We use cookies to help you find the right information on mental health on our website. If you continue to use this site, you consent to our use of cookies.
டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

ஆரோக்கிய உள்ளம்

நன்றியுணர்வு: ஒவ்வொருவருக்கும் மிக அவசியம் - டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் எதற்கு மிகவும் அதிகம் நன்றி செலுத்துகிறார்? அவர் எப்போதெல்லாம் நன்றியுணர்வை அனுபவிக்கிறார்? அதனை அவரால் எந்த அளவு எளிதாக வெளிப்படுத்த இயலுகிறது? நேர்முக உளவியல் என்பது ஒரு புதிய துறை. அதற்கு இத்தகைய கேள்விகள் முக்கியமாக அமைவதில் ஆச்சர்யமில்லை. மனித சரித்திரம்முழுவதும் பல கலாசாரங்களில் மிகவும் மதிக்கப்பட்டுள்ள உணர்ச்சியான நன்றியுணர்வு, நேர்முக உளவியலுக்கு மிகவும் முக்கியமாகிறது.

குறிப்பாக, இந்தியாவில் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக, 1200 ஆண்டுகளுக்குமுன்னால் ஒரு ஹிந்துக் கவிஞர், தத்துவஞானியால் எழுதப்பட்ட குறள் என்கிற தமிழ் நூல், தினசரி வாழ்க்கையில் நன்றியுணர்வைப்பற்றி ஒரு தனி அதிகாரம் அமைத்துப் பேசுகிறது, அதில் இடம்பெற்றுள்ள ஒரு வாசகம்: “மனிதன் மற்ற எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டுவிடலாம், ஆனால், நன்றி மறந்த பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது” (Readings from Thirukkural எழுதியவர் GN தாஸ், p.32).

சமகாலச் சிந்தனையாளர், வட அமெரிக்க ஹிந்து கோயில் கழகத்தின் தலைவர் டாக்டர் உமா மைசூர்கர், “ஹிந்து பாரம்பரியத்தில் நன்றியுணர்வுக்கு ஒரு மிகப் பெரிய இடம் உண்டு." என்கிறார். "இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒருவர் தனக்குக் கிடைத்திருக்கிற எல்லாவற்றையும் எண்ணி நன்றியுணர்வுடன் இருக்கவேண்டும், அதேசமயம், அவர் பிறரிடமிருந்து எந்த நன்றியுணர்வையும் எதிர்பார்க்கக்கூடாது. எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கவேண்டும் என்றுதான் ஹிந்து கலாசாரம் சொல்லித்தருகிறது.” உலகின் பிற சிறந்த மதங்களும் நன்றியுணர்வை வலியுறுத்துகின்றன. மேற்கத்திய தத்துவப் பாரம்பரியத்தைப் பார்த்தால், பழங்கால கிரேக்கத் தத்துவஞானி சிசெரோ “நன்றியுணர்வு என்பது நல்லொழுக்கங்களில் மிகச்சிறந்ததுமட்டுமல்ல, மற்ற நல்லொழுக்கங்களின் பிறப்பிடமே அதுதான்.” என்றார்.

ஆனால், சமீபகாலம்வரை உளவியல்துறை இதைப்பற்றி மிகக் குறைவாகவே பேசிவந்தது. இதில் ஒரு விதிவிலக்கு, அமெரிக்கக் கோட்பாட்டாளர் ஆப்ரஹாம் மாஸ்லோ. 20ம் நூற்றாண்டின் மத்தியில், சுய-இயல்பாக்கம் கொண்ட (மிகவும் செயல்திறன் வாய்ந்த, படைப்புத்திறன் கொண்ட, தானே வேண்டியதை நிறைவேற்றிக்கொள்ளும்) ஆண்கள், பெண்களை ஆராய்ந்தார் இவர், அந்த ஆய்வுகளின் அடிப்படையில், ஒருவர் எளிதில் நன்றியுணர்வை உணர்வது, வெளிப்படுத்துவது ஆகியவை மன நலத்துக்கு அவசியம் – அவ்வாறு செய்ய இயலாமல் சிரமப்படுகிறவர்களுக்கு இந்தப் பண்பைக் கற்றுத்தர இயலும் என்று அவர் தெரிவித்தார். நன்றியுணர்வை வளர்க்கும் முறைகளையும் இவர் சொல்லித்தந்தார். உதாரணமாக, ஒருவர் தன்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவுக்குக் கொண்டுவருதல், பூமியில் தனக்கு இன்னும் சிறிது காலம்தான் உள்ளது என்று கற்பனை செய்துகொள்வது போன்றவை. மாஸ்லோவின் பார்வையில், 'ஒருவர் தனக்குக் கிடைத்த வரங்களை எண்ணி மகிழவேண்டும்' என்ற பழமொழி மிகவும் முக்கியமானது.

இன்றைக்கு உலக அளவில் நன்றியுணர்வுபற்றி ஆராயும் ஆய்வாளர்களிடையே முக்கியமான ஒருவர், D avis, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் எம்மான்ஸ். அவரும் அவருடைய சக பணியாளர்களும் இணைந்து, நன்றியுணர்வுள்ளவர்கள் தினசரி வாழ்க்கையின் பல முக்கியமான பகுதிகளில் உளவியல்ரீதியில் நல்ல பலன் பெறுகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளார்கள். உதாரணமாக, மகிழ்ச்சி, நேர்ச்சிந்தனை, சுறுசுறுப்பு போன்ற சிறந்த, தனிப்பட்ட நலன்கள், பிறருடன் நெருங்கிய உறவுகள், அனைத்து உயிர்களுடனும் தான் ஒரு வலுவான பிணைப்பில் உள்ளோம் என்கிற உணர்வு, தனிப்பட்ட சொத்துகளை எண்ணி அதிகம் கவலைப்படாமலிருத்தல் போன்றவை. இந்தவிதத்தில் பார்த்தால், நன்றியுணர்வு என்பது பொறாமையுணர்வைக் குறைக்கிறது.

திருமணம் போன்ற காதல் உறவுகளிலும் இது பொருந்துமா? கணவன், மனைவி இடையே ஒருவர்மேல் ஒருவர் மிகுந்த நன்றியுணர்வு இருக்கும்போது, அவர்களுக்கிடையில் அதிகச் சண்டைகள் வராது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. யோசித்துப்பார்த்தால், இது சரியாகவே தோன்றுகிறது: ஒருவர் தன் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு நபர்மீது நன்றியுணர்வுபோன்ற ஒரு வலுவான, நேர்விதமான உணர்வோடு இருந்தால், கோபம் அல்லது ஏமாற்றம் போன்ற எதிர்மறை உணர்வுகளுக்கு அதிக இடம் இருக்காது. சாபெல் ஹில் வட கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சாரா அல்கோ மற்றும் அவரது சக பணியாளர்கள் இதுபற்றி ஒரு முக்கியமான ஆய்வை நிகழ்த்தியுள்ளார்கள். அவர்கள் கண்டறிந்தது, ஒருவர் தனது காதல் துணைமீது நன்றியுணர்வுடன் இருந்தால், அது அவர்களுடைய உறவை மேம்படுத்துகிறது; அதாவது தினசரி சின்னச்சின்ன விஷயங்களில் கணவன், மனைவி வெளிப்படுத்தும் எளிய நன்றியுணர்வானது காதலுணர்வைத் தூண்டும். இதனால், பல திருமண மற்றும் குடும்ப நிபுணர்கள் தம்பதியரிடம் பேசும்போது, அவர்கள் தங்களுக்குள் தினசரி நன்றியுணர்வை வெளிப்படுத்தவேண்டும் என்கிறார்கள், அதன்மூலம் அவர்களுக்கிடையிலான பிணைப்பு வலுப்பெறும் என்கிறார்கள். இது தெரியாமல், சில தம்பதியர் சும்மா வெளியூர் சென்றுவந்தால் போதும் என்று நினைக்கிறார்கள், அத்தகைய சிறு மாற்றங்களால் கிடைக்கும் பலன்கள் சில நாள்களுக்குதான் இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, அதற்குப்பதிலாக, நன்றியுணர்வை வெளிப்படுத்தத் தொடங்கினால், அதற்கு நீண்டநாள் நோக்கில் வலுவான பலன் இருக்கும்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர் மார்ட்டின் செலிக்மனும் அவரது சக பணியாளர்களும் நன்றியுணர்வின்மூலம் நலனை மேம்படுத்துவதற்குப் பல வழிகளை உருவாக்கியுள்ளார்கள். இவற்றுள் மிக வலுவான ஒன்று, 'நன்றியுணர்வுப் பயணம்'. அதாவது, ஒருவர் தான் மிகவும் நன்றிசெலுத்த விரும்புகிற ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் – உதாரணமாக, ஓர் ஆசிரியர், நண்பர் அல்லது உறவினரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் – பிறகு, தனது உணர்வுகளை வெளிப்படுத்தி அவருக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும், அதை அவரிடம் நேரில் தரவேண்டும். இந்த 'நன்றியுணர்வுப் பயணம்' மிக அழகான, தீவிரமான அனுபவங்களை உண்டாக்கியுள்ளது, இதனால் பல மாதங்களுக்குப்பிறகும் பலன்கள் கிடைக்கக்கூடும் என்று தெரிகிறது.

வழிநடத்தப்படும் செயல்பாடுகள்

ஒருவர் தனது தினசரி வாழ்க்கையில் எந்த அளவு நன்றியுணர்வைக் கொண்டுவருகிறாரோ, அந்த அளவு அவரது மகிழ்ச்சிக்கும் நலனுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனைச் செய்வதற்கான ஐந்து சிறந்த வழிகள்:

1) ஒரு நன்றியுணர்வுப் பட்டியலை உருவாக்கலாம். அடுத்த நான்கு வாரங்களுக்கு, ஒவ்வொரு வாரமும் சிறிது நேரம் செலவிட்டு ஒரு பட்டியலை உருவாக்கலாம்: வாழ்க்கையில் எதற்கெல்லாம் தான் நன்றியுடன் இருக்கிறோம் என்று சிந்தித்துப் பட்டியலிடலாம். அந்தப் பட்டியலில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம், அத்துடன், ஒருவர் தனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட நல்ல விஷயங்களையும் சேர்க்கலாம். உதாரணமாக, ஆரோக்கியம், பணிகள், தனிப்பட்ட திறன்கள், ஆர்வங்கள் போன்றவை.

2) ஒரு நன்றியுணர்வு நாட்குறிப்பை எழுதலாம். ஒவ்வொருவரும், ஒவ்வோர் இரவும் தூங்கச்செல்வதற்குமுன்னால், அன்றைய தினம் தன்னை மிகவும் நன்றியுடன் எண்ணச்செய்த ஒரு நிகழ்வை எழுதவேண்டும். அது ஒரு மிகப்பெரிய நிகழ்வாக, நாடகத்தனமானதாக இருக்கவேண்டியதில்லை. உதாரணமாக, அன்றைக்கு அவர் மிக வேகமாக அலுவலகம் சென்றிருக்கலாம், அல்லது, அவர் தபால் அலுவலகத்தில் காத்திருந்தபோது, அவருடைய வரிசை வேகமாக நகர்ந்திருக்கலாம், அதை எண்ணி அவர் நன்றிசொல்ல விரும்பலாம்.. இங்கே முக்கியமான விஷயம், தினமும் எழுதுவதுதான், இப்படித் தொடர்ந்து எழுதிவந்தால், ஒருவருடைய 'நன்றியுணர்வுப்பண்பு' வளரும். இந்தப் பழக்கத்தை மேலும் வலுவாக்கவேண்டுமென்றால், நாட்குறிப்பு எழுதுவதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும்.

3) ஓர் உறவினருக்கு ஒரு நன்றியுணர்வுக் கடிதம் எழுதலாம். திருமணமானவர்கள், தங்கள் கணவர்/மனைவிக்கு எழுதலாம். திருமணமாகாதவர்கள் பெற்றோருக்கோ உடன்பிறந்தோருக்கோ எழுதலாம். அந்தக் கடிதத்தில் பொதுவான உணர்வுகளும் இருக்கலாம், ஆனால், குறிப்பாக சில விஷயங்களையும் எழுதவேண்டும், அதாவது, முந்தைய ஒரு மாதத்தில் நிகழ்ந்த ஒரு விஷயத்தையாவது குறிப்பிடவேண்டும். உதாரணமாக, “என்னுடைய அலுவலகத்தில் நான் சந்தித்த பிரச்னைக்கு நீங்கள் சொன்ன ஆலோசனையும், அதற்காக நீங்கள் செலவிட்ட நேரத்தையும் எண்ணி நான் நன்றி செலுத்துகிறேன்.”

4) ஒரு நண்பருக்கு ஒரு நன்றியுணர்வுக் கடிதம் எழுதலாம். என்னதான் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக்கொள்வதற்கான, அவர்களுடைய முக்கியத்துவத்தைத் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமில்லை. இதனைச் சரிசெய்தாகவேண்டும். ஒருவர் தனது நண்பரை நன்கு கவனித்துக்கொள்கிறார், நல்ல துணையாக இருக்கிறார், அக்கறையோடு செய்ல்படுகிறார் என்றால், அதற்காக அவருக்கு நன்றி சொல்லலாம், அவர் நிச்சயம் மகிழ்வார். ஆகவே, ஒவ்வொருவரும் தனக்கு நெருங்கிய ஒரு நண்பரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அவருக்குத் தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தி ஒரு தனிப்பட்ட, கையால் எழுதிய கடிதத்தை அனுப்பவேண்டும். செயல்பாடு #2ஐப்போகவே, இங்கேயும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வைத் தெரிவித்து எழுதுவது நல்லது.

5) நன்றியுணர்வைப் பின்பற்றுவதாக ஒரு சத்தியம் செய்துகொள்ளலாம். ஒருவர் ஏதோ ஒன்றைச் செய்ய விரும்புகிறார் என்றால், அதைச் செய்யப்போவதாக அவர் தனக்குத்தானே வாக்குறுதி தந்துகொள்ளவேண்டும். இதன்மூலம், அவர் அதனைச் செய்கிற வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, ஒவ்வொருவரும் தனது நன்றியுணர்வு வாக்குறுதியை எழுதிக்கொள்ளவேண்டும், அது மிக எளிமையாக இருந்தால் போதும், உதாரணமாக “நான் ஒவ்வொரு நாளும் எனக்குக் கிடைத்திருக்கும் வரங்களை எண்ணி மகிழ்வேன்,” இப்படி எழுதி, வீட்டில் நன்றாக எல்லாருக்கும் தெரிகிற ஓர் இடத்தில் அதை மாட்டிவிடவேண்டும்.

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் கூடுதல் இணை உளவியல் பேராசிரியர். உரிமம்பெற்ற மருத்துவ உளவியலாளரான இவர், தனிச்சேவை புரிந்துவருகிறார். உளவியல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து நேர்வித உளவியல்: மகிழ்ச்சி, மலர்ச்சியின் அறிவியல் என்ற நூலை எழுதியுள்ளார். இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதாபிமான உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றுகிறார். நீங்கள் அவரைத் தொடர்புகொள்ள இந்த மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org