வளர் இளம் பருவம்

பதின்பருவத்தினரின் மனநிலை மாற்றங்கள், ஒரு மனநிலைக் குறைபாட்டின் விளைவுகளாக இருக்கலாம்

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா

அனிஷாவுக்கு வயது 23. டெல்லியைச்சேர்ந்தவர், கடந்த எட்டு மாதங்களாகப் பெங்களூரில் வசிக்கிறார். மனச்சோர்வு காரணமாக, அவர் ஓர் ஆலோசகரிடம் அனுப்பப்பட்டார். ஆனால், அந்த ஆலோசனையால் அவரிடம் எந்தப் பலனும் தெரியவில்லை. ஆகவே, அவரது ஆலோசகர் அவரை என்னிடம் அனுப்பிவைத்தார். அவருக்கு மருந்துகள் தேவைப்படலாம் என்று அந்த ஆலோசகர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

நான் அனிஷாவை முதன்முறை சந்தித்தபோது, அவர் வேதனையோடு இருந்தார், அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தார். ஒரு மாதத்துக்குமேலாக அவர் மனச்சோர்வில் இருந்தார். அவருடைய மனச்சோர்வு மிகவும் ஆழமானதாக இருந்தது, அவரால் தன் நிலைமையை விவரிக்கவே இயலவில்லை. இத்தனைக்கும் அவர் ஓர் எழுத்தாளர். நன்கு சிந்திக்கக்கூடிய அவருக்கு ஏன் மனச்சோர்வு வந்தது? இது அவருக்கே புரியவில்லை, தன் நிலைமையை அவரால் விளக்க இயலவில்லை. அவர் பள்ளி, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது சிலமுறை இதேபோன்ற நிகழ்வுகளை அனுபவித்திருக்கிறார். ஆனால், அந்த நேரங்களில் அந்த நிகழ்வுகளை அவரது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களுடன் பொருத்திப்பார்க்க இயன்றது. ஆகவே, அதனால்தான் இது நடந்திருக்கிறது என்றெண்ணி அவர் சும்மா இருந்துவிட்டார்.

அவரது வாழ்க்கையைப்பற்றி நான் மேலும் விசாரித்தேன். 'இரண்டு தருணங்களில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்' என்றார் அவர். 'ஆனால், ஏன் மகிழ்ச்சியாக இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை!' அந்த இரண்டு தருணங்களும், அவர் ஒரு விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்தவை. அவற்றை அவர் இன்னும் நினைவில்வைத்திருந்தார். இதை அவருடைய அறைத்தோழிகூட கவனித்திருந்தார். 'அதன்பிறகும், இதுபோல் நான் அடிக்கடி மகிழ்ச்சியாக உணர்ந்ததுண்டு' என்றார் அனிஷா. ஆனால், இந்த மகிழ்ச்சித்தருணங்கள் அதிகநேரம் நீடிக்கவில்லை, சில மணிநேரம், மிஞ்சிப்போனால் ஓரிரு நாள், அவ்வளவுதான், அதேபோல் இந்தத் தருணங்களின் தீவிரமும் அவ்வளவாக இல்லை. இவை எங்கிருந்து வந்தன, ஏன் வந்தன என்று அவருக்கே புரியவில்லை.

கொஞ்சம்கொஞ்சமாக, அவரது மனோநிலை மாற்றம் ஒரு குறைபாட்டின் அடையாளம் என்று எனக்குப் புரிந்தது. சில நேரங்களில், அவர் மிகவும் கோபமாக, எரிச்சலாகக் காணப்படுவார், அதற்கு என்ன காரணம் என்றே அவருக்குத் தெரியாது. ஒருமுறை, அவர் ஒரு பெரிய கட்டடத்தின் உச்சியில் நின்றுகொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவருக்குள் மிகுந்த மகிழ்ச்சி தோன்றியது. அப்போது அங்கிருந்து குதித்தால், தன்னால் அப்படியே பறக்க இயலும் என்று அவர் நம்பினார். இதை அவர் தன் காதலரிடம் சொல்ல, அந்தக்காதலர் நடுங்கிப்போனார், அவரை ஆலோசகரிடம் அனுப்பிவைத்தார்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவருடைய இப்போதைய சோர்வான மனோநிலையுடன் இணைத்துப்பார்க்கும்போது, அவருக்கு மனோநிலைக் குறைபாடு இருப்பது தெரியவருகிறது. உடனே, இதற்கான சிகிச்சை தொடங்கியது. மருந்துகள் நல்ல பலன் தந்தன, சில வாரங்களில் அவரது மனோநிலை கட்டுக்குள் வந்தது. இப்போதும், அவர் அடிக்கடி என்னைப்பார்க்க வருகிறார், அவரது மனோநிலையை நான் ஆராய்கிறேன். இப்போதெல்லாம் அவரது மனோநிலை அதீதமாக மாறுவதில்லை. எல்லாரையும்போலதான் நடந்துகொள்கிறார்.

மனோநிலை மாற்றங்களுக்குச் சிகிச்சை அவசியம். ஒருவேளை, அனிஷா மகிழ்ச்சியான மனோநிலையில் இருந்தபோது அந்தக் கட்டடத்தின் உச்சியிலிருந்து குதித்திருந்தால்? அல்லது, ஆழமான மனச்சோர்வினால் அவர் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டிருந்தால்?  இந்த அதீதமான சாத்தியங்கள் ஒருபுறமிருக்க, அதீத மகிழ்ச்சி மனோநிலையால் ஒருவர் கண்டபடி செலவுசெய்யக்கூடும், பிறருடன் சண்டைபோடக்கூடும், உறவுகளைக் கெடுத்துக்கொள்ளக்கூடும், பாலியல்ரீதியில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும்... இவை அனைத்தும் தீவிரமான விளைவுகளை உண்டாக்கக்கூடியவை. உதாரணமாக, இந்தப் பிரச்னை கொண்ட ஒருவருக்குப் பறக்கவேண்டும் என்று ஆசை. எந்த நோக்கமும் இல்லாமல் விமானத்தில் ஏறிப் பறந்துகொண்டே இருந்தார், அதற்காக ஏகப்பட்ட பணத்தைச் செலவழித்தார். அதீத மனச்சோர்வும் இதேபோன்ற பிரச்னைகளை உண்டாக்கும். இதனால், ஒருவர் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யமாட்டார், எப்போதும் சோர்வில் இருப்பார்.

பதின்பருவத்தினர் இப்படி நடந்துகொண்டால், அதற்கு மக்களே பல காரணங்களைக் கற்பித்துவிடுகிறார்கள்: 'துயர்நிலை' என்கிறார்கள், 'எப்பபார் உர்ருன்னு இருக்கான்' என்கிறார்கள், 'ஹார்மோன் பிரச்னை', PMS, 'மத்தவங்களோட பழகத்தெரியலை', 'சுயமதிப்பு குறைச்சல்'... இப்படி விதவிதமான காரணங்களை இணையத்தில் கற்றுக்கொண்டு அடுக்குகிறார்கள். அல்லது, 'குடிச்சிருப்பான்' என்று சொல்லிவிடுகிறார்கள்.

வெறும் துயர்நிலை என்பதும், மனோநிலைக் குறைபாடு என்பதும் ஒன்றல்ல. மனோநிலைக் குறைபாடு கொண்டவர் திடீரென்று மகிழ்ச்சி அல்லது சோகத்தை நோக்கித் தாவுகிறார். இதுபோன்ற அதீத மனநிலை மாற்றங்களைப் பார்த்தால், குடும்பத்தினர், நண்பர்கள் விழித்துக்கொள்ளவேண்டும், பிரச்னை பெரிதாக இருக்கலாம் என்பதை உணரவேண்டும், இயன்றவரை விரைவாக மனநல மருத்துவரைச் சந்தித்து நிலைமையை ஆராயவேண்டும், அப்போதுதான் பிரச்னை பெரிதாகுமுன் சிகிச்சையைத் தொடங்க இயலும்.

இந்தத் தொடரில், டாக்டர் ஷ்யாமளா வத்ஸா, பதின்பருவ மாற்றங்கள் ஆரம்பநிலை மனநலப் பிரச்னைகளை மறைத்துவிடக்கூடும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார். மனநலக் குறைபாட்டின் ஆரம்பநிலைக் குறைபாடுகள், பதின்பருவத்தினரின் வழக்கமான செயல்பாடுகளைப்போல் தோன்றக்கூடும் என்பதை இந்தக் கட்டுரைகளில் காணலாம். இதனால், பல இளைஞர்கள் காரணமில்லாமல் சிரமம் அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர் இதனைக் கவனிக்கவேண்டும், யாராவது இயல்பான நிலையிலிருந்து வேறுவிதமாக நடந்துகொண்டால், அதனை அடையாளம் காணவேண்டும், பிரச்னை பெரிதாவதற்குமுன் நிபுணரின் உதவி பெறவேண்டும்.

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார். நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் கருத்துகள், கேள்விகள் எவையேனும் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org