பெற்றோர்: தங்கவேட்டை ஆடவேண்டும்

சிலநாள் முன்பாக ஒருவர் என்னிடம் சொன்னார், "எப்போதும் தங்கவேட்டையாடுங்கள், மண்வேட்டையை நிறுத்துங்கள்.' என்ன அழகான கருத்து! ஆனால், இதன்படி வாழ்வது எளிதல்ல! நான் இதைப்பற்றி யோசிக்க யோசிக்க, எனக்குப் பல நினைவுகள் வந்தன. இந்த ஒரு விஷயத்தை மறந்தால் என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்று புரிந்தது.

ஆலோசனைக்காக வரும் குழந்தைகள், வளர்இளம்பருவத்தினரில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் குறைந்த சுயமதிப்பால் அவதிப்படுகிறார்கள், அதனால் வரும் பிரச்னைகள் அவர்களை மிகவும் சிரமப்படுத்துகின்றன. அவர்களுடைய இப்போதைய பிரச்னை வேறொன்றாக இருப்பினும், அதன் அடியாழத்தில் இந்தப் பிரச்னை இருக்கிறது. அவர்கள் பொதுவாகச் சொல்லும் சில விஷயங்கள்: "என்னுடைய திறமை போதாது", "எனக்குப் புத்திசாலித்தனம் போதாது", "நான் அழகாக இல்லை", "நான் தேர்வு சரியாக எழுதவில்லை, பிறகு ஏன் மற்றவர்கள் என்னோடு பழகுவார்கள்?", "யாரும் என்னோடு பேசுவதில்லை", "எனக்குக் கேள்வி கேட்கப் பயமாக உள்ளது, காரணம், நான் கேள்வி கேட்டால் ஆசிரியை என்னைத் திட்டுவார், மற்றவர்கள் என்னைப்பார்த்துச் சிரிப்பார்கள்", "எனக்கு மேடைக்குச்செல்ல மிகவும் பயமாக இருக்கிறது. எல்லாரும் என்னைப்பார்த்துச் சிரிப்பார்கள்"... இப்படி!

சுயமதிப்பு என்பது, தன்னுடைய மதிப்பு என்ன என்பதைப்பற்றி ஒருவர் நிகழ்த்தும் ஒட்டுமொத்தமான அகவய உணர்வு மதிப்பீடு ஆகும். அது, ஒருவர் தன்னைப்பற்றி வழங்கிக்கொள்ளும் தீர்ப்பு, தன்னைப்பற்றிய மனப்போக்கு. இதுபோன்ற வாசகங்கள் குறைந்த சுயமதிப்பின் வெளிப்பாடுகளாகும், இந்தக் குழந்தைகள் இப்படிப் பிறக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். அவர்களுடைய பெற்றோரும் மற்ற பெரியவர்களும் சேர்ந்து அவர்களை இப்படி ஆக்கிவிட்டார்கள். இதற்குக் காரணம், அந்தப் பெரியவர்கள் சொன்ன சில சாதாரணமான வாக்கியங்கள், தேவையில்லாத தீர்ப்புகள்தாம், அவை அந்தக் குழந்தைகளை மிகுதியாகப் பாதித்துவிட்டன. குழந்தைகள் நல்லபடியாக இருக்கவேண்டும் என்றுதான் குழந்தைகள் நினைக்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் செய்யும் சில விஷயங்கள் குழந்தைகளை எதிர்மறையாகப் பாதித்துவிடுகிறது.

ஆகவே, பேசுகிற ஒவ்வொரு சொல்லையும் கவனித்துப் பேசவேண்டும், அதை எப்படிப் பேசுவது என்பதையும் சிந்தித்துப் பேசவேண்டும். உதாரணமாக, ஒரு தந்தை தன் குழந்தையை 'முட்டாள்' என்றோ, 'புத்திகெட்டவன்' என்றோ, 'மெதுவாகச் செயல்படுகிறான்' என்றோ, 'கையாலாகாதவன்' என்றோ, 'தோற்றுப்போனவன்' என்றோ சொல்லலாம்,  இந்தச் சொற்களை அவர் விரும்பிச் சொல்வதில்லை, சிந்திக்காமல் பேசிவிடுகிறார். ஆனால், இது அந்தக் குழந்தையின் மனத்தில் ஆழப் பதிந்துவிடுகிறது. தான் ஒரு முட்டாள், புத்திகெட்டவன், மெதுவாகச் செயல்படுகிறவன், கையாலாகாதவன், தோற்றுப்போனவன் என்ற எண்ணத்துடனே அது வளர்கிறது.

சிறிதுகாலம் முன்பாக, ஒரு தம்பதி என்னிடம் ஆலோசனைக்கு வந்திருந்தார்கள். அவர்களுடைய மகன் இப்போதுதான் தொடக்கப்பள்ளியில் படிக்கிறான். அவனுக்கு உதவி தேவை என்று அவர்கள் இருவரும் சொன்னார்கள். என்னிடம் வருவதற்குச் சற்றுமுன்பாக, தங்கள் மகன் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில் அவர்கள் கலந்துகொண்டார்களாம். அங்கே ஓர் ஆசிரியர் 'உங்கள் மகனிடம் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன' என்று சொன்னாராம், 'நீங்கள் பள்ளி ஆலோசகரைச் சந்திப்பது நல்லது' என்று சிபாரிசு செய்தாராம். இப்போது, அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. திகைத்துப்போய் நின்றார்கள். 'என் மகனை எப்படித் திருத்துவது?' என்று கேட்டார்கள். அந்தச் சொல்லைக்கேட்டதும் என் உடம்பெல்லாம் நடுங்கியது. குழந்தையை ஏன் திருத்தவேண்டும்? அது என்ன தவறு செய்தது? தன் குழந்தை தவறு செய்திருப்பதாக ஒரு தந்தையோ தாயோ நினைத்தால், அவர்களுடைய செயலிலும் பேச்சிலும் அந்த எண்ணம் பிரதிபலிக்கும். இதைக்கேட்கும் அந்தக் குழந்தை, தான் நிஜமாகவே தவறுசெய்துவிட்டதாக எண்ணத்தொடங்கும்.

'சரி, நீங்கள் கவனித்தவரை உங்கள் குழந்தையின் பலங்கள் என்ன?' என்று நான் அவர்களைக் கேட்டேன். நான் எதிர்பார்த்ததுபோலவே, அவர்களால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல இயலவில்லை. நான் பலவிதமாக அதே கேள்வியைத் திரும்பத்திரும்பக் கேட்டேன், அவர்கள் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

ஆக, இதுதான் தவறு. குழந்தையிடம் எந்தத் தவறும் இல்லை.

இப்படிப்பட்ட பெற்றோரால்தான் குழந்தைகள் 'நான் தனித்துவமானவன் இல்லை, என்னிடம் எதுவும் விசேஷமாக இல்லை' என்ற நம்பிக்கையோடு வளர்கிறார்கள். காரணம், அவர்களுடைய பெற்றோரின் மனப்போக்கில், நடத்தையில் எதுவும் தனித்துவமாக இல்லை. இந்தப் பிரச்னையைப் பல இடங்களில் பார்க்கலாம்!

பெற்றோர், ஆசிரியர்கள், பிற பெரியவர்களின் கண்களில் ஒரு குழந்தையைத் 'தோன்றச்செய்வது' மிகவும் முக்கியம். அவர்கள் செய்யும் கெட்டவற்றைமட்டும் கவனிக்காமல், நல்லவற்றைக் கவனிக்கவேண்டும், அப்போது அந்தக் குழந்தையின் மன அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படலாம். இது ஓர் அருமையான உத்தி. ஒவ்வொரு பெற்றோரும், வளர்ந்தவர்கள் எல்லாரும் இதை இலவசமாகப் பயன்படுத்தலாம். இதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம், கண்கள், காதுகளைத் திறந்துவைத்திருக்கவேண்டும்: குழந்தை ஓர் அன்பான சொல்லைப் பேசினால், எதையாவது நன்றாகச் செய்தால், நல்லபடியாக நடந்துகொண்டால், உடனே பாராட்டவேண்டும், 'சபாஷ்' சொல்லி அதன் தன்னம்பிக்கையை மேம்படுத்தவேண்டும்.

இதை எல்லாரும் உடனே தொடங்கலாம். ஒவ்வொருநாளும் குழந்தையிடம் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைக் கவனிக்கவேண்டும், பாராட்டவேண்டும், இதுதான் நல்ல தொடக்கம். இதைத் தினமும் செய்வது சிரமம் என்றால், வாரம் ஒருநாள் செய்யலாம்.

இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, நாம் எல்லாருமே நம் குழந்தைகளின் முயற்சிகளை மிக அபூர்வமாகதான் பாராட்டுகிறோம் என்பது தெரியவரும். சொல்லப்போனால், சில குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் பாராட்டுவதே இல்லை. தாங்கள் இப்படித் தங்கள் குழந்தையைப் புறக்கணிக்கிறோம் என்பதை அவர்கள் உணர்வதும் இல்லை. குழந்தையிடம் என்ன தவறு என்பதையே அவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சரியாகச் செயல்பட்டால், அதைச் சகஜமாகக் கடந்துசென்றுவிடுகிறார்கள்.

ஆகவே, பெற்றோர் தினந்தோறும் தங்கவேட்டை ஆடவேண்டும். சில நாள்களில் அது ஒரு பழக்கமாகிவிடும். அப்படி வேட்டையாடிய தங்கத்தை மெருகேற்றி இன்னும் பிரகாசமாக்கவேண்டும், சும்மா அழுக்கைப்பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.

மௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். கார்ப்பரேட் பணியை விட்டுவிட்டு மன வளத்துறையில் பணியாற்றிவருகிறார். மௌலிகா வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் பணியாற்றிவருகிறார். இது ஒரு சர்வதேச ஊழியர் நல நிறுவனம் ஆகும். இவர் பெங்களூரில் உள்ள ரீச் க்ளினிக்கில் மருத்துவசேவை வழங்கிவருகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்: columns@whiteswanfoundation.org.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org