வெற்றி எது? தோல்வி எது?

எல்லாரும் வெற்றியடைய விரும்புகிறார்கள். யாரும் தோல்வியடைய விரும்புவதில்லை. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், வெற்றி, தோல்வி என்பவை நிகழ்ச்சிகளை வரையறுக்கும் சொற்கள், மனிதர்களை வரையறுப்பவை அல்ல. ஒருவர் ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்கிறார், அல்லது, ஒரு மைல்கல்லை வெற்றிகரமாக எட்டுகிறார், இல்லாவிட்டால், அவர் அந்தச் செயலில் தோல்விகாண்கிறார், அல்லது, அந்த மைல்கல்லை எட்டுவதில் தோல்வியடைகிறார். அதைவைத்து அவர் ஒரு முழுமையான வெற்றியாளர்/ முழுமையான தோல்வியாளர் என்று சொல்ல இயலாது. ஒரு விஷயத்தில் வெற்றிபெற்ற ஒருவர், இன்னொரு விஷயத்தில் தோற்கலாம், ஒரு விஷயத்தில் தோற்ற ஒருவர், இன்னொரு விஷயத்தில் வெல்லலாம். ஒரு மிகப்பெரிய வெற்றியாளர் (அப்படியொரு சொல் இருந்தால்) வங்கியில் நிறைய பணம் வைத்திருக்கலாம், ஆனால், ஒரு பெற்றோராக அல்லது கணவராக/மனைவியாக அவர் முழுத்தோல்வி அடைந்திருக்கலாம். அதேபோல், தான் நடத்திய தொழிலில் முழுத்தோல்வி அடைந்த ஒருவர், மிக நல்ல பெற்றோராக அல்லது அருமையான நண்பராக இருக்கலாம்.

ஆக, வெற்றி, தோல்வி என்பவை ஒரு செயல் எப்படி நடந்தது என்பதைதான் குறிக்கின்றன, தனிநபர்களை வரையறுப்பதில்லை. ஆனால், இந்த வித்தியாசம் பலருக்குப் புரிவதில்லை.

'நான் வெற்றிபெற்றேன், என் பிள்ளையும் வெற்றிபெறவேண்டும்' என்கிறார்கள். இப்படி எண்ணுகிறவர்களால் ஒரு சிறிய தோல்வியைக்கூடத் தாங்க இயலாது. இன்னொருபக்கம், சில பெற்றோர் தங்களைத் தோல்வியடைந்தவர்களாகக் கருதுகிறார்கள், 'என்பிள்ளை இப்படி ஆகிவிடக்கூடாது' என்று எண்ணுகிறார்கள். இவர்களுடைய பிள்ளை ஒரு தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் போதும், தோற்றுப்போனவன் என்று அதற்கு முத்திரை குத்திவிடுகிறார்கள். வாழ்நாள்முழுக்க அவர்கள் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கப்போகிறார்கள் என்று கருதுகிறார்கள். உண்மையில், அந்தக் குழந்தை ஒரு தேர்வில்தான் தோல்வியடைந்திருக்கும், இன்னும் பல வாழ்க்கை அம்சங்களில் அது வெற்றிபெற்றிருக்கும். உதாரணமாக, அந்தக் குழந்தை விளையாட்டில் சிறந்துவிளங்கலாம், அல்லது, பிறரிடம் பச்சாதாபத்துடன் பேசலாம், நல்ல ஓவியராக இருக்கலாம், அருமையாகப் பாடலாம், மேடையேறிப் பேசலாம், பிரச்னைகளைப் புதுச்சிந்தனையோடு தீர்த்துவைக்கலாம், நேர்மையாக இருக்கலாம், பிறருக்கு உதவலாம், பிறருடன் அன்பாகப் பழகலாம். ஆனால், இவையெல்லாம் பெற்றோருக்குத் தெரிவதில்லை, அந்தக் குழந்தை ஒரு தேர்வில் தோல்வியடைந்தவுடன், 'தோற்றுப்போனவன்' என்று அதற்கு முத்திரைகுத்துகிறார்கள்.

அதேபோல, ஒருவருக்கு வேலை போய்விட்டது என்றால், 'நான் தோற்றுவிட்டேன்' என்று அவரே நினைத்துவிடுகிறார். பலர் அந்த நினைவிலேயே மூழ்கி விழுந்துவிடுகிறார்கள், மீண்டெழுந்து இன்னொரு வேலையைத் தேட அவர்களால் இயலுவதில்லை. அந்த ஒரு வேலையைத் தங்களால் செய்ய இயலவில்லை என்பதால், அது தங்கள்மீது விதிக்கப்பட்ட தீர்ப்பு என்று இவர்கள் எண்ணிவிடுகிறார்கள், தங்கள் வாழ்க்கையையே தோல்வியடைந்ததாகக் கருதுகிறார்கள், மீண்டுவந்து வெல்லுவதில்லை, தங்களை வேறுவிதமாக எண்ணுவதில்லை.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை அவர்களுடைய எல்லாப் பலங்கள், பலவீனங்களுடனும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு, அவர்கள் வெற்றி, தோல்வி ஆகியவற்றை நிகழ்வுகளை வரையறுக்கும் சொற்களாகப் புரிந்துகொள்ளவேண்டும், மக்களை வரையறுக்கும் சொற்களாக அல்ல. இதற்கு, அவர்கள் தங்களுடைய வாழ்க்கையையே இன்னொருமுறை பார்க்கவேண்டும், தாங்கள் சில விஷயங்களில் ஜெயித்திருக்கிறோம், சிலவற்றில் தோற்றிருக்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும். தாங்கள் எதிலெல்லாம் தோற்றோம் என்று அவர்கள் காணவேண்டும், அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும், அந்தத் தோல்விகளைப்பற்றிப் பேசவேண்டும், சங்கடப்படக்கூடாது. பழைய தோல்விகளை ஏற்றுக்கொண்டு, அந்த அனுபவத்திலிருந்து தாங்கள் என்ன கற்றுக்கொண்டோம் என்பதைச் சிந்திக்கவேண்டும். தாங்கள் சில அம்சங்களில் தோல்வியடைந்துள்ளோம் என்பதைக் குழந்தைகளிடம் சொல்லத் தயங்கக்கூடாது. தங்களுடைய தோல்விகளைப்பற்றிக் குழந்தைகளிடம் பேசவேண்டும். சாப்பாட்டுநேரத்தில் மற்ற விஷயங்களைப் பேசுவதுபோலவே, தங்களுடைய தோல்விகளையும், அதைத் தாங்கள் எப்படிச் சமாளித்தோம் என்பதையும் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைகள் தோல்வியைக்கண்டு அஞ்சமாட்டார்கள், அதுவும் வாழ்க்கையில் ஒரு பகுதிதான், கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புதான் என்று நினைப்பார்கள், தங்களைத் தோல்வியடைந்தவர்களாக எண்ணிக்கொள்ளமாட்டார்கள்.

தோல்வியில்லாத வாழ்க்கையே கிடையாது. ஒருவருக்குத் தோல்வி வந்தால், அவர் அதனைப் பயன்படுத்தித் தன்னைத்தானே இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும், அந்தச் சூழலிலிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும், இதற்கான வாழ்க்கைத்திறன்களைப் பெற்றோர் குழந்தைகளுக்குச் சொல்லித்தருவது அவசியம். இதுதான் பெற்றோர் குழந்தைகளுக்குத் தரக்கூடிய விலைமதிப்புமிக்க பரிசு, வங்கியில் நிறையப் பணம் சேர்த்துவைப்பதைவிட, இந்தப் பரிசைக் குழந்தைகளுக்குத் தரலாம். இதன்மூலம், அவர்கள் தோல்வியைக்கண்டு துவளாத குணத்தைப்பெறுவார்கள், தடைகள் வந்தால் எதிர்த்துநிற்பார்கள். இந்த வாழ்க்கைப்பாடத்தை அவர்கள் எவ்வளவு விரைவில் கற்றுக்கொள்கிறார்களோ அவ்வளவு நல்லது.

ஆனால், குழந்தைகள் தாங்கள் காண்கிற, அனுபவிக்கிற விஷயங்களிலிருந்துதான் பாடம் கற்கிறார்கள். பெற்றோர் சொல்கிற/கத்துகிற விஷயங்களிலிருந்தல்ல. ஆகவே, பெற்றோர் வெற்றி, தோல்வியை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைக் குழந்தைகள் கவனிக்கும், அதன்படி தங்களுடைய வெற்றி, தோல்வியைக் கையாளக் கற்றுக்கொள்ளும். பெற்றோர் தங்கள் தோல்வியைத் தைரியமாக எதிர்கொள்ளவேண்டும், இதைக் குழந்தைகள் பார்க்கவேண்டும், அவர்களையே லட்சியபிம்பமாக எண்ணி, அதனைப் பின்பற்றவேண்டும். அதேபோல், பெற்றோர் தங்களுடைய தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும், அதைக் குழந்தைகள் பார்க்கவேண்டும். பெற்றோர் விழுவதையும், துள்ளி எழுவதையும் குழந்தைகள் பார்க்கவேண்டும். அப்படித் துள்ளியெழும்போது, அவர்கள் புதிய உயரங்களுக்குச் செல்லலாம், அல்லது, மீண்டும் கீழே விழலாம். பெற்றோர் வெற்றியடைவதையும் குழந்தைகள் பார்க்கவேண்டும், அவர்கள் வெற்றியை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். பெற்றோர் வெற்றியை அனுபவிப்பதைக் குழந்தைகள் பார்க்கவேண்டும்.

சுருக்கமாகச்சொன்னால், பெற்றோர் வெற்றி, தோல்வியை அனுபவிப்பதைக் குழந்தைகள் பார்க்கவேண்டும், அதைவிட முக்கியமாக, வெற்றி, தோல்வி போன்றவை வாழ்க்கையில் வரும் தாற்காலிக நிகழ்வுகள் என்று அவர்கள் உணரவேண்டும், அந்தச் சொற்களைக்கொண்டு தங்கள் வாழ்க்கைக்கே முத்திரைகுத்த இயலாது என்று அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். ஜான் வூடன் இதனை அழகாக எழுதினார், "வெற்றி என்பது நிறைவான நிலை அல்ல, தோல்வி என்பது மோசமான நிலை அல்ல. எந்த நிலையிலும் தைரியமே முக்கியம்."

தடைகள் வந்தால் தைரியத்தோடு எதிர்ப்பதையும், வெற்றி வந்தால் பணிவோடிருப்பதையும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தரவேண்டும். அப்போதுதான் குழந்தைகளும் அதேபோல் வாழத்தொடங்குவார்கள். இதன்மூலம், அவர்கள் எதையும் தாக்குப்பிடிக்கிறவர்களாக வளர்வார்கள், வாழ்க்கையில் எல்லாச் சவால்கள், மகிழ்ச்சிகள், வெற்றிகள், தோல்விகளையும் சந்திக்கத் தயாராக இருப்பார்கள்.

எதிர்மறையோ, நேர்விதமோ, பெற்றோர் தரும் தாக்கம் குழந்தைகள் மனத்தில் ஆழமாகப் பதியும், அவர்கள் வாழ்க்கையைப் பாதிக்கும். ஆகவே, நேர்விதத்தை அதிகரித்து, எதிர்மறையைக் குறைக்கவேண்டும். அதுவே அவர்களுக்கு நல்லது!

மௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். கார்ப்பரேட் பணியை விட்டுவிட்டு மன வளத்துறையில் பணியாற்றிவருகிறார். மௌலிகா வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் பணியாற்றிவருகிறார். இது ஒரு சர்வதேச ஊழியர் நல நிறுவனம் ஆகும். இவர் பெங்களூரில் உள்ள ரீச் க்ளினிக்கில் மருத்துவசேவை வழங்கிவருகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்: columns@whiteswanfoundation.org.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org