கல்வி

தேர்வு நேரம்: ஆதரவும் அழுத்தமும்

மௌலிகா ஷர்மா

தேர்வு நேரத்தில் அழுத்தமும் பதற்றமும் மாணவர்களுக்குமட்டுமல்ல, பெற்றோர், ஆசிரியர்களுக்கும்தான். அவர்கள் ஏன் பதற்றப்படுகிறார்கள்? மாணவர்கள் பதற்றப்படுகிற அதே காரணம்தான்: தேர்வு மதிப்பெண்கள் ஒருவருடைய மதிப்பைத் தீர்மானிக்கும் வெளி, நோக்க அடிப்படையிலான, ஒரேமாதிரியான தர அளவுகோல்கள் என்று நம்பப்படுகிறது. அத்துடன், அந்த மதிப்பெண்களை அவர்கள் தங்களுடைய வளர்ப்பு அல்லது சொல்லிக்கொடுக்கும் திறனுக்கான வெளி மதிப்பீடாகவும் பார்க்கிறார்கள். அதாவது, தங்கள் பையன் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினால் தாங்கள் அவனை நன்கு வளர்த்திருக்கிறோம் என்று பெற்றோர் கருதுகிறார்கள், ஒரு பெற்றோராகத் தாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம் என உணர்கிறார்கள். அதேபோல், தங்கள் மாணவர்கள் ஒரு தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினால், தாங்கள் வெற்றிகரமான ஆசிரியர்களாகத் திகழ்கிறோம் என்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.

ஒரு குழந்தை தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்குவதற்குப் பெற்றோரும் ஆசிரியர்களும் முக்கியப் பங்காற்றுகிறார்கள், அதில் சந்தேகமில்லை. குழந்தைகள் பெரும்பாலும் தங்களுடைய ஆசிரியர்கள், பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், அவற்றை விஞ்சிச்செல்லவும் விரும்புகின்றன. ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் எப்படித் தெரிவிக்கப்படுகின்றன என்பதை ஆசிரியர்களும் பெற்றோரும் கவனிக்கவேண்டும். அவை தேவையில்லாத அழுத்தத்தைக் கொண்டுவந்துவிடக்கூடாது, அதன்மூலம் மாணவருக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தந்துவிடக்கூடாது. இதற்காக, தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

முதலில், தேர்வுகள் மாணவர்களுக்குதான். பெற்றோருக்கோ ஆசிரியர்களுக்கோ அல்ல. ஒருவர் எந்த அளவு நல்ல தந்தை அல்லது தாய் என்பதைத் தேர்வுகள் தீர்மானிப்பதில்லை. அதேபோல், தேர்வுகள் ஓர் ஆசிரியர் எந்த அளவு சிறப்பாகப் பாடம் நடத்துகிறார் என்பதையும் தீர்மானிப்பதில்லை. ஒருவேளை அப்படி இருந்தாலும்கூட, அதற்காக ஒரு குழந்தை நன்றாகத் தேர்வு எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஒரு குழந்தை நன்றாகத் தேர்வு எழுத விரும்பவேண்டும், அதற்காக நன்றாகத் தேர்வு எழுதவேண்டும். தன்னுடைய தந்தை, தாய் அல்லது ஆசிரியர் சிறப்பாக உணரவேண்டும் என்பதற்காக அந்தக் குழந்தை தேர்வை நன்றாக எழுதவேண்டியதில்லை. ஆகவே, ஒரு குழந்தை எப்படித் தேர்வு எழுதும் என்பதை வைத்து ஒரு நல்ல தந்தை/தாய்/ஆசிரியர் தீர்மானிக்கப்படுகிறார் என்கிற பதற்றம் ஒருவருக்கு இருந்தால், அந்தப் பதற்றங்களை அவர்கள் வேறு எங்கேயாவது தணித்துக்கொள்ளவேண்டும், உதாரணமாக, நண்பர்களிடம்/ ஆலோசகர்களிடம் பேசலாம், அதைக் குழந்தைமீது சுமத்தக்கூடாது. ஏற்கெனவே அவர்கள் பல பதற்றங்களில் உள்ளார்கள், அதோடு இதையும் சேர்க்கவேண்டியதில்லை.

இரண்டாவதாக, தேர்வுகள் என்பவை குழந்தைக்கு வழங்கப்படும் இறுதித் தீர்ப்புகள் அல்ல. குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் கடந்துசெல்லவேண்டிய பல மைல்கற்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான். இது மாரத்தானைப்போன்ற விஷயம். நூறு மீட்டர் ஓட்டத்தில், குழந்தைகள் வேகமாக ஓடவேண்டும், வெல்லவேண்டும், அதுதான் இலக்கு. இடப்பக்கம், வலப்பக்கம் பார்க்க நேரமில்லை. இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசிக்க இயலாது. கீழே விழுந்து, எழுந்து தடுமாற நேரமில்லை. ஆனால், வாழ்க்கை அவ்வாறு அமைவதில்லை. வாழ்க்கை ஒரு மாரத்தானைப்போன்றது, இங்கே இலக்கு என்பது, மாரத்தானை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதுதான், அதில் வெல்வது அல்ல. ஒவ்வொரு மைல்கல்லாகக் கடக்கக்கடக்க, அதைக் கவனிக்கவேண்டும், இயற்கைக்காட்சிகளை ரசிக்கவேண்டும், தடைகளை வெல்லவேண்டும், சுறுசுறுப்பாக இருக்கவேண்டும், ஓட்டத்தை முழுமைசெய்யும் அளவுக்கு ஆற்றலோடு இருக்கவேண்டும். பெற்றோரும் ஆசிரியரும் முதலில் தங்களை நம்பவேண்டும், பிறகு, அந்தச் செய்தியைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லவேண்டும். வழியில் ஒரு குழந்தை தடுமாறினால், அதுவே மீண்டும் எழும், ஓடுபாதைக்கு வந்து மாரத்தான் ஓட்டத்தைப் பூர்த்தி செய்யும், அதற்கான உத்வேகம் ஏற்கெனவே குழந்தையிடம் இருக்கிறது, அதைப் பெற்றோர், ஆசிரியர்கள் குறைத்துவிடக்கூடாது. வாழ்க்கை என்கிற மாரத்தானில், சில வேகத்தடைகளைப் பார்த்துப் பயப்படவேண்டியதில்லை.

மூன்றாவது, முயற்சியை அங்கீகரிக்கவேண்டும், செயல்திறனை அல்ல தேர்வுக்கு வாசிக்கும் செயல்முறையில் குழந்தையே கட்டுப்படுத்தக்கூடிய ஒரே ஒரு மாறி, அதன் முயற்சியின் அளவுதான். தேர்வில் என்னென்ன கேள்விகள் வரும், அதற்கு எப்படி மதிப்பெண்கள் போடப்படும், தேர்வுத்தாளைத் திருத்துகிறவர் மகிழ்ச்சியான மனோநிலையில் இருப்பாரா, அல்லது, மோசமான மனோநிலையில் இருப்பாரா என்பதையெல்லாம் அவர்களால் கட்டுப்படுத்த இயலாது. அதேபோல், மற்ற மாணவர்கள் எப்படித் தேர்வு எழுதுவார்கள், தேர்வுத்தாள் கசியுமா, தேர்வு இன்னொரு நாளைக்கு ஒத்திப்போடப்படுமா போன்றவற்றையும் அவர்களால் கட்டுப்படுத்த இயலாது. அவர்கள் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே ஒரு விஷயம், அவர்களுடைய முயற்சிதான். இது சிறப்பாக இருக்கவேண்டும்.

இந்தக் கோணத்தில் யோசிக்கும்போது, தேர்வு எழுதும் குழந்தைகளிடம் எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக்கூடாது?

  1. 'நீ நன்றாகத் தேர்வு எழுதுவாய்' என்று சொன்னால், எதிர்பார்ப்பு உயர்கிறது, குழந்தை நன்றாகத் தேர்வு எழுதியே தீரவேண்டும், வேறு வழியே கிடையாது. அதற்குப்பதிலாக, 'உன்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய், அதுதான் எனக்கு முக்கியம்' என்று சொல்லலாம். அது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

  2. 'நீ இந்தத் தேர்வில் 100% எடுக்கவேண்டும், உன்னால் அது முடியும் என்பது எனக்குத் தெரியும்.' சில ஆசிரியர்கள், நன்றாகப் படிக்கும் மாணவர்களிடம் இப்படிச் சொல்வார்கள், அவர்களை ஊக்குவிப்பார்கள். இது அழுத்தம் தருகிற வாசகமாகும். அதற்குப்பதிலாக, 'உன்னால் இயன்றதைச் சிறப்பாகச் செய். அதுதான் இப்போது முக்கியம்' என்று சொல்லலாம்.

  3. 'இந்தத் தேர்வு மிகவும் முக்கியமானது. உன்னுடைய வாழ்க்கையே இதைச் சார்ந்துதான் இருக்கிறது. உனக்கு இருப்பது இந்த ஒரு வாய்ப்புதான். ஒருவேளை இந்தத் தேர்வில் நீ நல்ல மதிப்பெண் வாங்காவிட்டால் என்ன ஆவாய்?' இந்தச் சிந்தனை முற்றிலும் தவறானது. காரணம், வாழ்க்கையில் ஒரே ஒரு சரியான பாதை, அல்லது, ஒரே ஒரு வாய்ப்பு என்று எதுவும் இல்லை. பிழைகள் செய்வது, தோல்வியைச் சந்திப்பது போன்றவற்றிலும் கற்றல் உண்டு, வளர்ச்சி உண்டு. அதற்குப்பதிலாக, 'இந்தத் தேர்வை நீ சிறப்பாகச் செய்வது முக்கியம். அதன்பிறகு, உனக்கு என்ன பாதைகள் திறக்கின்றன என்று பார்க்கலாம்' என்று சொல்லலாம். 'இங்கே ஒரு பாதைதான் சிறந்தது என்று யாராலும் சொல்ல இயலாது. இந்தப் பாதையில்தான் செல்லவேண்டும் என்று உனக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால், உன்னால் அந்தப் பாதையில் செல்ல இயலாவிட்டால், வேறு மாற்றுப்பாதைகள் உள்ளன, அவற்றைப்பற்றி நீ யோசிக்கலாம். தனக்குப் பிடித்ததையேதான் ஒருவர் செய்யவேண்டும் என்று அவசியமில்லை. மற்ற பாதைகளைத் தேர்ந்தெடுத்து வென்றவர்களும் உண்டு. எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வது உன் கையில்தான் இருக்கிறது. இந்தப் பாதை சரி, இந்தப் பாதை தவறு என்று எதுவும் இல்லை.'

  4. 'நீ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்காவிட்டால் உன்னுடைய தாத்தா, பாட்டி உன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்' அல்லது 'நீ தேர்வில் நல மதிப்பெண் எடுக்காவிட்டால் தலைமை ஆசிரியர் மிகவும் ஏமாற்றமடைவார்.' முன்பே நாம் பார்த்ததைப்போல், இது தனிநபரைப்பற்றியதல்ல, பிறரைப்பற்றியதல்ல, ஒட்டுமொத்தச் சமூகத்தைப்பற்றியதல்ல. குழந்தை தன்னுடைய தெரிவுகளை எண்ணிச் சவுகர்யமாக இருக்கவேண்டும், வாழ்க்கையில் பின்னர் அவற்றை எண்ணி வருந்தக்கூடாது. குழந்தை தன்னால் இயன்றதைச் சிறப்பாகச் செய்தோம் என்று நம்பவேண்டும். அவர்களுடைய சாத்தியம் எதுவானாலும், அதை எட்டுவதற்குத் தன்னால் இயன்ற அளவு உழைத்தோம் என அது எண்ணவேண்டும்.

இவற்றைத் தொகுத்துப்பார்த்தால், குழந்தைக்கு உதவக்கூடிய பேச்சுகள் என்ன, உதவாத பேச்சுகள் என்ன என்பது ஓரளவு புரியும். சுருக்கமாகச் சொல்வதென்றால், பெற்றோரும் ஆசிரியர்களும் முயற்சியை அங்கீகரிக்கவேண்டும், செயல்திறனை அல்ல. பதற்றத்தால் தங்களுடைய சிந்தனைகள் பாதிக்கப்பட அனுமதிக்கக்கூடாது. இத்துடன், வாழ்க்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் உள்ளன என்று நம்பவேண்டும், வெற்றி என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வரையறைகள் உள்ளன என்று நம்பவேண்டும், உண்மையும் அதுதான்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org