வளர் இளம் பருவம்

பேரார்வமும் எதார்த்தமும்

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா

பதினெட்டு. இந்தியாவில் இது ஒரு முக்கியமான வயது. இந்த வயதில்தான் ஓர் இளைஞர் தன்னுடைய வாழ்க்கையைப்பற்றிய முக்கியமான தீர்மானங்களை எடுக்கவேண்டும்: என்ன படிப்பது, எங்கே வேலைக்குச் சேர்வது, எப்படிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்வது... ஆனால், பதினெட்டு வயதில் உள்ள பல இளைஞர்கள், பன்னிரண்டாம்வகுப்புப்படிப்பின் அழுத்தத்தில் இருப்பார்கள், அதனால் அவர்களுடைய மனநிலை கடும் பாதிப்புக்குள்ளாகலாம். பதற்றம் அவர்களை முடக்கிவிடலாம், சோர்ந்துவிடச்செய்யலாம். பதற்றம் அதிகரிக்க அதிகரிக்க, அவர்கள் மனச்சோர்வைச் சந்திக்கலாம், தேர்வுகளைச் சந்திக்க இயலாமல் சிரமப்படலாம். ஒவ்வோராண்டும், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஏராளமான மாணவர்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தேர்வு தொடர்பான பதற்றம், படிப்பில் கவனம்செலுத்த இயலவில்லை, எதுவும் நினைவில் நிற்பதில்லை, அழுகிறார்கள், ஆவேசப்படுகிறார்கள், பிடிவாதம் பிடிக்கிறார்கள், தூக்கம் வராமல் சிரமப்படுகிறார்கள்.

நம் நாட்டில் உள்ள பல குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளின் வருங்காலமே பன்னிரண்டாம்வகுப்புத் தேர்வு முடிவுகளை நம்பிதான் இருக்கிறது என்றெண்ணுகிறார்கள். அதேசமயம், அவர்களுடைய பிள்ளைகளுக்குப் பல பயங்கள் உள்ளன, அதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள பதற்றங்களுடன் பெற்றோர் தங்களுடைய கவலைகளையும் சேர்த்து அழுத்தத்தை அதிகரிக்கக்கூடாது. உண்மையில், பெற்றோர்தான் அந்தப் பிள்ளைகளுக்கு ஆதரவுதரும் அமைப்பாகத் திகழவேண்டும். இந்தியாவில் தேர்வுமுடிவுகள் வரும்போதெல்லாம், ஒரு தற்கொலைச்செய்தியாவது வந்துவிடுகிறது.

ஒரு நடுத்தரக்குடும்பத்தில், பெற்றோருடைய சம்பளம் குறைவு, அவர்கள் விரைவில் ஓய்வுபெறப்போகிறார்கள், ஆகவே, தங்களது பதினெட்டு வயது மகனோ மகளோ இன்னும் 4-5 ஆண்டுகளில் குடும்பத்தின் பொருளாதாரச்சுமையைத் தாங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  இந்த அணுகுமுறை, இந்தியாவில் பல குடும்பங்களுக்குப் பலன் தந்துள்ளது. அந்தப் பதினெட்டு வயது இளைஞர் பல நுழைவுத்தேர்வுகளில் கலந்துகொள்கிறார், தனக்கு எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ அங்கே சென்று சேர்கிறார். அடுத்த நான்கு ஆண்டுகள், அவர் கஷ்டப்பட்டுப் படித்து நல்ல மதிப்பெண்களை எடுக்கப் போராடுகிறார். தான் செய்வதைத் தான் விரும்புகிறோமா என்று அவர் கேள்விகேட்பதே இல்லை. அப்படி அவரால் கேள்விகேட்க இயலாது.

ஆனால், ஒருவேளை, அப்படிக் கேள்விகேட்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தால்? உதாரணமாக, ஒருவர் காலத்தால் பின்னோக்கிச் சென்று இப்படிச் சிந்திக்கிறார்: உண்மையில் நான் எதைச்செய்ய விரும்புகிறேன்? ஒருவர் தீர்மானம் எடுக்கவேண்டுமென்றால், அவருக்கு விவரங்கள் தேவை. உதாரணமாக, ஒரு மாணவர் எந்தக் கல்லூரியில் சேர்வது என்பதைத் தீர்மானிக்கவேண்டுமென்றால் வெவ்வேறு படிப்புகள், கல்லூரிகளைப்பற்றியும் தன்னுடைய விருப்பங்களைப்பற்றியும் அவர் அறிந்திருக்கவேண்டும்.  அவருடைய பெற்றோரோ ஆசிரியரோ ஓர் ஆலோசகரோ அவருக்குச் சில அறிவுரைகளை வழங்கலாம், வழிகாட்டலாம், அவ்வளவுதான். மற்றபடி, அவருக்கு எது அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது, அதைக்கொண்டு எப்படிச் சம்பாதிப்பது என்பதையெல்லாம் அவரேதான் கண்டறியவேண்டும்.

இப்படிச் சிந்திக்கிற ஒருவர், மற்றவர்கள் வழக்கமாகத் தேர்ந்தெடுக்காத ஒரு துறையில் நுழையலாம். ஆனால், அந்தத்துறையில் அவருக்கு அபாரமான திறமை இருக்கவேண்டும், காரணம், இதுபோன்ற துறைகளில் உயர்ந்த நிலைக்குச் சென்றால்தான் வெற்றி கிடைக்கும். உதாரணமாக, தொழில்முறை விளையாட்டுகள். இந்தச் சூழ்நிலையில், ஆலோசனை கேட்டு வரும் இளைஞர்கள் Burnout எனும் நிலையில் இருக்கிறார்கள். Burnout என்பது, நீண்டகாலமாகத் தொடரும் களைப்பு, குறைகின்ற ஆர்வம், வெறுப்பு மனப்பான்மை, தங்களால் எதையும் செய்ய இயலாது என்கிற எண்ணம் போன்றவற்றைக் குறிப்பிடும் ஓர் உளவியல் சொல் ஆகும். Burnoutன் எதிர்ப்பதம், Engagement, அதாவது, ஆற்றலோடு எதிலும் ஈடுபடுதல், தன்னால் எதையும் செய்ய இயலும் என்று நம்புதல். ஒருவர் தன்னால் எந்தத்துறையில் Engagementஉடன் இயங்க இயலுமோ அந்தத்துறையைத் தேர்ந்தெடுப்பதே நல்லது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இளைஞர்கள் எந்தத்துறையைத் தேர்ந்தெடுத்தாலும் சரி, அவர்கள் தங்கள் பெற்றோரைச் சமாதானப்படுத்தவேண்டும். காரணம், அவர்கள்தான் அவருடைய கல்விக்குப் பணம் செலுத்துகிறார்கள். உதாரணமாக, ஒரு மாணவர் கணிதம், இயற்பியலில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார். ஆனால், அவர் பொறியியல் படிக்காமல், பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுக்கிறார். IITயில் B.E. படித்தால் உடனே வேலை கிடைக்கும், நன்கு சம்பாதிக்கலாம் என்று எல்லாரும் சொல்கிறார்கள், ஆகவே, அவருடைய பெற்றோர் அவரிடம், 'நீ பொறியியல் படிக்கலாமே' என்கிறார்கள். 'நீ ஏன் பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுத்தாய்?' இந்தக் கேள்விக்கு அவர்களுக்குப் பதில் தேவை. இப்படி அவர்கள் கேட்கும்போது, 'நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளமறுக்கிறீர்கள்' என்று கத்தினால் போதாது. உலகின் பல பகுதிகளில், குறிப்பாக இந்தியாவில் STEM-தொடர்பான துறைகள் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) மிகவும் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன, இவற்றைப்படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆகவே, ஒரு மாணவர் இவையல்லாத இன்னொருதுறையில் சேர விரும்பினால், சிக்கல்தான், அவர் தன் குடும்பத்தினருடன் மனத்தளவில் போராடவேண்டும், இந்தப் போராட்டம் நெடுநாள் நீடிக்கலாம், கருத்து வேறுபாட்டில் சென்று முடியலாம். இன்றைக்குப் பல இளைஞர்கள் இந்தப் பிரச்னையைச் சந்திக்கிறார்கள்.

இது தீர்மானமெடுப்பதற்கான ஓர் எதார்த்தமான வழியாகத் தோன்றினாலும், இதனால் இளைஞர்களின் தன்னுணர்வு, தன்னம்பிக்கை, நேர்ச்சிந்தனை, வாழ்க்கையை அனுபவிக்கும் எண்ணம் போன்றவை கெட்டுப்போகின்றன. சுருக்கமாகச்சொன்னால், அவர்களுடைய மனநலம் பாதிக்கப்படுகிறது. பல மாணவர்களை அவர்களுடைய பெற்றோர் வற்புறுத்தி ஏதோ ஒரு வகுப்பில் சேர்த்துவிட்டுவிடுகிறார்கள். அது அந்த மாணவர்களுக்கு உவப்பானதாக இல்லை, அதன்பிறகு, அவர்கள் சரியாகப் படிக்க இயலாமல் சிரமப்படுகிறார்கள், பல தேர்வுகளில் தோல்வியடைகிறார்கள், மனநல ஆலோசகரிடம் வருகிறார்கள். அவர்களுக்கு வேறு வழியே இல்லை என்பதால்தான் படிக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்குள் ஆழமான சோகம் உள்ளது, எப்படியாவது பட்டம் வாங்கிவிட்டால் போதும், ஒரு வேலை கிடைக்கும், சம்பளம் வரும், நிம்மதியாக வாழலாம் என்று எண்ணுகிறார்கள்.

இவர்கள் சதுரவடிவில் இருந்தாலும், இவர்களுடைய பெற்றோர் இவர்களை வட்டவடிவத் துளைகளில் திணிக்க முனைகிறார்கள். இதனால், இவர்களது அடையாளவுணர்வு பாதிக்கப்படுகிறது, 'நான் யார்?' என்பதுபோன்ற கேள்விகளுடன் சிகிச்சைக்கு வருகிறார்கள், அல்லது, 'எனக்கு ஞாபகசக்தி குறைந்துவிட்டது' என்கிறார்கள். இப்படிச் சிகிச்சைக்கு வரும் மாணவர்களில் பலர், ஏதோ ஒரு தொழில்துறை நிபுணத்துவப்படிப்பில் இருக்கிறவர்கள், அல்லது, பணிசார்ந்த படிப்பில் சேர்ந்துள்ளவர்கள், இவர்களுக்கு இந்தப் படிப்பில் ஆர்வமில்லை, ஆனால், எப்படியாவது படித்துப் பட்டம்/பட்டயம் வாங்கிவிட்டால் வேலை கிடைத்துவிடும் என்று நம்பி இவர்களது பெற்றோர் இவர்களை இங்கே சேர்த்துள்ளார்கள். இவர்களுக்குப் பாடங்கள் புரிய மறுக்கின்றன, ஆகவே, தங்களை முட்டாள்களாக எண்ணிக்கொள்கிறார்கள், இதனால் இவர்களுடைய தோல்வியுணர்வு அதிகரிக்கிறது, தாங்கள் நிஜத்தில் யார், தங்களுக்கு என்ன விருப்பம் என்பதெல்லாம் புரியாமல் குழம்புகிறார்கள்.  இந்தவகை மனச்சோர்வு பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. காரணம், ஒரு சிரமமான சூழலுக்குத் தாங்கள் எந்த அளவு தங்களை மாற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதைப் பலர் உணர்வதில்லை, அதனால் தாங்கள் தங்களுடைய உண்மையான அடையாளத்திலிருந்து எவ்வளவுதூரம் நகர்ந்துவிட்டோம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

இதுபற்றிக் கல்வியாளர்களைக் கேட்டால், 'கல்வியின் நோக்கம், புத்திசாலித்தனத்தை, திறமைகளை மேம்படுத்துவதுமட்டுமல்ல, மாணவர் தன்னுடைய உண்மையான அடையாளத்தை வளர்த்துக்கொள்வதும்தான்' என்கிறார்கள். இந்த விஷயத்தில் உண்மையாக இருக்கவேண்டுமென்றால், மூன்று பண்புகள் தேவை: சுதந்தரத்தன்மை, நேர்மை மற்றும் ஒத்திசைவு. சுதந்தரத்தன்மை என்பது, ஒருவரைச் சுதந்தரமாகச் சிந்திக்கவைக்கிறது, நேர்மை என்பது அவரைத் தெளிவாக, ஒழுங்காகச் சிந்திக்கவைக்கிறது, ஒத்திசைவு என்பது அவரது எண்ணங்கள், உணர்வுகளை ஒழுங்குபடுத்துகிறது, அவற்றினிடையே எந்த முரணும் இல்லாதபடி பார்த்துக்கொள்கிறது, அவர்கள் உலகோடு பொருந்தியிருப்பதை உறுதிசெய்கிறது. இருத்தலியத் தத்துவத்தில், உண்மையாக இருப்பது என்றால், வெளி அழுத்தங்கள் எவ்வளவு வந்தாலும், ஒருவர் தனக்குத்தானே உண்மையானவராக இருப்பதுதான்.  இந்தியாவில் கல்விபற்றிய உரையாடல் இப்போது இந்தத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், எல்லாரும் இதனைப் பின்பற்ற நாளாகும்.

இப்போதைக்கு, கல்வி என்பது பெரும்பாலும் வேலை தேடும் கருவியாகவே காணப்படுகிறது. இதன்மூலம் சம்பாதிக்கலாம், தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றலாம், கடன்களைத் திரும்பச்செலுத்தலாம் என்பதற்காகதான் பலர் படிக்கிறார்கள். இந்த இளைஞர்கள், உண்மையாக இருப்பதைப்பற்றிச் சிந்திக்கமாட்டார்கள். மாஸ்லாவின் தேவை அடுக்கின்படி பார்த்தால், தங்களுடைய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும்வரை, தன்னை அறிதல் என்கிற உயர்ந்த தேவையைப்பற்றி இவர்கள் சிந்திக்கமாட்டார்கள். சில துணிச்சலான மாணவர்கள் இந்தச் சிந்தனையிலிருந்து விலகிச் செயல்படுகிறார்கள், மற்ற பயந்த மாணவர்களுக்குப் பாதை வகுக்கிறார்கள். ஆகவே, வருங்காலத்தில் மாணவர்கள் கல்விக்காகத் தங்கள் மன நலத்தைக் காவுகொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்பலாம்.

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார். நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் கருத்துகள், கேள்விகள் எவையேனும் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org