வளர் இளம் பருவம்

குழந்தை அடிக்கடி ஒரேமாதிரியான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறதா?

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா

நான் அர்ஜுனைச் சந்தித்தபோது, அவனுக்கு வயது 20. 12ம் வகுப்புத் தேர்வுகளில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப்பாடங்களில் அவன் 93% மதிப்பெண் வாங்கியிருந்தான். ஆனால், மேலே படிக்கவில்லை. மீண்டும் இதே தேர்வுகளை எழுத முனைந்தான். காரணம், அவன் 100% மதிப்பெண்கள் வாங்க விரும்பினான்.  அதன்பிறகு, அவன் பலமுறை தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறான், ஆனால், ஒருமுறைகூடத் தேர்வு எழுதவில்லை. அவன் எந்நேரமும் புத்தகங்களோடு அமர்ந்திருந்தான், எப்போதும் கவலையில் இருந்தான். ஒருவேளை 100% மதிப்பெண் வாங்காவிட்டால் என்ன செய்வது என்ற தீவிர பதற்றம் அவனைச் செயல்படவிடாமல் செய்துவிட்டது.

நமீதா ஓர் ஒழுங்குப்பிரியை. அருமையான கையெழுத்து, நேர்த்தியான உடைகள், நன்கு பராமரிக்கப்படும் புத்தகங்கள் என அவரைப் பார்த்தவர்களெல்லாம் பாராட்டுவார்கள். 7ம் வகுப்புவரை, வகுப்பில் அவர்தான் முதல் மாணவி. ஆனால், 8ம் வகுப்பில், அவரால் சரியாகப் படிக்கமுடியவில்லை. காரணம், அவர் ஒவ்வொரு பாடத்தையும் கச்சிதமாகக் கற்றுக்கொள்ள விரும்பினார், அது இப்போது அவருக்குக் கைகொடுக்கவில்லை. நமீதா பயந்துபோனார். தேர்வுக்குமுன்னால் சோர்ந்து விழுந்துவிட்டார். அவருடைய மருத்துவர், அவருக்கு ஒரு மருந்துகொடுத்து அமைதிப்படுத்தினார், அவரை என்னிடம் அனுப்பிவைத்தார்.

மரியாவின் மகன் சாம், வயது 16. தினமும் தூங்கச்செல்லுமுன் வீட்டின் கதவு சரியாகப் பூட்டப்பட்டிருக்கிறதா என்று பலமுறை பரிசோதிக்க ஆரம்பித்தான் அவன். படுக்கைக்குச் சென்றபிறகும், தன்னுடைய தாயை அழைத்து, இதைப் பரிசோதிக்குமாறு கேட்டுக்கொண்டான் அவன். இதனால் கவலைப்பட்ட சாமின் தாய், அவனை என்னிடம் சிகிச்சைக்கு அனுப்பினார். வீட்டில்மட்டுமல்ல, கார் ஓட்டும்போதுகூட, அதனை எங்கேயாவது நிறுத்திவிட்டு, அது சரியாகப் பூட்டப்பட்டிருக்கிறதா என்று பலமுறை பரிசோதித்துக்கொண்டிருந்தான் சாம். அவன் எப்போதும் எச்சரிக்கையான பையன்தான். ஆனால், திடீரென்று ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை.

லத்திகா உறைவிடப்பள்ளியொன்றில் படித்துக்கொண்டிருந்தார். அவர் கழிப்பறையில் அதிகநேரம் செலவிடுவதாக வார்டன் புகார் சொன்னார். வகுப்புகளுக்கு நடுவில்கூட, அவர் கைகளைக் கழுவிக்கொண்டே இருந்தார். உண்ணச்செல்லும்போது, அவர் தன்னுடைய தட்டையும் ஸ்பூன், முள்கரண்டி போன்றவற்றையும் பலமுறை துடைத்துவிட்டுதான் உண்ணுவார். ஆரம்பத்தில் யாரும் இதை ஒரு பெரிய விஷயமாக நினைக்கவில்லை. லத்திகா சும்மா காமெடி செய்கிறார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், நாளாக ஆக, லத்திகாவின் நிலைமை மோசமானது, 'இந்தச் சுத்தம் போதவில்லை' என்று நினைக்க ஆரம்பித்தார், இதனால், அவர் வகுப்புகளுக்குத் தாமதமாக வந்தார், அல்லது, வகுப்புகளுக்கு வரவே இல்லை. ஆகவே, அவரது பெற்றோருக்கு இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. மூன்று மாதம் முன்பாக, அவர் சிகிச்சைக்கு வந்தார்.

பொதுவாகக் குழந்தைகள் பள்ளிப்பணியை அக்கறையாகச் செய்தால், அல்லது, தங்களைச் சுத்தமாகப் பார்த்துக்கொண்டால், அல்லது, கூடுதல் கவனத்தோடு இருந்தால், பெற்றோர் மகிழ்வார்கள், அவர்களைப் பாராட்டுவார்கள். இந்திய மாணவர்கள் தேர்வில் 100% எடுக்கவேண்டும் என்று நினைப்பது சகஜம்தான். அப்படியானால், இந்த இளைஞர்களின் பெற்றோர் அவர்களைச் சிகிச்சைக்கு அனுப்பியது ஏன்?

இந்த இளைஞர்கள் நடந்துகொண்டவிதம் இயல்பானதுதான், ஆனால் அது 'கொஞ்சம் அதீதமாகி'விட்டது. அவர்களுடைய மூளையின் சில பகுதிகள் சரியாக இயங்கவில்லை. இதனால், சுத்தம், ஒழுங்கு அல்லது கச்சிதத்தைப்பற்றி அவர்கள் திருப்தியடைவதில்லை, அந்தச் செயலைப் பலமுறை செய்யத்தொடங்குகிறார்கள்.

இப்படிப் பலமுறை சுத்தப்படுத்துவதால், பரிசோதிப்பதால், அல்லது ஒழுங்குபடுத்துவதால் இவர்களுடைய நேரம் வீணாகிறது, இவர்களுடைய வேலை, தூக்கம், மற்ற பணிகளெல்லாம் பாதிக்கப்படுகின்றன. இவர்களை யாரும் புரிந்துகொள்வதில்லை, இவர்கள்சொல்லும் காரணத்தை மதிப்பதில்லை, ஆகவே, இவர்கள் எரிச்சலடைகிறார்கள், பதற்றமடைகிறார்கள், கோபப்படுகிறார்கள்.

செயல்கள் என்பவை எண்ணங்களிலிருந்துதான் வருகின்றன. ஆகவே, இப்படி ஒருவர் நடந்துகொண்டால், அவருடைய எண்ணங்களில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று பொருள், அதைச் சரிசெய்தால் இதுவும் சரியாகிவிடும். நல்ல பார்வைக்கு மூக்குக்கண்ணாடிகள் பயன்படுவதுபோல, நல்ல சுவாசத்துக்கு உறிஞ்சுகருவிகள் பயன்படுவதுபோல, சிலர் நன்றாகச் சிந்திக்க உதவி தேவைப்படுகிறது. இவர்களுக்கு என்ன பிரச்னை என்று கண்டறிவதற்கு, ஒரு மனநல மருத்துவர் இவர்களை அலசி ஆராய்ந்து மதிப்பிடவேண்டும்.

பிறகு, பிரச்னையின் தன்மையைப்பொறுத்து இவர்களுக்கு உரிய மருந்துகள் தரப்படலாம். தேவைப்பட்டால், ஒரு குறிப்பிட்ட வகைச் சிகிச்சைக்காக இவர்கள் ஓர் உளவியலாளரிடமும் அனுப்பப்படலாம். இவர்களுடைய அறிகுறிகளை ஒரு மருத்துவர் ஆராயவேண்டும், அதன் அடிப்படையில் பிரச்னை எதுவாக இருக்கலாம் என்று தீர்மானிக்கவேண்டும். ஏனெனில், இந்த (இளம்)வயதில் நோயின் தன்மையை ஊகிக்க இயலாது. மேலோட்டமாகப்பார்த்தால், இது ஓர் அர்த்தமற்ற பதற்றமாகத் தோன்றலாம். ஆனால், அப்படிச் சாதாரணமாக விட்டுவிட்டால், இது வேறு தீவிரப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கக்கூடும். இதுபோன்ற பிரச்னைகளை எப்படிக் கையாள்வது என்பது, தனிப்பட்ட சூழ்நிலைகளைப்பொறுத்து மாறும். மேலே குறிப்பிட்ட எல்லா இளைஞர்களும் சிகிச்சையினால் நல்ல பலன் பெற்றார்கள்.

சிகிச்சை தொடங்கி நான்கு மாதங்களில் அர்ஜுன் தனது 12ம் வகுப்புத் தேர்வுகளை எழுதினார். நல்ல மதிப்பெண்களைப் பெற்று, தமிழகத்தில் ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே அவர் ஒரு மனநல நிபுணரை அவ்வப்போது சந்தித்துவந்தார். தன்னுடைய முன்னேற்றத்தை எனக்கும் தெரிவித்துவந்தார். ஏழு வருடங்களுக்குமுன்னால், அவருக்கு வேலை கிடைத்தது, அதைப்பற்றி எனக்குத் தொலைபேசிமூலம் தெரிவித்தார்.

நமீதா இப்போது 12ம் வகுப்பில் படிக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில், அவர் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பல கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார். அவர் இப்போதும் எதையும் கச்சிதமாக, ஒழுங்காகவே செய்கிறார். ஆனால் அதைப்பற்றி மிகுந்த அழுத்தம்கொள்வதில்லை.

சாம் கடந்த எட்டு மாதங்களாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். கதவுகளை அடிக்கடி பரிசோதிக்கவேண்டும் என்கிற அவருடைய துடிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளது. இப்போது நிலைமை முன்பைவிட 70% மேம்பட்டுள்ளது.

லத்திகாவுக்கு வயது 11தான். நான் அவரை ஆராய்ந்தபோது, அவரிடம் இன்னும் பல அறிகுறிகளைக் கண்டேன். அதனால் அவருக்கு நிறைய நேரம் வீணாகிறது, அவரது ஆற்றலும் செலவாகிப்போகிறது என்று கண்டேன். அவர் அநேகமாக எல்லா நேரங்களிலும் தீவிர பதற்றத்துடன் இருந்தார். மருந்துகளின்மூலம், இந்தப் பதற்றம் குறைந்துள்ளது. இப்போது அவர் எல்லாவற்றையும் சுத்தம்செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று எண்ணுவதில்லை. ஆனால், அறிகுறிகளின் தீவிரத்தன்மை காரணமாக, அவர் தெரபி சிகிச்சையும் பெற்றுவருகிறார்.

இந்தத் தொடரில், டாக்டர் ஷ்யாமளா வத்ஸா, பதின்பருவ மாற்றங்கள் ஆரம்பநிலை மனநலப் பிரச்னைகளை மறைத்துவிடக்கூடும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார். மனநலக் குறைபாட்டின் ஆரம்பநிலைக் குறைபாடுகள், பதின்பருவத்தினரின் வழக்கமான செயல்பாடுகளைப்போல் தோன்றக்கூடும் என்பதை இந்தக் கட்டுரைகளில் காணலாம். இதனால், பல இளைஞர்கள் காரணமில்லாமல் சிரமம் அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர் இதனைக் கவனிக்கவேண்டும், யாராவது இயல்பான நிலையிலிருந்து வேறுவிதமாக நடந்துகொண்டால், அதனை அடையாளம் காணவேண்டும், பிரச்னை பெரிதாவதற்குமுன் நிபுணரின் உதவி பெறவேண்டும்.

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார். நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் கருத்துகள், கேள்விகள் எவையேனும் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org