வளர் இளம் பருவம்

வளர்இளம்பருவப் பிள்ளைகளும் பெற்றோரின் சவால்களும்

மௌலிகா ஷர்மா

என் மகளுக்கு வயது பதினேழு. இன்னும் ஆறே மாதத்தில், அவள் பதினெட்டு வயதைத் தொட்டுவிடுவாள். என்னது! இது நிஜமா? அவளுடைய வளர்இளம்பருவம் என்கிற கண்ணிவெடிக்களத்தை நான் கிட்டத்தட்ட கடந்துவிட்டேனா? ஆம். அவள் விரைவில் பெரிய பெண்ணாகிவிடுவாள், இந்தக் கட்டத்தின் கடைசிப்பகுதியில் நாங்கள் இருக்கிறோம். ஆகவே, வளர்இளம்பருவத்தைப்பற்றிச் சிந்திக்க இது ஒரு நல்ல நேரம். சில பெற்றோர் இதனைப் பெரிய சவாலாக எண்ணிப் பயந்து நடுங்குகிறார்கள். அது ஏன்?

வளர்இளம்பருவம் என்பது பலரும் நினைப்பதுபோல் ஒரு "மோசமான" தருணம் அல்ல. அதனைப் பல்லைக்கடித்துக்கொண்டு தாண்டவேண்டியதில்லை. இந்தக் காலகட்டம்தான் நிஜமாகவே ஒரு குழந்தையும் அதன் பெற்றோரும் வளர உதவுகிறது. இதனை ஒழுங்காகக் கையாண்டால், அவர்களுக்கிடையிலான உறவு மேலும் வலுப்படும். ஆனால், வளர்இளம்பருவத்தைக் கடக்கவேண்டுமென்றால், அதனை உடல்ரீதியில், அறிவாற்றல் வளர்ச்சி என்ற அடிப்படையில் புரிந்துகொண்டால் போதாது. இந்த நேரத்தில்தான் அவர்களுக்கு ஓர் அடையாளம் உருவாகிறது, பெற்றோர், சக நண்பர்கள், கூட்டாளிகளுடன் உள்ள உறவுகளை மீண்டும் வரையறுத்துக்கொள்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.

உடல்சார்ந்த மாற்றங்கள் எல்லாருக்கும் தெரிந்தவை. அவற்றை நாம் இங்கே பேசவேண்டியதில்லை. அறிவாற்றல் வளர்ச்சிபற்றி அதிகப்பேருக்குத் தெரியாது. வளர்இளம்பருவத்தில் உள்ளவர்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கையில் இரண்டாவதுமுறையாக அதிவேக மூளை வளர்ச்சி நிகழ்கிறது. அவர்கள் சிக்கலாகச் சிந்திக்கும் திறனைப் பெறத் தொடங்குகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்களுடைய மூளையின் அமிக்டலா பகுதி பெரியவர்களைப்போல் வளர்ந்திருக்காது. இந்தப் பகுதிதான் பயம், கோபம் மற்றும் மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளைச் செயல்படுத்துகிறது. அதேபோல், அவர்களால் உணர்ச்சிகளைச் சரியாக அடையாளம் காணவோ, பிறருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவோ இயலாது. மற்றபடி அவர்களுடைய மூளையின் பிற பகுதிகள் அதிவேகமாக வளர்கின்றன.

வளர்இளம்பருவத்தின் தொடக்கத்தில் உள்ளவர்கள் பள்ளியிலும் வீட்டிலும் தனிப்பட்ட தீர்மானமெடுத்தலில் கவனம் செலுத்துகிறார்கள்: அவர்கள் அதிகார அமைப்புகளை, சமூகத்தின் தர நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்கத் தொடங்குகிறார்கள்; தங்களுடைய வாழ்க்கை தொடர்பான தலைப்புகளில் தங்களுடைய சொந்த எண்ணங்கள், பார்வைகளை உருவாக்கிக்கொள்ளவும் வெளியே சொல்லவும் தொடங்குகிறார்கள். உதாரணமாக, எந்த விளையாட்டு விளையாடுவது, எந்தக் குழுவில் இணைவது, பெற்றோரின் எந்த விதிமுறையை மாற்றச்சொல்லி வலியுறுத்துவது... இப்படி.

வளர்இளம்பருவத்தின் மத்தியில் உள்ளவர்கள் தங்களுடைய கவனத்தை விரிவுபடுத்திக்கொள்கிறார்கள், அதிகத் தத்துவார்த்தமான, எதிர்காலம்சார்ந்த கவலைகள் அவர்களுக்கு வருகின்றன: அவர்கள் அதிகம் கேள்வி கேட்கிறார்கள், அதிகம் அலசுகிறார்கள்; தங்களுக்கென்று சொந்தமாக ஓர் ஒழுக்க நெறிமுறைகளை உருவாக்கிக்கொள்ளத்தொடங்குகிறார்கள், வெவ்வேறு சாத்தியங்களைப்பற்றிச் சிந்திக்கிறார்கள், தங்களுடைய சொந்த அடையாளங்களை உருவாகிக்கொள்ளத்தொடங்குகிறார்கள், சாத்தியமுள்ள வருங்கால இலக்குகளைப்பற்றிச் சிந்திக்கிறார்கள், நீண்டகாலத் திட்டங்களை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.

வளர்இளம்பருவத்தின் பிற்பகுதியில் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய சிந்தனையைக் குறைத்து தங்களுடைய சிக்கலான சிந்திக்கும் செயல்முறைகளைப் பயன்படுத்திப் பொதுவான விஷயங்களை அலசுகிறார்கள். நீதி, அரசியல் போன்ற கருத்தாக்கங்களைச் சிந்திக்கிறார்கள், லட்சியவாதப் பார்வைகள் அவர்களுக்கு வருகின்றன, அவர்கள் நிறைய விவாதிக்கிறார்கள், வாதிடுகிறார்கள், எதிர்க் கருத்துகளைச் சகித்துக்கொள்கிறார்கள், தங்களுடைய பணிவாழ்க்கைபற்றிய தீர்மானங்களை எடுக்கிறார்கள், பெரியவர்களுக்கான சமூகத்தில் தங்களுடைய பங்கு எப்படி உருவாகிவருகிறது என்று சிந்திக்கிறார்கள். அவர்கள் பலவிதமாக அலசி ஆராய்கிறார்கள், தங்களைத்தாங்களே உணர்ந்திருக்கிறார்கள், இது ஒருவிதத்தில் தன்முனைப்பு சார்ந்ததாகிவிடக்கூடும், அல்லது, தன்னைப்பற்றியே எந்நேரமும் சிந்தித்துக்கொண்டிருப்பதாகிவிடக்கூடும். அவர்கள் பிரச்னைகளைப் பல்வேறு பரிமாணங்களிலிருந்தும் பார்க்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் உண்மைகளை நிச்சயமான பேருண்மைகளாக ஏற்றுக்கொள்வதில்லை, ஆகவே, பெற்றோரின் மதிப்பீடுகள், அதிகாரங்களையும் கேள்வி கேட்கிறார்கள். இங்கேதான் பெற்றோரின் சவால் தொடங்குகிறது.

இந்தக் காலகட்டத்தின் ஒரு முக்கியமான, பெரிய பகுதி, "நான் யார்?" என்கிற பெரிய கேள்விக்கு வளர்இளம்பருவத்தில் இருக்கிற ஒருவர் பதில் தேடுவது, தன் அடையாளத்தைக் கண்டறிவது, ஓர் ஒத்திசைவான அடையாளத்தை எட்டுவது, முக்கியமாக, அடையாளக் குழப்பத்தைத் தவிர்ப்பது. இந்தச் செயல்முறையில் தங்களுடைய பங்குதான் முழுமையானது என்று பெற்றோர் நம்ப விரும்புகிறார்கள். ஆனால், ஒருவருடைய அடையாளத் தேடலை இன்னும் பல விஷயங்கள் பாதிக்கின்றன: சக நண்பர்கள், பள்ளி, அக்கம்பக்கத்துச் சூழல், சமூகம் மற்றும் ஊடகங்கள். வளர்இளம்பருவத்தினர் இந்தச் செயல்முறையை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யவேண்டுமென்றால், அவர்கள் இரண்டு படிநிலைகளைக் கடக்கவேண்டும். முதல் படிநிலை, தங்களுக்கு ஒத்துப்போகாத குழந்தைப்பருவ நம்பிக்கைகளைக் கேள்விகேட்பது, அவற்றிலிருந்து விலகிவருவது, அதன்மூலம் தங்களுக்கு ஒத்துப்போகிற நம்பிக்கைகளை உருவாக்கிக்கொள்வது. இரண்டாவது படிநிலை, அவர்கள் தங்களுக்கென்று தேர்ந்தெடுத்திருக்கும் அடையாளத்திற்கு உண்மையாக இருப்பது.

இது தீவிர அலசலுக்கான நேரம், தன்னைத்தானே எப்படியெல்லாம் வெவ்வேறுவிதமாகப் பார்க்கலாம் என்று சிந்திக்கும் நேரம். இங்கே நாடகத்தனமான மாற்றமும் நிச்சயமில்லாத்தன்மையும் இருக்கும், அவர்கள் தங்களுடைய பழைய அனுபவங்கள், இப்போதைய சவால்கள், சமூகத் தேவைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒருங்கிணைக்கவேண்டியிருக்கும். இத்துடன், வளர்இளம்பருவத்தில் உள்ளவர் தேர்ந்தெடுக்கும் அடையாளத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும், உறுதிப்படுத்தவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் பதின்பருவத்தில் உள்ள அவர் சவுகர்யமாக, நம்பிக்கையாக, தான் மதிக்கப்படுவதாக உணர்வார். அதனால்தான், இந்தக் காலகட்டத்தில் அவர்கள் லட்சிய பிம்பங்களைத் தீவிரமாகத் தேடுகிறார்கள், சக நண்பர்களுடன் குழுவாக இணைகிறார்கள், பாரம்பரியமான அதிகார அமைப்புகளுக்கு எதிராகப் புரட்சி செய்கிறார்கள்.

ஒருவருடைய அடையாள முன்னேற்றம் மிக இளம் வயதிலேயே தொடங்கிவிடுகிறது. ஒரு குழந்தை தான் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டிருக்கிறோம் என்பதை உணரும்போது, தன்னுடைய பெற்றோரும் தானும் ஒன்றல்ல, தான் ஒரு தனித்துவமான நபர் என்பதை உணரும்போதே இது ஆரம்பமாகிவிடுகிறது. அவர்கள் வளர்ந்து பதின்பருவத்தினராகும்போது, அவர்கள் தங்களுடைய பெற்றோரின் வடிவத்தில் வரையறுக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் பெற்றோருடன் காணப்படுவதையே விரும்பாமலிருக்கலாம், தங்கள் பெற்றோர் சொல்வது அல்லது செய்வது தங்களுக்குச் சங்கடம் தருவதாக உணரலாம். இந்த விலகல் செயல்முறை, ஒருகட்டத்தில் நிராகரிப்பாகவும் ஆகலாம். இது பெற்றோருக்கு வருத்தம் தருகிறது. ஆனால், இது ஓர் இயற்கையான செயல்முறை என்பதை அவர்கள் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு பதின்பருவத்தினரும் ஒவ்வொரு பெற்றோரும் இதைக் கடந்துவந்தவர்கள்தான். இது ஏதோ தனிமனிதரின் பிரச்னை அல்ல, எல்லாரும் இதைச் சந்திக்கிறார்கள்.

பெற்றோர் என்றமுறையில், அவர்கள் குழந்தையின் இந்தச் செயல்முறையை ஆதரிக்கவேண்டும், அவர்கள் தங்களுடைய அடையாளங்களைக் கண்டறிய உதவவேண்டும், அப்போதுதான் அவர்கள் முழுமையாகச் செயல்படும் பெரியவர்களாக வளர்வார்கள், தங்களுடைய சாத்தியங்களுக்கேற்பச் சாதிப்பார்கள். வளர்இளம்பருவத்தில் உள்ளவர்கள் சந்திக்கும் முக்கியமான முரண்களில் ஒன்று, அடையாள நெருக்கடி. இதனால் அவர்களுக்குத் தங்கள்மீதே சந்தேகம் எழுகிறது, தங்களுக்குத் தனியிடம் தேவை எனக் கோருகிறார்கள், சில சமயங்களில் எதார்த்தத்துக்கு மிஞ்சிய துணிச்சல் வருகிறது, தங்களை எதனாலும் யாராலும் எதுவும் செய்ய இயலாது என்றுகூட எண்ணுகிறார்கள், இவை அனைத்துடன் அவ்வப்போது முரட்டுத்தனம், திமிர், அனைத்தும் தனக்கு உரிமையானவை என்கிற எண்ணம் ஆகியவையும் கலந்துவருகின்றன.

இது ஓர் இயற்கையான செயல்முறைதான் என்பதைப் பெற்றோர் உணரவேண்டும், அப்போதுதான் அவர்கள் இதை எண்ணிப் பயப்படுவதை நிறுத்துவார்கள், இதனை எதிர்த்துநிற்கவேண்டும் என்று எண்ணமாட்டார்கள், பதறாமல், தடுமாறாமல் அவர்களுடைய பயணத்திற்கு உதவியாக இருப்பார்கள். ஆக, பெற்றோர் தங்களுக்குத்தாங்களே சொல்லிக்கொள்ளவேண்டிய விஷயங்கள்: நாம் என்ன செய்தாலும் சரி, எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, நம் பிள்ளைகள் நம்மை எண்ணிச் சற்றே சங்கடப்படுவதுதான் இயல்பு, அவர்களுடைய நண்பர்கள் அவர்களுக்கு நம்மைவிட முக்கியமானவர்களாக்தான் இருப்பார்கள், நாம் அவர்களுக்காகத் தினந்தோறும் இருபத்துநான்குமணிநேரமும் வேலைசெய்யவேண்டும், ஆனால், அவ்வப்போது அவர்கள் கண்ணில் தோன்றாமல் இருந்துவிடவேண்டும், அவர்களுக்கு எதிர்பாலினத்தவர்மீது ஆர்வம் தோன்றத்தான் செய்யும், அவர்களிடம் நாம் எதைக்கேட்டாலும், 'இதில் எனக்கு என்ன கிடைக்கும்?' என்றுதான் யோசிப்பார்கள், நாம் எதைச்சொன்னாலும் அவர்கள் அதை நிராகரிப்பார்கள்.

இதை ஒரு 'புதிய இயல்புத்தன்மையாக'ப் பெற்றோர் காணவேண்டும், இது 'சாதாரணமானதுதான்' என்று உணரவேண்டும், இதைப் புரிந்துகொள்ளவேண்டும், ஏற்றுக்கொள்ளவேண்டும், அந்த ஓட்டத்துடன் செல்லவேண்டும், அதனால் தங்களுடைய அதிகாரத்துக்குச் சவால் விடப்படுவதாக எண்ணக்கூடாது, அதுதான் பெற்றோர் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் செய்யக்கூடிய மிகப்பெரிய சேவை. என்னைப்பொறுத்தவரை, நான் இதுவரை இதனைச் சிறப்பாகச் செய்துவிட்டேன் என்று சொல்வதில் பெருமைகொள்கிறேன்.

மௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். கார்ப்பரேட் பணியை விட்டுவிட்டு மன வளத்துறையில் பணியாற்றிவருகிறார். மௌலிகா வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் பணியாற்றிவருகிறார். இது ஒரு சர்வதேச ஊழியர் நல நிறுவனம் ஆகும். இவர் பெங்களூரில் உள்ள ரீச் க்ளினிக்கில் மருத்துவசேவை வழங்கிவருகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்: columns@whiteswanfoundation.org.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org