கல்வி

தேர்வு நேரம்: எதிர்பார்ப்புகள் ஜாக்கிரதை

மௌலிகா ஷர்மா

தேர்வுகள் வந்துவிட்டன. இதுபற்றி அதிர்ச்சியடைய எதுவுமில்லை. ஒவ்வொரு வருடமும் இதே நேரத்தில் தேர்வுகள் வரும், அதுதான் இயல்பு. ஆனால், இந்த வருடமும், ஒவ்வொரு வருடமும், இதுகுறித்து அதிர்ச்சியடைய ஒரு காரணம் இருக்கிறது: அந்தத் தேர்வுகள் உருவாக்கும் கொந்தளிப்பு. இந்தக் கொந்தளிப்பு தேர்வெழுதுகிறவர்களைமட்டுமல்ல, அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்கள், மாமாக்கள், அத்தைகள், தாத்தாக்கள், பாட்டிகள், அவர்களோடு தொடர்புடைய எல்லாரையும் பாதிக்கிறது.

தேர்வுகளுக்கு இப்படியோர் ஆற்றல் எப்படி வந்தது?

இதற்குக் காரணம், தேர்வுகள்தான் ஒருவருடைய மதிப்பைத் தீர்மானிக்கும் வெளி, நோக்க அடிப்படையிலான, ஒரேமாதிரியான தர அளவுகோல்கள் என்று எல்லாரும் நினைக்கிறார்கள்: பெரும்பாலும் சமூகம் அப்படி நினைக்கிறது, குறிப்பாக, குடும்பங்கள் அப்படி நினைக்கின்றன.

மாணவர்கள் இதைக்கொண்டு தாங்கள் எந்த அளவு நன்றாகப் படிக்கிறோம், அல்லது, எந்த அளவு மோசமாகப் படிக்கிறோம், தங்களுடைய மதிப்பு என்ன, வருங்காலத்தில் தாங்கள் இந்த உலகில் என்னவாக ஆவோம் என்பதையெல்லாம் மதிப்பிடுகிறார்கள். தாங்கள் வாழ்க்கையில் வெல்வோமா, தோற்போமா என்பதையே தேர்வுகள்தான் தீர்மானிக்கும் என அவர்கள் எண்ணுகிறார்கள். ஒரு மாணவர் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கினால், தான் வாழ்க்கையில் வெல்வோம் என்று நம்புகிறார், குறைந்தபட்சம், அதற்கான வாய்ப்பு அதிகம் என்று எண்ணுகிறார். ஒருவேளை அவர் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்காவிட்டால், தாங்கள் வாழ்க்கையிலும் தோற்றுவிடுவோம் என்று எண்ணிக்கொள்கிறார்கள்.

ஆனால், எதார்த்தம் வேறுவிதமாக இருக்கிறது. ஒருவர் வாங்கும் மதிப்பெண்களை வைத்து அவர் வாழ்க்கையில் வெற்றிபெறுவாரா, தோல்வியடைவாரா என்று ஊகிக்கவோ உத்தரவாதம் அளிக்கவோ இயலாது. முதலில், வெற்றிக்கு ஒரே ஒரு வரையறை என்று எதுவும் இல்லை. வெற்றி, தோல்வி என்பவை எல்லாருக்கும் பொருந்துகிற ஒரேமாதிரியான, வெளி, நோக்க அடிப்படையிலான வரையறைகள் அல்ல. ஒவ்வொருவரும் தனக்கு வெற்றி என்பது என்ன, தோல்வி என்பது என்ன என்று வரையறுக்கவேண்டும். ஒருவர் நிறையப் பணம் சம்பாதிப்பதை வெற்றியாகக் கருதலாம், இன்னொருவர் தான் எத்தனை பேருடைய வாழ்க்கையைத் தொடுகிறோம் என்பதை வெற்றியாகக் கருதலாம், இன்னொருவர் தன்னுடைய குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதையே வெற்றியாகக் கருதலாம். ஒவ்வொருவருடைய வரையறையும் மாறுபடும், அது அவருக்குமட்டுமே பொருந்தும். வெற்றிக்கு ஒரே ஒரு வரையறை கிடையாது, ஒருவர் தன்னுடைய வரையறையை இன்னொருவர்மீது திணிக்கக்கூடாது.

இரண்டாவதாக, வெற்றி, தோல்வி என்ற சொற்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளை வரையறுக்கப் பயன்படுகின்றன. அவை மக்கள்மீது சுமத்தப்படும் முத்திரைகள் அல்ல. ஒருவர் வாழ்க்கையில் வெல்லவோ தோற்கவோ முடியாது. அவரது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட செயலில் அவர் வெல்கிறார், அல்லது, தோற்கிறார், அவ்வளவுதான். அது அவர்களுடைய வாழ்க்கையை மொத்தமாக வரையறுப்பதில்லை. அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட அம்சத்தைமட்டுமே வரையறுக்கிறது. ஆகவே, ஒருவர் ஒரு தேர்வில் வெற்றிபெற்றார் என்றால், அவர் வாழ்வில் வெற்றிபெறுவார் என்று அர்த்தமாகாது. அதேபோல், ஒருவர் ஒரு தேர்வில் தோற்றுவிட்டார் என்றால், அவர் வாழ்வில் தோற்றுவிடுவார் என்று அர்த்தமாகாது. ஒருவர் தன்னை வரையறுக்கும்போது, தன்மீது முத்திரை குத்திக்கொள்ளும்போது, வேறு பல அம்சங்களை நினைவில் கொள்ளவேண்டும். அந்த வரையறை அல்லது முத்திரை அவரது வாழ்நாள்முழுவதும் தொடரவேண்டும் என்று அவசியமில்லை.

மூன்றாவதாக, ஒவ்வொரு வெற்றி, தோல்வியையும் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையின் ஒட்டுமொத்த பார்வைக்கோணத்தில் காணவேண்டும். தேர்வுக்குப் படிக்கிற, தேர்வு எழுதுகிற ஒரு மாணவர், தன்னுடைய மொத்த வாழ்க்கையையும் அந்தத் தேர்வுதான் வரையறுப்பதாகவும், அந்த நேரத்தில் அதுவே தன்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வு எனவும் எண்ணலாம். ஆனால், ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்துப்பார்த்தால், அந்தத் தேர்வு அப்படியொரு முக்கியத்துவத்தைக் கொண்டிருக்காது. சொல்லப்போனால், அப்போது அந்தத் தேர்வுக்கு எந்த முக்கியத்துவமுமே இருக்காது. ஒருவர் ஒரு முக்கியமான தேர்வு எழுதுகிறார், ஆனால், அந்தத் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்கள் அடுத்த சில நாள்களில் மதிப்பிழந்துவிடும். மதிப்பெண்கள் சில கதவுகளைத் திறக்கலாம். ஆனால், அப்படிக் கதவு திறந்ததும் வெற்றி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மதிப்பெண்களை வைத்து ஒருவர் கல்லூரியில் சேரலாம், அல்லது, பெரிய நிறுவனத்தில் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்குச் செல்லலாம், ஆனால், அந்தக் கல்லூரியில் அவர் வெற்றிபெறுவார், அந்த நேர்முகத்தேர்வில் அவர் ஒரு நல்ல வேலையைப்பெறுவார் என்பதற்கான உத்தரவாதத்தை மதிப்பெண்கள் வழங்குவதில்லை.

நிறைவாக, வாழ்க்கையில் வெற்றிபெற மதிப்பெண்கள்மட்டும் போதாது, இன்னும் பல விஷயங்கள் தேவை. ஒருவர் தேர்வுகளில் 100% மதிப்பெண் பெறலாம், ஆனால், வேலையில் அல்லது வாழ்க்கையில் வெற்றிபெறாததாக அவர் உணரலாம். வேலைசெய்யுமிடத்தில் ஒருவருடைய தன்னம்பிக்கை, சுயமதிப்பு, தகவல்தொடர்புத் திறன், கற்கும் திறன், கற்றதை மறக்கும் திறன், மீண்டும் புதியவற்றைக் கற்கும் திறன், குழுவில் இணைந்து பணியாற்றும் திறன், தலைமைப்பண்புகள், படைப்புணர்வோடு பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், சிந்தனைத்திறன், செயல்திறன் போன்ற பல விஷயங்கள் மதிக்கப்படும், அவற்றைச் சார்ந்தே ஒருவருடைய வெற்றி அமையும். உறவுகளைப்பொறுத்தவரை, பிறருடன் தொடர்புகொள்ளுவது, அவர்களோடு தன்னைப் பொருத்துப்பார்ப்பது, சில நேரங்களில் பிறருடைய தேவைகளைத் தன்னுடைய தேவைகளுக்குமுன் வைப்பது போன்ற பல விஷயங்கள் மதிக்கப்படும், அவற்றைச் சார்ந்தே ஒருவருடைய வெற்றி அமையும். இவை அனைத்தும், ஒருவர் தன்மீது வைத்திருக்கிற நம்பிக்கை, அவருடைய சுயமதிப்பு ஆகியவற்றைப் பெருமளவு சார்ந்துள்ளன.

அதற்காக, தேர்வுகளைப்பற்றிக் கவலைப்படக்கூடாது, படிக்கக்கூடாது என்று பொருளில்லை. தேர்வுகள் முக்கியம், அவற்றில் ஒரு மாணவர் தனது முழுத்திறமையையும் காட்டவேண்டும். இல்லாவிட்டால், அவர் அதை எண்ணித் திருப்தியில்லாத நிலையை அடைவார். ஆகவே, மாணவர்கள் நன்கு படித்து நன்றாகத் தேர்வெழுதவேண்டும். அதேசமயம், தங்கள் வாழ்க்கையே இதைச் சார்ந்துதான் இருக்கிறது என்று எண்ணவேண்டியதில்லை, அது உண்மையில்லை.

இதையெல்லாம் தொகுத்துப்பார்க்கும்போது, ஒரு மாணவர் எதிர்பார்ப்புகளை எப்படிக் கையாளவேண்டும்? அவர் தன்மீது வைத்துள்ள எதிர்பார்ப்புகள், பெற்றோர் அவர்மீது வைத்துள்ள எதிர்பார்ப்புகள், ஆசிரியர்கள் அவர்மீது வைத்துள்ள எதிர்பார்ப்புகள், ஒட்டுமொத்த உலகமும் அவர்மீது வைத்துள்ள எதிர்பார்ப்புகள்... இதைச்செய்ய ஒரே ஒருவழிதான் உள்ளது: தன்னை நம்பவேண்டும், தன்னுடைய மதிப்பை நம்பவேண்டும், தான் மதிப்புமிகுந்தவர் என்று அறியவேண்டும், ஒரு தேர்வில் தான் எடுக்கும் மதிப்பெண்ணால் அந்த மதிப்பு குறைந்துவிடாது, அதிகரித்துவிடாது என்பதை உணரவேண்டும். மதிப்பெண்கள் என்பவை, கூடுதல் போனஸ்கள்போல.

பல நேரங்களில், மாணவர்கள் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்ளும் உரையாடல் எதிர்மறையாக இருக்கிறது. நான் பயனில்லாதவன், எனக்கு மதிப்பே இல்லை என்றுதான் அவர்கள் எண்ணுகிறார்கள். சமூகம் தங்களை எப்படி எடைபோடுகிறது என்பதைப்பற்றியே அவர்கள் எண்ணுகிறார்கள். பெற்றோர், ஆசிரியர்கள் தங்களை எண்ணி ஏமாற்றமடைவார்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். எதார்த்தமாகப் பார்த்தால், உலகம் ஒரு மாணவரை எண்ணி ஏமாற்றமடையலாம், ஆனால், அது அவர்களுடைய தெரிவு, ஒருவேளை அவர்கள் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தால், அதை அவர்கள்தான் கையாளவேண்டும். அத்துடன், இந்த மாணவரின் வெற்றி எப்படி இருக்கவேண்டும் என்கிற வரையறையை அவர்கள் காலப்போக்கில் மாற்றிக்கொண்டே இருப்பார்கள், மாணவரால் அந்த உயர்ந்த நிலையை எட்ட இயலாமலே போகலாம். அது அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை. இதை எண்ணி அவர் ஏமாற்றமடையக்கூடாது, இது முக்கியம். பெற்றோர், ஆசிரியர்களின் விருப்பம் என்ன? மதிப்பெண்களா? இல்லை, மாணவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், அவ்வளவுதானே? தான் தேர்ந்தெடுத்த விஷயங்களைக்கொண்டு தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை அவரால் நிரூபிக்க இயன்றால், அவர்கள் அதைப் புரிந்துகொள்வார்கள். ஆகவே, மாணவர்கள் தங்களால் இயன்றவரை நன்கு படிக்கவேண்டும், நன்கு தேர்வு எழுதவேண்டும், ஆனால், இவற்றையெல்லாம் தனக்காகச் செய்யவேண்டும்.

நினைவிருக்கட்டும், ஒரு வாசல் மூடினால் இன்னொரு வாசல் திறக்கும். ஆனால் அதற்கு, அந்த மாணவர் வாசல்களைக் கவனமாகப் பார்க்கவேண்டும். அவர் தன்னுடைய முழுத்திறமையைக் காட்டி முயற்சி செய்யாவிட்டால், எந்தக் கதவும் திறக்காது. ஆகவே, வாழ்க்கையில் தன்னுடைய பங்கு என்ன என்பதை அவர் உணரவேண்டும்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org