குழந்தைகளைத் தண்டிக்காமல் நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது எப்படி?

சென்ற கட்டுரையைப்படித்துவிட்டு ஓர் அன்பர் கடிதம் எழுதியிருந்தார்: குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது எப்படி? அவருடைய கேள்வியை முழுமையாகத் தருகிறேன்: சில குழந்தைகள் குறும்பாக இருப்பார்கள், படிப்பில் கவனம் செலுத்தமாட்டார்கள், எதிலும் அக்கறைகாட்டாமலிருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளைப் பெற்றோர் அவ்வப்போது அடிப்பதுண்டு, அவர்களுடைய வருங்காலத்தைப்பற்றிச் சொல்லி மிரட்டுவதுண்டு. இது சரியா? ஒருவேளை இது தவறு என்றால், வேறு எந்தவழியில் இவர்களைச் சரிசெய்யலாம்?

முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன். பலரும் நினைப்பதுபோல தண்டிப்பதும் நல்லொழுக்கத்துடன் வளர்ப்பதும் ஒன்றல்ல. பல பெற்றோர் இந்த இரு சொற்களையும் மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். அது தவறு. ஒரு குழந்தையைத் தண்டிப்பதன் நோக்கம், அது முன்பு செய்த ஒரு தவறுக்குத் தண்டனை வழங்குவது. ஆனால், அதே குழந்தையை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பதன் நோக்கம், அதன் வருங்காலச் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவது. இந்த வித்தியாசத்தைப் பலரும் மறந்துவிடுகிறார்கள். குழந்தையை அதீதமாகத் தண்டித்தால், அதற்கு நிறைய வலி கொடுத்தால், அதன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என நம்புகிறார்கள். தண்டனைக்கும் எதிர்காலத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டால், வலிதரும் தண்டனைகளைத் தேடமாட்டார்கள்.

ஒரு குழந்தையை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது என்றால், அதன் வருங்காலச் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவது ஆகும். ஆகவே, தாங்கள் எந்தச் செயல்பாட்டை மாற்ற விரும்புகிறோம், அந்தச் செயல்பாட்டை எப்படி மாற்ற விரும்புகிறோம் என்பதைப் பெற்றோர் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். குழந்தையிடம் எந்த விளைவுகள் நல்ல பலன் தரும் என்பதையும் அடையாளம்காணவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். எல்லாக் குழந்தைகளையும் ஒரேமுறையில் மாற்றமுடியாது. ஒரு குழந்தைக்குப் பலன் தருகிற ஒரு விஷயம், இன்னொரு குழந்தைக்கு முற்றிலும் பயன்படாமல்போகலாம். ஒரு குழந்தை தொலைக்காட்சியை விரும்பிப்பார்க்கிறது என்றால், 'தொலைக்காட்சி நேரத்தைக் குறைத்துவிடுவேன்' என்று சொன்னால், அதனிடம் நல்ல பலன் இருக்கும். ஆனால் இன்னொரு குழந்தை தொலைக்காட்சியே பார்ப்பதில்லை. அதனிடம் சென்று இப்படிச்சொன்னால் அது என்ன செய்யும்? கண்டுகொள்ளாமல் சென்றுவிடும்.

அந்த விளைவால் ஏற்படும் உடல் வலியின் தீவிரம் முக்கியமே இல்லை. தாங்கள் எந்தெந்த 'விதிமுறைகளை'ப் பின்பற்றவேண்டும் என்று குழந்தைகளுக்குத் தெரியவேண்டும், அந்த 'விதிமுறைகளை'ப் பின்பற்றாவிட்டால் சில விளைவுகள் கண்டிப்பாக ஏற்படும் என்றும் அவர்கள் உணரவேண்டும், அந்த விளைவுகள் என்ன என்பதையும் அவர்கள் முன்கூட்டியே அறிந்திருக்கவேண்டும், அப்போதுதான் அவர்களுடைய நடவடிக்கைகள் மாறும். ஒரு விளைவினால் ஏற்படக்கூடிய வலியின் தீவிரத்தைப்பொறுத்து அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளமாட்டார்கள், அது எந்த அளவு உறுதியாக, எப்போதெல்லாம் நிறைவேற்றப்படும் என்பதைப்பொறுத்துதான் கற்றுக்கொள்வார்கள். இது கேட்பதற்கு மிக எளிதாகவும் நேரடியாகவும் இருக்கிறது. ஆனால், பல பெற்றோர் இதை உணர்வதில்லை. எது சரி, எது தவறு என்று தெளிவாக வரையறுக்காமலே, அது தங்கள் குழந்தைகளுக்குத் தானே புரிந்துவிடும் என்று எண்ணுகிறார்கள். அதன்பிறகு, தங்களுக்கு நேரமும் ஆற்றலும் இருக்கும்போதுதான் அவர்கள் அந்த விளைவுகளை அமல்படுத்துகிறார்கள், தங்களுடைய அப்போதைய மனோநிலையைப்பொறுத்துத் தங்களுக்குத் தோன்றுகிற ஏதோ ஒரு தண்டனையைத் தருகிறார்கள்.

இதைப்பார்க்கும் குழந்தைகள், 'தண்டனையிலிருந்து தப்பிக்கவேண்டுமானால் நான் எந்த அளவுக்குச் செல்லலாம்?' என்றுதான் யோசிக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் பெரியவர்களும் இப்படிதான் நடந்துகொள்வார்கள். உதாரணமாக, ஒரு போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு இருக்கிறது. ஆனாலும், சிலர் வண்டியை நிறுத்தாமல் செல்கிறார்கள், காரணம், 'இதை மீறினால் என்னதான் ஆகிறது என்று பார்த்துவிடலாமே' என்ற எண்ணம்தான். பத்து முறை சிவப்பு விளக்கை மீறிச்சென்றால், ஒன்பதுமுறை எதுவுமே நடக்காது என்று அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அப்படியில்லாமல், ஒவ்வொருமுறை சிவப்புவிளக்கைத் தாண்டியதும் தண்டனை கிடைத்தே தீரும் என்று தெரிந்தால், அவர்கள் அப்படி ஆபத்துக்குத் துணியமாட்டார்கள். 'சிவப்புவிளக்கைத் தாண்டி அபராதம் கட்டுவதைவிட, இங்கேயே நின்று ஒரு நிமிடம்காத்திருக்கலாம்' என்று எண்ணுவார்கள். அதே பெரியவர்கள், தங்கள் குழந்தைகளிடம் பழகும்போது வேறுவிதமாக நடந்துகொள்கிறார்கள், விதிமுறைகள் என்ன என்றே தெரியாமல், பின்விளைவுகள் என்ன என்றே தெரியாமல், பின்விளைவுகள் இருக்குமா இருக்காதா என்பதே தெரியாமல் அவர்கள் விதிமுறைப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு குழந்தை விளையாடச்செல்கிறது, அது 7 மணிக்குத் திரும்பிவரவேண்டும், அப்படி வராவிட்டால் அன்றைக்குத் தொலைக்காட்சி பார்க்கமுடியாது. இதை அதன் பெற்றோர் தெளிவாகச் சொல்லவேண்டும், அதன்பிறகு, அவர்கள் எத்தனைமுறை தாமதமாக வந்தாலும் சரி, அத்தனைமுறையும் அந்த விளைவு (தொலைக்காட்சி பார்க்கமுடியாது) கண்டிப்பாக அமல்படுத்தப்படவேண்டும். இது அந்தக் குழந்தைக்குத் தெரிந்தால், 'நான் 7 மணிக்கு வீட்டுக்குச் சென்றுவிடவேண்டும், இல்லாவிட்டால் தொலைக்காட்சி பார்க்கமுடியாது' என்று நினைக்கும். கொஞ்சம்கொஞ்சமாக அதன் நேர ஒழுங்கு மேம்படும். அப்படியில்லாமல், 'நான் தாமதமாக வந்தாலும், தொலைக்காட்சி பார்க்காமலிருக்க 75% வாய்ப்புதான் உள்ளது' என்று அந்தக் குழந்தைக்குத் தெரிந்தால், 'என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாமே' என்று எண்ணத்தொடங்கும். 'இன்றைக்கு ஐந்து நிமிடம் கூட விளையாடலாமே, ஒருவேளை அப்பா, அம்மா அதைக் கண்டுகொள்ளாவிட்டால் நல்லதுதானே' என கணக்குப்போடும்.

ஞாபகமிருக்கட்டும், பின்விளைவுகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும், ஒவ்வொருமுறையும் நிறைவேற்றப்படும் என்பது தெரிந்தால்தான் குழந்தைகள் கற்றுக்கொள்ளும். மேலே நாம் பார்த்த உதாரணத்தில், பெற்றோர் தங்கள் குழந்தையிடம் 'நீ இன்றைக்குத் தாமதமாக வந்தால் அடுத்த வாரம் தொலைக்காட்சி பார்க்கமுடியாது' என்று சொன்னால் என்ன ஆகும்? அந்தவாரம்முழுக்க அந்தத் தவறுக்கான விளைவை வலியுறுத்தும் வாய்ப்பை அவர்கள் இழந்துவிடுகிறார்கள். இதனால், அவர்களுடைய குழந்தைக்கு வாரம் ஒருமுறைதான் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமையும். அதுமட்டுமில்லை, இதை ஒரு வாரத்துக்கு அமல்படுத்துவது சிரமம் என்பதால், இரண்டு அல்லது மூன்று நாளில் அந்தப் பெற்றோர் சலித்துப்போய்விடுவார்கள், குழந்தையை இஷ்டம்போல் விளையாட அனுப்பிவிடுவார்கள்.

ஆகவே, குழந்தையை நல்லொழுக்கத்துடன் வளர்க்க (தண்டிக்க அல்ல), பெற்றோர் சில முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

முதலில், குழந்தைகளுடைய எந்தப் பழக்கங்களை மாற்றுவது என்று அவர்கள் தீர்மானிக்கவேண்டும். உதாரணமாக, ஒரு குழந்தையிடம் ஐம்பது தவறான பழக்கங்கள் இருக்கலாம். அவை அனைத்தையும் மாற்றப்போராடிக்கொண்டிருந்தால் வீடே போர்க்களமாகிவிடும். ஆகவே, இருப்பதில் கண்டிப்பாக மாற்றியாகவேண்டிய ஐந்து பழக்கங்களைமட்டும் தேர்ந்தெடுக்கவேண்டும், அவற்றில்மட்டும் கவனம்செலுத்தவேண்டும். அதாவது, தேவையில்லாமல் சின்னச்சின்ன விஷயங்களைத் திருத்திக்கொண்டிருக்கவேண்டாம். 'பரவாயில்லை' என்று விட்டுவிட்டு, பெரிய விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.

இரண்டாவதாக, ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தை எது, ஏற்றுக்கொள்ளப்படாத நடத்தை எது என்பதைக் குழந்தைக்குத் தெளிவாக வரையறுக்கவேண்டும். இந்த இரண்டுக்கும் நடுவிலுள்ள கோட்டைத் தாண்டினால் என்ன நடக்கும் என்பதை வரையறுக்கவேண்டும். இப்படிப் பெற்றோர் தேர்ந்தெடுக்கும் விளைவானது, அவர்கள் எப்போதும் செய்யக்கூடிய ஒன்றாக இருக்கவேண்டும். பல நேரங்களில் இதுதான் பெரிய சவால்.

மூன்றாவதாக, குழந்தைகள் ஒவ்வொருமுறை அந்தக் கோட்டைக் கடக்கும்போதும், அந்த விளைவு கண்டிப்பாக நிறைவேற்றப்படவேண்டும். நிறைவாக, வரையறுக்கப்படும் வரம்புகள் குழந்தையின் வயதுக்குப் பொருந்தவேண்டும். குழந்தைகள் வளர வளர, இந்த வரம்புகளை மாற்றியமைக்கவேண்டும். எது சரி, எது தவறு என்பதைப் பெற்றோர்மட்டும் தீர்மானிப்பதாக இருக்கக்கூடாது, குழந்தைகளுக்கு வயதாக ஆக அவர்களோடு பேசி இதனைத் தீர்மானிக்கவேண்டும்.

நிறைவாக, இந்தக் கேள்வியை எனக்கு அனுப்பியவருக்கு நான் சொல்லவிரும்புவது, 'பிரச்னைக்குரிய குழந்தை' என்று யாரும் இல்லை, 'பிரச்னைக்குரிய பழக்கவழக்கங்கள்'தான் உள்ளன. இவற்றைச் சரிசெய்ய, குழந்தையை நல்லொழுக்கத்துடன் வளர்த்தால் போதும், வலிதரும் தண்டனைகள் அவசியமில்லை.

மௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். கார்ப்பரேட் பணியை விட்டுவிட்டு மன வளத்துறையில் பணியாற்றிவருகிறார். மௌலிகா வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் பணியாற்றிவருகிறார். இது ஒரு சர்வதேச ஊழியர் நல நிறுவனம் ஆகும். இவர் பெங்களூரில் உள்ள ரீச் க்ளினிக்கில் மருத்துவசேவை வழங்கிவருகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்: columns@whiteswanfoundation.org.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org