பதின்பருவத்தில் மனநலம்

பதின்பருவத்தில் உள்ள ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த லென்ஸின்வழியே வாழ்க்கையைப் பார்க்கிறார், அவருக்குள் பல கேள்விகள் உள்ளன.
Published on

‘திடீரென்று, உலகம் பெரிதாகிவிட்டதாகத் தோன்றியது, வானியற்பியல் அடிப்படையில் அல்ல, ஏனெனில் நான் அதைப் பல ஆண்டுகளாகவே அறிந்திருந்தேன், அதை எண்ணி வியந்துவந்தேன், ஆனால் இப்போது, என்னைச் சூழ்ந்திருந்த கொப்புளம் வெடித்துவிட்டதுபோல, பச்சையான, மயங்கவைக்கும் காற்றில் நான் தவிப்பதுபோல உணர்ந்தேன்.’

இதை எழுதியவர் பதின்பருவத்தில் இருக்கும் ஓர் இளைஞர். நான் அவரை நன்றாக அறிவேன். வளர்தலின் குணாதிசயங்களாக அமைகிற பலவிதமான தொட்டுணரமுடியாத, மகிழ்வூட்டும் உணர்வுகளை உணர்தலை இது அழகாகப் பிரதிபலிக்கிறது. யோசனைகள், உணர்வுகள், மக்கள், தொழில்நுட்பம், இப்படி இன்னும் பலவற்றை வழங்கும் உலகத்தின் பரப்பை உணர்ந்து விழித்தெழுதல். இது வெறுமனே இயற்பியல் வரையறைகளால் கட்டப்பட்ட உலகம் அல்ல.

முதன்முறையாக, விஷயங்கள் கருப்பு, வெள்ளையாக இல்லை, வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் தீர்மானமெடுக்கும்போது பலவிதமான சாம்பல் நிறனங்களைக் கையாளவேண்டியிருக்கிறது. மதிப்பீடுகள், நண்பர்கள், அறிக்கைகளை வெளியிடும்விதமாக அணியத் தீர்மானிக்கும் உடைகள்கூட, இப்போது பூஜ்ஜியம், ஒன்று என இருமைத்தன்மையோடு எளிதாக இருப்பதில்லை. ஏற்கெனவே உள்ள தரங்கள் கேள்வி கேட்கப்படுகின்றன, காரணம், நம்பிக்கைகளை அடுக்கி அதன்மூலம் ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்வது முக்கியமாகிறது.

மிகவும் நம்பிக்கையாகத் தோன்றும் பதின்பருவத்து இளைஞரிடம்கூட, தன்னைப்பற்றிய கேள்விகள் இருக்கும். தன்னைப்போன்ற பிறருடன் போட்டியிடுவது, அவர்களுடன் தன்னை ஒப்பிட்டுக்கொள்வது போன்றவை மேலோட்டமாகப் பார்க்கும்போது அற்பமாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவற்றிலிருந்து தப்ப இயலாது. காரணம், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதைக் காண்பதற்கான ஓர் இயல்பான வழி அது. இந்த அளவுகோலில் ஓர் இளைஞர் தன்னை எங்கே அமைத்துக்கொள்கிறாரோ, அதைப்பொறுத்துத் தன்னை ஒரு வெற்றியாளராகவோ தோல்வியாளராகவோ உணர்கிறார். நம்பிக்கையாக உணர்வதற்கு, சாதித்த உணர்வு தேவை, தான் முக்கியம், தன்னுடைய வாழ்க்கை முக்கியம் என்று அவர் நம்பவேண்டும். இதுவே மனநலம் எனப்படுகிறது. இதில் ஒருவர் சமரசம் செய்துகொண்டால், பதற்றம், மனச்சோர்வு போன்ற எதிர்மறை உணர்வுகள் அவரை மூழ்கடிக்கும், அவர் திகைத்து உறைந்துவிடக்கூடும்.

உடல்நலத்தைப்போலவே, மனநலமும் முக்கியம், அதைப் புறக்கணிக்கக்கூடாது என ஒவ்வொருவரும் உணரவேண்டியது முக்கியம். சில நேரங்களில் சில விஷயங்கள் தவறாக நடக்கலாம், அப்போது, இளைஞர்கள் தங்களுடைய பெற்றோரிடம் பேசவேண்டும். உண்மையில், அந்த இளைஞர்களுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் ஓர் அன்பான, நம்பிக்கையுள்ள உறவு இருந்தால், அவர்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த பணி, பெற்றோருடன் பேசுவதுதான். இளைஞர்கள் செய்கிற அனைத்தையும் பெற்றோர் அங்கீகரிக்காமலிருக்கலாம், ஆனால், அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் பெற்றோரின் மனத்தில் எப்போதும் இருக்கும். ஏதோ காரணத்தால் ஓர் இளைஞரால் தன் பெற்றோரிடம் பேச இயலவில்லை என்றால், அவர் தன் நம்பிக்கைக்குரிய ஒரு பெரியவரிடம் பேசலாம், அல்லது, ஒரு மன நல நிபுணரிடம் பேசலாம்.

இதோ, பதின்பருவத்தில் உள்ள ஓர் இளைஞர் தன் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறார் என்று தெரிந்துகொள்வோம்:

பதின்பருவத்தில் இருப்பது மிகவும் கடினம். பெரியவர்கள் தொடர்ந்து உங்களிடம் எதையாவது எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள், பெரிதாகச் சாதிக்கும் இளைஞர்களையெல்லாம் உதாரணமாகக் காட்டி, நீங்களும் அப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மிகவும் எளிய காரணிகளின்மூலம் உங்களுடைய மதிப்பைக் கணக்கிட்டுவிடமுடியும் என்பதுபோல் மக்கள் நடந்துகொள்கிறார்கள். இந்த அழுத்தத்தின்கீழ் சிலர் உடைந்துபோவது சாத்தியமே.

மற்றவர்களை விடுங்கள், அவர்களுடைய தலைக்குள்ளேயே அழுத்தம் அதிகமாக இருக்குமே. அவர்கள் எப்போதும் தங்களைத் தாங்களே பிறருடன் ஒப்பிட்டுக்கொள்வார்கள். தாங்கள் நுழையும் ஒவ்வொருதுறையிலும் தவறே செய்யாத, எதிலும் வெல்கிற ஓர் எதிரியைக் கண்டுபிடித்து, அவர்களோடு தங்களை ஒப்பிட்டுக்கொள்வார்கள், அதன்மூலம் தாங்கள் எதற்கும் பயனற்றவர் என்று எண்ணிக்கொள்வார்கள். நானும் சில சமயங்களில் அப்படிச் செய்வதுண்டு, அது மிகவும் களைப்பைத் தூண்டுகிற ஒரு விஷயம். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், யார் என்ன பேசினாலும் இதை நான் முழுவதுமாக நிறுத்திக்கொள்ள இயலாது என்று தோன்றுகிறது.

நான் என் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள விரும்புகிறேன்? 'வெற்றி' மற்றும் 'தோல்வி' ஆகியவற்றுக்கு நான் தரும் பொருள் என்ன? இவை கொஞ்சம் சிக்கலான விஷயங்கள், இவற்றுக்கு நாமே வரையறைகளை அமைத்துக்கொள்வது கடினம், குறிப்பாக, அவை உங்களுடைய பெற்றோரின் வரையறைகளுடன் பொருந்தாவிட்டால், இது மேலும் கடினம்.

இத்துடன், அறம்சார்ந்த குழப்பங்கள் வேறு. சரியாகப் பள்ளியில் வேலை அதிகமாக உள்ளபோதுதான் இவை நம்மை வந்து தாக்குகின்றன. நாம் அறத்துக்கு மாறான விஷயங்களைச் செய்ய விரும்பாவிட்டால், நாம் பொதுச்சிந்தனையோடு பொருந்துவதில்லை, அதனால் நாம் தனிமையாக உணர்கிறோம். சிலரால் பள்ளி தரும் அழுத்தத்தைத் தாங்க இயலுவதில்லை, எதையாவது செய்யலாம் என்று தீர்மானித்துவிடுகிறார்கள், சக நண்பர்களின் அழுத்தத்துக்கு இடம்கொடுத்துவிடுகிறார்கள், நீரோட்டத்தோடு செல்லத் தீர்மானிக்கிறார்கள்.

சூழ்நிலைகளும் சரி, மக்களும் சரி, கருப்பு, வெள்ளையாக இருப்பதில்லை, அவர்கள் குழப்புகின்ற சாம்பல் நிறத்திலும் இருக்கலாம். என்னுடைய நம்பிக்கை அமைப்பானது ஒரு பெரிய எழுச்சிக்கு உட்பட்டது, இப்போதும், பெரியவர்கள் முற்றிலும் தவறு என்று சொல்கிற பல விஷயங்களை என்னால் அப்படி வரையறுக்க இயலுவதில்லை. அதேபோல், பெரியவர்கள் எல்லாவற்றைப்பற்றியும் சரியாகவே சிந்திக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.

சில நேரங்களில், என்னுடைய பிரச்னைகள் தீரவே தீராது என்று தோன்றுகிறது. அவற்றின் அளவு கிறுகிறுக்கவைக்கிறது. ஒருவேளை, அந்தப் பிரச்னைகள் என் மூளைக்குள் அங்குமிங்கும் பட்டுப் பிரதிபலிக்கின்றனவோ? எதிரொலிக்கின்றனவோ? அதனால்தான் நான் இப்படி உணர்கிறேனோ? ஆனால், சில சமயங்களில் நான் யோசிக்கிறேன், பதின்பருவத்தில் இருக்கிற ஒருவர் இப்படிதான் உணரவேண்டுமா?

இது ஒரே ஒரு பெண்ணின் கதைதான். பதின்பருவத்தில் உள்ள ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த லென்ஸின்வழியே வாழ்க்கையைப் பார்க்கிறார், அவருக்குள் பல கேள்விகள் உள்ளன, அவற்றுக்கு அவர் பதில்களை எதிர்பார்க்கிறார் என்பது எனக்குத் தெரியும். அடுத்த சில வாரங்களில், பதின்பருவத்தில் உள்ள இளைஞர்களின் மனநலம்பற்றிய பிரச்னைகளைப்பற்றி இந்தப் பத்தியில் பேச முனைவோம்.

டாக்டர் ஷ்யாமளா வட்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் இயங்கிவருகிறார். இளைஞர்களைப்பற்றிய இந்தப் பத்தி, பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை இங்கே இடம்பெறும். உங்களுக்கு ஏதேனும் கருத்துகள் அல்லது கேள்விகள் இருந்தால், columns@whiteswanfoundation.org என்ற முகவரியில் அவருக்கு எழுதலாம்

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org