நலன்

உங்கள்மீது கருணைகாட்டுங்கள்

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

நீங்கள் பிறர்மீது கருணை காட்டுகிறீர்களா?—உங்கள்மீது? இன்னும் சரியாகக் கேட்பதென்றால், நீங்கள் அடிக்கடி உங்களையே விமர்சித்துக்கொள்வதுண்டா? உங்களை நீங்களே திட்டிக்கொள்வதுண்டா?  இந்தக் கேள்விகளின் அடிப்படையில், சுய பரிவு என்ற விஷயத்தைப்பற்றிப் பேசுவோம். நேர்வித உளவியலில் இப்போது ஆர்வத்துடன் பேசப்படும் தலைப்பு இது. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஒருவர் தன்மீது அக்கறைகாட்டுவது, தன்னையே கவனித்துக்கொள்வது, தன்மேல் கருணையைப்பொழிவது போன்றவற்றைப்பற்றிப் பல அறிவியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் தெரியவரும் ஒரு விஷயம், ஒருவர் தன்மீது சுய பரிவோடு இருக்கிறார் என்றால், அவருக்கு வாழ்க்கையில் திருப்தி அதிகமாகக் கிடைக்கிறது, நேர்விதமாகச் சிந்திக்கிறார், பிறருடன் ஒத்துப்போகிறார், புத்திசாலியாகத் திகழ்கிறார். இதனால் அவருக்குப் பதற்றம், மன அழுத்தம் வரும் வாய்ப்பு குறைகிறது—இத்துடன், தினசரி வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத அழுத்தச் சூழல்கள் வரும்போது, இது ஒரு முக்கியமான  காப்பாகத் திகழ்கிறது.

சுய பரிவைப்பொறுத்தவரை, உலகின் முன்னணி ஆய்வாளர், ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர் க்ரிஸ்டினா நெஃப். 1990களில் அவர் ஒரு பட்டப்படிப்பு மாணவர், ஒரு சர்ச்சைக்குரிய விவாகரத்து வழக்கை அவர் சந்திக்கவேண்டியிருந்தது, அப்போது அவர் சில “உள்நோக்குத் தியான” நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அந்த நேரத்தில்தான் அவருக்கு இந்தத் தலைப்பில் முதன்முறையாக ஆர்வம் பிறந்தது. “அப்போது என் வாழ்க்கையில் அழுத்தம் அதிகமாக இருந்தது,” என்று அவர் ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்தார். “அத்தனை உணர்வுக் கொந்தளிப்பையும் கடப்பதற்கு எனக்குச் சுய பரிவு மிகவும் தேவைப்பட்டது. நான் ஒரு புத்தமதக் குழுவில் இருந்தேன். அவர்கள் மனமுழுமை, பரிவைப்பற்றிப் பேசினார்கள். அவர்கள் சொன்ன சுய பரிவு என்கிற விஷயம் எனக்கு உடனே பிடித்துவிட்டது. அட, எல்லாரையும்போல எனக்கும் பரிவுக்கு உரிமையுண்டுதானே என்று நான் நினைத்தேன்” பல வருடங்கள் கழித்து, இன்னோர் அதிர்ச்சி நெஃபின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. காரணம், அவருடைய மகனுக்கு ஆட்டிஸம் இருப்பது கண்டறியப்பட்டது. “மறுபடியும் சுய பரிவுதான் என்னைக் காப்பாற்றியது,” என்றார் அவர், “இதனால், என்னால் என் சோகத்தைக் கையாளமுடிந்தது… நான் என்மீதே மிகுந்த பரிவு காட்டத்தொடங்கினேன். அதுதான் என்னைக் காப்பாற்றியது, அது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.”   

2003ம் ஆண்டுமுதல், நெஃப்பும் அவருடைய சக ஊழியர்களும் சேர்ந்து சுய பரிவு என்கிற ஆளுமைக்குணத்தை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கவும் பல ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்கள். அவரைப்பொறுத்தவரை, சுய பரிவில் மூன்று தனித்துவமான, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள அம்சங்கள் உண்டு: 1) சுய கருணை; 2) பொதுவான மனிதாபமான உணர்வு; மற்றும் 3) மனமுழுமை அல்லது வலிதரும் சிந்தனைகள், உணர்வுகளை மிகைப்படுத்தாமல், நாடகத்தனமாக்காமல், சுய இரக்கத்தைப் பொழியாமல் சந்திக்க இயலுதல்.

சுய கருணை என்றால், ஒருவர் தன்னைத்தானே புரிந்துகொள்ளுதல், தன்மீதே அக்கறை செலுத்துதல் ஆகும்— பொதுவாகப் பலர் எதற்கெடுத்தாலும் தங்களையே குற்றம் சொல்லிக்கொள்வார்கள், தங்களைத்தாங்களே மன்னிக்கமாட்டார்கள், கடினமாக நடந்துகொள்வார்கள், சுய கருணை அதற்கெல்லாம் எதிரான ஓர் அம்சம். இதன் பலன்? நிறைய மன அமைதி! பகிர்ந்துகொள்ளப்பட்ட மனிதாபிமான உணர்வு (“வாழ்க்கையில் எல்லாரும் தவறுசெய்கிறார்கள்,” “நாம் ஏன் இங்கே வந்திருக்கிறோம்? பாடங்களைக் கற்றுக்கொண்டு அறிவைப் பெறுவதற்காகதான்.”) இருந்தால், வெறும் சுய ஏற்றுக்கொள்ளலைத் தாண்டி, பிழைகளும் கச்சிதமின்மைகளும் மனித வாழ்வின் அடிப்படை அம்சங்கள் என்று உணரலாம். உதாரணமாக, ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் செயல்கள் அனைத்தும், பெற்றோர் தன்னை வளர்த்த விதம், கலாசாரம், மரபியல், சுற்றுச்சூழல் போன்ற பல வெளி அம்சங்களால் பாதிக்கப்படுகின்றன என்பதை உணர்கிறார் என்றால், அதுவே இந்த மனநிலையைக்குறிக்கிறது. இந்த விழிப்புணர்வால், அவர் பிறருடன் இணைந்திருக்கும் உணர்வு வலிப்படுகிறது, எதிலும் பிடிப்பற்று வாழும் நிலை மாறுகிறது.

நிறைவாக, தன்னை வருத்தப்படுத்தும் சிந்தனைகள் அல்லது அனுபவங்களை ஒருவர் சமநிலையான பார்வையுடன் ஏற்றுக்கொள்ள இயலுகிறது என்றால், உணர்வு அழுத்தம், நிலைத்த சிந்தனை ஆகியவற்றை அது சரிசெய்துவிடுகிறது. இதற்கு அவர் தனது எதிர்மறை எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படையாகவும் தெளிவாகவும் காணவேண்டும், அப்போதுதான் அவர்கள் மனமுழுமைகொண்ட விழிப்புணர்வில் இருப்பார்கள்— அதேசமயம், அவர்கள் அவற்றுடன் தங்களை அதிகமாக அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது. இந்த மூன்று அம்சங்களும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுகின்றன, எதார்த்தத்தை அப்படியே அடையாளம் காணச்செய்கின்றன — இதனால் பல வாழ்க்கைச் சூழல்களில் நாம் சிறப்பாக எதிர்வினையாற்ற இயலுகிறது.

சுய பரிவு என்பதும், சுய இரக்கம் என்பதும் ஒன்றல்ல என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்: சுய இரக்கம் என்பது தன்முனைப்புடைய ஒரு நடத்தையாகும், அத்துடன் தனிமை மற்றும் சோக உணர்வுகளும் பின்னிக்கொள்கின்றன. ஒருவருக்குச் சுய இரக்கம் ஏற்படுகிறது என்றால், தன்னைச் சுற்றியிருக்கிற மற்றவர்களுக்கும் இதேபோன்ற—அல்லது இதைவிட மோசமான—அழுத்தங்கள், பிரச்னைகள், சவால்கள் இருக்கக்கூடும் என்று அவர் நம்ப மறுக்கிறார். பிறருடன் தனக்கிருக்கும் இணைப்பை அவர் புறக்கணிக்கிறார். அதேபோல், சுய இரக்கமும் சுய நுகர்தலும் ஒன்றல்ல. பலர் தங்கள்மீது பரிவுகாட்டத் தயங்குகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அதனால் தவறான அல்லது ஆபத்தான பழக்கவழக்கங்கள் வந்துவிடும் என்பதுதான் (“நான் இன்றைக்கு மிகவும் அழுத்தமாக உணர்கிறேன், அதனால், நான் வீட்டிலேயே இருந்து, நாள்முழுக்கத் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, நிறைய ஐஸ் க்ரீம் சாப்பிடப்போகிறேன்.”). உண்மையில் அது சுய பரிவு அல்ல, —வெறும் சுய நுகர்தல்தான்— தொலைநோக்கில் பார்க்கும்போது இது ஒரு பலவீனம்தான், பலமல்ல. உதாரணமாக, ஒருவர் வருத்தமாக இருக்கிறார், அவரிடம் சென்று 'நீ குப்பை உணவைச் சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும்' என்று சொல்வது பரிவான பதில் அல்ல. ஆகவே, சுய பரிவால் உங்களுக்கு நீங்களே சிறந்த தோழனாவீர்கள்.  நீங்கள் மோசமான மனோநிலையில் இருந்தால், 'வா, நடந்துட்டு வரலாம், அல்லது கொஞ்சநேரம் உடற்பயிற்சி செய்யலாம், அல்லது, ஏதாவது வித்தியாசமா, ஆர்வமூட்டக்கூடியதா செய்யலாம், எல்லாம் சரியாகிடும்' என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வீர்கள்.

உண்ணுதல் குறைபாட்டுக்கான முக்கியக் காரணிகளில் ஒன்று, குறைந்த சுய மதிப்பு. UKல் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர் மிகாய்ல் மன்ட்ஜியோஸ், டாக்டர் ஜானெட் வில்சன் இருவரும் 'குண்டானவர்களால் தங்களைத் தாங்களே நன்கு அமைதிப்படுத்திக்கொள்ள இயலுவதில்லை' என்கிறார்கள்.— அதனால்தான் அவர்கள் வெளிப்பொருளான உணவைப் பயன்படுத்தித் தங்களை அமைதிப்படுத்த முனைகிறார்கள். ஆனால், குண்டாக இருக்கும் ஒருவரைச் சமூகம் களங்கமாகவே பார்க்கும், தனித்துவைக்கும், அவமானப்படுத்தும். ஆகவே, நிறைய சாப்பிடுவதன்மூலம்  அவர்கள் தங்களுடைய உணர்வு அழுத்தத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள், குறைத்துக்கொள்வதில்லை. இதனால், அவர்களுக்குத் தீவிர எதிர்மறை உணர்வுகள் வருகின்றன, அவற்றிலிருந்து விடுபடுவதற்காக மீண்டும் சாப்பிடுகிறார்கள், இந்தச் சுழல் தொடர்கிறது.

இந்தக் கருத்து அனுபவப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட உண்ணுதல் போக்குப் பிரச்னையைக் கொண்ட (ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்க்க முனைதல்) கல்லூரி மாணவிகளிடையே லூசியானா மாநிலப் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர் க்ளெய்ர் ஆடம்ஸ் ஒரு பரிசோதனையை நடத்தினார். இவர்களில் சில மாணவிகளைச் சுய பரிவோடு சிந்திக்கச்சொன்னார். அப்போது, அவர்களிடம் அழுத்தம் குறைந்து காணப்பட்டது, அவர்கள் உண்ணும் அளவும் குறைந்திருந்தது. இதுபற்றி ஆய்வாளர்கள் கூறியது, “பொதுவாக, ஒருவர் அதீதமாகச் சாப்பிடும்நேரத்தில் தன்மீதே பரிவு காட்டுகிறார் என்றால், அவரால் தன்னுடைய உண்ணும் பழக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலும் என்று பொருள். காரணம், அவர் தன்னைப்பற்றிய எதிர்மறை உணர்வுகளைச் சமாளிப்பதற்காக நிறைய சாப்பிடுவதில்லை, குறிப்பாக, கட்டுப்படுத்தப்பட்ட உண்ணுதல் பிரச்னையைக் கொண்டோர்மத்தியில் இதனைக் காணலாம்.”

சுய பரிவானது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதனை நிரூபிக்கும் பல சான்றுகள் கிடைத்துள்ளன. கனடாவில் உள்ள பிஷப்ஸ் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர் ஃபுஷியா சிரோய்ஸ் நடத்திய ஆய்வொன்றில் சுய பரிவுக்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழக்கங்களுக்கும் இடையிலுள்ள நேர்விதமான இணைப்பு கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, அளவாகச் சாப்பிடுதல், குப்பை உணவுகளைத் தவிர்த்தல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், போதுமான அளவு தூங்குதல், சரியான அழுத்த மேலாண்மை போன்றவை. இதேபோல், ஆஸ்திரேலியாவிலும் ஓர் ஆய்வு நடைபெற்றது, அதில் டாக்டர் வெண்டி ஃபிலிப்ஸ், டாக்டர் சூசன் ஃபெர்குஸன் இருவரும் 65 அல்லது அதற்குமேற்பட்ட வயதைக்கொண்ட ஆண்கள், பெண்களிடையே சுய பரிவுக்கும் நேர்வித உணர்வுகளுக்கும் இடையிலுள்ள தொடர்பைக் கண்டறிந்தார்கள். உதாரணமாக, மகிழ்ச்சி, வலுவான சுய அடையாளவுணர்வு, வாழ்க்கை அர்த்தமுள்ளது என்ற உணர்வு போன்றவை.— அத்துடன், இவர்களிடையே கோபம் மற்றும் வருத்தம் போன்ற உணர்வுகள் குறைவாகக் காணப்பட்டன.

கச்சிதவுணர்வை வெல்லுதல்

சுய பரிவுக்கான மிகப்பெரிய தடைகளில் ஒன்று, கச்சிதவுணர்வு. எந்த மனிதனாலும் கச்சிதமாக இருக்கவேமுடியாது. ஒட்டுமொத்தக் கச்சிதம்மட்டுமல்ல, நாம் செய்கிற ஒவ்வொரு வேலையிலும் கச்சிதத்தை அடைவது சாத்தியமில்லை. நாம் அனைவரும் நம்முடைய திறமைகளை, தகுதிகளை வளர்த்துக்கொள்ளப் போராடவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால், ஆப்ரஹாம் மாஸ்லோவ் சொன்ன பெரும் சாதனையாளர்கள், தன்னளவில் திருப்தியடைந்தவர்கள் பட்டியலை எடுத்துப்பார்த்தால், அவர்களில் பலர் கச்சிதத்துக்கு அருகே செல்லவில்லை. உண்மையில், மாஸ்லோவ் புத்திசாலித்தனமாக, 'கச்சிதத்தைத் தேடித் திரியாதீர்கள்' என்றார். நேர்வித உளவியல்பற்றிச் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில், எதையும் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்ற உணர்வுள்ளவர்கள் மற்றவர்களைவிடக் குறைவாகவே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இப்போது, ஒரு சிறிய வேலை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடிக்கடி, அல்லது எப்போதும் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்று நினைக்கிற வேலை எது என்று சிந்தியுங்கள், அதாவது, அந்த வேலையைச் சிறப்பாகச் செய்யாவிட்டால், உங்களை நீங்களே சிரமப்படுத்திக்கொள்கிற, உங்கள்மீது நீங்களே வருத்தம்கொள்கிற ஒரு வேலை உண்டா? இது உங்கள் அலுவலக வேலையாக இருக்கலாம், ஓய்வின்போது செய்கிற வேலையாக இருக்கலாம், குடும்பம் அல்லது பிற சமூக உறவுசார்ந்த விஷயமாக இருக்கலாம்... முக்கியமான விஷயம், அந்த வேலையைச் செய்யும்போது உங்களிடமே நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள், ஆகவே, நீங்கள் ஓய்வெடுப்பதில்லை, மனத்தைத் தளரவிடுவதில்லை, பிழைகளை மன்னிப்பதில்லை. இன்னும் குறிப்பாக, சென்ற மாதத்தில் எப்போதாவது, இந்தக் கச்சிதவுணர்வு உங்களுடைய மனோநிலையை, பிறருடன் உங்கள் பேச்சுவார்த்தைகளைப் பாதித்ததா? அது என்ன வேலை? அது என்ன சூழல்? அப்போது உங்களுடன் யாராவது இருந்தார்களா? ஆம் எனில், யார் அது? இதைப்பற்றி இப்போது யோசிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கச்சிதவுணர்வைக் கொஞ்சம் மறந்துவிட்டு, உங்களை நீங்களே இன்னும் பரிவோடு நடத்தியிருக்கலாம் என்று எண்ணுகிறீர்களா?

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் கூடுதல் இணை உளவியல் பேராசிரியர். உரிமம்பெற்ற மருத்துவ உளவியலாளரான இவர், தனிச்சேவை புரிந்துவருகிறார். உளவியல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து நேர்வித உளவியல்: மகிழ்ச்சி, மலர்ச்சியின் அறிவியல் என்ற நூலை எழுதியுள்ளார். இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதாபிமான உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றுகிறார். நீங்கள் அவரைத் தொடர்புகொள்ள இந்த மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org