வாழ்வோட்டம்!

"எல்லாமே ஸ்லோ மோஷனில் மெதுவாக நடப்பதுபோல் தோன்றுகிறது" என்றார் அமெரிக்க பேஸ்கட்பால் சூப்பர்ஸ்டார் கோப் ப்ர்யன்ட், "இந்தக் கணத்தை அனுபவித்து வாழவேண்டும், அதுதான் உங்கள் விருப்பம். இந்தக் கணத்திலிருந்து நீங்கள் சற்றும் நகர விரும்புவதில்லை. காரணம், அப்படி நகர்ந்தால் உங்களுடைய ஓட்டம் நின்றுவிடும் என்று நினைக்கிறீர்கள்." சுமார் அரைநூற்றாண்டுகாலத்துக்குமுன், இன்னொரு தொழில்துறையைச்சேர்ந்த கலைஞரும் இதுபற்றிப் பேசியுள்ளார். புகழ்பெற்ற ஓவியரான பால் க்லீதான் அது, "என்னைச்சுற்றியிருக்கும் மற்ற எல்லாம் மறைந்துவிடுகின்றன. என்னுடைய படைப்புகள் வெற்றிடத்திலிருந்து தோன்றுவதுபோல் பிறக்கின்றன... யாரோ தொலைவிலிருந்து என் கையை இயக்குகிறார்கள், அது ஒரு கருவியைப்போல் இயங்குகிறது."

நீங்கள் தொழில்முறை விளையாட்டுவீரராக இல்லாமலிருக்கலாம், ஓவியராக இல்லாமலிருக்கலாம், ஆனால் எப்போதாவது நீங்கள் மகிழ்வோடு "உங்களையே மறக்குமளவு" ஒரு வேலையில் ஈடுபட்டதுண்டா? நேரம் முற்றிலும் மறைந்துவிடுவதுபோல் உணர்ந்ததுண்டா? ஆம் எனில், நீங்கள் ஓட்டவுணர்வை அனுபவித்திருக்கிறீர்கள் என்று பொருள். இன்றைக்கு இந்த உணர்வின் தனிப்பட்ட மற்றும் நிறுவனம்சார்ந்த பலன்களைப்பற்றிப் பல ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. தினசரி வாழ்க்கையில் இத்தகைய தருணங்கள் சலிப்பை விரட்டுகின்றன என்பதால், மக்களின் மகிழ்வைப் பெருக்க இவை நன்கு பயன்படும்.

நேர்வித உளவியலின் இந்த முக்கியமான கொள்கைக்கும், முன்பு பிரபலமாக இருந்த "வாழ்க்கையோட்டத்தோடு செல்லுங்கள்" என்ற வாசகத்துக்கும் தொடர்பில்லை என்று சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். இந்தக் கொள்கையை உருவாக்கியவர், டாக்டர் மிஹலி ஸ்சிக்ஜென்ட்மிஹல்யி. இவர் தனது சொந்த வாழ்வனுபவத்தின் அடிப்படையில் தொடங்கி, பல வருட ஆய்வுக்குப்பிறகு இதனை உருவாக்கினார். ஹங்கேரியில் பிறந்த இவருடைய இளமைக்காலம் பெரிதும் இரண்டாம் உலகப்போர்ச் சிறைச்சாலை முகாம் ஒன்றில் சென்றது. அங்கே அவர் அனுபவித்த, கண்ட துயரங்களையெல்லாம் கடந்துசெல்லச் சதுரங்கம் உதவியது. இதனை அவர் கவனித்தார். டாக்டர் ஸ்சிக்ஜென்ட்மிஹல்யி பின்னர் ஒரு பேட்டியில் இதுபற்றிப் பேசினார், "சதுரங்கம் என்னை ஓர் அருமையான உலகினுள் கொண்டுசென்றது. அங்கே இந்த [கொடுமையான] விஷயங்கள் பெரிதாகத் தோன்றவில்லை. பல மணிநேரங்கள் நான் சதுரங்கத்தில்மட்டுமே கவனம் செலுத்துவேன், காரணம், அங்கே விதிமுறைகளும் இலக்குகளும் தெளிவாக இருந்தன." பின்னர், அவரது பதின்பருவத்தில் ஸ்சிக்ஜென்ட்மிஹல்யி ஓவியத்தில் கவனம் செலுத்தினார், ஓவியம்தீட்டும் பணியும் அவருக்கு மகிழ்வைத் தந்தது, அதில் ஆழ்ந்து தன்னை மறந்தார். 1965ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றபின்னர், அவர் கலைஞர்கள் மற்றும் பிற படைப்புணர்வுள்ள மனிதர்களைப்பற்றிய முன்னோடி ஆய்வுகளை நிகழ்த்தினார். கொஞ்சம்கொஞ்சமாக, அவரது ஆய்வு ஓட்டம் என்கிற கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதனை ஸ்சிக்ஜென்ட்மிஹல்யி இவ்வாறு வரையறுத்தார்: "நாம் ஒரு வேலையில் மிகவும் ஆழமாக மூழ்கும் நிலை. அப்போது வேறெதுவும் முக்கியமில்லை என்று தோன்றுகிற நிலை. அதில் கிடைக்கும் மகிழ்ச்சியால், மக்கள் அதைத் தொடர்ந்து செய்வார்கள், இதைச் செய்தால்மட்டும் போதும், சுற்றி என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அதில் ஈடுபடுவார்கள்." இந்த வரையறையில் தொடங்கி,  நேர்வித வாழ்க்கையின் இந்த முக்கியமான அம்சத்தின் அறிவியல் ஆய்வுகளை வழிநடத்தியுள்ளார் ஸ்சிக்ஜென்ட்மிஹல்யி.

ஓட்டத்தின் அம்சங்கள்

ஓட்ட அனுபவத்தை எப்படி அறியலாம்?  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் சூசன் ஜாக்ஸன், டாக்டர் ஹெர்பெர்ட் மார்ஷ் இருவரும் 1996ல் இதுபற்றிய ஒரு வரையறையை உருவாக்கினார்கள். இது பெரும்பாலும் தடகள வீரர்களுடைய "ஒரு விசேஷ இடத்திலிருத்தல்" அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது ஒன்பது அம்சங்களை அடையாளம் கண்டது:

1) சவால்-திறன் சமநிலை. இதில் ஈடுபடுபவர் சூழலின் சவாலையும் தன் திறனையும் சமநிலைப்படுத்திக்காண்கிறார். இரண்டும் உயர்நிலையில் செயல்படக்காண்கிறார். சவால் மிகவும் கடினமாக இருந்தால், நமக்கு எரிச்சல் வருகிறது, பதற்றம் வருகிறது, அல்லது, நாம் ஏமாற்றமடைகிறோம். ஆனால், சவால் மிக எளிதாக இருந்துவிட்டால், நம் கவனம் சிதறுகிறது, நமக்குச் சலிப்பு ஏற்படுகிறது.

2) செயல்-விழிப்புணர்வு ஒருங்கிணைதல். இதில் ஈடுபடுபவர் ஓட்டச் செயல்பாட்டில் மிகவும் ஆழமாக ஊன்றிவிடுகிறார், இதனால் அது இயல்பாகிவிடுகிறது. இதுபற்றித் தொழில்முறைத் தடகளநிபுணர்களிடம் பேசினால், "தாங்கள் ஓட்டத்திலிருப்பதாக"வும், "எல்லாம் தானாக நடப்பதாக"வும் சொல்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தன்முனைப்பு கரைந்து சென்றுவிடுகிறது.

3) தெளிவான இலக்குகள். இதில் ஈடுபடுபவருக்குத் தான் என்ன செய்யப்போகிறோம் என்பதைப்பற்றி ஒரு தெளிவான எண்ணம் இருக்கிறது. இலக்குகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அவை முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கலாம், அல்லது, அந்தச் செயலில் ஈடுபடுவதன்மூலம் உருவாகலாம். போட்டி விளையாட்டுகளில் இந்த அம்சத்தை அதிகம் பார்க்கலாம். காரணம், அங்கே இலக்கு தெளிவானது: போட்டியில் வெல்வது.        

4) குழப்பமற்ற எதிர்வினை/கருத்து. இதில் ஈடுபடுபவர் உடனடியாக, தெளிவான எதிர்வினையை/கருத்தைப் பெறுகிறார், இது பொதுவாக அந்தச் செயலிலிருந்தே கிடைக்கிறது. இதனால், தான் அந்த வேலையை எந்த அளவு சிறப்பாகச் செய்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இதுபற்றிய ஆய்வுகளில் படகோட்டும் வீரர் ஒருவர் சொன்னது, "என்னுடைய அசைவுகளிலிருந்தே நான் சரியான வேகத்தில் செல்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது." 

5) கையிலிருக்கும் வேலையில் கவனம் செலுத்துதல். ஓட்டத்தின்போது, அதில் ஈடுபடுவர் முழுக் கவனத்துடன் இருக்கிறார், கவனச்சிதறல்கள் அவரைத் தொந்தரவு செய்வதில்லை. உண்மையில், இந்த முழுக் கவனமானது ஓட்ட அனுபவத்தில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஓர் அம்சமாகும்.

6) கட்டுப்பாட்டு உணர்வு.  இதில் ஈடுபடுவர் தான் இந்தப் பணியில் சிறந்து விளங்குவதாகவும், முழுத்திறனுடன் இருப்பதாகவும் உணர்கிறார். அதேசமயம், தன்னுடைய திறன்களை முன்னோக்கித் தள்ளவேண்டிய உணர்வு இவருக்கு இருப்பதில்லை. அதாவது, கட்டுப்பாட்டு உணர்வானது முயற்சி ஏதும் இன்றி வருவதாக அவர் உணர்கிறார்.

7) தன்னுணர்வை இழத்தல். ஓட்ட அனுபவங்களின்போது, அதில் ஈடுபடுவர் பொதுவாகத் தன்னுடைய செயல்திறனைப் பிறருடன் ஒப்பிடுவதுபற்றிக் கவலைப்படுவதை நிறுத்துகிறார். அதற்குப்பதிலாக, தானே அந்தப் பணியுடன் கலந்துவிடுகிறார், தன்முனைப்பு கலைந்துவிடுகிறது, அல்லது, முற்றிலும் மறைந்துவிடுகிறது.

8) நேரம் மாறுதல். இதில் ஈடுபடுவோருக்கு ஏதோ மாயம்போல, நேர உணர்வு மாறுகிறது, அதாவது, நேரம் மெதுவாவதுபோலவோ விரைவாவதுபோலவோ தோன்றுகிறது. உதாரணமாக, பேஸ்பால் விளையாடுவோர் 'பந்து எங்களை நோக்கி மிதந்துவருவதுபோல் உணர்ந்தோம்' என்கிறார்கள். சைக்கிள் ஓட்டுகிறவர்கள் அந்த நிகழ்வு 'திடீரென்று தோன்றியது' என்கிறார்கள்.  

9) ஆட்டோலெடிக் அனுபவம். 'ஆட்டோலெடிக்' என்கிற தொழில்நுட்பச் சொல்லை உருவாக்கியவர் ஸ்சிக்ஜென்ட்மிஹல்யி. இது ஆட்டோ(தானே) மற்றும் டெலோஸ் (இலக்கு) என்ற இரு கிரேக்கச் சொற்களிலிருந்து வருகிறது. இதன் பொருள், ஒரு செயலைச்செய்கிற அனுபவமே அதில் ஈடுபடுபவருக்குத் திருப்தியளிக்கிறது. அது இன்னொன்றை நோக்கிச் செல்வதாக அமைவதில்லை.

ஒரே ஓட்ட அனுபவத்தில் இந்த அம்சங்கள் எல்லாம் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால்,  ஓட்ட அனுபவத்தை உண்டாக்குவதற்கு, இவற்றில் சில விஷயங்கள் மற்றவற்றைவிட முக்கியமோ? இதுபற்றி ஒருமித்த பார்வை இன்னும் உருவாகவில்லை. ஆனால், சவால்-திறன் சமநிலை, கையிலிருக்கும் வேலையில் கவனம் செலுத்துதல், தன்னுணர்வை இழத்தல் மற்றும் ஆட்டோலெடிக் அனுபவம் ஆகியவை மிகவும் முக்கியம் என்பது பொதுவான கருத்து.    

ஓட்ட அனுபவங்களைப்பற்றிப் பேசினால், பலரும் அதை ஒரு புதிராகப் பார்க்கிறார்கள், அது தங்களுக்குத் தெரிந்த ஒன்றாகவும் நினைக்கிறார்கள். ஆனால், இவற்றால் மக்களின் நலன் மேம்படுகிறதா? கண்டிப்பாக மேம்படுகிறது! உதாரணமாக, சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜுடித் லெஃபெவ்ரெ நிகழ்த்திய ஒரு முக்கியமான ஆய்வைப் பார்ப்போம். இந்த ஆய்வில் பங்கேற்றோர் ஓட்டத்தில் அதிக நேரம் செலவிடச் செலவிட, நாள்முழுக்க அவர்கள் அனுபவித்த நேர்வித உணர்வுகள் அதிகரித்தன, அவர்களுடைய கவனம், படைப்புத்திறன், நல்ல மனோநிலை ஆகியவை மேம்பட்டன. சியோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சியோன்கியெல் ஹன் மூத்தோர்மத்தியில் ஓட்டவுணர்வுபற்றிய ஆய்வொன்றை நிகழ்த்தினார். அடிக்கடி ஓட்டவுணர்வை அனுபவிக்கும் கொரிய மூதாட்டிகள், எப்போதாவது ஓட்டவுணர்வை அனுபவிக்கிற அல்லது அதுபற்றி அறிந்திராத கொரிய மூதாட்டிகள் ஆகியோர் எந்த அளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அவர் ஆராய்ந்தார். இதில் ஓட்டவுணர்வை அடிக்கடி அனுபவிக்கிறவர்கள் அதிக மகிழ்ச்சியோடு இருப்பதும், தனிமையுணர்வைக் குறைவாக அனுபவிப்பதும் தெரியவந்தது, மேலும், இவர்கள் தங்களுடைய வயதுபற்றித் தெளிவான உணர்வோடு இருந்தார்கள், அதனை ஏற்றுக்கொண்டார்கள்.

ஓட்டத்தை உருவாக்குதல்

இதுபற்றி நிகழ்ந்துள்ள பல ஆய்வுகளில் நமக்குத் தெரியவரும் விஷயம், ஓட்டவுணர்வானது எல்லா வயதினர்மத்தியிலும் மகிழ்ச்சியை, சுய மதிப்பை உருவாக்குகிறது. இந்த ஒரு விஷயம் போதும், இத்தகைய தருணங்களை நாம் உருவாக்கி, நமது தினசரி வாழ்க்கையில் இணைத்துக்கொள்ளலாம். இதனால் மகிழ்ச்சியும் தன்னைப்பற்றிய பெருமிதவுணர்வும் கிடைக்கிறது என்றால் மகிழ்ச்சிதானே? இன்னொரு முக்கியமான விஷயம், ஓட்டவுணர்வால் நம்முடைய சலிப்புணர்வு குறைகிறது. சலிப்புணர்வுடன் தொடர்புடைய பல உணர்வு, உடல்சார்ந்த பிரச்னைகளை இதனால் வெல்லலாம்.  ஓட்டவுணர்வை முன்கூட்டியே அறிய இயலாது, அது எதேச்சையாக நடக்கும் விஷயம் என்று பலர் சொல்கிறார்கள். அது தவறு. நாம் நினைத்தால், நம் வாழ்வில் ஓட்டவுணர்வை உருவாக்கலாம், அது நிகழும் சாத்தியங்களை அதிகரிக்கலாம்.

அதற்கான சில வழிகள் இங்கே:

1) நீங்கள் இதற்குமுன் ஓட்டவுணர்வை அனுபவித்த ஒரு நாளைப்பற்றி எழுதுங்கள். உதாரணமாக, அது சில வாரங்கள் முன்பாக நிகழ்ந்த ஒரு விஷயமாக இருக்கலாம். அது அலுவலகப்பணியாக இருக்கலாம், வீட்டுவேலையாக இருக்கலாம், ஓர் இயற்கைக்காட்சியாக இருக்கலாம், ஓவியம், நடனம் போன்ற ஒரு கலைசார்ந்த விஷயமாக இருக்கலாம், அல்லது, ஒரு பொழுதுபோக்கு விளையாட்டில் பங்கேற்றதாக இருக்கலாம். உங்களால் இயன்றவரை முழுமையாக அந்த நிகழ்வை விவரியுங்கள்: அது எங்கே நடந்தது? எப்போது நடந்தது? உங்களுடன் யார் இருந்தார்கள்? அது எவ்வளவு நேரம் நடந்தது? அதன் இலக்கு என்ன?

2) அந்த அனுபவத்தை நீங்கள் மீண்டும் சிந்தித்துப்பார்க்கும்போது, அதில் ஓட்டத்துக்கு அடிப்படைத்தேவையான சவால் Vs திறன் என்கிற அம்சம் இருந்ததா? அல்லது, அந்த வேலை உங்களுக்கு எந்த அளவு சவாலாக இருந்தது? உணர்வுப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக அல்லது உடல்சார்ந்த சவாலை அது ஏற்படுத்தியதா? அதில் நீங்கள் உங்கள் முழுத்திறனையும் (மன அல்லது உடல் திறன்) செயல்படுத்திப் பணியாற்றவேண்டியிருந்ததா? அல்லது, ஓரளவு திறனைச் செலுத்தினால் போதுமாக இருந்ததா?

3) நீங்கள் உங்களுடைய ஓட்ட அனுபவத்தின் அடிப்படை அம்சங்களை உணர்ந்துவிட்டீர்கள். இது அடிக்கடி நிகழவேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்யலாம்? ஓட்ட அனுபவம் எங்கே அதிகம் நிகழ்கிறது? அலுவலகத்திலா? வீட்டுவேலையிலா? ஓவியம் அல்லது இசை போன்றவற்றிலா? இயற்கையைப் பார்க்கும்போதா? விளையாடும்போதா? ஓட்ட அனுபவம் நேரம்/இடத்தைப்பொறுத்து மாறுகிறதா? நீங்கள் தனியாக இருந்தால் அந்த அனுபவம் ஏற்படுகிறதா? அல்லது, பிறர் உங்களுடன் இருந்தால் அந்த அனுபவம் கிடைக்கிறதா? அல்லது, எப்படியிருந்தாலும் பரவாயில்லையா? இப்படிச் சிந்தித்துச் செயல்பட்டால், ஓட்டவுணர்வை அதிகம் கொண்டுவரலாம், உங்கள் வாழ்வை உயர்த்தலாம்.

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் கூடுதல் இணை உளவியல் பேராசிரியர். உரிமம்பெற்ற மருத்துவ உளவியலாளரான இவர், தனிச்சேவை புரிந்துவருகிறார். உளவியல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து நேர்வித உளவியல்: மகிழ்ச்சி, மலர்ச்சியின் அறிவியல் என்ற நூலை எழுதியுள்ளார். இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதாபிமான உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றுகிறார். நீங்கள் அவரைத் தொடர்புகொள்ள இந்த மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org