்தோம். சில நேரங்களில், நாங்கள் தனக்குத்தானே பேசிக்கொண்டோம், அவ்வப்போது அந்தப் பேச்சு விரிவான நாடகபாணியில்கூட அமைந்துவிடுவதுண்டு. அது சரிதானா?

அவருக்கு என்ன பிரச்னை என்பதைப் புரிந்துகொள்வது சிரமமாக இருந்தது. அதேசமயம், அங்கே என்ன நடக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு மருத்துவர்கள் எங்களுக்கு விளக்கிச்சொன்னார்கள். ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை வந்தவர்கள் எதார்த்தத்திலிருந்து விலகிவிடுவார்கள்; அவர்களுக்கு பிரமைகளும் மருட்சிகளும் வரும். இதைத் தெரிந்துகொண்டது பெரிய நிம்மதியாக இருந்தது. அதுவரை, என் தாய் எதைச்செய்தாலும் அதை நான் என்னுடைய அர்த்தங்களுக்குள் பொருத்திப் புரிந்துகொள்ள முயற்சிசெய்துவந்தேன், அது அவசியமில்லை என்று இப்போது புரிந்துகொண்டேன். இனி, நான் அவரைப் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தலாம்.

என்னுடைய தாயின் மூளையிலிருந்த பிரமைகள் "இடத்தைக் காலிசெய்வதற்கு" ஐந்து வாரங்கள் ஆயின. "இடத்தைக் காலிசெய்வது" என்ற மருத்துவச்சொல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதைக் கேட்கும்போதெல்லாம் எனக்குப் புன்னகை வரும். அவருக்குள் வாழ்ந்துகொண்டிருந்த குரல்கள், மருட்சிகள் மற்றும் பாத்திரங்கள் வெளியேறவேண்டும் என்று ஓர் அறிவிப்பு வருகிறது, உடனே அவை அமைதியாக இடத்தைக் காலிசெய்கின்றன. அந்த ஐந்து வாரங்களில் நான் புரிந்துகொண்ட ஒரு விஷயம்: கவனிக்கப்படக்கூடிய ஒரு பிரச்னையை நான் பலகாலமாகக் கவனிக்காமலே இருந்திருக்கிறேன். காரணம், மூளையும் ஓர் உடல்பாகம்தான், அதற்கும் வாழ்க்கை உண்டு, அதற்கும் நோய்கள் வரக்கூடும் என்பதே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் நான் என்னையே கேட்டுக்கொண்டேன்: ஒருவருக்குக் கை உடைந்துவிட்டால் உடனே மருத்துவரைப் பார்ப்போமல்லவா? அதுபோல, மனநலப் பிரச்னை கொண்ட ஒருவருக்கு மருத்துவரின் ஆலோசனை தேவை என்று நமக்கு ஏன் புரிவதில்லை?

இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று எனக்கு ஏன் தெரியவில்லை? இதற்குப் பல பதில்கள் உண்டு. நான் அவரைப் பல சைக்கோதெரபிஸ்ட்களிடம் அழைத்துச்சென்றிருந்தேன், தொழில்சார்ந்த மனநல மருத்துவரிடம்கூட அழைத்துச்சென்றேன், அவர்களால் இதைக் கையாள இயலவில்லை. அதேசமயம், இதற்கு உதவி கிடைக்கும், இதைக் கையாளலாம் என்று சிந்திக்கத்தொடங்கியதும், எங்கள் வாழ்க்கை சிறப்பாகிவிட்டது, அதை நான் அறிவேன். இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தால், நிறைய துயரமும் நேரமும் மிச்சமாகியிருக்கும் என்பதையும் நான் உணர்கிறேன். ஆனால், ஒருவிதத்தில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்: என் தாய்க்கு மிகவும் அக்கறையான மருத்துவ கவனிப்பு கிடைத்தது, அதனால், நடந்ததை என் தாயும் நானும் ஏற்றுக்கொள்ள இயன்றது.

எல்லாருக்கும் இந்த அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை என்பது எனக்குத் தெரியும். சிலருடைய பிரச்னைகள் குறைய மறுக்கின்றன, பலருக்கு மருத்துவப் பராமரிப்பே கிடைப்பதில்லை. அதைவிட மோசம், பலர் தங்களுக்கு உதவவேண்டிய நிறுவனங்களில் மோசமான அனுபவங்களைச் சந்திக்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் மற்றவர்களுடைய கதைகள்.

எங்கள் தாய் வீட்டுக்குச் செல்லலாம் என்று எங்களுடைய மருத்துவர்கள் எங்களிடம் சொன்னார்கள், மற்ற பல நோயாளிகளுக்குத் தேவைப்படுவதுபோன்ற மனநலப் புனர்வாழ்வு அவருக்குத் தேவைப்படாது என்றார்கள். நான் மிகவும் நடுக்கத்துடன் வீட்டுக்குச் சென்றேன். இதனால் என் வாழ்க்கை குறிப்பிடத்தக்க அளவு மாறும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. நான் அவரை வீட்டில் தனியே விட்டுச்செல்ல இயலாது. நண்பர்கள் பார்த்துக்கொள்வார்களா என்றால், அதுவும் சிரமம். இதுவரை தீவிரமான பல கணங்களில் எங்களோடு இருந்த அந்த நண்பர்கள் இப்போது அவர்களுடைய வாழ்க்கையைக் கவனிக்கச் செல்லவேண்டும்.

என் தாய் பழைய நிலைக்குத் திரும்பத்தொடங்கினார். அதாவது, நான் முன்பு அவரை அறிந்திருந்ததுபோன்ற நிலை. அவர் சமைக்க ஆரம்பித்தார், நான் நேரத்துக்குச் சாப்பிடவேண்டும் என்று நச்சரித்தார், ஆடைகளை மடித்துவைத்தார், பத்திரிகைகளை அடுக்கிவைத்தார், முன்பு நான் அவரிடம் பார்த்திருந்த அதே ஒழுங்கு இப்போது மீண்டும் தெரிந்தது. மருந்துகள் அவருக்கு உதவுகின்றன என்று புரிந்துகொண்டு நான் நிம்மதியடையத்தொடங்கினேன்.

எப்போதும் அவரருகே இருப்பது எளிதாக இருக்கவில்லை. ஒவ்வொருமுறை நான் அப்படி வெளியே செல்லும்போதும், நெருக்கடித் தருணங்களும், அச்சம் நிறைந்த கணங்களும் ஏற்பட்டன. அவருக்கு மீண்டும் மனநலப் பிரச்னை வந்துவிடுமோ என்று நான் கவலைப்பட்டேன். இதை என்னுடைய மற்ற வாழ்க்கையுடன் சமநிலைப்படுத்த நெடுநாளானது. ஒருவருக்கு என்ன பிரச்னை என்றூ ஒரு பெயரைச்சொல்லிக் குறிப்பிடுவதால் பல விஷயங்கள் எளிதாகக்கூடும்; ஆனால் அப்போதும், அவருக்கு வேறு வடிவங்களில் கவனிப்பும் பாசமும் தேவைப்படுகிறது, அவற்றை எண்ணிக்கையில் குறிப்பிட இயலாது, பொதுவாக அவை தெளிவற்று, சிக்கலாக அமைகின்றன.  

இப்போது என் தாயும் நானும் ஒரு சிறிய, வசதியான வீட்டில் வசிக்கிறோம், பத்தாண்டுகள் கழித்து நாங்கள் சந்திப்பதைப்போல் அவ்வப்போது தோன்றினாலும், எங்களுக்குள்ளே ஓர் இனிமையான, அழகிய வாழ்க்கையை அமைத்துள்ளோம். அவருக்கு நடந்த எல்லாவற்றையும் நான் அடிக்கடி நினைத்துப்பார்ப்பதில்லை, அவருக்கோ அதைப்பற்றி அதிகம் தெரியாது. என் தாய் குணமாகிவிட்டார் என்பதை எண்ணி நான் நன்றியுணர்வோடிருக்கிறேன். சில நாள்களில், எங்களைப் பிணைத்திருக்கும் கயிறு கனமாக இழுக்கப்படுவதுபோல் தோன்றும், அதுபோன்ற நேரங்களில் அவருடைய சிரிப்பில் நான் கவனம் செலுத்த முயற்சிசெய்வேன், அவரைச்சுற்றி நடக்கும் விஷயங்களுடன் ஒத்திசைந்துசெல்ல முயற்சிசெய்வேன், அவரை நன்றாக வைத்திருக்கும் இயற்கைக்கும் மருந்துகளுக்கும் நன்றிசொல்வேன்.

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னையை அனுபவித்த ஒரு தாயின் மகளால் எழுதப்பட்ட கட்டுரை இது. தன்னுடைய தாய்க்கு இந்தப் பிரச்னை இருப்பது தெரியவந்தபோதுதான் அவர் முதன்முறையாக மனநலப் பிரச்னைகளைப்பற்றி அறிந்துகொண்டார். அந்த அனுபவத்தை அவர் இரண்டு பகுதிகளாக எழுதியிருக்கிறார். அதில் இது இரண்டாவது பகுதி. முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org