உன்னதம் வேண்டுமா? ஓரளவு சிறப்பாக இருந்தால் போதுமா? தன்னலம் சரியா? தவறா?

என்னுடைய பத்திகளைப் படிக்கிற சில பெற்றோர், 'ஒரு தந்தையாக/தாயாக இருக்கும் தகுதி எனக்கு உண்டா?' என்றே சந்தேகப்படத் தொடங்கிவிடக்கூடும், தாங்கள் என்ன செய்தாலும் அது தங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை உண்டுபண்ணிவிடுமோ என்று அஞ்சக்கூடும். இதனை நான் உணர்ந்தே இருக்கிறேன். ஏற்கெனவே பல பெற்றோர் தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தைப்பற்றியும் தங்களால் அதைச் சமாளிக்க இயலுமா என்பதைப்பற்றியும் கவலையில் இருக்கிறார்கள், இதில் நான்வேறு நடுவில் வந்து ஒரு சோகமான காட்சியை முன்வைக்கவேண்டுமா?

ஆனால் உண்மையில், என்னுடைய பத்திகளின் நோக்கம் அதுவல்ல. குழந்தைவளர்ப்பின் இன்பங்களைப் பெற்றோர் அனுபவிக்கவிடாமல் செய்யவேண்டும், அவர்களுடைய மனத்தில் இதுபற்றிய ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தவேண்டும் என்று நான் எண்ணவில்லை. மாறாக, அவர்கள் இதுபற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். சில எளிய விஷயங்கள்கூடத் தவறாகிவிடலாம் என்று உணரவேண்டும், அதேசமயம், அவற்றைச் சரிசெய்வதும் எளிது, சரிசெய்யவேண்டும் என்ற விருப்பம்மட்டும் இருந்தால் போதும். இதனை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இதுவே என் நோக்கம்.

குழந்தைவளர்ப்பு என்பது ஒரு பயணம், வாழ்க்கைப்பயணத்தைப்போன்றதுதான் இதுவும். இதனை ஓர் இதமான, ஆடம்பரமான பயணமாகச் சிலர் நினைக்கலாம், வழியில் தெரியும் இயற்கைக்காட்சிகளை ரசிக்கலாம், ஏதேனும் தடைகள் வந்தால், தாண்டிச்செல்லலாம். அல்லது, இதனை ஒரு நீண்ட, கடினமான பயணமாகக் கருதலாம், இதனை எப்படியாவது கடந்தாகவேண்டும் என்று நினைக்கலாம், வழியில் வரும் ஒவ்வொரு தடையையும் பயணத்துக்கு இடைஞ்சலாகக் கருதலாம், நாம் செல்லவேண்டிய இடத்துக்குச் செல்லமுடியாதபடி அவை தடுக்கின்றன என்று எரிச்சலடையலாம். குழந்தைவளர்ப்பு என்கிற பயணத்தை எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது பெற்றோரின் தேர்வுதான். ஆனால், இந்த இரண்டில் அவர்கள் எதைத் தேர்வுசெய்தாலும் சரி, தங்களைப்பற்றி அவர்கள் எத்தகைய பார்வையைக்கொண்டிருக்கிறார்கள், எப்படிப்பட்ட எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சில பெற்றோர், எதுவும் கச்சிதமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைக்கிறவர்களுக்குத் தொடர்ந்து ஏமாற்றம்தான் மிஞ்சும். காரணம், 'கச்சிதமான', 'உன்னதமான' நபர் என்று யாருமே இல்லை. மாறாக, அவர்கள் தங்களைத்தாங்களே ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும், தங்களிடம் உள்ள பலங்கள், தகுதிகள், உள்ளுணர்வு போன்றவற்றோடு, பலவீனங்கள், சந்தேகங்கள், பதற்றங்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். தாங்கள் உன்னதமான பெற்றோராகதான் இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காமல், உன்னதத்துக்குக் கொஞ்சம் குறைவான நிலையையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இவர்கள் தங்களுடைய தவறுகள், குறைகளையெல்லாம் ஏற்றுக்கொள்ளவேண்டும், வாழ்க்கைப் பயணத்தில், வளர்ச்சியில் இவையெல்லாம் சாதாரணம் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால், பெரும்பாலான பெற்றோர் இவ்வாறு எண்ணுவதில்லை, குழந்தை பிறந்தவுடன், "இனி நான் உன்னதமாக இருக்கவேண்டும்" என்று எண்ணுகிறார்கள், "இதில் நான் பிழைகளே செய்யக்கூடாது", "நான் ஒரு நல்ல தந்தை/தாய் இல்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது", "இனி என் குழந்தையை வைத்துதான் மற்றவர்கள் என்னை எடைபோடுவார்கள், ஆகவே, நான் உன்னதமாக இருக்கவேண்டும்" என்றெல்லாம் சிந்திக்கிறார்கள், இதனால் நன்மையைவிடத் தீமைதான் அதிகம். பெற்றோராக இருப்பது பொறுப்புமிக்க வேலைதான். எனக்குக் குழந்தைபிறந்த நாளை எண்ணிப்பார்க்கிறேன், அப்போது அந்தக்குழந்தையைப்பார்த்து நான் நினைத்தேன், 'இந்த உயிருக்கு நான்தான் முழுப்பொறுப்பு, என்னைச் சார்ந்துதான் இது வாழ வந்துள்ளது!' மறுகணம், எனக்கு ஒரு பயம் வந்தது, 'ஒருவேளை, நான் ஏதாவது தவறுசெய்துவிட்டால்? ஒருவேளை, என்னால் இந்த நிலைமையைச் சமாளிக்க இயலாவிட்டால்? ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்? என் குழந்தை என்னை மறந்தேபோய்விடுமோ?'

குழந்தையை வளர்க்கும் பயணம்முழுவதும் தொடர்ந்துவரக்கூடிய ஓர் அம்சம், முரணான எண்ணங்கள், உணர்வுகளில் மூழ்குவதுதான்: நம்பிக்கையோடு பயமும் வரும், அன்போடு கோபமும் வரும், மகிழ்ச்சியோடு வருத்தமும் வரும், நம்பிக்கையோடு அவநம்பிக்கையும் வரும், நம்பகத்தன்மையோடு சந்தேகமும் வரும், சுயநலமற்ற எண்ணம் இருக்கும், அதேசமயம் உள்ளுக்குள் ரகசியமாக 'எனக்கென்று கொஞ்சம் நேரம் இருந்தால் நன்றாக இருக்குமே' என்கிற உணர்வும் வரும், சுதந்தரத்தை வேண்டுவார்கள், அதேசமயம் சார்ந்திருக்கவும் விரும்புவார்கள், தன் சொந்தக்கனவுகளோடு குழந்தைகளின் கனவுகள் போட்டியிடும், உயரப்பறக்கும் மகிழ்ச்சியோடு பொத்தென்று கீழே விழும் சோகமும் தென்படும்... கிட்டத்தட்ட ரோலர்கோஸ்டர் பயணம்போல இது.

குழந்தைவளர்ப்பில் சுயநலத்துக்கு இடமுண்டா? முதன்முறையாக இப்படி ஒருவர் என்னிடம் கேட்டபோது, நான் சட்டென்று பதில்சொன்னேன், 'என்ன பேசுகிறீர்கள்? குழந்தைவளர்ப்பில் ஏது சுயநலம்? கண்டிப்பாகக் கிடையாது!' ஆனால் அதன்பிறகு, நான் அதைப்பற்றிச் சிந்தித்துப்பார்த்தேன். ஒருவேளை, குழந்தைவளர்ப்பிலும் சுயநலம் உண்டோ என்று தோன்றுகிறது. அநேகமாக அது சுயநலம், பொதுநலம் இரண்டின் கலவையாக இருக்கும். அது இயல்புதான்!

இந்தத் தெளிவின்மையை ஒவ்வொரு பெற்றோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும், கையாளவேண்டும், எதுவும் கருப்பு, வெள்ளை என அமைவதில்லை, நடுவில் பல சாம்பல்நிறங்கள் இருக்கின்றன. இதனை உணர்ந்தால், குழந்தைவளர்ப்பை அனுபவிக்கலாம். எந்தப் பெற்றோரும் உன்னதமில்லை, எந்தப் பெற்றோரும் மோசமில்லை, அப்படி இருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஒன்று இந்தப்பக்கம், இல்லாவிட்டால் அந்தப்பக்கம் என்று ஓடவேண்டியதில்லை. ஒவ்வொரு பெற்றோரும் தாங்கள் இந்தப் பயணத்துக்குச் சரியானவர்கள் என்று எண்ணவேண்டும், அந்தந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்பத் தனக்குச் சரி என்று தோன்றுவதைச் செய்யவேண்டும், தான் அவ்வாறு செய்கிறோம் என்பதைத் தானே நம்பவேண்டும். சூழல் மாறினால், அல்லது, அதைத் தான் புரிந்துகொண்டிருக்கும் விதம் மாறினால், பெற்றோருடைய செய்கையும் மாறலாம். ஆனால் இப்போது, அவர்கள் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள், அது சுயநலமா, பொதுநலமா என்பதெல்லாம் முக்கியமில்லை. குழந்தைவளர்ப்புப் பயணத்தைப் பெற்றோர் அனுபவிக்கவேண்டும், தன்மீது நம்பிக்கைவைக்கவேண்டும், அதுதான் முக்கியம் !

மௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். கார்ப்பரேட் பணியை விட்டுவிட்டு மன வளத்துறையில் பணியாற்றிவருகிறார். மௌலிகா வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் பணியாற்றிவருகிறார். இது ஒரு சர்வதேச ஊழியர் நல நிறுவனம் ஆகும். இவர் பெங்களூரில் உள்ள ரீச் க்ளினிக்கில் மருத்துவசேவை வழங்கிவருகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்: columns@whiteswanfoundation.org.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org