மனநலப் பிரச்னை கொண்டோருக்கான சமூகத் திறன்கள் பயிற்சி

சமூகத் திறன்கள் பயிற்சி என்றால் என்ன, மீட்புக்கு அது ஏன் முக்கியமாகிறது?
மனநலப் பிரச்னை கொண்டோருக்கான சமூகத் திறன்கள் பயிற்சி

நாம் எல்லாரும் சமூகப்பிராணிகள்தான், ஒருவரோடொருவர் உரையாடுகிறோம், கற்றுக்கொள்கிறோம், ஒருவரையொருவர் சார்ந்து வாழ்கிறோம். ஒருவர் பல்வேறு சமூகச் சூழல்களைக் கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் அவற்றுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளவும் உதவும் பழக்கவழக்க அம்சங்களைச் சமூகத் திறன்கள் என்கிறோம். நியூ யார்க்கைச் சேர்ந்த அல்பெர்ட் எல்லிஸ் கல்வி நிறுவனம் சமூகத் திறன்களை இவ்வாறு வரையறுக்கிறது: பல்வேறு சமூகச்சூழல்களில் உரையாடல்களை எளிதாக்கக்கூடிய, பிறருடைய உணர்வுக்குறிப்புகளை அடையாளம் கண்டு, பதில் தரக்கூடிய, பிறருடன் உரையாடக்கூடிய திறன் அல்லது தகுதி.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சமூகத் திறன்கள் என்பவை கற்றுக்கொள்ளக்கூடிய தகுதிகள், பிறருடன் பழகுவதற்கு இவை தேவை, ஒரு சமூகத்தில் அல்லது ஒட்டுமொத்தச் சமுதாயத்தில் திருப்திதரும் உறவுகளை உருவாக்கவும் பராமரிக்கவும் இவை தேவைப்படுகின்றன.

மனநலப் பிரச்னை கொண்டோருக்குச் சமூகத் திறன்கள் பயிற்சியின் முக்கியத்துவம்

மனநலப் பிரச்னை கொண்டோருக்குச் சில சமூகத் திறன்களில் பற்றாக்குறைகள் இருக்கலாம். உதாரணமாக, அவர்களால் தங்களுடைய எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை உரியமுறையில் வெளிப்படுத்த இயலாமலிருக்கலாம். மனநலப் பிரச்னை கொண்டவர்களில் சிலருக்கு(எல்லாருக்கும் அல்ல)ச் சமூகத் திறன்களில் இத்தகைய பற்றாக்குறைகள் அந்தப் பிரச்னையின் ஒரு பகுதியாகவே ஏற்படலாம், அல்லது, ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னை வந்துவிட்டதால் அவர்களால் புதிய சமூகத் திறன்களைச் சரியாகக் கற்றுக்கொள்ள இயலாமல் போயிருக்கலாம், அல்லது, தாங்கள் கற்றுக்கொண்ட திறன்களைப் பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். சில நேரங்களில், மனநலப் பிரச்னைகளின் அறிகுறிகளான பதற்றம் போன்றவை ஒரு திறனின் பயன்பாட்டில் குறுக்கிடக்கூடும்.

இதுபற்றி நிகழ்த்தப்பட்டுள்ள பல ஆராய்ச்சிகளில், மோசமான கவனிப்புத்திறன், ஒழுங்கற்ற பேச்சு, கற்றல் மற்றும் விவரத்தைத் தக்கவைத்துக்கொள்ளுதலில் சிரமங்கள் போன்றவற்றுக்கும் மனநலப் பிரச்னை கொண்டோரின் சமூகச் செயல்பாடுகளுக்கும் இடையிலுள்ள உறவு தெரியவந்திருக்கிறது. NIMHANS உளவியல் இணைப் பேராசிரியரான டாக்டர் பூர்ணிமா போலா சமூகத் திறன்கள் பயிற்சியின் பங்களிப்பை வலியுறுத்துகிறார், "மீட்சிச் செயல்முறையில் சமூகத் திறன்கள் முக்கியமானவை. சமூகத் திறன் பற்றாக்குறை கொண்டவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான, கற்றுக்கொள்ளத் தேவையான, சமூகத்தில் குறைந்தபட்ச ஆதரவுடன் வேலைசெய்யத் தேவையான குறிப்பிட்ட திறன்களைக் கற்றுக்கொள்வதற்கு இந்தப் பயிற்சி உதவலாம். மனநலப் பிரச்னை கொண்டோருடைய சமூகத் திறன் பற்றாக்குறைகளைக் கவனிப்பது சிகிச்சைச் செயல்முறையின் ஓர் அவசியமான பகுதியாகும்.

மனநலப் பிரச்னை கொண்டோர் ஒரு செயலுள்ள வாழ்க்கையை வாழ சமூகத் திறன் பயிற்சி உதவலாம்.

சமூகத் திறன்கள் என்பவை:

 • வாய்மொழிசார்ந்தவை - உதாரணமாக, பேச்சின் வடிவம், கட்டமைப்பு, உள்ளடக்கம், பின்னணி மற்றும் அளவு போன்றவை

 • வாய்மொழி சாராதவை - கண்ணைப்பார்த்துப் பேசுதல், முகக் குறிப்புகள், நிலை மற்றும் தனிநபர் தொலைவு போன்றவை

 • மொழிகடந்த விஷயங்கள் - ஒலி அளவு, வேகம், தொனி மற்றும் சுருதி போன்றவை

 • சமூகப் பார்வை - சமூக விவரங்களைச் செயல்முறைப்படுத்தி உரிய தீர்மானங்களை எடுத்தல், எதிர்வினை நிகழ்த்துதல்

 • உறுதிப்பாடு

 • உரையாடல் திறன்கள் - உதாரணமாக, ஓர் உரையாடலைத் தொடங்குதல், தக்கவைத்துக்கொள்ளுதல் போன்றவை  

 • சூழல்களுக்குப் பொருந்துகிற, சமூகத்தால் எதிர்பார்க்கப்படுகிற பச்சாத்தாபம், அன்பு, சோகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துதல்

 • ஒருவர் தன்னுடைய குறைபாட்டைக் கையாள்வது, ஒரு நிலையில் வைத்திருப்பதுடன் தொடர்புடைய பிற திறன்கள்

ஒரு தனிநபர் அல்லது குடும்பத்தின் தேவைகளைப்பொறுத்து, அவருக்குப் பொதுவான சமூகத் திறன்களில், (உதாரணமாக, ஒருவரை வரவேற்றல், ஒரு விஷயத்தைக் கோருதல் போன்றவை) மற்றும் சிறப்புச் சமூகத் திறன்களில் (இவை பணி தொடர்பானவை. உதாரணமாக, உறுதிப்பாடு, பேரம் பேசும் திறன், தன்னைக் கவனித்துக்கொள்ளுதல், நிறுவன அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் உரையாடும் திறன்கள் போன்றவை) பயிற்சியளிக்கப்படுகிறது. இத்துடன், பயிற்சியானது பல படிநிலைகளில் வழங்கப்படுகிறது: எளிய திறன்களில் தொடங்கிச் சிக்கலான திறன்கள்வரை.

தனிநபருக்கான பயிற்சிகள் மற்றும் குழுப் பயிற்சிகள்

சமூகத் திறன்களுக்கான பயிற்சிகளைத் தனிநபர்களுக்கும் வழங்கலாம், ஒரு குழு அமைப்பிலும் வழங்கலாம். இந்தியாவில், பயிற்சி தேவைப்படுகிறவர்களுடைய கலாசாரங்கள் மற்றும் மொழிகள் மாறி அமையக்கூடும் என்பதால், தனிநபர் பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. அதேசமயம், ஒரு புனர்வாழ்வுச் சூழலில் உள்ள குழுவினர் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான மொழி அல்லது திறன் பற்றாக்குறை நிலையைக் கொண்டிருக்கும்போது, குழுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது, இதனை ஒருவர் வழிநடத்துவார். இந்த ஏற்பாட்டாளர் ஒரு வழிகாட்டியாகச் செயல்படுவார், குழுவிலுள்ள எல்லா உறுப்பினர்களும் சம அளவு பங்களிப்பை வழங்கவேண்டும் என்று ஊக்குவிப்பார்.

குடும்பத்தின் பங்கு

இந்தியப் பின்னணியில், குடும்பத்தினர் ஒரே இடத்தில் ஒன்றுசேர்வதென்பது சமூகத்துடன் உரையாடுவதற்கான ஒரு முக்கியமான அம்சமாகும். சமூகத் திறன் பற்றாக்குறைகளை முதலில் கண்டறிவது குடும்பத்தினர்தான். ஆகவே, அவர்கள் இதில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறார்கள். பயிற்சிச் செயல்முறையின்போது, குடும்ப உறுப்பினர்கள் அல்லது, பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் நல்ல சிகிச்சைத் தோழர்களாகத் திகழலாம். ஒருவர் தனியே கற்றுக்கொள்கிற திறன்களைச் செயல்படுத்திப்பார்க்க ஒரு பாதுகாப்பான சூழல் வேண்டுமல்லவா? அதனைக் குடும்பத்தினர் வழங்கலாம்.

சமூகத் திறன் பயிற்சிகளின் நிஜவாழ்க்கைப் பயன்பாடு

சமூகத் திறன்கள் பயிற்சி நபருக்கு நபர் மாறுபடுகிறது. சமூகத் திறன் பயிற்சியின் கட்டமைப்பானது ஒருவருடைய இந்த அம்சங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது:

 • செயல்படும் நிலை

 • திறன் பற்றாக்குறைகள்

 • தேவைகள்

 • பிரச்னை வருவதற்குமுன் அவரது ஆளுமை

ஆகவே, சமூகத் திறன்கள் பயிற்சியின் நோக்கம், ஒருவருடைய வாழ்க்கைச் சூழல், கலாசாரப் பின்னணி, பாலினம் மற்றும் அடிப்படை ஆளுமையைப் புரிந்துகொண்டு அதன்படி செயலாற்றுவது. இவ்வாறு செய்யும்போது, அவர் சவுகர்யமாக இருக்கிறாரா என்பதைப் பார்ப்பது முக்கியமாகும்.

அடையாளம் காணப்பட்ட திறனின்படி, இது எளிய செயல்களாகப் பிரிக்கப்படுகிறது. இந்தப் பணிகள் தனித்தனியே கற்றுத்தரப்படுகின்றன, ஒத்திகை பார்க்கப்படுகின்றன. இதற்கு ஒருவரைப்போல் மாதிரியெடுத்தல், ஒருவரைப்போல் நடித்தல், வீடியோக்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. அதன்பிறகு, அதுபற்றிய கருத்துகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு கற்றுக்கொள்ளப்பட்ட திறன்கள் வெவ்வேறு சூழல்களில், அமைப்புகளில் வெவ்வேறுவிதமாக மொழிபெயர்க்கப்படலாம். பயிற்சிக்கும் நிஜவாழ்க்கைப் பயன்பாட்டுக்கும் நடுவிலுள்ள இடைவெளியைக் குறைப்பதற்காக, தனிநபர்கள் அந்தத் திறன்களை உரிய சூழல்களில் பயன்படுத்திப்பார்ப்பதற்கான வாய்ப்புகள், ஊக்கப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல் தேவை.

NIMHANS மருத்துவ உளவியல் இணைப் பேராசிரியர் டாக்டர் பூர்ணிமா போலா வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org