உங்களுடைய பதற்றங்களை, பயங்களை உங்கள் குழந்தைகளுக்குத் தருகிறீர்களா?

இந்தப் பத்தியில் நாம் இருவகையான பதற்றங்கள், பயங்களைப்பற்றிப் பேசவிருக்கிறோம். முதல் வகை, சிறுவயதிலிருந்து நம்மோடு வளர்ந்த பயங்கள். பின்னர் இளைஞர்களாகிப் பெற்றோரானபிறகும் நம்மால் அந்த பயங்களை வெல்ல முடியவில்லை. இரண்டாம் வகை, நம் குழந்தைகள், அவர்களுடைய எதிர்காலங்களைப்பற்றிய பயங்கள்.

முதல் வகையைத் தேடி நாம் அதிகத்தூரம் செல்லவேண்டியதில்லை. உதாரணமாக, எனக்கு நாய்களை எண்ணிப் பதற்றம் உண்டு. அது எங்கிருந்து வந்தது என்று எனக்கு நன்றாகத் தெரியும். என் தந்தைக்கு நாய்கள் என்றால் பயம். தனக்கு ஏன் நாய்கள்மீது பயம் வந்தது என்று அவர் பலமுறை விளக்கியிருக்கிறார். நாய்களை அவர் வெறுத்த காரணங்களைக் கேட்டுக்கேட்டு, எனக்கும் நாய்கள்மீது தானே பயம் வந்துவிட்டது. அதைப்பற்றி நான் அதிகம் யோசிக்கவே இல்லை. மிக இயல்பாக நான் நாய்களைக்கண்டு பயப்பட ஆரம்பித்துவிட்டேன். இந்தப் பயத்தால் எனக்குப் பெரிய பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. ஆனால், ஒருமுறை நான் ஒரு தோழியைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் ஒரு நாய் வளர்த்துக்கொண்டிருந்தார். எனக்கு நாய் என்றால் பயம் என்று புரிந்துகொண்ட அவர், தன் நாயை இன்னோர் அறையில் விட்டுவிடுவார், அதன்பிறகுதான் நான் அவருடைய வீட்டுக்குள் நுழைவேன். நாய்கள்மீது நான் கொண்ட பயம், ஒரு சிறிய எரிச்சல்தான். அதனால் என் வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை.

அதன்பிறகு, நான் 'பெற்றோர்' என்கிற பொறுப்புக்குள் நுழைந்தேன். இப்போது, நான் என்ன செய்யவேண்டும்? நாய்மேல் எனக்கிருக்கிற பயத்தை என் மகளுக்குச் சொல்லித்தரவேண்டுமா? கூடாது, அது தவறு. ஆகவே, அதன்பிறகு நான் எப்போதாவது நாய்கள் இருக்கும் வீடுகளுக்குச் சென்றால், மிகவும் தைரியமாக அந்த நாய்களைச் சந்திக்க முனைவேன். ஆனால், அப்போது என் உடலில் இருக்கும் ஒவ்வொரு தசையும் விரைப்பாக நிற்கும். நான் என் மகளிடம், 'அந்த நாயைக் கொஞ்சு' என்று சொல்வேன். ஆனால் எனக்கு அப்படிச்செய்கிற தைரியம் எப்போதும் வந்ததில்லை. நல்லவேளையாக, என் கணவருக்கு நாய்கள்மீது பயம் இல்லை. ஆகவே, இந்தப் பிரச்னையை ஓரளவு சுமுகமாகத் தீர்க்கமுடிந்தது. நிறைவாக, என் மகள் நாய்களிடம் இயல்பாக இருக்கக் கற்றுக்கொண்டாள். போதாக்குறைக்கு, அவளுக்கு ஒரு நாயை வளர்க்கும் விருப்பமும் வந்துவிட்டது. எனக்கு ஏதோ அசட்டுத் தைரியம், நாய் வளர்க்க ஒப்புக்கொண்டுவிட்டேன். அப்போதைக்குப் பிரச்னை தீர்ந்தால் சரி என்று தலையாட்டியிருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் என் மகள் விடவில்லை. தொடர்ந்து வற்புறுத்தினாள். நானும் ஏதேதோ சாக்குப்போக்குகளைச் சொன்னேன். மூன்று வருட வாக்குவாதத்துக்குப்பிறகு, அவள் ஜெயித்தாள், நாங்கள் நாய்வாங்கச் சென்றோம். செல்லும் வழியெல்லாம் நான் மௌனமாக அழுதேன். 'இனிமேல் என்ன நடக்குமோ' என்று நடுங்கினேன். என் வீட்டிலேயே என்னால் இயல்பாக இருக்கமுடியாதோ' என்று கலங்கினேன்.

ஆனால், அதெல்லாம் பழைய கதை. இப்போது, நானும் ஒரு நாய்ப்பிரியை ஆகிவிட்டேன். அக்கம்பக்கத்தில் தென்படும் நாய்களையெல்லாம் ரசிக்கிறேன், நாய்களின் புகைப்படங்களை மணிக்கணக்காகப் பார்க்கிறேன். நாய் இல்லாமலே வாழ்ந்திருக்கலாமோ என்று நான் எண்ணுவதுண்டா? இல்லவே இல்லை! நாய்களுக்குப் பயந்துகொண்டிருந்த நான், இப்போது நாய்களை ரசிக்கிறேன், இந்த மாற்றத்தையும், என்னுடைய நாய் பயத்தை என் மகளுக்குச் சொல்லித்தராமலிருந்ததையும் எண்ணி நான் பெருமைகொள்கிறேன். அதேசமயம், கொஞ்சம் அசந்திருந்தால், இந்தக் கதை மாறியிருக்கும். என்னுடைய பயங்கள், பதற்றங்களை நான் உணர்ந்திருக்காவிட்டால், அவற்றை மீறி வெளியே வரவேண்டும் என்று எண்ணியிருக்காவிட்டால், என் குழந்தைகளும் என்னைப்போலவே நாயைக்கண்டு பயந்திருப்பார்கள்.

இரண்டாம் வகைப் பதற்றம், நம் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி உருவாகும் பதற்றம். அவர்கள் கஷ்டப்பட்டுப் படிக்காவிட்டால் என்ன ஆவார்களோ! அவர்கள் தேர்வில் தோற்றுவிட்டால் என்ன ஆகுமோ! அவர்கள் வீட்டுப்பாடத்தை அல்லது ப்ராஜெக்டை நேரத்துக்கு முடிக்காவிட்டால் என்ன ஆகுமோ! அவர்கள் நல்ல கல்லூரியில் சேராவிட்டால் என்ன ஆகுமோ! நம் நாட்டிலேயே மிகச்சிறந்த பொறியியல் கல்லூரியில் அவர்கள் சேராவிட்டால், அவர்களுக்கு என்ன வேலை கிடைக்குமோ! இது போட்டி நிறைந்த உலகமாயிற்றே!

அவர்கள் போராடப் பழகாவிட்டால், இந்த உலகை எப்படிச் சமாளிப்பார்கள்? அவர்கள் இப்படிச் சுயநலத்துடன் இருந்தால், எப்படி உறவுகளை வளர்த்துக்கொள்வார்கள்? என் குழந்தை ஒரு மரியாதைக்குரிய வேலைக்குச் செல்லாவிட்டால், இந்த உலகம் என்னைப்பற்றியும் நான் குழந்தைவளர்த்த லட்சணத்தைப்பற்றியும் என்ன சொல்லும்! ஒருவேளை, என் குழந்தையின் நண்பர்கள் மோசமானவர்களாக இருந்துவிட்டால்? நான் இறந்தபிறகு என் குழந்தை என்ன ஆகும்? என் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாவிட்டால் யார் கவனித்துக்கொள்வார்கள்? ஒருவேளை... என்ன ஆகுமோ...

எத்தனை பதற்றங்கள்! இவை ஒவ்வொன்றும் இயல்பானவைதான், நியாயமானவைதான். பெற்றோராக இருக்கிறவர்களுடைய பாதி நேர வேலை, பதற்றப்படுவதுதான். ஆனால், அதுவே முழு நேர வேலையாகிவிடாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.

குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணிப் பதற்றப்படுகிற பெற்றோர், நிகழ்காலத்தில் அவர்களோடு வாழ்க்கையை அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறதோ? அவர்களை எந்நேரமும் படிக்கவேண்டும், வீட்டுப்பாடம் செய்யவேண்டும், அப்போதுதான் பத்து வருடம் கழித்து நல்ல கல்லூரிக்குச் செல்லலாம் (நம்மால் கட்டுப்படுத்த இயலாத ஒரு விஷயம்) என்று சொல்லிச்சொல்லி, இப்போது அவர்களுடன் விளையாடுகிற தருணங்களைக் கோட்டை விடுகிறோமோ? அவர்களுக்காக நாம் நிறையப் பணம் சேமித்துவைக்கவேண்டும் என்பதற்காக (இதுவும் நம் கையில் இல்லை) இப்போது அவர்களுடன் அதிக நேரம் செலவிடாமல் இருக்கிறோமா? எதிர்காலத்தைப்பற்றிய நம் பதற்றங்களால், இப்போது நிகழ்காலத்தில் அவர்களுடன் நேரம் செலவிடுவதை வீண் என்று நினைக்கிறோமோ? அவர்களுடன் இணைந்து நாலு வார்த்தை பேசாமல் பதற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறோமோ? எப்படியாவது நாம் அவர்களுடைய வருங்காலத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். எப்படியாவது!

என்னைக்கேட்டால் இதற்கு ஒரே வழி, அவர்களை அவர்களுடைய போக்கில் விடுவதுதான். ஆனால், இது நம்மால் இயலுமா? அதற்குப்பதிலாக, நம் குழந்தையுடன் நம் உறவை வலுப்படுத்த முயற்சிசெய்யலாம்.

நமது பதற்றங்களை வெளியே நகர்த்திவிடவேண்டும், பெற்றோர்-குழந்தை உறவில் அது குறுக்கிடக்கூடாது. அவற்றை அடையாளம் காணலாம், புரிந்துகொள்ளலாம், ஆனால் ஓரமாக வைத்துவிடவேண்டும். இதற்காக நாம் ஓர் ஆலோசகர் அல்லது நம்பிக்கைக்குரிய ஒரு நண்பரிடம் பேசலாம். அதன்பிறகு, குழந்தையுடன் நேரம் செலவிடலாம், முழுமனத்துடன் நிகழ்காலத்தை அனுபவிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தரவேண்டிய பரிசு, அவர்கள் நம்பக்கூடிய ஓர் உறவு, ஏதேனும் தோல்வியைச் சந்திக்கும்போது, அவர்கள் உங்களிடம் வந்து பேசுமளவு பாதுகாப்பாக உணரவேண்டும். நமக்காகப் பெற்றோர் இருக்கிறார்கள் என்ற உணர்வே போதும், அவர்களுக்குப் பலம் கிடைக்கும், தன்னம்பிக்கை வரும், தைரியம் வரும், துணிச்சலாக முன்னே செல்வார்கள், தாங்கள் விரும்பும் துறையில் எல்லைகளை முன்னகர்த்திச்சென்று சாதனை புரிவார்கள்.

மீண்டும் சொல்கிறேன், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள தொகையைவிட, நம்பகமான உங்கள் உறவுதான் அவர்களுக்கு அதிகம் தேவை. அதை அவர்களுக்குத் தாருங்கள்.

மௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். கார்ப்பரேட் பணியை விட்டுவிட்டு மன வளத்துறையில் பணியாற்றிவருகிறார். மௌலிகா வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் பணியாற்றிவருகிறார். இது ஒரு சர்வதேச ஊழியர் நல நிறுவனம் ஆகும். இவர் பெங்களூரில் உள்ள ரீச் க்ளினிக்கில் மருத்துவசேவை வழங்கிவருகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்: columns@whiteswanfoundation.org.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org