ஆலோசனைச் செயல்முறையில் பெற்றோரையும் பங்குபெறச்செய்வது

ஆலோசனைச் செயல்முறையில் பெற்றோரையும் பங்குபெறச்செய்வது அவசியம்

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒரு மாணவர் தானே ஆலோசனைக்கு வருகிறார், அல்லது, ஓர் ஆலோசகரிடம் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் என்றால், அவருடைய சுயவிவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படவேண்டும், அந்த உரிமை அவருக்கு உண்டு. ஆலோசனை நிகழ்வுகளின்போது பொதுவாகத் தனிநபர் விவரங்கள், அந்தரங்கமான விஷயங்கள் ஆலோசகரிடம் பகிர்ந்துகொள்ளப்படுவதால், இது முக்கியமாகிறது.

ஆலோசனையின் ஒரு முக்கியமான அம்சம், ரகசியத்தன்மை. அனைத்து ஆலோசகர்களும் இதைத் தீவிரமாகப் பின்பற்றவேண்டும். பெரும்பாலான ஆலோசனை மையங்கள் ஓர் 'விவரமறிந்த ஒப்புதல் படிவ'த்தைப் பயன்படுத்துகின்றன. இந்தப் படிவத்தில் மற்ற விவரங்களுடன் சில விசேஷச் சூழ்நிலைகளில் ஆலோசனை விவரங்களை வெளியே தெரிவிக்கவேண்டியிருக்கலாம் என்கிற தேவையும் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, ஒருவர் தன்னைக் காயப்படுத்திக்கொள்கிறார், பிறரைக் காயப்படுத்துகிறார், தற்கொலைக்கு முயல்கிறார், அல்லது, மாணவருக்கும் பிறருக்கும் தெளிவான, வரக்கூடிய ஆபத்தைத் தடுப்பதற்காக ஆலோசனை விவரங்களை வெளிப்படுத்தவேண்டும் என்று ஒரு நீதிமன்றம் ஆணையிடுகிறது... இந்தச் சூழ்நிலைகளில் ஆலோசனையின்போது பேசப்பட்ட விஷயங்களை அவர்கள் வெளியே சொல்லவேண்டியிருக்கலாம். அத்தகைய சூழ்நிலைகளின் சதவிகிதம் மிக அதிகமில்லை. அவை அபூர்வம் என்றே சொல்லிவிடலாம். ஆகவே, பெரும்பாலான வளாக ஆலோசனைச் சூழல்களில் ஒரு மாணவரின் ரகசியமான விவரங்கள் ரகசியமாகவே இருக்கும் என்று சொல்லலாம்.

ஓர் ஆலோசகர் மாணவருடன் ஆலோசனை நிகழ்வுகளை நடத்துகிறார், ஓரிரு ஆலோசனைகளுக்குப்பிறகு, 'இவருடைய பெற்றோரும் இதில் பங்குபெற்றால் இவருடைய முன்னேற்றம் நன்றாக இருக்கும்' என்று அவர் கருதலாம். அப்போது, இதில் பெற்றோரையும் சேர்ப்பதுபற்றி யோசிக்கலாம். அல்லது, ஒரு மாணவர் ஆலோசகரை அணுகி, 'என்னுடைய பெற்றோர் தொடர்ந்து சண்டைபோட்டுக்கொண்டே இருக்கிறார்கள், அதனால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை' என்று சொல்லலாம். அப்போது, அவருக்கு இன்னும் சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதற்காக ஆலோசகர் அவருடைய பெற்றோருடன் பேச விரும்பலாம். வளர் இளம் பருவத்தினருக்கு ஆலோசனை வழங்கும்போது, அதில் பெற்றோர் எந்த அளவு பங்கேற்கலாம், எந்த நிலைவரை பங்கேற்கலாம் என்பது பெரும் விவாதத்துக்குரிய ஒரு விஷயமாக இருந்துவந்திருக்கிறது. ஆலோசனையின் முக்கிய அம்சமே ரகசியத்தன்மைதான். இப்படியிருக்க, ஒரு கல்வி நிறுவனத்தில் பயில்கிறவர் ஆலோசனைக்குட்படும்போது, அதில் பெற்றோர் பங்கேற்பதை அவர் விரும்பமாட்டார். இதனால், வளாக ஆலோசகர்கள் பெரும் குழப்பத்தைச் சந்திக்கிறார்கள்: தேர்ந்தெடுத்த விவரங்களைப் பெற்றோருக்குச் சொல்லி அவர்களை மாணவரின் படிப்படியான முன்னேற்றத்தில் பங்குபெறச்செய்வதா, அல்லது, நன்னெறிக் காரணங்களுக்காகப் பெற்றோரை இந்த விஷயத்தில் சேர்க்காமலே இருந்துவிடுவதா?

ஒருவேளை, மாணவர் சந்திக்கும் சவாலை ஆலோசகர் பெற்றோரிடம் சொன்னாலும், பெற்றோர் பெரும்பாலும் தற்காப்பாகவே பேசுகிறார்கள். ஆலோசகர் சொல்வதை அவர்கள் பொறுமையாகக் கேட்பதுகூட இல்லை. 'என் பையன்(அல்லது பெண்) அப்படிச் செய்யமாட்டார்' என்று சொல்லிவிடுகிறார்கள். என்னுடைய அனுபவத்திலிருந்து ஓர் உதாரணம் சொல்கிறேன், ஓர் ஆலோசகர் ஒரு மாணவரின் தாயைச் சந்தித்து, 'உங்கள் மகனைக் கொஞ்சம் கவனியுங்கள், அவன் ஏதேனும் போதைப்பொருள்களைப் பயன்படுத்துகிறானா என்று பாருங்கள்' என்றார். உடனே அந்தத் தாய்க்கு அப்படியொரு கோபம் வந்துவிட்டது, 'என் மகன்மீது தவறாகக் குற்றம் சாட்டுகிறீர்கள், அவனுக்கு அப்படி எந்தப் பழக்கமும் இல்லை' என்று கத்தினார். ஆனால், ஒரு மாதம் கழித்து, அதே தாய் அதே ஆலோசகரைச் சந்தித்து, 'என் மகனின் அறையில் ஒரு போதைப்பொருளைக் கண்டேன்' என்று ஒப்புக்கொண்டார். இதுபோன்ற தலைப்புகளைப் பெற்றோரிடம் பேசும்போது, ஆலோசகர் புரிந்துணர்வோடு நடந்துகொள்ளவேண்டும், அவர்கள் அதிர்ச்சியடைந்துவிடாதபடி ஆலோசனை சொல்லவேண்டும்.

பெற்றோர் தங்கள் குழந்தையின் ஆலோசனையில் பங்கேற்காமலிருப்பதற்கு இன்னொரு காரணம், தங்கள் 'குடும்ப ரகசியங்கள்' வெளியாகிவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இது ஓர் ஆலோசகருக்குப் பெரிய சவாலாக இருக்கிறது. அதேசமயம், இதுகுறித்து நிகழ்ந்துள்ள ஆராய்ச்சிகளைவைத்துப்பார்க்கும்போது, வளர் இளம் பருவத்தினர்மத்தியில் காணப்படும் போதைப்பொருள் பழக்கம் மற்றும் கடமை தவறுதல் போன்ற பிரச்னைகளைக் கையாள்வதற்குக் குடும்ப அடிப்படையிலான சிகிச்சைகள்தான் சிறந்த முறை என்று தெரியவந்துள்ளது. இருந்தாலும், எந்தெந்தச் சூழ்நிலைகளில் பெற்றோருடன் பேசுவது என்று ஆலோசகர்கள்தான் சிந்தித்துத் தீர்மானிக்கவேண்டும்.

ஓர் ஆலோசகர் அல்லது மாணவருக்கு உதவும் எண்ணம்கொண்ட ஓர் ஆசிரியர் பெற்றோருடன் பேச்சைத் தொடங்கலாம். இந்தச் சூழலில், பெற்றோருடன் பேசுவதற்குமுன்னால், அவர்களிடம் என்ன விஷயத்தைச் சொல்லலாம், எந்த அளவு சொல்லலாம் என்பதை ஆலோசகர் மாணவருடன் பேசித் தீர்மானிக்கவேண்டும். ஆனால், இதற்குமுன் குறிப்பிட்டதுபோல், சில விசேஷச் சூழ்நிலைகளில் இதைத் தவிர்த்துவிடலாம். அதாவது, மாணவரிடம் இதுபற்றி விசாரிக்காமல் நேரடியாகப் பெற்றோரிடம் பேசலாம். உதாரணமாக, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஒரு பையன், தன்னோடு படித்த ஒரு சக மாணவியைத் துன்புறுத்தினான். இதனால், அந்தப் பெண் கல்லூரிக்கு வரவே பயந்தாள். ஆகவே, அந்தப் பெண்ணின் தந்தை கல்லூரியில் புகார் தந்தார். உடனே, அந்தப் பையனின் பெற்றோருக்கு இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் ஆலோசனையும் தேவை, ஒழுங்கு நடவடிக்கையும் தேவை.

பெற்றோருடன் வளாக ஆலோசகர் பரஸ்பர நம்பிக்கை, மரியாதையுள்ள ஓர் உறவை உண்டாக்கிக்கொள்ளவேண்டும், அப்போதுதான் அவர்கள் மாணவருக்கு எது நல்லதோ அதைச் செய்ய இயலும். எப்போதெல்லாம் மாணவரின் பெற்றோருடன் பேச வாய்ப்புக்கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் ஆசிரியர் அல்லது ஆலோசகர் அதனை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். உதாரணமாக, பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களில் அவர்கள் இதுபோன்ற விஷயங்களைப் பின்பற்றலாம். கல்லூரிகளில் இது வழக்கமாக இல்லை என்றாலும், பள்ளிகளில் இந்த வழக்கம் உள்ளது. தங்கள் குழந்தையைக் கல்லூரி நன்றாகப் பார்த்துக்கொள்கிறது என்பதை அறியும் பெற்றோர் மிகவும் மகிழ்வார்கள், நிம்மதியடைவார்கள்.

டாக்டர் உமா வாரியர் பெங்களூரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தின் தலைமை ஆலோசகர்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org