நலன்

தன்னை வெளிப்படுத்தல்: முகமூடியை அகற்றுதல்

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

உங்களுடைய உணர்வுகளை, அனுபவங்களை நீங்கள் எளிதில் பகிர்ந்துகொள்வீர்களா? அல்லது, உணர்வுகளைப் பொறுத்தவரை மற்றவர்களை ஒரு தொலைவிலேயே நிறுத்திவிடுவீர்களா? உங்களுக்குள் இருக்கும் மகிழ்ச்சிகள், இலக்குகள், ஏமாற்றங்களை உங்களால் எளிதில் வெளிப்படுத்த இயலுமா? அல்லது, அவ்வாறு வெளிப்படுத்த இயலாமல் சிரமப்படுவீர்களா? இதுபற்றி நிகழ்ந்துள்ள பல அறிவியல் ஆய்வுகளை வைத்துப்பார்க்கும்போது, இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் சொல்லப்போகும் பதில்கள் உங்களுடைய மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமையும். கனடாவில் பிறந்த உளவியலாளரான டாக்டர் சிட்னி ஜோரார்ட் 50 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி ஒரு முன்னோடி ஆய்வை நிகழ்த்தியுள்ளார். இதற்காக, தன்னை வெளிப்படுத்துதல் என்கிற கோட்பாட்டை அவர் உருவாக்கியுள்ளார்.  இந்தத் தலைப்புபற்றி 1974வரை அவர் நிகழ்த்திய ஆய்வுகள் சர்வதேச உளவியல்துறையைமட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த நாகரிகத்திலும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. ஜோரார்டின் கணிப்பு சரியானதுதான், நாம் நம்மை எந்த அளவு மற்றவர்களிடம் வெளிப்படுத்திக்கொள்கிறோம் என்பது நமது சமூக உறவுகளை, மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது, நமது உடல்நலத்திலும் அது தனது தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

ஆச்சர்யமான விஷயம், ஆளுமை மற்றும் பழக்கவழக்க ஆய்வுகளை உண்டாக்கிய முக்கியமான நிபுணர்கள் யாரும் இந்தத் தலைப்புபற்றி அதிகம் எழுதவில்லை. சிக்மண்ட் ஃப்ராய்டைப் பொறுத்தவரை, பாலியல் அடக்கிவைத்தல்தான் முக்கியப் பிரச்னையாக இருந்தது, அல்ஃப்ரெட் அட்லெரைப் பொறுத்தவரை, ஒரு விஷயத்தை நன்கு செய்யவேண்டும் அல்லது அதன்மீது ஆற்றல் செலுத்தவேண்டும் என்கிற தேவை நம்மோடு பிறந்திருக்கிறது, அதுதான் முக்கியமான பிரச்னை. இருபதாம் நூற்றாண்டில் இத்துறையில் சிறந்து விளங்கிய இன்னொரு நிபுணர் கார்ல் ஜங்க். இவரும் நாம் நம்மை எந்த அளவு பிறரிடம் வெளிப்படுத்திக்கொள்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்க உளவியலின் நிறுவனரான வில்லியம்ஸ் ஜேம்ஸ், இதே தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார், அதல் பலவிதமான மதம்சார்ந்த அனுபவங்களை அதிகம் குறிப்பிட்டார், ஆனால் அவர்கூட, நெருங்கிய உறவுகளைக் கவனத்தில்கொள்ளவில்லை. அமெரிக்கப் பழக்கவழக்க நிபுணர்களான ஜான் பி வாட்ஸன், பி எஃப் ஸ்கின்னர் போன்றோரின் கோட்பாடுகள் பெரும்பாலும் ஆய்வக எலிகள் மற்றும் புறாக்களின்மீது நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அமைந்தவை. அங்கே உணர்வு நெருக்கத்தை ஆராய அதிகம் வாய்ப்பில்லை!

1950களின் நிறைவில், உளவியல் துறையில் ஒரு பெரிய கோட்பாட்டு இடைவெளி காணப்பட்டது: ஆரோக்கியமான, நெருங்கிய உறவிகள் என்கிற தலைப்பு அங்கே பேசப்படவில்லை. சிட்ஜொ ஜோரார்ட் அதனை நிரப்ப மிகவும் உதவினார். அவர் தன்னுடைய சுயசரிதையை எழுதவில்லை, தன்னுடைய வாழ்க்கைக்குறிப்பைக்கூட எழுதவில்லை. ஆகவே, இந்தத் துறையில் இப்படியொரு புதிய ஆய்வில் அவர் ஈடுபட என்ன காரணம் என்பதை நாம் கண்டறிவது சிரமம். அவரது மகன் இணையத்தில் வழங்கியுள்ள விவரங்களிலிருந்து நாம் அறிவது: அவர் கனடாவில் பிறந்தவர், அவரது பெற்றோர் ரஷ்ய-யூதக் குடியேறிகள். பெரும் பஞ்சக்காலத்தின்போது அவர் ஒரு பெரிய குடும்பத்தில் வளர்ந்தார். அவரோடு பிறந்தவர்கள் ஐந்து பேர், ஓர் அத்தையும் அவர்களுடன் தங்கியிருந்தார். அவருடைய பெற்றோர் டொரன்டோவில் ஒரு வெற்றிகரமான துணிக்கடையை நடத்திவந்தார்கள், வசதியாக இருந்தார்கள், ஆகவே, அவ்வப்போது மற்ற உறவினர்களும் அவர்களுடன் வந்து தங்குவதுண்டு. அவருடைய இளமைக்காலம் பல நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கழிந்திருக்கிறது. வாழ்நாள்முழுக்கத் தன் தாயுடன் அன்பாக இருந்திருக்கிறார்.      

ஜோரார்ட் உளவியல்துறையில் முனைவர் பட்டம் பெற்று ஐந்தாண்டுகளுக்குப்பிறகு, 1958ல், இன்னொருவருடன் இணைந்து தனது முதல் நிபுணர் அறிக்கையை எழுதினார். இதில் அவர் தன்னை வெளிப்படுத்துதல்பற்றிப் பேசியிருந்தார். இந்த ஆய்வில், ஜோரார்டும் அவருடைய சக ஊழியரான டாக்டர் பால் லசகௌவும் இணைந்து, இந்தப் பண்புபற்றிய கேள்வித்தாள் ஒன்றை முதன்முறையாக உருவாக்கினார்கள். அன்று தொடங்கி இன்றுவரை இந்தத் துறையில் ஆய்வுகளை நிகழ்த்துவதற்கான மாதிரியாக இது திகழ்கிறது. அடுத்த ஆண்டு, தன்னை வெளிப்படுத்துதல்பற்றிய இன்னும் விரிவான கோட்பாட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஜோரார்ட். இது பிரமாதமான, நீடித்த தாக்கத்தை உண்டாக்கியது.

பின்னர், ஜோரார்ட் தனது முப்பதுகளின் மத்தியில் இருந்தபோது இதனை உறுதிப்படுத்தினார், "ஒருவர் அன்புசெலுத்துதல், சைக்கோதெரபி, ஆலோசனை, கற்றுக்கொடுத்தல், செவிலியர் பணி போன்ற செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்றால், அதற்குப் பாதிக்கப்பட்டோர் தங்களை வெளிப்படுத்தவேண்டும். தன்னை அறிதலின்மூலம், ஒருவர் தனக்குத்தானே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார், அவர் பிறருக்கும் அதனை வெளிப்படுத்தக்கூடும். அவர் யார், என்ன, எங்கே இருக்கிறார் என்பவையெல்லாம் இதன்மூலம் தெரியவரும். தெர்மாமீட்டர்கள், ஸ்ஃபைக்மோமானோமீட்டர்கள் போன்றவை உடலின் உண்மையான நிலையைப்பற்றிய விவரத்தைத் தெரிவிப்பதுபோல, ஒருவர் தன்னை வெளிப்படுத்தினால் அவரது ஆன்மாவின் உண்மையான இயல்பை அறியலாம். உங்கள் மனைவியோ/கணவனோ, குழந்தையோ, நண்பரோ, அவர்களை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும், நல்ல ஆரோக்கியம், நலனுக்கு அவர்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு அவர்கள் உங்களை அனுமதிக்கவேண்டும், அப்போதுதான் உங்களால் அவர்கள்மீது அன்பு செலுத்த இயலும்."  

இதையடுத்து, தினசரி வாழ்க்கையில் தன்னை வெளிப்படுத்துதல்பற்றி ஜோரார்ட் பல புத்தகங்களை எழுதினார். உதாரணமாக: வெளிப்படையான ஆன்மா (அவரது மிகப் பிரபலமான நூல்), மனிதனை அவனுக்கே அறிமுகப்படுத்துதல், தன்னை வெளிப்படுத்துதல்: வெளிப்படையான ஆன்மாவின் ஒரு பரிசோதனை ஆய்வு மற்றும் ஆரோக்கியமான ஆளுமை. அப்போது தொடங்கி, பல உளவியல் ஆய்வுகள் அவரது பார்வையை உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, திருமணம்போன்ற நெருங்கிய காதல் உறவுகளைப்பொறுத்தவரை, ஆணோ, பெண்ணோ, ஒருவர் தன்னை வெளிப்படுத்தினால்தான் மற்றவர் அவரிடம் வெளிப்படையாகப் பழக இயலும். அதேபோல், 'என் துணைவர் தன்னுடைய உணர்வுகளை என்னிடம் மறைக்காமல் சொல்கிறார்' என்கிற உணர்வும் முக்கியம்.

இதுபற்றி நிகழ்ந்த ஆய்வுகளில் இன்னும் பல விஷயங்கள் வெளிவந்துள்ளன: கணவரோ, மனைவியோ, ஒருவர் தன்னை எந்த அளவுக்கு வெளிப்படுத்துகிறாரோ, அதே அளவுக்கு மற்றவரும் தன்னை வெளிப்படுத்துவார், கலாசாரம் சார்ந்த அம்சங்கள் இதில் ஒரு முக்கியப் பங்காற்றுகின்றன. உதாரணமாக, வட அமெரிக்கர்களைவிட லத்தீன் அமெரிக்கர்கள் தங்களை அதிகம் வெளிப்படுத்துகிறார்கள், அதேசமயம், இரு கலாசாரத்தைச் சேர்ந்தவர்களும் குடும்பப் பிரச்னைகள், பாலியல்பற்றிப் பேசாமல் தவிர்க்கிறார்கள். லத்தீன் அமெரிக்கர்கள் பலதரப்பட்ட விஷயங்களைப்பற்றிப் பேசுகிறார்கள். உதாரணமாக: இசை, திரைப்படங்கள், பொழுதுபோக்குகளில் தங்களுடைய ஆர்வங்கள் போன்றவை. இந்தியாவில் தன்னை வெளிப்படுத்துதல்பற்றி அதிக ஆய்வுகள் நடைபெறவில்லை. அதேசமயம், தனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்துதல் ஒரு மதிப்புள்ள விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

உளவியலாளர்கள் கண்டறிந்துள்ள இன்னொரு விஷயம், ஒருவர் இன்னொருவரிடம் தன்னை வெளிப்படுத்தினால் இவரும் அவரிடம் தன்னை வெளிப்படுத்துவார். ஆகவே, 19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டின் "திருமணத்தில் மகிழ்ச்சி என்பது முற்றிலும் எதேச்சையானதுதான்" என்று சொல்வது சரியல்ல என்று தோன்றுகிறது. அதாவது, ஒருவர் தன்னைப்பற்றிய விவரங்களை வெளிப்படுத்தினாலும், நாமும் அதேபோல் நடந்துகொள்ளவேண்டும் என்று நமக்குத் தோன்றும், இதற்கு வலுவான ஆதாரம் உள்ளது. இதனால், அடுத்தவர் இன்னும் ஆழமாகத் தன்னை வெளிப்படுத்துவார். இதுபற்றி நிகழ்ந்துள்ள சமீபத்திய ஆய்வுகளில், இணைய உறவுகளில்கூட இதுவே நிகழ்வதாகத் தெரிகிறது. உதாரணமாக, சமூக ஊடகங்கள், டேட்டிங் இணையத்தளங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  

தன்னை வெளிப்படுத்துதல் என்பது, காதல் உறவுகளுக்குமட்டும் முக்கியமில்லை, பெற்றோர், குழந்தைகளுக்கிடையிலான உறவுக்கும் முக்கியம். சமீபத்தில், நானும் என் சக ஊழியர்களும் கல்லூரி மாணவர்களிடையே ஓர் ஆய்வை நடத்தினோம். இதில் தெரியவந்த விஷயம், பெற்றோர் தங்களுடைய குழந்தைப்பருவம், வளர்இளம்பருவம், இளமைப்பருவம் போன்றவற்றைப்பற்றிக் குழந்தைகளிடம் பேசினால், அவர்களுடைய குழந்தைகள் அவர்களுடன் அதிகம் நெருங்கியிருப்பதாக உணர்கிறார்கள். அதேபோல், பெற்றோர் தங்களைப்பற்றிக் குழந்தைகளிடம் பேசினால், அந்தக் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு பிரச்னை வரும்போது அவர்கள் தங்கள் பெற்றோரிடம் பேசுகிறார்கள், ஆலோசனை கேட்கிறார்கள். இதிலிருந்து நமக்குப் புரிவது: உங்கள் குழந்தைகள் உங்களிடம் நெருக்கமாக இருக்கவேண்டுமென்றால், உங்கள் வழிகாட்டுதலை மதிக்கவேண்டுமென்றால், உங்களுடைய வாழ்க்கை அனுபவங்களை அவர்களிடம் பேசுங்கள்.

அப்படியானால் அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டுமா? அவசியமில்லை. ஒருவரிடம் நம்மை வெளிப்படுத்துகிறோம் என்பதற்காக, அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்று அவசியமில்லை. எதைச் சொல்வது எதைச் சொல்லக்கூடாது என்று நாம்தான் தீர்மானிக்கவேண்டும். குறிப்பாக, பணியிடத்தில் பிறரிடம் தன்னை வெளிப்படுத்தும்போது, மிகக் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார்கள் உளவியலாளர்கள். அதேசமயம், நமக்குள் இருப்பதை வெளிப்படுத்துவதன்மூலம் நம்மில் பெரும்பாலானோருக்குப் பலன் கிடைக்கும். இதற்கு என்ன செய்யவேண்டும்? முதலில் சிறிய விஷயங்களில் தொடங்கலாம். உதாரணமாக, சமீபத்திய TV நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், புத்தகங்கள்... உங்களுக்குப் பிடித்தவற்றைப்பற்றிப் பேசலாம். அதேசமயம், அறிவுஜீவித்தனத்தைக் காட்டவேண்டாம், உங்கள் உணர்வுகளில் கவனம் செலுத்துங்கள்.

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் கூடுதல் இணை உளவியல் பேராசிரியர். உரிமம்பெற்ற மருத்துவ உளவியலாளரான இவர், தனிச்சேவை புரிந்துவருகிறார். உளவியல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து நேர்வித உளவியல்: மகிழ்ச்சி, மலர்ச்சியின் அறிவியல் என்ற நூலை எழுதியுள்ளார். இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதாபிமான உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றுகிறார். நீங்கள் அவரைத் தொடர்புகொள்ள இந்த மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org