மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்வோர்: கண்ணுக்குத் தெரியாத கதாநாயகர்கள்

ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வோர் அலுவலகத்திலும், ஒவ்வொரு கல்லூரியிலும், ஏன், ஒவ்வொரு குடும்பத்திலும் சில நாயகர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பிறருடைய கண்ணில் தெரிவதே இல்லை. இவர்கள் நெடுநேரம் பணியாற்றுகிறார்கள், ஆனால், இவ்வளவு வேலை செய்தும் இவர்களுக்குப் பணமோ சம்பளமோ கிடைப்பதில்லை, பல நேரங்களில் இவர்கள் தங்களது ஆரோக்கியத்தை, நலனை, வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டுதான் பணியாற்றுகிறார்கள். அந்தக் கதாநாயகர்கள், கதாநாயகிகள் யார்? மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள்தான் அவர்கள்.

ஒருவருடைய உறவினர் அல்லது நண்பர் அல்லது கணவர்/மனைவி உடல் அல்லது மனநலப் பிரச்னைக்கு ஆளாகும்போது, அல்லது, உடற்குறைபாட்டைச் சந்திக்கும்போது, அல்லது, முதிய வயது காரணமாகச் சிரமப்படும்போது, அல்லது, போதைப்பொருள்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தித் தவிக்கும்போது... அவருக்கு உதவி தேவைப்படுவதை இவர் புரிந்துகொள்கிறார், அவருக்கு வேண்டியவற்றைச் செய்கிறார். இவர் எந்த வயதில் இருந்தாலும் சரி, தன்னலம் கருதாது உழைக்கிறார். பொதுவாக, யாரும் விரும்பி இந்தப் பணியைச் செய்வதில்லை. சிலர் திடீரென்று இந்தப் பணியை ஏற்றுக்கொள்ள நேர்ந்துவிடுகிறது, வேறு சிலர் படிப்படியாக இந்தப் பணியை ஏற்கிறார்கள். இந்த வேலையைச் செய்ய அவர்கள் பயிற்சி பெறவில்லை, இதற்காக அவர்களுக்குச் சம்பளம் தரப்படுவதில்லை. ஆனால், அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் செய்கிற ஒரு மிக முக்கியமான பணியாக இது அமைந்துவிடுகிறது: தன்னைச் சார்ந்திருக்கும் இன்னொரு மனித உயிர்மீது அவர் கவனம் செலுத்துகிறார், அவரைப் பார்த்துக்கொள்கிறார், அவரது உடல்சார்ந்த, மருத்துவம்சார்ந்த, உணர்வுசார்ந்த, சமூகம்சார்ந்த மற்றும் பொருளாதாரம்சார்ந்த தேவைகளைத் தீர்த்துவைக்கிறார். இந்த அளவு முழுமையான ஆதரவை ஓர் NGO அமைப்போ அரசாங்கமோ வழங்க இயலாது. இந்த ஆதரவை வழங்கும் இவர்களுக்கு எந்தக் குறிப்பிட்ட ஆதரவும் கிடைப்பதில்லை. சோகமான விஷயம், மருத்துவ அல்லது சமூகத்துறையில் உள்ள பல நிபுணர்கள் இவர்களுடைய பங்களிப்பை முழுமையாக உணர்வதில்லை– அதன்மூலம் அவர்கள் தங்கள்மீது சுமத்திக்கொள்கிற சுமையையும் புரிந்துகொள்வதில்லை.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுவது பலருக்கு நிறைவளிக்கும் ஓர் அனுபவமாக உள்ளது. இப்பணியைச் செய்யும் பலர் அதை எண்ணிப் பெருமைகொள்கிறார்கள். அதேசமயம், இவ்வாறு இன்னொருவரைக் கவனித்துக்கொள்ளுவது இவர்களுடைய வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்குகிறது: இவர்கள் யாரைக் கவனித்துக்கொள்கிறார்களோ அவர்களுடைய தேவைக்கேற்ப இவர்கள் தங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது, இவர்கள் தங்களுக்கென்று செலவிட நேரமே இருப்பதில்லை. இதனால், மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிற பலருக்கு உடல்நலம் கெட்டுப்போகிறது, சமூகரீதியில் அவர்கள் தனித்துவாழ நேர்கிறது, மன அழுத்தம், பதற்றம் உண்டாகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிற ஒருவர், அதற்காகப் பல தியாகங்களைச் செய்ய நேரிடலாம்: படிப்பை நிறுத்தவேண்டியிருக்கலாம், வேலையை விடவேண்டியிருக்கலாம், இதனால் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய பல வாய்ப்புகள் கெட்டுப்போகலாம். இந்தச் சூழ்நிலையிலும் சிலர் தொடர்ந்து படிக்கிறார்கள், அல்லது, வேலை செய்கிறார்கள். ஆனால், இவர்கள் வீட்டுக்கடமை (மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்ளுதல்) அலுவலகக்கடமை என இருவிதமான கடமைகளை மாற்றி மாற்றிச் செய்யவேண்டியிருப்பதால், மற்றவர்கள் இவர்கள்மீது பாரபட்சம் காட்டுகிறார்கள். இந்தத் தாக்கங்கள் இந்தியாவில் மேலும் மேலும் அதிகம் காணப்படுகின்றன. காரணம், இங்குள்ள பாரம்பரியமான கூட்டுக்குடும்ப வாழ்க்கை, தனிக்குடித்தன வாழ்க்கையாக மாறிக்கொண்டிருக்கிறது.

இந்தியா, அதன் அண்டை நாடுகள், ஆசியா, ஆப்பிரிக்காவிலுள்ள பிற நாடுகளில் பணம் பெற்றுக்கொள்ளாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வோரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதுபற்றி எந்தத் தரவுகளும் தற்போது இல்லை. UKவில் இந்த எண்ணிக்கை சுமார் 1/8 என்ற அளவில் உள்ளது. அதாவது, வயது வந்த எட்டு பேரில் ஒருவர், சுமார் 80 லட்சம் பேர் பணம் ஏதும் பெறாமல் தங்கள் குடும்ப உறுப்பினரைக் கவனித்துக்கொள்கிறார்கள். இதன் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் பதினைந்து கோடிப் பேர் இவ்வாறு பணம் பெறாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்கிறார்கள் என்று ஊகிக்கலாம். அதாவது, நம் நாட்டில் சுமார் பதினைந்து கோடி வயதுவந்தோர், சிறுவர்கள் ஒரு மகத்தான பணியைச் செய்துகொண்டிருக்கிறார்கள், அதனை யாரும் அங்கீகரிப்பதோ பாராட்டுவதோ இல்லை, இந்தப் பணியால் அவர்களுடைய ஆரோக்கியமும் நலனும் வருங்காலமும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

கர்நாடகாவில் உள்ள ஹோஸ்பெட்டில் மனநல நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் அஜய் குமார், “மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் யார் கண்ணிலும் தெரிவதில்லை" என்கிறார், "சில சமயங்களில் அவர்களே அவர்களைக் கவனிப்பதில்லை. இந்தப் பிரச்னையை நாம் கவனிப்பது அவசியம், இது மாறினால்தான் மற்றவை மாறும்.”

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தவர்களை எண்ணிப்பார்க்கவேண்டும்: தங்கள் உறவினர்கள், அக்கம்பக்கத்துவீட்டுக்காரர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள்... அவர்களில் யாராவது, மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர்களாக இருப்பார்களோ? அநேகமாக ஒவ்வொருவருக்கும் இப்படி ஒருவரையாவது தெரிந்திருக்கும் – அவர்கள் தங்களுடைய இந்தப் பணியைப்பற்றி வெளியே சொல்லாமலிருக்கலாம், அவர்கள் செய்யும் பணிகளை மற்றவர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம், ஆனால், அவர்கள் எங்கேயும் இருக்கிறார்கள், சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ளார்கள். அவர்கள் அவ்வாறு கண்ணுக்குத்தெரியாமல் இருக்கவேண்டியதில்லை, அவர்கள் பணிக்கு அங்கீகாரம் இல்லாமலே போகவேண்டியதில்லை. ஆஷாதேவியின் கணவர் குணசேகரனுக்கு ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை உள்ளது. தன் கணவரை ஆஷாதேவிதான் கவனித்துக்கொள்கிறார். அவரிடம் இதுபற்றிப் பேசியபோது, “அதிகம் வேண்டாம், சும்மா ஒரு ‘ஹலோ. எப்படி இருக்கீங்க?’ என்று யாராவது கேட்டால் போதும், நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வேன்” என்றார். இதுபோன்ற அன்பான சொற்கள் இவர்களுடைய பணியை அங்கீகரிக்கின்றன, இவர்கள் யாரைக் கவனித்துக்கொள்கிறார்களோ அவர்களையும் அங்கீகரிக்கின்றன. இவர்களுக்குக் கிடைக்கவேண்டிய முறையான அங்கீகாரம், ஆதரவின் முதல் படி இது. ஒரு 'ஹலோ' சொல்வதும் விசாரிப்பதும் பெரிய விஷயமில்லை. ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்வோரின் வாழ்க்கையில் அது மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். சமூகத்தில் எல்லாரும் இதைச் செய்தால், அது ஒரு பெரிய மாற்றத்தின் முதல் படியாக இருக்கும்.

இந்த வரிசையில் இனி வரவுள்ள கட்டுரைகளில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதன் பல்வேறு தாக்கங்கள், அவ்வாறு கவனித்துக்கொள்வோருடைய வகைகள், கொள்கை மாற்றத்துக்கான முயற்சிகள், நம் சமூகத்தின் மக்கள்தொகை விகிதங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்வதால், இந்தப் பணி பாதிக்கப்படக்கூடிய நெருக்கடி சாத்தியம் போன்றவற்றைப்பற்றி நாம் பேசுவோம்.

டாக்டர் அனில் பாடில் 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பின் நிறுவனர், செயல் இயக்குநர். 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பு, பணம் பெற்றுக்கொள்ளாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வோர் சந்திக்கும் பிரச்னைகளை முன்வைத்துப் பேசுகிறது, கையாள்கிறது. 2012ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, UKயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வளரும் நாடுகளைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்வோருடன் இணைந்து பணிபுரிகிறது. டாக்டர் பாடில் இந்தப் பத்தியை ருத் பாடிலுடன் இணைந்து எழுதுகிறார். ருத் பாடீல் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் அமைப்புடன் இணைந்து பணிபுரியும் தன்னார்வலர் ஆவார். இவர்களுக்கு எழுத விரும்புவோர் இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

இந்தப் பத்தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகள் ஆசிரியருடையவை. வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின் கருத்துகளை அவை பிரதிநிதித்துவப்படுத்தாமலிருக்கலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org