உளவியல் சமூகவியல் ஊனம் என்றால் என்ன?

ஊனம் என்பதன் சமூக மாதிரி, இது குறைபாடு கொண்ட தனிநபர்மீது கவனம் செலுத்துவதில்லை, பிறருக்கு இணையாக, தாங்கள் விரும்புவதுபோல் தங்கள் வாழ்க்கையை வாழ இயலாதபடி அவர்களைத் தடுக்கும் சமூக, பிற தடைகளின்மீது கவனம் செலுத்துகிறது.
உளவியல் சமூகவியல் ஊனம் என்றால் என்ன?

ஊனம்பற்றிய சமூக மாதிரியானது, ஒருவர் சந்திக்கக்கூடிய தடைகளில் கவனம்செலுத்துகிறது. இவை சமுதாயம்சார்ந்த தடைகளாக இருக்கலாம், பிற தடைகளாக இருக்கலாம், இவற்றால் அவர்கள் பிறருக்கு இணையான ஒரு வாழ்க்கையை வாழ இயலாமல்போகிறது.

கடந்த நூற்றாண்டில், ஊனம்பற்றிய பார்வை மற்றும் புரிந்துகொள்ளல் வெகுவாக மாறியுள்ளது. வழக்கமாக, ஊனம் என்பது ஒரு தனிநபரைச் சார்ந்ததாகவே பார்க்கப்படும், அதாவது, அவருடைய குறைபாட்டின்மீதுதான் கவனம் செல்லும்.

ஆகவே, இந்தக் கேள்வியில் தொடங்குவோம்: குறைபாடு என்றால் என்ன? மனநலப் பின்னணியில் பார்க்கும்போது, குறைபாடு என்பதை நாம் ஏதோ ஒருவிதமான 'மனநலப் பிரச்னை' என்று பார்ப்போம், நமக்குப் பொதுவாகத் தெரிந்த நோய்களில் அடங்காத ஒன்று, மனநலப் பிரச்னை என்பதன் வரையறைக்குள் விழக்கூடிய எதுவும்... இந்த வரையறையே இன்னும் ஒழுங்காகத் தீர்மானிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். நோய்கண்டறிதல் மற்றும் புள்ளிவிவரக் கையேட்டின் ஐந்தாவது பதிப்பில் உள்ள வரையறையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்:

"மனநலக் குறைபாடு என்பது, ஒரு தனிநபருடைய அறிவாற்றல், உணர்வுக் கட்டுப்பாடு, அல்லது பழக்கழக்கங்களில் மருத்துவரீதியில் குறிப்பிடத்தக்க தொந்தரவை உண்டாக்கக்கூடிய தன்மையைக்கொண்ட ஒரு நோய்க்குறியீடாகும், இது அவருடைய உளவியல், உயிரியல், அல்லது மனச் செயல்பாட்டின் முன்னேற்றச் செயல்முறைகளில் ஒரு செயல்பிறழ்ச்சியை உண்டாக்குகிறது. மனநலக் குறைபாடுகள் பொதுவாகச் சமூகம், பணி, அல்லது பிற முக்கிய நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க துயரத்தைத் தருவதாகக் கருதப்படுகின்றன. ஒரு பொதுவான அழுத்தம் அல்லது இழப்பு, உதாரணமாக, அன்புக்குரிய ஒருவருடைய மரணம் போன்றவற்றால் ஏற்படும் எதிர்பார்க்கத்தக்க அல்லது கலாசாரரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதிர்வினையானது மனநலக் குறைபாடு ஆகாது. சமூகத்திலிருந்து மாறுபட்ட பழக்கவழக்கம் (உதாரணமாக, அரசியல், மதம் அல்லது பாலியல்) மற்றும் முதன்மையாகத் தனிநபருக்கும் சமூகத்துக்கும் இடையிலான முரண்கள் போன்றவை மனநலக் குறைபாடுகள் அல்ல. ஒருவேளை அந்த மாறுபாடு அல்லது முரண் மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி அந்தத் தனிநபரிடமுள்ள செயல்பிறழ்ச்சியால் ஏற்பட்டால்மட்டுமே அது மனநலக் குறைபாடு ஆகலாம்.

ஒரு மனநலப் பிரச்னை, குறைபாட்டை இப்படிப் புரிந்துகொள்வதை நாம் ஏற்றுக்கொண்டோமென்றால், இதுவே ஓர் ஊனமாகாது. ஊனம் என்பது ஓர் உள்ளார்ந்த நிலை அல்ல, அது இரண்டு விஷயங்களின் கலப்பால் ஏற்படுவது: குறைபாடு மற்றும் அதைச்சுற்றியுள்ள தடைகள். இந்தத் தடைகள் எவை? மனிதர்கள் ஒவ்வொருவரும் தினசரி வாழ்க்கையில் பலவிதமான தடைகளைச் சந்திக்கிறார்கள், இது நமக்குத் தெளிவாகப் புரிகிறது. 'எனக்கு எந்தத் தடையும் இல்லை' என்று சொல்கிற ஒருவரை நாம் சந்திப்பது அபூர்வமே. அப்படியானால், எல்லாருக்கும் ஊனம் உள்ளதா?

இங்கே பொருந்தக்கூடிய தடைகள், முதலில் அவருடைய குறைபாட்டுடன் ஊடாடவேண்டும். மனநலக் குறைபாடு கொண்ட ஒருவர் எந்தத் தடைகளை எதிர்கொள்ளக்கூடும்? நலப்பராமரிப்பை அணுகுதல் ஒரு தடையாக இருக்கலாம். குடும்ப உறுப்பினர்கள், அவர் வேலைசெய்கிற நிறுவனத்தைச் சார்ந்தோர் இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாமலிருப்பது ஒரு தடையாக இருக்கலாம். கூட்டமான, நெரிசலான பொதுப் போக்குவரத்துகூட ஒரு தடையாக இருக்கலாம். இவை அனைத்தும் அவருக்குள்ள குறைபாட்டுடன் நேரடியாகத் தொடர்புடையவை.

இரண்டாவதாக, இந்தத் தடைகளால் அவர் பிறரைப்போல் சமூகத்துக்கு ஒரு முழுமையான மற்றும் செயல்திறன்வாய்ந்த பங்களிப்பைத் தர இயலாத சூழ்நிலை ஏற்படவேண்டும். நலப்பராமரிப்பை அணுகுவதில் பிரச்னை என்றால், பிற சூழ்நிலைகளுக்காக நலப்பராமரிப்பு தேவைப்படும் மற்ற நபர்களைப்போல் அவரால் தன்னுடைய நிலையைக் கையாள இயலவில்லை, அதன்மூலம் தனக்குத் திருப்தியளிக்கும்விதமாகச் செயல்பட இயலவில்லை என்று பொருள். குடும்ப உறுப்பினர்கள், சக ஊழியர்களுக்கு அவருடைய நிலைமை சரியாகப் புரியவில்லை என்றால், மற்ற குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்களுக்கு இணையாகச் செயல்பட அவர்களுக்குத் தேவைப்படும் வசதிகள், இடம் அவருக்குக் கிடைக்கவில்லை என்று பொருள். பொதுப்போக்குவரத்து கூட்டமாகவும் நெரிசலாகவும் இருக்கிறது என்றால், மற்றவர்களைப்போலின்றி அவர்கள் தனிப் போக்குவரத்துக்காகக் கூடுதலாகச் செலவழிக்கவேண்டியிருக்கிறது என்று பொருள்.

இதுதான் ஊனம் என்பதன் சமூக மாதிரி, இது குறைபாடு கொண்ட தனிநபர்மீது கவனம் செலுத்துவதில்லை, பிறருக்கு இணையாக, தாங்கள் விரும்புவதுபோல் தங்கள் வாழ்க்கையை வாழ இயலாதபடி அவர்களைத் தடுக்கும் சமூக, பிற தடைகளின்மீது கவனம் செலுத்துகிறது. ஆகவே, அந்தத் தனிநபரின் குறைபாட்டைச் 'சரிசெய்வதில்' கவனம் குவிக்கப்படுவதில்லை, மனிதர்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள், அதில் இதுவும் ஒருவிதம் என்று அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும், அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிகளில் கவனம் செலுத்தவேண்டும், அந்த நேரத்திலும், அத்தகைய தீர்மானமெடுத்தலின் மையத்தில் அவர்களே இருக்கவேண்டும்.

அம்பா சலேல்கர் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், ஊனமுற்றோர் சட்டம் மற்றும் கொள்கைகளில் சிறப்பு ஆர்வம் கொண்டவர்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org