வளர் இளம் பருவம்

வாழ்க்கை: நண்பர்களைச்சுற்றி

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா

எல்லார் வாழ்க்கையிலும் நண்பர்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, இளைஞர்கள் தங்கள் நண்பர்களைப் பெரிதும் மதிக்கிறார்கள். அவர்கள் பள்ளியில், கல்லூரியில் அல்லது பணியிடத்தில் நண்பர்களுடன் நெடுநேரம் செலவிடுகிறார்கள், அதன்பிறகும் அவர்களோடு பேசி மகிழ்கிறார்கள். நண்பர்களால் கிடைக்கும் ஆற்றல், அன்பு, ஆதரவு, மகிழ்ச்சி ஆகியவற்றால் நட்புகள் அர்த்தமுள்ளதாகின்றன.

பள்ளி, கல்லூரியில் படிக்கிறவர்கள், புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறவர்கள் பிற இளைஞர்களுடன் அதிக நேரம் செலவிடுவது இயல்பு. இதன்மூலம், தாங்கள் யாருடன் பொருந்திப்போகிறோம் என்று அவர்கள் உணர்கிறார்கள், எது தங்களுக்குப் பிடிப்பதில்லை, ஏன் என்றும் புரிந்துகொள்கிறார்கள். தனக்குப் பிடிக்காதது ஏதேனும் நடந்துவிட்டால், மற்றவர்களைக் காயப்படுத்தாமல் நடந்துகொள்வது எப்படி என்று கற்றுக்கொள்கிறார்கள். பள்ளியில் அல்லது பணியிடத்தில் பிறருடன் சகஜமாகப் பழகுவது, அல்லது, சமூகரீதியில் எல்லாருடனும் நன்கு பொருந்திச்செல்வது ஆகியவை மனநலனுக்கு அவசியம்.

இளைஞர்கள் மத்தியிலான நட்புகள் மிகவும் ஆழமானவை, உணர்வு அடிப்படையிலானவை, வலுவான விசுவாசம், நம்பிக்கைப் பிணைப்புகளைக்கொண்டவை. ஓர் இளைஞர் தன்னைப்போலவே சிந்திக்கும் இன்னொருவரைச் சந்திக்கிறார் என்றால், அது உலகிலேயே மிகவும் சிறந்த உணர்வுகளில் ஒன்றாகும்.

இதன்மூலம் அவர்கள் இருவரும் 'நாம் ஒரு குழு' என்ற உணர்வைப்பெறுகிறார்கள், 'இவருடைய கருத்து எனக்கு முக்கியம்' என்று அவர்கள் நினைக்கிற ஒருவரால் ஏற்றுக்கொள்ளப்படுவது அவர்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகிறது பதின்பருவத்தில் இருக்கிற ஒருவர், இப்போதுதான் குழந்தைப்பருவத்தைவிட்டு வெளியேறியிருக்கிறார், அதைவிட வித்தியாசமாகத் தோன்றும் வளர்இளம்பருவம் என்கிற புதிய உலகத்தில் அவர் பாதுகாப்பாக உணர இது உதவுகிறது. நட்பின் கதகதப்பில், ஒருவர் தனக்கு முக்கியமாகத் தோன்றுகிற எதைவேண்டுமானாலும் பேசலாம், தனியே புலம்பிக்கொண்டிருக்கவேண்டியதில்லை.

ஆரம்பத்தில், உதாரணமாக, எட்டாம்வகுப்பில், குழுக்கள் உருவாகின்றன. எட்டாம் வகுப்பில் தொடங்கிப் பன்னிரண்டாம் வகுப்புக்குள், சிலர் நண்பர்களாக ஜோடிசேர்கிறார்கள், நெருங்கிய நண்பர்களாகிறார்கள். சில பள்ளிகளில், மற்றவர்களைப் பார்ப்பதால் வரும் அழுத்தம் இதற்குக் காரணமாகிறது, வேறு சில இடங்களில், கல்லூரி நுழைவுத்தேர்வுகளுக்குத் தயார்செய்யவேண்டிய அழுத்தம் ஏற்படுகிறது, அதனால் நண்பர்கள் உருவாகிறார்கள், பலர், எதிர்பாலினர்மீது ஏற்படும் ஈர்ப்பு, டேட்டிங் போன்ற 'கவனச்சிதறல்'களுக்கு ஆளாகிறவர்கள்மீது கோபம்கொள்கிறார்கள். ஒவ்வோர் இளைஞரும், எது சரி, எது தவறு என்பதுபற்றி மாறுபட்ட ஒரு கருத்தைக்கொண்டிருக்கிறார்.

இந்தநேரத்தில் உருவாகும் தனிப்பட்ட உறவுகள் பின்னர் முறிந்துவிடக்கூடும். இதற்குக் காரணம் அவர்கள் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான். பல இளைஞர்களுக்கு, இதுவொரு பரிசோதனைக் காலகட்டம். ஆனால், அவர்கள் அதை உணர்வதில்லை, தங்கள் நட்பு ஆழமானது என்றுதான் கருதுகிறார்கள், அதனைப் பரிசோதனை என்றால் அவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆனால், மக்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. குறிப்பாக, இளைஞர்கள் தொடர்ந்து புதிய அனுபவங்களைப் பெறுவதால், அதிவேகமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். இன்னோர் உதாரணம், ஒரே வீட்டில் இருக்கும் மூத்த பிள்ளையிடமும் இளைய பிள்ளையிடமும் அவர்களுடைய பெற்றோரைப்பற்றிக் கேட்டால், முற்றிலும் மாறுபட்ட பதில்கள் கிடைக்கும். காரணம், ஒவ்வொருகுழந்தையை வளர்க்கும்போதும் கிடைக்கிற அனுபவத்தால், பெற்றோரிடமும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

நான் சொல்லக்கூடிய ஒரே ஓர் அறிவுரை: ஒவ்வொருவரும் தங்களுடைய நாளை, அதாவது, தாங்கள் விழித்திருக்கும் 16-18 மணிநேரத்தை, ஒரு பிட்ஸாபோலப் பிரித்துக்கொள்ளவேண்டும். அதில் 6 துண்டுகள் இருந்தால், நண்பர்களுக்காக அதிகபட்சம் 2 துண்டுகளைத் தரலாம். மீதமுள்ள துண்டுகள் அனைத்தையும் தனிப்பட்ட வேலைகள், பள்ளிவேலைகள், குடும்பம், நீங்கள் தனியே ரசித்துச்செய்யும் செயல்பாடுகள் (உதாரணமாக, படித்தல்), தினமும் செய்யவேண்டிய வேலைகள் (உதா: நாயை வெளியே நடத்திச்செல்வது) அல்லது வீட்டில் நீங்கள் செய்யவேண்டிய வேலைகள் ஆகியவற்றுக்காகத் தரவேண்டும். இந்தச் சமநிலை காக்கப்பட்டால், எல்லாம் சரியாக அமையும். வாழ்க்கையின் எந்தப் பகுதியும் குறைபடாது.

மக்கள் தங்களுடைய நண்பர்கள்மீது நிறைய உணர்வுகளை, நம்பிக்கையை முதலீடுசெய்கிறார்கள். சில நேரங்களில், அந்த நண்பர்கள் அவர்களை ஏமாற்றிவிடுவதுண்டு. நெருங்கிய நண்பர்கள்கூட, பிரிந்துவிடுவதுண்டு. இத்தகைய ஓர் இழப்பால் ஏற்படும் வேதனை, ஓர் இளைஞரின் உலகைத் தலைகீழாகப் புரட்டிவிடக்கூடும். இதுவரை அவர்கள் முக்கியம் என்று நினைத்த விஷயங்களைக்கூட, அவர்கள் இப்போது பொருட்படுத்தாமல் செல்லக்கூடும். இதுபோன்றநேரத்தில், அந்த இளைஞர் பன்னிரண்டாம்வகுப்புத் தேர்வு எழுதவேண்டியிருக்கிறது, அல்லது, ஒரு தொழில்முறைக்கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகளை எழுதவேண்டியிருக்கிறது என்றால், அவருக்கு நிச்சயமாக உதவி தேவை.

அதேபோல், ஒருவர் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும்போது, நண்பர்களை அதிகம் சார்ந்திருக்கக்கூடாது. அதற்குப்பதிலாக, பெற்றோர், உடன்பிறந்தோரைச் சார்ந்திருக்கலாம். அவர்கள் ஆயிரம் விமர்சனங்களைச் சொன்னாலும், இதுபோன்ற நேரங்களில் நிச்சயம் உதவுவார்கள். முடிந்தால், அவர்களிடம் தன்னுடைய கவலைகளைப் பகிர்ந்துகொள்ளலாம். எது நடந்தாலும் சரி, விரக்திக்கு அடிமையாகிவிடவேண்டாம். ஓர் இளைஞரால் தன்னுடைய உடனடி வட்டத்தில் உள்ளவர்களிடமிருந்து எந்த உதவியையும் பெறமுடியவில்லை என்றால், அவர் தனது பள்ளி ஆலோசகர் அல்லது மருத்துவரை அணுகலாம். இவர்கள் அவரை அமைதிப்படுத்துவார்கள், இயல்புவாழ்க்கைக்குக் கொண்டுவருவார்கள், அல்லது, தேவைப்பட்டால் ஒரு மனநல நிபுணரிடம் அனுப்புவார்கள்.

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார். நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் கருத்துகள், கேள்விகள் எவையேனும் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org