பெற்றோரின் எதிர்பார்ப்புகளும் பிள்ளைகளின் சுமையும்

என்னுடைய சமீபத்திய வாடிக்கையாளர் ஒருவர், அவர் தன் திருமண உறவிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார். இந்தத் தீர்மானத்தை எண்ணி அவர் கலங்கியிருப்பார், இதனால் தன்னுடைய வாழ்க்கை எப்படி மாறுமோ என்று அவர் கவலையோடு இருப்பார் என நான் நினைத்தேன். ஆனால், அவர் வேறு காரணத்துக்காகக் கலங்கிக்கொண்டிருந்தார். தன்னுடைய தீர்மானத்தால் தன் பெற்றோர் என்ன ஆவார்களோ என்று அவர் பயந்தார். அவருடைய பெற்றோர் அவர்மீது பல எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார்கள். ஏற்கெனவே அவர் அந்த எதிர்பார்ப்புகளைப் பலமுறை நிறைவேற்றவில்லை. போதாக்குறைக்கு, இப்போது இந்தப் பிரச்னை. சமூகத்தை எப்படிச் சந்திப்பது என்று அவர் கவலையில் இருந்தார். அவர்களுடைய எதிர்பார்ப்பைத் தான் நிறைவேற்றவில்லையே என வருந்தினார். அவர்களால் இந்த அதிர்ச்சியைத் தாங்க இயலுமா? அவர்களை ஏமாற்றிவிட்டோம் என்கிற அதிர்ச்சியிலிருந்து தன்னால் மீள இயலுமா? இதையெல்லாம் எண்ணி அவர் கவலையில் இருந்தார்.

இப்படிப் பல பெற்றோரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்காக ஒரு தெளிவான வருங்காலத்திட்டத்தை வரையறுத்துவைத்திருப்பார்கள்: அதில் ஒவ்வொரு மைல்கல்லும் பதிவுசெய்யப்பட்டிருக்கும், அனைத்தும் அவர்கள் மனத்தில் தெளிவாக இருக்கும். இப்படிப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், தங்கள் பெற்றோர் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கவேண்டும், அந்தப் பாதையைப் பின்பற்றவேண்டும், அதன்மூலம் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான, வெற்றிகரமான எதிர்கால வாழ்க்கை கிடைக்கும். பெற்றோர் சொல்வதைதான் அவர்கள் செய்யவேண்டும். வேறு வழியே கிடையாது.

ஆனால், குழந்தைகள் அதற்காகவா உலகில் பிறக்கிறார்கள்? அவர்கள் தங்களுடைய சொந்த நோக்கத்தைக் கண்டறியவேண்டும், தங்களுடைய சொந்தப் பாதையை உருவாக்கவேண்டும், ஆர்வத்துடன், துடிப்புடன், வேகத்துடன் அந்தப் பாதையில் செல்லவேண்டும். பெற்றோர் என்றமுறையில் நாம் செய்யவேண்டியது, அவர்கள் தங்களுடைய சுய அடையாளத்தை, பாதையைத் தேடும்போது அதற்கு உதவுவதுதான். இதைச் செய்யச் சிறந்த வழி, அவர்கள் வளர்வதற்கான வேர்களையும் பறப்பதற்கான சிறகுகளையும் வழங்குவதுதான். அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான ப்ரயன் ட்ரேஸி, 'உங்கள் குழந்தைகள் எதை நினைத்தாலும் அதைச் சாதிக்கவேண்டும், எந்தப் பணியையும் செய்யவேண்டும், அதற்கான ஊக்கம் அவர்களுக்குள் இருக்கவேண்டும், இப்படி நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்த்திருந்தால், நீங்கள் வெற்றிகரமான பெற்றோர், உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வழங்கக்கூடிய மிகச்சிறந்த ஆசிர்வாதம் அதுதான்' என்கிறார்.

பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம், ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி நோக்கம் உண்டு, அவற்றை நிறைவேற்றுவதற்காகதான் அவர்கள் இவர்களுடைய வாழ்க்கையில் வருகிறார்கள். பெற்றோரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பிள்ளைகள் பிறப்பதில்லை. பெற்றோருக்கு உறுதிப்படுத்தல் உணர்வைத் தருவதற்காகப் பிள்ளைகள் பிறப்பதில்லை. பெற்றோரின் குடும்பப் பெயர் அல்லது தொழிலை நடத்துவதற்காகப் பிள்ளைகள் பிறப்பதில்லை, பெற்றோரின் நிறைவேறாத கனவுகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகப் பிள்ளைகள் பிறப்பதில்லை, பெற்றோரின் முதுமைக்காலத்தில் உதவும் காப்பீடாக, பெற்றோருக்குப் புகழ் சேர்க்கிறவர்களாகக் குழந்தைகள் பிறப்பதில்லை. பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக, பெற்றோரைப்போல் சிந்திப்பதற்காக, அவர்கள் என்ன ஆகவேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்களோ அதுவாக ஆவதற்காகக் குழந்தைகள் பிறப்பதில்லை. அவர்கள் குடும்பத்தின் "விருதுக்கோப்பைகள்" அல்ல, குடும்பத்துக்குப் புகழைக்கொண்டுவருவது அவர்களுடைய பணி அல்ல. அவர்களுக்கென்று தனி வழி இருக்கிறது, அதில் அவர்கள் நடக்கவேண்டும், அவர்களுடைய பாதையை அவர்களே செதுக்கிக்கொள்ளவேண்டும். அந்தச் செயல்முறையில் ஒவ்வொரு மைல்கல்லாக அவர்கள் கடக்கக்கடக்க, பெற்றோர் அதைக்கண்டு பெருமைப்படலாம்.

ஆகவே, நம் மனத்தில் நம் குழந்தைகள் இப்படிதான் இருக்கவேண்டும், இவ்வாறு ஆகவேண்டும் என்கிற எதிர்பார்ப்புகள் எவையேனும் இருந்தால், நமது மனத்தின் ஜன்னல்களைத் திறந்து அந்த எதிர்பார்ப்புகளை வெளியேற்றிவிடவேண்டும். காரணம், அந்த எதிர்பார்ப்புகள் எதார்த்தத்தின் அடிப்படையில் அமைகிறவை அல்ல; அத்துடன், அவை குழந்தைகளின் சூழலை நச்சாக்கக்கூடும். என் வாடிக்கையாளர் இன்னும் தன் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை எண்ணிக் கவலைப்படுவது, அவர்களை ஏமாற்றிவிட்டோமே என்று வருந்துவது அதனால்தான்.

சீனர்கள் குழந்தை வளர்க்கும் முறை சரியா, அல்லது அமெரிக்கர்கள் குழந்தை வளர்க்கும் முறை சரியா என்று பத்திரிகைகள் பேசிவருகின்றன. சீனக் குழந்தை வளர்ப்புமுறை மிகவும் கண்டிப்பானது, ஒழுக்க அடிப்படையிலானது. சீனப் பெற்றோர் தங்கள் குழந்தைகள்மீது மிகுந்த எதிர்பார்ப்பை வைக்கிறார்கள். பெற்றோர் வகுக்கும் பாதையில்தான் அவர்கள் பயணம் செய்யவேண்டும். உதாரணமாக, சீனக் குழந்தைகள் பிறர் வீட்டில் இரவு தங்க இயலாது, பிறருடன் சேர்ந்து விளையாட இயலாது, பள்ளி நாடகங்களில் பங்கேற்க இயலாது, பள்ளி நாடகங்களில் பங்கேற்கவில்லையே என்று புகார் சொல்ல இயலாது, தொலைக்காட்சி பார்க்க இயலாது, கணினி விளையாட்டுகளை விளையாட இயலாது, படிப்புக்குவெளியே அவர்கள் ஈடுபட விரும்பும் செயல்களை அவர்களே தேர்ந்தெடுக்க இயலாது, A கிரேடுக்குக்கீழே மதிப்பெண் வாங்க இயலாது, உடற்பயிற்சி, நாடகம்தவிர மற்ற எல்லாப் பாடங்களிலும் முதல் மாணவனாக வராமலிருக்க இயலாது, பியானோ அல்லது வயலின்தவிர இன்னொரு வாத்தியத்தை வாசிக்க இயலாது, அல்லது, பியானோ/வயலினே வாசிக்க இயலாது. அமெரிக்க பாணி வேறுவிதமானது. அது குழந்தையின் தனித்துவமான தேவைகள், ஆர்வங்கள், விருப்பங்கள், கனவுகள், உணர்வுகள், சுயமதிப்புக்கு இடமளிக்கிறது. பொதுவாக, சீனக் குழந்தைகளின் கல்விச் செயல்திறன் சிறப்பாக இருக்கிறது, ஆகவே, தொலைநோக்கில் சீனக் கல்விமுறை நல்ல பலன் தருகிறது என்று நாம் சொல்லலாம். ஆனால், என்னைப்பொறுத்தவரை சீனக் கல்விமுறை வாசிப்பாளர்களைதான் உருவாக்கும், இசையமைப்பாளர்களை அல்ல. இது பெருமளவு இந்தியக் கல்விமுறைக்கும் பொருந்தும்.

கூகுளில் செவ்வியல் இசையமைப்பாளர்களைப்பற்றித் தேடினால், சுமார் 20 சீன இசையமைப்பாளர்கள்தான் வருகிறார்கள், ஆனால், அமெரிக்க இசையமைப்பாளர்களின் பட்டியலோ பல பக்கங்களுக்கு நீள்கிறது. இப்போது நாம் யோசிக்கவேண்டிய விஷயம், நம் குழந்தைகள் பிறருடைய இசையை அப்படியே இசைக்கிறவர்களாக, அதாவது, பிரதியெடுக்கிறவர்களாக, பின்பற்றுகிறவர்களாக, செய்கிறவர்களாக, செயல்படுத்துகிறவர்களாக இருக்கவேண்டுமா, அல்லது, அவர்கள் இசையமைப்பாளர்களாக, அதாவது, தலைவர்களாக, வடிவமைப்பாளர்களாக, கண்டுபிடிப்பாளர்களாக, உருவாக்குநர்களாக ஆகவேண்டுமா? தொழில்யுகமானது கவனம், செயல்படுத்துதல், கச்சிதம், வரிசையில் நடத்தல் போன்ற கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தந்தது. ஆனால் நாம் இப்போது வாழ்வது அறிவுயுகத்தில், நம் குழந்தைகளும் நிச்சயமாக இதில்தான் வாழப்போகிறார்கள், இங்கே படைப்புணர்வு, வித்தியாசமான சிந்தனை, பணியில் இருந்தபடி கற்கும் திறன், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், குழுவுக்குத் தலைமைதாங்கும் திறன், குழுவில் ஒருவராகப் பணியாற்றும் திறன் (அதிகாரப்பூர்வமான, அதிகாரப்பூர்வமற்ற, குழுக் கட்டமைப்புகளில்), நம் சிந்தனைகள், கருத்துகளைத் தெரிவிக்கும் திறன், 'என்னால் முடியும்' என்கிற மனப்பான்மை, தனக்குத்தானே ஊக்கம் தந்துகொள்ளும் திறன், மற்றும் தோல்விகளிலிருந்து பாடம் கற்கும் திறன் போன்ற பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. நம்முடைய இன்றைய தேர்வுகள், இவற்றில் எதையும் பரிசோதிப்பதில்லை, நம்முடைய இன்றைய கல்விமுறை, இவற்றில் எதையும் கற்றுத்தருவதில்லை.  

ஆகவே, நம் குழந்தைகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கவேண்டும், நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டும் என்று நாம் விரும்பினால், அவர்கள் நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடும், ஆனால் அதன்பிறகும் அவர்கள் வாழ்க்கையில், அலுவலகத்தில் வெற்றிபெறாமலிருக்கலாம். யோசியுங்கள், அவர்கள் தேர்வில் வெல்வது முக்கியமா, அல்லது வாழ்வில் வெல்வது முக்கியமா? பெற்றோர் என்றமுறையில் நாம் இந்தத் தீர்மானத்தை எடுக்கவேண்டும், காரணம், இந்த இரு பாதைகளும் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கலாம். துரதிருஷ்டவசமாக, பல பெற்றோர் தேர்வில் வெற்றியும் வாழ்வில் வெற்றியும் ஒன்று என நினைத்துவிடுகிறார்கள். தேர்வில் வெற்றி என்பது சில கதவுகளைத் திறக்கிறது, அவ்வளவுதான். ஆனால், வாழ்வில் வெற்றி என்பது முற்றிலும் மாறுபட்ட விஷயம். பல நேரங்களில் அதற்கும் தேர்வு வெற்றிக்கும் சம்பந்தமிருப்பதில்லை.

அப்படியானால், பெற்றோர் தங்கள் பிள்ளைகள்மீது எந்த எதிர்பார்ப்பையும் வளர்த்துக்கொள்ளக்கூடாதா? கண்டிப்பாக எதிர்பார்ப்பு வைக்கலாம். குழந்தைகள் பெற்றோரின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய முனைவார்கள். ஆகவே, நாம் வைக்கும் எதிர்பார்ப்புகள் அவர்களைத் தூண்டும், அதிக உயரங்களுக்குக் கொண்டுசெல்லும். அவர்கள் தங்களுடைய சவுகர்ய எல்லையிலிருந்து வெளியே வருவார்கள், புதிய விஷயங்களை முயற்சிசெய்வார்கள், புதிய சவால்களைச் சந்திப்பார்கள்.

ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் மதிப்பெண்களைப்பற்றியவையாக, செயல்திறனைப்பற்றியவையாக, கண்டிப்பான சமூகத் தரங்களைப் பின்பற்றுவதைப்பற்றியதாக இருக்கக்கூடாது.

நம் எதிர்பார்ப்புகள் வேறுவிதமாக அமையவேண்டும்: அவர்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் முழு உழைப்பைக் கொட்டிப் போராடவேண்டும் என எதிர்பார்க்கலாம்; அவர்கள் தங்கள் முழுத்திறனைக்காட்டிக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கலாம்; அவர்கள் சில மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் என எதிர்பார்க்கலாம் (அந்த மதிப்பீடுகளை அவர்கள் நம்புவதற்காக, நாமே அதன்படி வாழ்ந்துகாட்டலாம்); அவர்கள் தங்களுடைய சாத்தியங்களின் வரம்புகளை முன்னே தள்ளிச்சென்று உயர்ந்த இலக்குகளை எட்டவேண்டும் என்று எதிர்பார்க்கலாம்; அவர்கள் சமூகத்துக்கேற்ப நன்கு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கலாம்; அவர்கள் தங்களைத்தாங்களே நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கலாம்; அவர்கள் தங்களுடைய சொந்தக் கனவுகளை, விருப்பங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கலாம், அவை நம் கனவுகள், விருப்பங்களிலிருந்து மாறுபட்டிருந்தாலும் அதை அனுமதிக்கலாம்.

அப்படியானால் நம் நம் குழந்தைகளுக்கு எதைத் தரலாம்? அவர்கள் உண்மையில் யார் என்பதைப்பற்றிய நம் அறிவு, நம்பிக்கை ஆகியவை மதிப்புமிக்கவை, முக்கியமானவை! அதேபோல், ஒரு நேர்மையான, உண்மையான, பாதுகாப்பான, பத்திரமான தாங்கள் நிராகரிக்கப்பட்டுவிடுவோமோ/ தங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்களோ என்ற பயமில்லாமல் வளர்வதற்கு ஏற்ற ஒரு சூழல் அவர்களுக்குத் தேவை.

பதிலுக்கு, பெற்றோர் என்றமுறையில் நாம் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாம்? ஷரோன் குட்மனின் சொற்களில் சொல்லுவதென்றால், "ஓர் அற்புதமான அனுபவத்தை எதிர்பார்க்கலாம், அதில், நம்முடைய குழந்தைகள் தங்களைத் தாங்களே தெரிந்துகொள்ள நாம் உதவுவோம், வழிகாட்டுவோம்."

மௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். கார்ப்பரேட் பணியை விட்டுவிட்டு மன வளத்துறையில் பணியாற்றிவருகிறார். மௌலிகா வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் பணியாற்றிவருகிறார். இது ஒரு சர்வதேச ஊழியர் நல நிறுவனம் ஆகும். இவர் பெங்களூரில் உள்ள ரீச் க்ளினிக்கில் மருத்துவசேவை வழங்கிவருகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்: columns@whiteswanfoundation.org.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org