பெற்றோரும் மனநலமும்

நான் முதன்முதலாக மனநலம் சார்ந்த ஒரு பணியில் ஈடுபட்டது, 1997ல். அப்போதுதான் எனக்குக் குழந்தை பிறந்தது, நான் என்னுடைய முழு-நேர, பரபரப்பான கார்ப்பரேட் வேலையிலிருந்து விலகியிருக்கத் தீர்மானித்தேன் – ஒரு முழு நேரப் பெற்றோராக இருக்க விரும்பினேன். ஒரு குழந்தை பிறந்தபிறகு, பல விஷயங்களைப்பற்றிய என்னுடைய பார்வையே மாறிவிட்டது – பொதுவாக வாழ்க்கையையே நான் வேறுவிதமாகப் பார்க்க ஆரம்பித்தேன், குறிப்பாக, என்னுடைய வாழ்க்கையை இன்னும் வித்தியாசமாகப் பார்த்தேன், பொதுவாக உறவுகளையே நான் வேறுவிதமாகப் பார்க்க ஆரம்பித்தேன், குறிப்பாக, என்னுடைய உறவுகளை இன்னும் வித்தியாசமாகப் பார்த்தேன், பொதுவாக மதிப்பீடுகள் மற்றும் நம்பிக்கைகளையே நான் வேறுவிதமாகப் பார்க்க ஆரம்பித்தேன், குறிப்பாக, என்னுடைய மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளை இன்னும் வித்தியாசமாகப் பார்த்தேன், பிறர் தங்கள் குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள், நான் என் குழந்தையை எப்படி வளர்க்கிறேன், எது சரி, எது தவறு, நான் விரும்பியபடி ஒரு மிகச்சிறந்த பெற்றோராக என்னால் இருக்க இயலுமா என்றெல்லாம் நான் யோசித்தேன். ஓர் இளம் பெற்றோர் என்றமுறையில், பல நேரங்களில் காலம் அப்படியே உறைந்துவிட்டதுபோல் நான் உணர்ந்தேன், தினமும் எதுவும் மாறவில்லை, ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு ஓடிக்கொண்டிருந்தேன். அதேசமயம், இன்னொருபக்கம் நேரம் ஓடிக்கொண்டிருப்பதையும் உணர்ந்தேன், சொல்லப்போனால், நேரம் அதிவேகமாக ஓடிக்கொண்டிருப்பதை நான் மகிழ்ச்சியுடன் கண்டேன், என் குழந்தை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்கு வளர்வதைப் பார்த்து மகிழ்ந்தேன். இப்போது, அவள் பதின்பருவத்தில் இருக்கிறாள், விரைவில் தனிப்பறவையாகப் பறப்பாள். குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள். பல ஆச்சர்யமான, நம்பமுடியாத வழிகளில், அவர்களுடைய வளர்ச்சியே நம் வளர்ச்சியாகிவிடுகிறது.

குழந்தையை வளர்ப்பது என்றால், பல சவால்கள், குழப்பங்கள், விரக்திகள், பதற்றங்கள், மகிழ்ச்சிகள், வலிகள், அன்பு, வேதனை, யாரும் கவனிக்காமல் ‘வேலைகளைச் செய்துகொண்டே இருப்பது’, முடிவற்ற ‘இருப்பு’ மற்றும் நிபந்தனைகளற்ற ‘அன்பு’... குழந்தைகளை வளர்ப்பதில் பல தேவைகள் உண்டு, மகிழ்ச்சிகளும் உண்டு, அதை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் குழந்தைகளின் மனநலனும் ஆரோக்கியமும் இருக்கிறது, நம்முடைய மனநலன், ஆரோக்கியம்கூட அதைப்பொறுத்தே அமைகிறது.

என்னுடைய குழந்தை வளர்ப்புப் பயணத்தின்போது, 2007ல் நான் அதிகாரப்பூர்வமாக மனநலத்துறையில் நுழைந்தேன். அப்போதுதான் நான் ஓர் ஆலோசகராகும் எனது வெளிப் பயணத்தையும், என் வாழ்க்கைக்கு ஒரு புதிய பொருளைக் கண்டறியும் எனது உள் பயணத்தையும் தொடங்கினேன். அப்போது தொடங்கி, மனநலத்துறையில் நான் பல பங்களிப்புகளைச் செய்துள்ளேன், பொறுப்புகளை வகித்துள்ளேன். ஐந்து ஆண்டுகள் நான் ஒரு பள்ளி ஆலோசகராக இருந்தேன், வயதுவந்தோர், தம்பதிகள், குடும்பங்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கண்டறிய உதவியுள்ளேன். தேர்வுகள், அழுத்தம், இலக்குகள் போன்றவற்றைப்பற்றி வளர்இளம்பருவத்தினர், இளைஞர்கள் கொண்டுள்ள கவலைகளைப்பற்றி ஒரு தேசிய நாளிதழுக்கு நான் தொடர்ந்து பத்தி எழுதிவருகிறேன். என்னுடைய வாடிக்கையாளர்களில் பலர், குழந்தைவளர்ப்பின் சவால்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் பெற்றோர். இன்னும் பலர், பெற்றோர் சரியில்லாமல் தடுமாறும் குழந்தைகள், இளைஞர்கள். மனநலம் மற்றும் ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களைப்பற்றிப் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் நான் பயிற்சிப்பட்டறைகளை நடத்தியுள்ளேன். இந்தப் பயிற்சிப்பட்டறைகளின் நோக்கம், இவர்கள் தங்களுடைய சொந்த மனநலனையும் கவனித்துக்கொள்ளவேண்டும், தங்களுடைய பராமரிப்பில் உள்ளவர்களுடைய மனநலனையும் கவனிக்கவேண்டும் என்பதுதான்.

சமீபத்தில் என்னிடம் வந்த ஒரு வாடிக்கையாளரின் கதை, நம் குழந்தைகளின் மனநலனுக்கும் நமது குழந்தை வளர்ப்பு பாணிக்கும் இடையிலுள்ள இணைப்பை நன்றாகப் புரியவைத்தது. அந்த இளைஞர், சிலநாள் முன்பு தற்கொலை எண்ணங்களுடன் இருந்திருக்கிறார். மனநல நிபுணர் அவருக்கு ஆரம்ப நெருக்கடிப் பராமரிப்புச் சேவையை வழங்கியபிறகு, என்னிடம் அனுப்பிவைத்தார். அந்த இளைஞர் தன்னுடைய பள்ளிப்படிப்பைக்கூடப் பூர்த்திசெய்திருக்கவில்லை. காரணம், பள்ளியில் சேர்ந்து படிப்பதைவிட, அவர் தன்னுடைய குடும்பத்தொழிலைக் கவனிக்கலாம் என்று அவரது பெற்றோர் எண்ணியிருக்கிறார்கள். இதற்காக, அவருடைய பெற்றோர் அவரை வெளிநாட்டில் உள்ள ஓர் உறவினரிடம் அனுப்பிவைத்திருக்கிறார்கள். அங்கே சென்று பார்த்தால், அவர் ஏதோ சட்டவிரோதமான செயலில் ஈடுபடுவதாக இவருக்குத் தோன்றியிருக்கிறது. ஆகவே, இங்கேயே திரும்பிவந்துவிட்டார். இந்த இளைஞருடைய குடும்பம் மிகவும் பாரம்பரியமாகச் சிந்திக்கக்கூடிய கூட்டுக்குடும்பம். ஆகவே, மற்ற எல்லாவற்றையும்விடக் குடும்ப உறவுகள்தான் முக்கியம் என்று அவர்கள் எண்ணியிருக்கிறார்கள். அவர் மீண்டும் வெளிநாடு சென்று தன் உறவினருடன் வேலை செய்யவேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்கள். ஆகவே, அவர் வீட்டைவிட்டு ஓடிச்சென்றுவிட்டார், அவர்களுடன் எல்லா உறவுகளையும் முறித்துக்கொண்டுவிட்டார். அந்த நேரத்தில்தான், அவர் என்னைப் பார்க்க வந்தார். அவருடைய பெற்றோர் அவரை வளர்த்தவிதம் எப்படியென்றால், அவரால் அவர்களுடைய தீர்மானங்களைக் கேள்வி கேட்க இயலாது, தன்னுடைய எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது. ஒட்டுமொத்தக் கூட்டுக் குடும்ப ஆதரவு அமைப்பும் சேர்ந்து அவர்மீது சுமத்திய எதிர்பார்ப்புகள் ஒருபக்கம், தனக்கு எது நல்லது என்று அவர் நம்பியவை இன்னொருபக்கம், இந்த இரண்டினிடையே இருந்த அழுத்தம் மிக அதிகமாகிவிட்டதால், அவருக்கு வேறு வழியே தெரியவில்லை, வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்துவிட்டார். காரணம், தன் பெற்றோர் தன்னை என்ன செய்யச் சொல்கிறார்களோ அதை எதிர்த்துப்பேசவோ கேள்வி கேட்கவோ அவருக்கு அனுமதி இல்லை. அவர்கள் சொல்வதை அவர் கேட்டு நடக்கவேண்டும், அவ்வளவுதான். ’நான் ஒரு சிறையில் இருப்பதைப்போல் உணர்கிறேன்’ என்றார் அவர். ‘என்னைச் சுற்றி வலுவான இரும்புக் கம்பிகள் இருக்கின்றன. என்னுடைய ஒரே ஆசை, இவற்றை உடைத்துக்கொண்டு வெளியேறுவதுதான்.’ நாங்கள் சிறிதுகாலம்தான் சேர்ந்து பணியாற்றினோம், ஆனால், மிக எளிமையான, அர்த்தமுள்ள நாள்கள் அவை. நான் செய்த ஒரே வேலை, மற்றவர்கள் சொல்கிற எல்லாவற்றையும் அவர் கேட்கவேண்டும், அதன்படி நடக்கவேண்டும் என்று அவசியம் இல்லை என்று அவருக்குச் சொன்னதுதான், அதன்மூலம் அவர் தனது மனமாகிய சிறையை உடைத்துக்கொண்டு வெளியே வரலாம் என்று நான் சொன்னேன். அதைக் கேட்டவுடன் அவருக்கு ஒரு புதிய சுதந்தரம் கிடைத்தது, தன்னுடைய சொந்த விருப்பங்களின்படி வாழத் தயாரானார்.

இந்தப் பத்தி, நம் குழந்தைகளின் மனநலனிற்கும் நமது குழந்தைவளர்ப்பு பாணிக்கும் இடையிலுள்ள உறவை அலசும். நாம் இன்றைக்கு எவ்வாறு இருக்கிறோம், வயதுவந்த நிலையில் நமது மனநலன் எவ்வாறு உள்ளது என்பதையெல்லாம் நமது பெற்றோர் எப்படித் தீர்மானித்தார்கள் என்பதையும் நாம் காண்போம். பெற்றோர் என்றமுறையில், நம் குழந்தைகளுக்கு எது நல்லது என்று நாம் நினைக்கிறோமோ அதைதான் நாம் செய்கிறோம். அதேசமயம், நாம் செய்கிற இந்தச் செயல்களால் அவர்களுடைய மனநலன் காக்கப்படுமா, மேம்படுத்தப்படுமா, அவர்கள் மனரீதியில் ஆரோக்கியமானவர்களாக வளர்வார்களா என்றால், கொஞ்சம் சந்தேகம்தான். அதேசமயம், நமக்குக் குழந்தைகளை வளர்க்கத்தெரியவில்லையோ என்று நாம் எண்ணிவிடக்கூடாது. நம்மால் தன்னம்பிக்கை கொண்ட, ஆரோக்கியமான, செயல்திறன் வாய்ந்த, முழுமையாகச் செயல்படக்கூடியவர்களை வளர்க்க இயலும் என்று நாம் எப்போதும் நம்பவேண்டும். ஒருபக்கம் நமக்கு நம்மீது நம்பிக்கை உள்ளது, இன்னொருபக்கம் நமக்கு நம்மீதே சந்தேகமும் உள்ளது, ஒருபக்கம் எல்லாம் தெரிந்த நிலை, ஒருபக்கம் ஒன்றுமே புரியாத நிலை, ஒருபக்கம் குழந்தைகளை நம்மிடமே பிடித்துவைத்திருக்க விரும்புகிறோம், இன்னொருபக்கம் அவர்களைச் சுதந்தரமாக விட்டுவிட விரும்புகிறோம், ஒருபக்கம் சொல்லித்தர நினைக்கிறோம், இன்னொருபக்கம் அவர்கள் கற்க விரும்பவேண்டும் என்று கருதுகிறோம், ஒருபக்கம் ஏற்றுக்கொள்கிறோம், இன்னொருபக்கம் எதிர்க்கிறோம், ஒருபக்கம் நிகழ்காலத்தில் இருக்கிறோம், இன்னொருபக்கம் (நம்முடைய/நம் குழந்தைகளின்) எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப்படுகிறோம்... இந்த முரண்களைச் சமநிலைப்படுத்துவது எப்படி என்று நாம் யோசிக்கவேண்டும், அதுதான் நமது மனநலனையும், நம் குழந்தைகளின் மனநலனையும் காக்கும்.

ஒரு குழந்தையாக, ஒரு பெற்றோராக, ஓர் ஆலோசகராக நான் சந்தித்த அனுபவங்களையே நான் எழுதுகிறேன். எது வேலை செய்தது, எது வேலை செய்யவில்லை என்று விவரிக்கிறேன். அதேசமயம், சம்பந்தப்பட்ட நபர்களின் ரகசியத்தன்மையைக் காப்பதற்காக, நான் அவர்களைப்பற்றி வெளிப்படையாகச் சொல்லாமலிருக்கலாம்.

இந்தத் தலைப்பை நாம் ஒன்றாக அலசுவோம், உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் எனக்கு அனுப்புங்கள். ஒவ்வொரு கட்டுரையிலும், உங்களுடைய ஒரு கேள்விக்காவது பதில் சொல்ல முயற்சி செய்கிறேன். ஆகவே, இந்தப் பயணத்தில் எல்லாரும் ஒன்றாகக் கற்றுக்கொள்வோம், ஒன்றாகக் கண்டறிவோம்.

மௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். மனநலத்துறையில் பணிபுரிவதற்காகத் தனது கார்ப்பரேட் பணியை விட்டவர். பெங்களூரில் உள்ள தி ரீச் க்ளினிக்கில் மௌலிகா பணிபுரிகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு எழுதுங்கள். அதற்கான மின்னஞ்சல் முகவரி: columns@whiteswanfoundation.org. இந்தப் பத்தி பதினைந்து நாளைக்கு ஒருமுறை பிரசுரிக்கப்படும், அப்போது உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org