நலன்

மனோநிலையை வலுப்படுத்த, நல்ல நினைவுகள்

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

“ஒருவர் எந்த அளவு அமைதியாகிறாரோ, அந்த அளவு அவர் வெற்றிபெறுகிறார், தாக்கத்தை உண்டாக்குகிறார், நன்மை செய்கிறார்" என்று பிரிட்டிஷ் கட்டுரையாளர் ஜேம்ஸ் ஆலென் குறிப்பிட்டார். “மனத்தின் அமைதி என்பது, அறிவின் சின்னங்களில் ஒன்று.” இந்த வாசகங்கள் எழுதப்பட்டு ஒரு நூற்றாண்டுக்குமேலாகிறது. ஆனால், இச்சொற்கள் இன்றைக்கும் பொருந்துகின்றன. ஆலென் தொழில்துறையில் பணியாற்றிப் பின்னர் தத்துவ அறிஞரானவர். ஆகவே, தினசரி வாழ்க்கையில் மன அமைதிக்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார். "அமைதியாக இருப்பவருடன் பழகவே எல்லாரும் விரும்புவார்கள்" என்றார்.  பல ஆண்டுகளாக, நேர்வித மனோநிலையைத் தக்கவைத்துக்கொள்ளும் மனிதனின் குணத்தில் சமூக அறிவியலாளர்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இந்நிலை இப்போது வேகமாக மாறிவருகிறது. காரணம், சுய கட்டுப்பாடு எனப்படும் இந்தக் குணத்துக்குப் பல முக்கியமான தனிப்பட்ட விளைவுகள் உண்டு என்பது இப்போது தெளிவாகியுள்ளது.  

இதுபற்றிய மருத்துவ மற்றும் பரிசோதனை ஆய்வுகளைத் தொகுத்துப்பார்க்கும்போது, சுய கட்டுப்பாடு இல்லாதவர்கள் பல மன நலப் பிரச்னைகளுக்கு ஆளாவது தெரியவந்துள்ளது. உதாரணமாக, நாள்பட்ட பதற்றம், மன அழுத்தம், தீய பழக்கங்களுக்கு அடிமையாதல் போன்றவை. இந்தக் குணம் இல்லாவிட்டால் நமது உடல்நலமும் கெட்டுப்போகிறது. தூக்கத்தின் தரம் போன்ற தினசரி நலன்களும் சரியாகக் கிடைப்பதில்லை. இதுபற்றிய ஆய்வுகளில், சுய கட்டுப்பாட்டில் இரண்டு வித்தியாசமான திறன்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை இரண்டுமே முக்கியமானவை, தினசரி மலர்ச்சிக்கு அவசியமானவை: கோபம், சோகம், கவலை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் குறைத்தல், மகிழ்ச்சியை அதிகரித்தல். இந்தப் பத்தியில், சுய கட்டுப்பாட்டின் இரண்டாவது அம்சத்தைப்பற்றிப் பேசுவோம். அதாவது, நம்மால் மகிழ்ச்சியான ஒரு மனோநிலையை உருவாக்க, தக்கவைத்துக்கொள்ள, அதிகரிக்கச்செய்ய இயலுகிறதா? உளவியலாளர்களுக்குச் சுய கட்டுப்பாடு இல்லாத நிலையைப்பற்றி நிறைய விஷயங்கள் தெரியும், சுய கட்டுப்பாடு சரியாக உள்ள நிலையைப்பற்றி அதிகம் தெரியாது. ஆகவே, மகிழ்ச்சியான நினைவுகளைப் பயன்படுத்தி மக்களால் தங்களுடைய தினசரி மனோநிலையை மேம்படுத்த இயலுமா என்று தெரிந்துகொள்வதற்காக ஒரு சர்வதேச ஆய்வை நான் தொடங்கியுள்ளேன். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இது நடைபெறுகிறது.

நல்ல நிலைக்குள் நுழைதல்    

மக்கள் தங்களுடைய மனோநிலையைத் தாங்களே சிறப்பாக்கிக்கொள்வது என்பது, உளவியலின் சமீபத்திய பிரிவுகளில் ஒன்று. இதில் நிகழ்ந்துள்ள பெரும்பாலான ஆய்வுகள் கடந்த 20 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்தவை. ஆகவே, இந்தத் திறனை நாம் எப்படி வளர்த்துக்கொள்வது என்பதுபற்றி நமக்கு அதிகம் தெரியாது. உதாரணமாக, வருத்தமாக உள்ள பல குழந்தைகள் சட்டென்று தங்கள் மனத்தை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியாகிவிடுகிறார்கள். இது எப்படி என்பதுபற்றிக் கிட்டத்தட்ட எந்த ஆய்வுமே நிகழ்த்தப்படவில்லை என்று சொல்லிவிடலாம். குழந்தைகளின் மனோநிலைகள் குறுகியகாலச் சூழல் காரணிகளைச் சார்ந்து அமைகின்றன என்று பெரும்பாலான வளர்ச்சியியல் நிபுணர்கள் சொல்கிறார்கள், அநேகமாக இதுவே அதற்குக் காரணமாக இருக்கலாம். குழந்தைகள் தங்களுடைய ஆரம்பகால அனுபவங்களின் அடிப்படையில் தங்கள் உணர்வுகளைக் கையாள்வதற்கான வியூகங்களைப் பழகிக்கொள்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். இந்த அனுபவங்கள் பெரும்பாலும் அவர்களுடைய பெற்றோருடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. நெருங்கிய, அன்பான உறவுகளுடன் வளரும் குழந்தைகள், இனிய உணர்வுகளைத் தரும் அனுபவங்களை நாட வாய்ப்புகள் அதிகம், அத்தகைய உறவுகள் இன்றி வளரும் குழந்தைகள் உணர்வுரீதியில் செயலற்றிருக்கலாம், அல்லது, உணர்வுகளையே தவிர்க்கலாம்.

பொதுவாக, இனிய, நிலையான குடும்ப வாழ்க்கையை அனுபவித்த குழந்தைகள் கலகலப்பான மனோநிலையில் வளர்கிறார்கள். உதாரணமாக, அர்பானாவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர் ரீட் லார்சன், "வளர்இளம்பருவத்தினர் பெரும்பாலான நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்" என்கிறார். அவர்கள் வருத்தமாக உணரும் நேரங்கள் மிகக்குறைவு. உதாரணமாக, அடுத்து நிகழவுள்ள ஒரு விஷயம் குறுகியகாலத்தில் அவர்களுடைய உணர்வுநிலையைப் பாதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக, ஒரு போட்டியில் தோற்றுவிடுகிறார்கள், அல்லது, பெற்றோர் அவர்களைத் திட்டுகிறார்கள்/அடிக்கிறார்கள் என்றால், அப்போதுதான் அவர்கள் வருந்துகிறார்கள்.

ஆனால், வளர்இளம்பருவத்தினர் அப்படியில்லை. பதின்பருவத்தினர்மத்தியில் நிகழ்த்தப்பட்ட பல ஆய்வுகளில், அவர்களிடையே பதற்றம், மன அழுத்தம், உண்ணல் குறைபாடுகள், தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளுதல், கடமை தவறுதல், தற்கொலை செய்துகொள்ளுதல் ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் மிகவேகமாக அதிகரிப்பது தெரியவந்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பில் படிக்கிற குழந்தைகளோடு ஒப்பிடும்போது, வளர்இளம்பருவத்தினர் அதீத மகிழ்ச்சியை அனுபவிப்பது மிகக்குறைவு, வருத்தத்தை அனுபவிப்பது மிக அதிகம். குறிப்பாக, இவர்கள் ஓர் இயல்பான ஓட்டத்தைக்கொண்ட லேசான எதிர்மறைத்தன்மையோடு வருத்தத்தை அனுபவிக்கிறார்கள். இதனை 'டிஸ்ஃபோரியா' என்பார்கள். அநேகமாகப் பதின்பருவத்தைக் கடந்துவந்த எல்லாருமே இந்த மனோநிலையை அனுபவித்திருப்பார்கள்: காரணமில்லாத அசௌகர்யம், வருத்தம், எரிச்சல் ஆகியவற்றின் கலவையான உணர்ச்சி இது. பல ஆண்டுகளாக, ஏராளமான புத்தகங்கள், பத்திரிகைக் கட்டுரைகள், 'பெரியவர்களுடைய சுதந்தரத்தைக்கண்டு வளர்இளம்பருவத்தினருக்கு வரும் பொறாமை'தான் இந்த மனோநிலைக்குக் காரணம் என்றன. ஆனால், சமீபத்திய ஆய்வுகளில் இதுபற்றிப் பல புதிய விஷயங்கள் தெரியவந்துள்ளன. வளர்ச்சியியல் உளவியலாளர்கள் வளர்இளம்பருவ டிஸ்ஃபோரியாவை 'குழந்தைப்பருவத்தின் சவுகர்யமான பாதுகாப்பு மற்றும் எளிமைக்கான ஏக்கம்' என்கிறார்கள்.

வளர்இளம்பருவ மனோநிலை மேலாண்மை, அல்லது, மனோநிலையைப் பழுதுபார்த்தல் என்பதுபற்றி அனுபவப்பூர்வமான பல ஆய்வுகள் இப்போது நிகழ்கின்றன. இவற்றில் திரும்பத்திரும்பக் கண்டறியப்பட்டுள்ள விஷயம், பதின்பருவத்தினர் இசை கேட்பதன்மூலம் இதனைக் கட்டுப்படுத்த முனைகிறார்கள். லார்ஸனைப் பொறுத்தவரை, பிரபலமான இசையைக் கேட்பதன்மூலம் "வளர்இளம்பருவத்தினர் மனத்தில் வலுவான, உணர்வுப்பூர்வமான பிம்பங்கள் உண்டாகின்றன, அதில் ஒரு தாற்காலிகமான சுய உணர்வு ஏற்படுகிறது." இசை கேட்பதன்மூலம் பதின்பருவத்தினரால் தங்களுடைய மனோநிலையை மேம்படுத்திக்கொள்ள இயலுகிறது என்ற பார்வைக்கு அறிவியல்பூர்வமான உறுதிப்படுத்துதல் ஏதும் இல்லை. ஃபின்லாந்தில் டாக்டர் சுவி சாரிகல்லியோ, டாக்டர் ஜாக்கோ எர்க்கிலா இருவரும் இணைந்து, இசையானது வளர்இளம்பருவத்தினரின் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு, எழுச்சிக்கு உதவுகிறது, அவர்களுடைய உள் காயங்களுக்கு ஆறுதல் தருகிறது, வலுவான புலனுணர்வுகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது என்று கண்டறிந்துள்ளார்கள்.  

பெரியவர்களும் இசையைக் கேட்டுத் தங்கள் மனோநிலையை மேம்படுத்திக்கொள்வதுண்டு, ஆனால், அவர்கள் பொதுவாக சுய கட்டுப்பாட்டுக்கான இரண்டாவது முக்கியமான வியூகமொன்றையும் பயன்படுத்துவார்கள்: மகிழ்ச்சியான நினைவுகளை அணுகுதல். இதுபற்றி நிகழ்த்தப்பட்ட பரிசோதனை ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நேர்விதமான நிகழ்வை மீண்டும் எண்ணிப்பார்க்கும்போது, அது அவருடைய மனோநிலையை நிச்சயமாக மேம்படுத்துகிறது. குறிப்பாக, வெறும் சொற்களால் அல்லாமல், உறுதியான காட்சிகளின்மூலம் அவர் அதனை எண்ணிப்பார்த்தால் இது நல்ல பலன் தருகிறது. அதாவது, ஒருவர் தன் கணவர்/மனைவியுடன் எங்கேயாவது மகிழ்ச்சியாகச் சென்று திரும்புகிறார் என்றால், இயன்றபோதெல்லாம் அவர் அதை அவர் தன் மனக்கண்ணில் ஓட்டிப்பார்க்கவேண்டும், அந்த நினைவுகளை இயன்றவரை அதிக விவரங்களோடு சிந்திக்கவேண்டும், ஆனால் அதனைச் சொற்களால் விவரிக்கக்கூடாது. ஆனால் ஒன்று, இதுபோன்ற ஆய்வுகளில் தெரியவரும் இன்னொரு விஷயம், மருத்துவரீதியிலான மன அழுத்தம் கொண்டோருக்கு இப்படி நினைவுகளை மீண்டும் ஓட்டிப்பார்ப்பது பயன்படுவதில்லை, அந்தப் பிரச்னை இல்லாதவர்கள், அல்லது அதிலிருந்து மீண்டவர்களுக்குமட்டுமே இது பயன்படுகிறது.  

ஒரு புதிய சர்வதேச ஆய்வு

பரிசோதனைரீதியிலான ஆய்வுகளில் நமக்குப் பல விவரங்கள் தெரியவருகின்றன. ஆனால், அவற்றைத் தினசரிவாழ்க்கையில் பொதுமைப்படுத்துவது சிரமம். ஆகவே, மக்கள் தங்களுடைய மகிழ்ச்சியான நினைவுகளைப் பயன்படுத்தி மனோநிலையை மேம்படுத்துவது எப்படி என்று என்னுடைய ஆய்வுக்குழுவினர் நுணுக்கமாக ஆராயத்தொடங்கியிருக்கிறார்கள். இந்த ஆய்வாளர்களில் ஒருவர், இந்தியாவிலிருக்கும் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனைச்சேர்ந்த டாக்டர் கரிமா ஶ்ரீவத்ஸவா. இவர் இந்த ஆய்வுக்கான கேள்வித்தாளை உருவாக்கவும் தரவுகளைச் சேகரிக்கவும் உதவினார். எங்களுடைய மாதிரிக்குழுவில் 110 வயதுவந்தோர் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் நல்ல ஒட்டுமொத்த மனநலம் கொண்டவர்கள், ஆசியா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் வாழ்கிறவர்கள். இவர்கள் ஒப்பீட்டளவில் தங்கள் வாழ்க்கைமீது அதிகத் திருப்தி கொண்டவர்கள், அழுத்தத்தை நன்கு சமாளிக்க இயலுகிறவர்கள்.

இவர்களிடையே நிகழ்ந்த ஆய்வுகள் என்ன சொல்கின்றன? முதலில், அநேகமாக இவர்கள் எல்லாருமே இந்த வடிவத்தில் தங்கள் மனோநிலையைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். சிலர் (23.6%) இதனைத் தினமும் செய்வதாகச் சொன்னார்கள், பெரும்பாலானோர் (53.6%) வாரத்துக்கு ஒருமுறையேனும் இவ்வாறு செய்வதாகச் சொன்னார்கள். ஒட்டுமொத்தப் பங்கேற்பாளர்களில் 4 பேர்மட்டுமே இப்படிச் செய்தது கிடையாது என்றார்கள். இதில் ஆண்களும் பெண்களும் சரிபாதி. அடுத்து, மக்கள் மகிழ்ச்சியான நினைவுகளைச் சிந்திப்பது எதற்காக என்று நாங்கள் கேட்டோம். இதற்குப் பலவிதமான பதில்கள் கிடைத்தன. உதாரணமாக: பகல்கனவு (33.6%), ஒரு மகிழ்ச்சியான மனோநிலையைப் பெரிதாக்கும் விருப்பம் (26.3%), சோக உணர்வுகளைப் போக்கும் எண்ணம் (19.1%). அபூர்வமாகச் சிலர், பதற்றமான மனோநிலையிலிருந்து மாறுவதற்கும் (9.1%), சலிப்பை விரட்டுவதற்கும் (6.4%), "வெறுமையான" உணர்வை மாற்றுவதற்கும் (5.4%) இதனைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இத்தகைய பழக்கவழக்கம் எந்தச் சூழலில் அதிகம் நிகழ்கிறது? பெரும்பாலானோர் (50.9%) தனியாக இருக்கும்போது இனிய நினைவுகளை எண்ணிப்பார்ப்பதாகச் சொன்னார்கள். உதாரணமாக, ஒரு காரில், ஓர் அறையில் இருக்கும்போது இவர்கள் இதனை எண்ணுகிறார்கள். இன்னும் பலர் (26.3%) பிறருடன் உள்ளபோது இவ்வாறு நடந்துகொள்கிறார்கள், கிட்டத்தட்ட அதே அளவிலானவர்கள் (22.7%) முன்பின் தெரியாதவர்களுடன் இருக்கும்போது இவ்வாறு நடந்துகொள்கிறார்கள், உதாரணமாக, பேருந்தில் செல்லுதல், ஷாப்பிங் செய்தல் போன்ற நேரங்களில்.

இவர்கள் எப்படிப்பட்ட இனிய நினைவுகளை எண்ணிப்பார்க்கிறார்கள்? இந்தக் கேள்விக்கும் பலவிதமான பதில்கள் கிடைத்தன.  இவர்களில் 37.3% பேர் கடந்த மாதம் தொடங்கிக் கடந்த ஆண்டுக்குள் நடைபெற்ற ஒரு நிகழ்வை எண்ணுவதாகச் சொன்னார்கள், 22.7% பேர் சென்ற வார நிகழ்வொன்றை எண்ணுவதாகக் குறிப்பிட்டார்கள், 20.0% பேர் சென்ற மாத நிகழ்வொன்றை எண்ணுவதாகக் குறிப்பிட்டார்கள், 20.0% பேர் ஓராண்டுக்குமுன் நடைபெற்ற நிகழ்வொன்றை எண்ணுவதாகக் குறிப்பிட்டார்கள். ஒரு நினைவின் உள்ளடக்கத்தை விவரிப்பதற்காக, பங்கேற்பாளர்களுக்கு 10 வகைகள் தரப்பட்டன. இதில் அதிகப்பேர் (20.0%) தேர்ந்தெடுத்தது, நண்பர்களுடனான சமூக நிகழ்வொன்றை. அதன்பிறகு வந்தவை: தனிப்பட்ட சாதனை நினைவுகள் (17.3%), குடும்ப நிகழ்வுகள் (17.3%), பயணம் அல்லது ஒரு விடுமுறையின் நினைவுகள் (16.4%), காதலை வெளிப்படுத்தும் செயல்பாடொன்று (15.5%), பாடல் அல்லது இசை (7.3%). மிகக் குறைவானோர் தேர்ந்தெடுத்த விஷயங்கள்: விளையாட்டுப் போட்டியொன்று (2.7%), ஒரு திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சி (1.8%), ஒரு மதம்சார்ந்த நிகழ்ச்சி (0.9%). ஓர் இணையத்தளத்துடன் தொடர்புடைய இனிய நினைவுகளை யாரும் குறிப்பிடவில்லை. ஃபேஸ்புக்கே, மன்னிக்க! ஆய்வில் பங்கேற்றவர்களில் ஒருவர் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.  

இதுபற்றிய முந்தைய ஆய்வுகளை உறுதிப்படுத்தும்விதமாக நாங்கள் கண்டது, ஒரு மகிழ்ச்சியான நினைவை அணுகுவதன்மூலம் ஒருவருடைய மனோநிலை நன்கு மேம்படுகிறது. அது எந்த அளவுக்கு மேம்படுகிறது என்று கேட்டபோது, மிகச்சிலர் (3.6%) "மிகக்குறைவாக மேம்படுகிறது" என்றார்கள், 12.7% பேர் "குறைவாக மேம்படுகிறது" என்றார்கள். ஆனால், கிட்டத்தட்ட சரிபாதிப்பேர் (49%) "ஓரளவு மேம்படுகிறது" என்றார்கள், 25.5% பேர் "மிக அதிகம் மேம்படுகிறது" என்றார்கள். அடுத்து, நாங்கள் அழுத்தம் குறைவதைப்பற்றிக் கேட்டிருந்தோம். இந்தக் கேள்விக்குப் பதிலளித்தவர்களில் 40.0% பேர் ஒரு மகிழ்ச்சியான நினைவை மீண்டும் ஓட்டிப்பார்ப்பதன்மூலம் அழுத்தம் "ஓரளவு குறைகிறது" என்றார்கள். "சிறிது குறைகிறது" என்றவர்கள் 25.4% பேர், "அதிகம் குறைகிறது" என்றவர்கள் 22.7% பேர். ஒரு மகிழ்ச்சியான நினைவை மீண்டும் சிந்தித்துப்பார்ப்பது அழுத்தத்தை "மிக அதிகம் குறைக்கிறது" என்றவர்கள் 7.2% பேர், "மிகக் குறைவாகவே குறைக்கிறது" என்றவர்கள் வெறும் 4.5% பேர். இங்கே நாம் சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம், அழுத்தமானது தாற்காலிகமாகவோ நீண்டகால அழுத்தமாகவோ இருக்கலாம், எங்கள் கணக்கெடுப்பு இவற்றினிடையிலான வித்தியாசத்தைக் கருத்தில் கொள்ளவில்லை. இந்தியாவில் இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற பெரும்பாலானோர் கல்லூரியில் படித்த இந்துப் பெண்கள். இவர்களில் அநேகமாக எல்லாரும் அவ்வப்போது ஒரு மகிழ்ச்சியான நினைவைச் சிந்தித்துப்பார்ப்பதாகச் சொன்னார்கள். இவர்கள் தனிமையாக இருப்பதைவிட, பிறருடன் இருக்கும்போதுதான் இவ்விதமாகச் சிந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இந்த ஆய்வால் நமக்கு என்ன பயன்? முதலில், இந்த இரு கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்: "எந்தச் செயல்பாடுகள் அல்லது நிகழ்வுகள் உங்களை மகிழ்ச்சியான மனோநிலையில் வைக்கின்றன?" மற்றும் "எந்த அனுபவங்கள் உங்களை மோசமான மனோநிலைக்குக் கொண்டுசெல்கின்றன?" இந்தக் கேள்விகளுக்கு இயன்றவரை துல்லியமான பதில்களைத் தாருங்கள். அடுத்து, சென்ற ஆண்டில் நடைபெற்ற மூன்று இனிய நினைவுகளை விவரியுங்கள். அவை எங்கே, எப்போது நடைபெற்றன என்று குறிப்பிடுங்கள். இந்தச் செயல்பாட்டின் நோக்கம், இப்படி நீங்கள் உங்களை நேர்விதமாகச் சுய ஒழுங்கு செய்துகொள்ளக்கூடிய சூழ்நிலைகளை அடையாளம் காண்பதுதான்.          

இரண்டாவதாக, நீங்கள் பொதுவாக அணுகும் ஞாபகங்களைப் பிரித்துப்பார்க்கத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவிலிருந்து இந்தக் கணக்கெடுப்பில் கலந்துகொண்ட பலரும் ஒரு குடும்ப நிகழ்வு அல்லது தனிப்பட்ட சாதனையை மீண்டும் சிந்தித்துப்பார்த்து மகிழ்ச்சியான மனோநிலையை உருவாக்கியதாகச் சொன்னார்கள். நீங்களும் அவ்வாறு செயல்படலாம். ஆனால், நமது மனோநிலையை மேம்படுத்த நாம் தேர்ந்தெடுக்கும் நினைவுகள் பலவிதமாக இருப்பது நல்லது என்று நான் எண்ணுகிறேன், அதற்கு நாம் நம்மைப் பழக்கிக்கொள்ள இயலும் என்று நம்புகிறேன். இதற்காக, உங்களுக்கு ஒரு 10 வகைகளைத் தருகிறோம். அடுத்த சில நாள்களில், இந்த வகைகள் ஒவ்வொன்றிலும் ஒரு தனிப்பட்ட உதாரணத்தை உங்களால் அடையாளம் காண இயலுகிறதா என்று பாருங்கள். உங்களுக்கு மகிழ்வுதரும் அனுபவங்களை அதிகமாக்கக் கற்றுக்கொண்டால், நீங்கள் வாழ்க்கையை அதிகம் வரவேற்பீர்கள், நன்றியுணர்வோடு இருப்பீர்கள். இந்தக் குணங்களுக்கும் உணர்வு நலனுக்கும் வாழ்க்கைத் திருப்திக்கும் தொடர்புண்டு என்று நேர்வித உளவியல் உறுதிப்படுத்துகிறது.

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் கூடுதல் இணை உளவியல் பேராசிரியர். உரிமம்பெற்ற மருத்துவ உளவியலாளரான இவர், தனிச்சேவை புரிந்துவருகிறார். உளவியல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து நேர்வித உளவியல்: மகிழ்ச்சி, மலர்ச்சியின் அறிவியல் என்ற நூலை எழுதியுள்ளார். இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதாபிமான உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றுகிறார். நீங்கள் அவரைத் தொடர்புகொள்ள இந்த மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org