சைக்கோசிஸ்: எதார்த்தத்திலிருந்து விலகுதல்

பாவனாவுக்கு வயது 20. UKல் படிக்கும் இந்தியப்பெண் இவர். திடீரென்று ஒருநாள், தன் தாயைத் தொலைபேசியில் அழைத்தார். இரவு நெடுநேரமாகிவிட்டதே என்று எண்ணியபடி அவருடைய தாய் தொலைபேசியை எடுத்தவுடன், பாவனா கத்தத்தொடங்கினார், 'யாரோ என்னைக் கொல்லப்பார்க்கிறார்கள்.' அதாவது, அவரது கணினிக்குள் யாரோ புகுந்துவிட்டார்களாம், அவர்கள் அந்தக் கணினிமூலம் பாவனாவிடம் பேசியிருக்கிறார்கள். 'நீ வாழத் தகுதியற்றவள், நேரே சென்று ஏதோ ஒரு வண்டிக்குமுன்னால் விழுந்துவிடு' என்று அவர்கள் திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள். சில நேரங்களில், அவர்கள் ஆபாசமான பெயர்களால் அவரை அழைத்துக் கேலி செய்கிறார்கள்.

பாவனா முதன்முதலாக UKக்குப் படிக்கவந்தபோது, இன்னும் இரண்டு பெண்களுடன் சேர்ந்து தங்கியிருந்தார். சில ஆண்டுகளில், அந்தப் பெண்கள் நெருங்கிய தோழிகளாகிவிட்டார்கள். ஆனால், ஆறுமாதங்களுக்குமுன்னால், பாவனாவுக்குத் தன் தோழிகள்மீதே சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் தன்னை உளவுபார்க்கிறார்கள் என்று எண்ணத்தொடங்கினார். ஆகவே, அவர் தன் அறையிலேயே தங்க ஆரம்பித்தார், கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார், திரைச்சீலைகளை இழுத்துவிட்டுக்கொண்டார். அந்த அறையிலிருந்து அவர் வெளியே வருவதே இல்லை, சமையலறைக்குச் சென்று சமைப்பதில்லை, சாப்பிடுவதில்லை, குளிப்பதில்லை... இதனால் அவரது உடல்நலமும் சுத்தமும் பாதிக்கப்பட்டது. இப்போது அவர் வகுப்புகளுக்குச் செல்வதும் இல்லை, தேர்வுகளை எழுதுவதும் இல்லை.  நிறைவாக, அவர் ஒரு சிறிய வீட்டுக்கு மாறிவிட்டார், தனியே தங்கத்தொடங்கிவிட்டார். இந்த விஷயமெல்லாம் அவருடைய பெற்றோருக்குத் தெரியாது. காரணம், பாவனா அவர்களிடம் ஒரு நியாயமான காரணத்தைச் சொல்லிதான் வீடுமாறியிருந்தார். தங்கள் மகள் நன்றாக இருப்பதாகவே அவர்கள் எண்ணியிருந்தார்கள்.

ஆனால் இப்போது, திடீரென்று இப்படியொரு தொலைபேசி அழைப்பு வந்ததும், பாவனாவின் தாய் பதறிப்போனார். அடுத்த விமானத்தில் சென்று மகளை இந்தியாவுக்கு அழைத்துவந்துவிட்டார்.

பாவனாவும் அவருடைய தாயும் என்னிடம் ஆலோசனைகோரி வந்தார்கள். பாவனாவின் பிரச்னையைப்பற்றி அவருடைய தாய் எனக்கு விளக்கினார். அப்போது, பாவனா அருகில்தான் அமர்ந்திருந்தார், ஆனால், எதுவும் பேசவில்லை, அவர் மிகவும் களைத்துக்காணப்பட்டார், முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவர் தாய் சொன்னதற்குமேல் பாவனா எதுவும் பேசவில்லை, அவர் சொன்னதை மறுக்கவும் இல்லை. தான் எங்கே இருக்கிறோம், யாருடன் இருக்கிறோம் என்பதுகூட அவருக்குப் புரியவில்லை என்று தோன்றியது. இப்போது நான் பாவனாவிடம் ஓர் எளிய கேள்வி கேட்டேன், 'நீங்கள் சரியாகத் தூங்குகிறீர்களா?'. நான் இப்படிக் கேட்டதும் அவர் என்னைக் குழப்பமாகப் பார்த்தார், ஆனால், பதில் சொல்லவில்லை. அவர் மனத்தளவில் வேறு எங்கோ இருப்பதாகத் தோன்றியது.

மனநல மருத்துவமனைகளில் இதுபோன்றவர்களைத் தினந்தோறும் பார்க்கலாம். பாவனாவுக்கு வந்திருக்கும் அறிகுறிகள் அனைத்தும் பொதுவானவைதான்:

  • பிரமைகள்: ஏதோ ஒரு குரல் அவரோடு பேசிக்கொண்டிருந்தது
  • மாயத்தோற்றங்கள்: தன்னுடைய கணினிக்குள் யாரோ நுழைந்துவிட்டார்கள், தன் நண்பர்கள் தன்னை உளவுபார்க்கிறார்கள் என்று அவர் உறுதியாக நம்பினார்
  • ஒழுங்கற்றதன்மை: அவர் தன்னைக் கவனித்துக்கொள்ளாமல், எதையும் செய்ய ஆர்வமில்லாமல் வாழத்தொடங்கியிருந்தார்
  • அவர் சமூகத்திலிருந்து விலகி வாழ ஆரம்பித்திருந்தார், வழக்கமான உணர்வுகள் அவருக்கு இல்லை, பேச்சு குறைந்துவிட்டது

இப்படிப்பட்ட பயமுறுத்தும் அனுபவங்களுடன் இருக்கும் ஒருவரை யாராவது என்னிடம் அழைத்துவந்தால், 'இவங்களுக்கு ஏதோ ஆயிடுச்சு' என்றுதான் பொதுவாகச் சொல்வார்கள்.  மனநலத்துறையில் இதனை 'அக்யூட் சைகோடிக் எபிசோட்' என்பார்கள். அதாவது, இது திடீரென்று நிகழ்ந்திருக்கிறது (அக்யூட்), பிரமைகள், மாயத்தோற்றங்கள் போன்றவை ஏற்பட்டு, அவர்கள் எதார்த்தத்திலிருந்து விலகியுள்ளார்கள் (சைகோடிக்), இது தாற்காலிகமானதாக இருக்கலாம் (எபிசோட்).

சில நேரங்களில், இந்தப் பிரச்னையுள்ளவர்களுக்குச் சரியாகத் தூக்கம் வருவதில்லை, இவர்களிடம் லேசான சைகோடிக் அறிகுறிகளும் காணப்படுகின்றன. உதாரணமாக, பொருந்தாத எண்ணங்கள் அல்லது அவர்களே அர்த்தமில்லாதது என்று கருதும் நடவடிக்கைகள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்/ சக ஊழியர்களின் செய்கைகளைப்பற்றிய தெளிவற்ற சந்தேகங்கள் போன்றவை. இந்த மாற்றத்தைப்பற்றி அவர்கள் கொஞ்சம் உணர்ந்துள்ளார்கள். அதாவது, 'ஏதோ சரியில்லை' என்கிற உணர்வு அவர்களுக்கு இருக்கிறது. இதனை மருத்துவர்கள் 'ப்ரோட்ரோமல் நிலை' என்பார்கள். ப்ரோட்ரோமல் நிலை என்பது, பொதுவாக முழு அறிகுறிகளும் உருவாவதற்குமுன் சில மாதங்கள் நீடிக்கும். ஒருவேளை, பாவனா நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குமுன் என்னிடம் வந்திருந்தால், அவரிடம் இந்த நிலையைக் கண்டிருக்கலாம். அவரது மனநிலையை ஒரு நிபுணர் வாரந்தோறும் ஆராய்ந்திருந்தால், சிகிச்சையை முன்கூட்டியே தொடங்கியிருக்கலாம், நிலைமை இந்த அளவு மோசமாகியிருக்காது.

இத்தகைய பிரச்னையுடன் ஒருவர் ஆலோசனைக்கு வந்தால், முதலில் அவருடைய சைகோடிக் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவார்கள், இதற்காக அவருக்கு ஆன்ட்டிசைகோடிக் மருந்துகளை வழங்குவார்கள். அதேசமயம், வளர்இளம்பருவத்தினர் மத்தியில் சைகோடிக் அறிகுறிகளுடன் வேறு குறைபாடுகளும் இருப்பதால், சில மாதங்கள் காத்திருந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது அவசியம். இந்தக் குறைபாடுகள் ஒப்பீட்டளவில் அபூர்வமானவை. உதாரணமாக: டெம்பொரல் லோப் பகுதியில் கட்டிகள், காப்பர் வளர்சிதைக் குறைபாடுகள் போன்ற வளர்சிதை நோய்கள், சில வகை வலிப்புகள் போன்றவை. சிலருக்குத் தலையில் அடிபட்டிருக்கும், அப்போது அது எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தியிருக்காது, சில நாள்கள், அல்லது சில மாதங்கள் கழித்து இதுபோன்ற அறிகுறிகளை உண்டாக்கும். இவற்றையெல்லாம் கண்டறிய ஒரே வழி, பாதிக்கப்பட்டவரைத் தொடர்ந்து ஆராயவேண்டும். மருத்துவர் சிபாரிசுசெய்யும் சிகிச்சையைப் பின்பற்றுவது முக்கியம். காரணம், தான் தரும் மருந்துகள் பாதிக்கப்பட்டவரிடம் எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவருகின்றன என்பதையும், முன்னேற்றத்தை மதிப்பிடப் பயன்படுத்தப்படும் பிற காரணிகளையும் கவனித்துதான் மருத்துவர் அடுத்து என்ன செய்யலாம் என்று தீர்மானிப்பார்.

முடிந்தவரை விரைவாகச் சிகிச்சையைத் தொடங்குவது அவசியம். இதனால், பிரச்னை முழுமையாகக் குணமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இரண்டாவதாக, இதனால் பின்வரும் பலன்களும் கிடைக்கின்றன:

  • மருந்துகளுக்கு நல்ல பலன், பிரச்னை மீண்டும் வருவதற்கான வாய்ப்புக் குறைதல்
  • பள்ளி/பணி/ இயல்புவாழ்க்கைக்கு விரைவாகத் திரும்பலாம்
  • பாதிக்கப்பட்டவர் தனது சமூகத்திறன்களை இழக்கமாட்டார், தனிநபர்களுடனான அவரது உறவுகள் பாதிக்கப்படாது
  • அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டியதில்லை
  • பிரமைகள் காரணமாக ஏற்படக்கூடிய தற்கொலைக்கான ஆபத்து குறையும்
  • குடும்ப உறுப்பினர்களிடையே அழுத்தம் குறையும்

இந்தத் தொடரில், டாக்டர் ஷ்யாமளா வத்ஸா, பதின்பருவ மாற்றங்கள் ஆரம்பநிலை மனநலப் பிரச்னைகளை மறைத்துவிடக்கூடும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார். மனநலக் குறைபாட்டின் ஆரம்பநிலைக் குறைபாடுகள், பதின்பருவத்தினரின் வழக்கமான செயல்பாடுகளைப்போல் தோன்றக்கூடும் என்பதை இந்தக் கட்டுரைகளில் காணலாம். இதனால், பல இளைஞர்கள் காரணமில்லாமல் சிரமம் அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர் இதனைக் கவனிக்கவேண்டும், யாராவது இயல்பான நிலையிலிருந்து வேறுவிதமாக நடந்துகொண்டால், அதனை அடையாளம் காணவேண்டும், பிரச்னை பெரிதாவதற்குமுன் நிபுணரின் உதவி பெறவேண்டும்.

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார். நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் கருத்துகள், கேள்விகள் எவையேனும் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org