குழந்தையின் நடத்தையும் பெற்றோரின் கவலைகளும்

என்னிடம் வரும் பல பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஆலோசனை சொல்லுமாறு என்னைக் கேட்கிறார்கள். காரணம், அந்தக் குழந்தை அவர்கள் நினைக்கும்படி நடந்துகொள்வதில்லை, 'தவறாக நடந்துகொள்கிறது' என்கிறார்கள். உதாரணமாக, பிடிவாதம் பிடிக்கிறது, முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறது, மொபைல் ஃபோனுக்கு (அல்லது, பிற தொழில்நுட்பச் சாதனங்களுக்கு) அடிமையாகியிருக்கிறது, ஒழுங்காகப் படிப்பதில்லை, எதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவதில்லை, நல்ல மதிப்பெண் வாங்குவதில்லை, சக மாணவர்களுடன் பேசுவதில்லை, பிறர் சொல்வதைக் 'கவனிப்பதில்லை'... இப்படிப் பல விஷயங்களை அவர்கள் சொல்கிறார்கள். 'என் பிள்ளையிடம் இதைப்பற்றிப் பேசுங்கள், ஆலோசனை சொல்லுங்கள்' என்று அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள், 'எப்படியாவது அவனுடைய நடவடிக்கையைச் சரிசெய்துவிடுங்கள்' என்கிறார்கள்.

இதில் என் பார்வை, அவர்களுடைய உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் புரிந்துகொள்ளாதவரை, நடவடிக்கைகளைச் 'சரிசெய்ய'முடியாது. எண்ணங்கள், உணர்வுகள், நடவடிக்கைகள் ஆகிய மூன்றுக்குமிடையே உள்ள உறவு நன்கு ஆராயப்பட்டிருக்கிறது. இதனை 'அறிவாற்றல் நடவடிக்கைச் சிகிச்சை' என்ற பெயரில் அழைக்கிறார்கள். பல மனநலப் பிரச்னைகளுக்கு இந்தச் சிகிச்சை நல்ல பலன் தருகிறது. CBT எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்தச் சிகிச்சையைப்பற்றி விளக்குவது என் நோக்கமில்லை. ஆனால், இவற்றினிடையே உள்ள தொடர்பைப்பற்றிக் கொஞ்சம் விளக்க எண்ணுகிறேன். இதைப் புரிந்துகொண்டால், குழந்தைகளின் பிரச்னைகளை (பெரியவர்களின் பிரச்னைகளைக்கூட) ஒரு மிகவும் மாறுபட்ட கோணத்தில் காணலாம்.

உதாரணமாக, ஒரு குழந்தை ஒரு புதிய பள்ளிக்குச் செல்கிறது. அங்கே எல்லாரும் புதியவர்கள், அவர்களுடன் பழகவேண்டிய கட்டாயத்தில் அந்தக்குழந்தை தள்ளப்படுகிறது. அப்போது அந்தக் குழந்தையிடம் நிகழும் மாற்றங்கள் என்னென்ன?

  • மற்றவர்கள் தன்னைவிட உயர்வானவர்கள் என்றும், தான் அவர்களைவிடத் தாழ்வானவன் என்றும் அந்தக்குழந்தை நினைத்தால், 'இந்தக் குழுவில் இணைய எனக்குத் தகுதி உண்டா?' என்று அந்தக்குழந்தை தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறது; அதனால் அந்தக்குழந்தை ஒரு நிச்சயமற்றதன்மையை, பாதுகாப்பற்றதன்மையை, தயக்கத்தை உணர்கிறது, அதனால் மிகவும் அடக்கத்துடனும் மென்மையாகவும் நடந்துகொள்கிறது, சக மாணவர்களிடம் தயக்கத்துடன் செல்கிறது, நிச்சயமற்ற, உறுதியற்ற குரலில் 'என்னை உங்களுடன் சேர்த்துக்கொள்வீர்களா?' என்று கேட்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதனை யாரும் தங்கள் குழுவில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள், அதற்கு நிராகரிப்புதான் கிடைக்கும்.

இதைப்பார்க்கும் பெற்றோர் என்ன செய்வார்கள்? அவர்கள் கண்ணில் அந்தக் குழந்தையின் அடக்கமான, மென்மையான நடவடிக்கைதான் தெரியும், சமூகரீதியில் அது தனித்திருப்பதுதான் தெரியும். அந்தக் குழந்தையிடம் போய், 'நீ இன்னும் நம்பிக்கையாகப் பேசவேண்டும், பல நண்பர்களைப் பெறவேண்டும்' என்பார்கள். அந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள உணர்வுகளை அவர்கள் கவனிப்பதில்லை: அந்தக் குழந்தையின் பாதுகாப்பற்ற உணர்வு, நம்பிக்கையின்மை, குறைந்த சுயமதிப்பு, தான் தகுதியுடையவன் அல்ல என்கிற நம்பிக்கை போன்றவற்றைப் புறக்கணித்துவிடுகிறார்கள். மாறாக, 'நடவடிக்கைகளைச் சரிசெய்யவேண்டும்' என்று வலியுறுத்துகிறார்கள். "இவன் இன்னும் நிறைய நண்பர்களோடு பழகவேண்டும் என்று சொல்லுங்கள்" என்பார் ஒரு தந்தை. அல்லது, "இவன் இன்னும் நம்பிக்கையோடு நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்லுங்கள்" என்பார். இவர்கள் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம், நடவடிக்கைகள் என்பவை உணர்வுகளிலிருந்து வருகின்றன, உணர்வுகள் என்பவை யாரும் தங்களுக்கு உதவ மறுக்கிறார்கள், தங்களால் சிறப்பாகச் செயல்பட இயலவில்லை என்கிற நம்பிக்கைகளிலிருந்து வருகின்றன, இவை அர்த்தமற்ற நம்பிக்கைகளாக இருக்கலாம், ஆனால், இவைதான் அனைத்துக்கும் காரணமாகின்றன.

இதே சூழ்நிலையைக் கொஞ்சம் மாற்றிப்பார்ப்போம். அதே குழந்தை, ஆனால், கதை கொஞ்சம் மாறியுள்ளது:

  • தான் மற்றவர்கள் அளவுக்குச் சிறப்பாக இருப்பதாக அந்தக்குழந்தை நினைக்கிறது; அதற்குத் தன்மீது சந்தேகங்கள் எழுவதில்லை, தனக்கு நண்பர்களாகும் தகுதி மற்றவர்களுக்கு உண்டா என்று சிந்திக்கிறது. அதனால்,
  • அது நம்பிக்கையாக, பாதுகாப்பாக உணர்கிறது. அதனால்,
  • அது தன்னம்பிக்கையோடு நடந்துகொள்கிறது, பிறரிடம் சென்று தெளிவான, உறுதியான குரலில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறது, அவர்கள் குழுவில் இணையவேண்டும் என்கிற தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. இப்படி ஒரு குழந்தை கேட்கிறபோது, மற்ற குழந்தைகள் நட்போடு அதனை ஏற்றுக்கொள்வார்கள்.

இந்த இரு கதைகளிலும், சூழ்நிலை ஒன்றுதான். ஆனால், அந்தக்குழந்தை தன்னைப்பற்றி, தன்னைச் சுற்றியுள்ளவர்களைப்பற்றிக் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் மாறியுள்ளன, இதனால் அதன் உணர்வுகள் (நம்பிக்கை, அவநம்பிக்கை என) மாறுகின்றன, நடவடிக்கைகளும் மாறுகின்றன.

ஆக, பெற்றோர் ஏற்றுக்கொள்ளும்வகையில் ஒரு குழந்தை நடந்துகொள்ளாவிட்டால், அவர்கள் அதன் நடவடிக்கையைமட்டும் காணக்கூடாது, கொஞ்சம் ஆழமாகச் சென்று அலசவேண்டும். அந்தக் குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவேண்டும், அந்த உணர்வுகளை உண்டாக்கும் எண்ணங்கள், நம்பிக்கைகள் என்ன என்று பார்க்கவேண்டும். ஒரு விஷயம், இப்படி ஆழமாகச் சென்று ஆராய்கிறபோது, குழந்தைமீது தீர்ப்பேதும் சொல்லக்கூடாது, தற்காப்பெண்ணத்தோடு நடந்துகொள்ளக்கூடாது.

சில சமயங்களில், இந்த ஆய்வின்போது, பெற்றோர் விரும்பாத சில நம்பிக்கைகளை அவர்களுடைய குழந்தைகள் கொண்டிருப்பது தெரியவரலாம். உதாரணமாக, தன் குழந்தை நம்பிக்கையோடு உலகைச் சந்திக்கவேண்டும், நிறைய சாதிக்கவேண்டும் என்று ஒரு பெற்றோர் எண்ணுகிறார்கள். ஆனால், அந்தக் குழந்தை நம்பிக்கையே இல்லாமல் வளர்கிறது. எப்படி? இதனை ஆராயும்போது, பெற்றோர் சில கடினமான கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியிருக்கலாம்: நான் ஏதேனும் தவறாகச் சொல்லிவிட்டேனோ? ஏதேனும் தவறாகச் செய்துவிட்டேனோ? அதனால்தான் என் குழந்தை இப்படிச் சிந்திக்கிறதோ? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வது இனிமையான அனுபவம் அல்ல.

ஆகவே, பெற்றோர் யார்மீதும் தீர்ப்புவழங்கக்கூடாது, தங்கள்மீதும் சரி, தங்கள் குழந்தைகள்மீதும் சரி. 'நான் நல்ல தந்தை/தாய் இல்லையோ' என்று அவர்கள் எண்ணக்கூடாது. தன்மீது நம்பிக்கையை இழக்கக்கூடாது. பெற்றோர் தங்களை நம்பினால்தான் குழந்தை தன்னை நம்பும். யாரும் 100% சிறந்த பெற்றோராக இருக்க இயலாது, அதற்கு அவசியமும் இல்லை. தன்னால் இயன்றவரை சிறப்பான பெற்றோராக இருந்தால் போதும். அதேபோல், குழந்தையும் 100% சிறந்த குழந்தையாக இருக்க இயலாது, அதற்கு அவசியமும் இல்லை. தன்னால் இயன்றவரை சிறப்பான குழந்தையாக இருந்தால் போதும்.

ஆகவே, ஒரு குழந்தை பிடிவாதம் பிடிக்கிறது என்றால், அந்தக் கோபமான பழக்கத்தை நிறுத்தமட்டும் முயற்சிசெய்தால் போதாது. அந்தக் கோப உணர்வுகள் எங்கிருந்து வருகின்றன என்று புரிந்துகொள்ள முயற்சிசெய்யவேண்டும், அவற்றைச் சரிசெய்யவேண்டும். ஒரு குழந்தை தன்மீது பிறருடைய கவனம் எப்போதும் இருக்கவேண்டும் என்று முயற்சிசெய்கிறது என்றால், 'அவன் அப்படிதான்' என்று விட்டுவிடக்கூடாது, 'இந்தப் பிடிவாதமெல்லாம் என்னிடம் பலிக்காது' என்று சொல்லக்கூடாது. அதற்கு ஏன் கவனம் தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்யவேண்டும். அநேகமாக அதற்கு அந்தக் கவனம் தேவைப்படுகிறதோ என்னவோ. ஒரு குழந்தை தொழில்நுட்பத்துக்கு அடிமையாகியிருக்கிறது என்றால், 'மொபைலைப் பிடுங்கிவிடுவேன்' என்று மிரட்டினால் போதாது, தனக்குக் கிடைக்காத ஏதோ ஒரு தேவையைப் பூர்த்திசெய்வதற்காகதான் அது அந்தப் பழக்கத்தில் ஈடுபடுகிறது, அந்தத் தேவை என்ன என்று புரிந்துகொள்ள முயற்சிசெய்யவேண்டும். நிஜ உலகைவிடக் கற்பனை உலகுதான் சிறந்தது என்று அந்தக் குழந்தை நினைப்பது ஏன்? எந்த எண்ணம் அல்லது நம்பிக்கை அதனை அப்படி நினைக்கத்தூண்டுகிறது? ஒரு குழந்தை எதிலும் கவனம் செலுத்தாமலிருக்கிறது என்றால், அதன் மனத்தை ஆக்கிரமித்திருக்கும் எண்ணங்கள் (பயங்கள், பதற்றங்கள், நம்பிக்கைகள்) என்ன என்று புரிந்துகொள்ள முயற்சிசெய்யவேண்டும், அவற்றை வெளிப்படையாகச் சொல்வதற்கு அதற்கு ஒரு வாய்ப்பளிக்கவேண்டும்.

மேல்பார்வையில் இது மிகவும் கடினமாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இது சாத்தியமே. இதற்கு அவர்கள் தங்களுடைய இதயத்தால் 'கவனிக்கவேண்டும்', தங்களையும் தங்கள் குழந்தைகளையும் புரிந்துகொள்ளவேண்டும், ஏற்றுக்கொள்ளவேண்டும். இதற்காக, அவர்கள் சில புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் முன்பு எப்படி நடந்துகொண்டார்களோ அதிலிருந்து மாறுபட்டு வேறுவிதமாக நடந்துகொள்ளவேண்டியிருக்கலாம், ஆனால், இது நிச்சயம் சாத்தியமே. இதன்மூலம் கிடைக்கப்போகும் பரிசுகள் மிக அருமையானவை, பெற்றோருக்கு நன்மை, குழந்தைகளுக்கும் நன்மை, அவர்களுக்கிடையிலான உறவுக்கும் நன்மை.

மௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். கார்ப்பரேட் பணியை விட்டுவிட்டு மன வளத்துறையில் பணியாற்றிவருகிறார். மௌலிகா வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் பணியாற்றிவருகிறார். இது ஒரு சர்வதேச ஊழியர் நல நிறுவனம் ஆகும். இவர் பெங்களூரில் உள்ள ரீச் க்ளினிக்கில் மருத்துவசேவை வழங்கிவருகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்: columns@whiteswanfoundation.org.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org