டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

ஆரோக்கிய உள்ளம்

மனமுழுமை - டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

”இந்த உலகில் தெளிவாகத் தெரியும் பல விஷயங்கள் உள்ளன, ஆனால் அவற்றை யாரும் எப்போதும் கவனிப்பதில்லை” என்று எழுதினார் ஆர்தர் கனான் டாய்ல். அவரது மிகப் புகழ்பெற்ற இலக்கிய உருவாக்கமான ஷெர்லக் ஹோம்ஸ்தான் இந்த வரிகளைச் சொல்கிறார். விக்டோரிய இங்கிலாந்தின் மிகச்சிறந்த துப்பறிவாளரான ஷெர்லக், தன்னுடைய பார்வையிலிருந்து வறண்டமுறையில் இதனைச் சொல்லியிருந்தார். அதேசமயம், இன்றைக்கு மனமுழுமை என்பது உளவியல் நலனுக்கு ஒரு முக்கியமான அம்சம் என்பதில் ஆர்வம் அதிகரித்துவருவதைப் பார்க்கும்போது, அந்தச் சொற்கள் மிகவும் பொருத்தமானவையாகத் தோன்றுகின்றன. அத்துடன், காதல், நட்பு, பணிசார்ந்த செயல்திறன், அவ்வளவு ஏன், உடல் நலனுக்குக்கூட மனமுழுமை முக்கியம் என்கிறார்கள்.  

நம் கதை 1970களின் முற்பகுதியில் தொடங்குகிறது. அப்போது, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இதய மருத்துவ நிபுணர் ஹெர்பெர்ட் பென்சன், நலப்பராமரிப்பில் தியானத்தின் நன்மைகளைப்பற்றிய ஒரு முன்னோடி ஆய்வை நிகழ்த்தினார். இதுபற்றி அவர் எழுதிய ஆரம்பக் கட்டுரைகள் அறிவியல் அமெரிக்கன் மற்றும் அமெரிக்க உடலியல் சஞ்சிகையில் வெளிவந்தன. அப்போது, பீட்டில்ஸ் மற்றும் அவருடைய இந்தியக் குருநாதரால் ஆழ்நிலை தியானம் பிரபலமாகிக்கொண்டிருந்தது. அதில் அனுபவம்வாய்ந்தவர்களை இந்த ஆய்வில் சேர்த்தார் பென்சன். இந்தப் பழக்கத்தினால் குறைந்த இதயத்துடிப்புகள், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த மன அழுத்தம் போன்ற பல அளவிடக்கூடிய ஆரோக்கிய நலன்கள் இருப்பதை அவர் கண்டறிந்தார். இந்தத் தியான விளைவை அவர் “மனத்தைத் தளர்த்தும் எதிர்வினை” என அழைத்தார். 1975ல் இந்தத் தலைப்பில் ஒரு நூல் எழுதினார். அது நன்றாக விற்றது.  

பென்சன் தனது பணியில் மனமுழுமையில் கவனம் செலுத்தவில்லையென்றாலும், தியானம்பற்றிய அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு அவர் அடித்தளம் அமைத்தது உண்மை. அவருடைய தாக்கம் பலரிடம் காணப்பட்டது. குறிப்பாக, உளவியலாளர் ஜான் கபட்-ஜின். இவர் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய நியூ யார்க் நகரத்தில் வளர்ந்தவர். 1960களின் பிற்பகுதியில் வளர்ந்த பல இளம் அமெரிக்கர்களைப்போலவே, அவருக்குக் கிழக்குத் தத்துவங்கள் மற்றும் நடைமுறைகளில் வலுவான ஆர்வம் ஏற்பட்டது, குறிப்பாக, புத்தமதம் சார்ந்த விஷயங்களில். பின்னர் அவர் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்விநிறுவனத்தில் தசை உருவாக்கம்பற்றி முனைவர் பட்டத்துக்குப்பிந்தைய ஆய்வை நிகழ்த்தினார், உடற்கூறியல் கற்பித்தார், அப்போது அவர் தன்னுடைய தியானப் பயிற்சியைப் பயன்படுத்தினால் நோயாளிகளுக்கு ஏதேனும் நன்மை உண்டா என்று யோசித்தார். குறிப்பாக, நாள்பட்ட நோயில் வருந்துகிறவர்களுக்கு ஏதேனும் செய்ய முனைந்தார். இதுபற்றி கபாட்-ஜின் ஒரு பேட்டியில் விரிவாகப் பேசியிருக்கிறார், “மனமுழுமை ஹதயோகம் போன்ற தியானச் செயல்முறைகளைப் பயன்படுத்தி, அவர்கள் தங்களுடைய உள் வளங்களைச் செயலுக்குக் கொண்டுவர இயலுமா, அதன்மூலம் கற்றுக்கொள்ளுதல், வளர்தல், தன்னை ஆற்றிக்கொள்ளுதல் மற்றும் மாற்றத்துக்குட்படுதல் ஆகியவற்றை நிகழ்த்தமுடியுமா என்று நாங்கள் காண விரும்பினோம்... எட்டு வார நிகழ்ச்சிக்குப்பிறகு, இதில் அவர்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் என்ன என்று நாங்கள் அவர்களிடம் கேட்டோம். அவர்கள் இரு விஷயங்களைக் குறிப்பிட்டார்கள். ஒன்று, மூச்சு (அதாவது, தங்களுடைய சுவாசத்தை அறிந்திருத்தல்), இன்னொன்று, அவர்கள் தங்களுடைய எண்ணங்களில் இல்லை.’

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் திட்டம், 1979ல் தொடங்கப்பட்டது. அதனை இன்று நாம் மனமுழுமை சார்ந்து அழுத்தம் குறைத்தல் (MBSR) என அழைக்கிறோம். உலகெங்கும் 700க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் மனமுழுமை பயன்படுத்தப்படுவதற்கு இதுவே அடிப்படை. 1990களின் முற்பகுதியில், மனமுழுமை மற்றும் ஆரோக்கியத்தைப்பற்றிய தன்னுடைய முதல் பிரபலமான புத்தகத்தை எழுதினார் கபாட்-ஜின். அதன்பிறகு, இந்தப் பண்பு தினசரி நலனுக்கும் பொதுநலனுக்கும் எப்படிப் பொருந்தும் என்று அவர் தொடர்ந்து எழுதிவந்தார். மனச்சோர்வை வெல்லுதல் மற்றும் சிறந்த குழந்தைவளர்ப்பு போன்ற தலைப்புகளில் பிறரோடு இணைந்து நூல்களை எழுதினார். குழந்தைவளர்ப்பு நூல் அவரது மனைவியுடன் சேர்ந்து எழுதப்பட்டது. இந்தப் புத்தகத்தைப்பற்றி கபாட்-ஜின் ஒரு பத்திரிகையாளரிடம் பேசியபோது “எவ்வளவோ ஆன்மிகப்பாதைகள் இருக்கின்றன, சில மடாலயங்கள் தீவிரமானவை, அவற்றில் பின்பற்றப்படும் வழிமுறைகளும் மிக நீண்டவை, ஆனால், அவை அனைத்திலும் மிகவும் சக்திவாய்ந்த ஆன்மிகப் பழக்கம், யாராலும் பின்பற்றக்கூடிய பழக்கம், குழந்தைகளோடு வாழ்வதுதான். ஆனால், அதற்கு நாம் அந்த விஷயத்தில் திறந்த மனத்துடன் இருக்கவேண்டும்” என்றார்.

கபாட்-ஜின்னைப் பொறுத்தவரை, மனமுழுமை என்றால், நமது எண்ணங்கள், உடல் உணர்வுகள் மற்றும் சூழல்களை அறிந்திருப்பது, அதன்மூலம் நாம் இந்தக் கணத்தில் முழுமையாக இருப்பது. உதாரணமாக, நாம் இரவு உணவு சமைத்துக்கொண்டிருந்தாலும் சரி, கார் ஓட்டிக்கொண்டிருந்தாலும் சரி, பூங்காவில் நடந்துகொண்டிருந்தாலும் சரி, நம் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்தாலும் சரி, அந்தக் கணத்தில் முழுமையாக இருக்கவேண்டும். உலகெங்கும் பல ஆன்மிகப் பாரம்பரியங்களில் தியானத்துக்கு மையமாக அமையும் கோட்பாடு இது. அதேசமயம், நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், கபாட்-ஜின்னின் அணுகுமுறையானது மனமுழுமைப் பயிற்சியிலிருந்து மதச் சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளைக் கவனமாக நீக்கிவிடுகிறது. இந்தவகையில், பலதரப்பட்ட நோய்களுக்கு மனமுழுமைப் பயிற்சி எந்த அளவு நல்ல பலன்களைத் தருகிறது என்பதுபற்றிய கட்டுரைகளை உண்ணும் பழக்கங்கள், தூக்கத்தின் இயற்கை மற்றும் அறிவியல், உளவியல் உடற்கூறியலுக்கான சர்வதேசச் சஞ்சிகை மற்றும் தர அடிப்படையிலான ஆரோக்கிய ஆய்வு போன்ற அறிவியல் சஞ்சிகைகள் வெளியிடுகின்றன. உதாரணமாக, பதற்றம், நாள்பட்ட வலி, செரிமானக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை மற்றும் பலவிதமான அடிமையாதல்கள் போன்றவை.

உதாரணமாக, கனடாவின் கிரான்ட் மாக்எவான் கல்லூரியைச் சேர்ந்த, டாக்டர் ஆண்ட்ரூ ஹோவெல் தலைமையிலான ஒரு குழுவினர் இளைஞர்களை ஆராய்ந்தார்கள், மனமுழுமைப் பயிற்சியால் அவர்களுடைய தூக்கத்தின் தரம் மேம்படுகிறது, அவர்கள் காலைச் செயல்பாடுகளை விருப்பத்துடன் மேற்கொள்கிறார்கள் என்று கண்டறிந்தார்கள். உணர்வு என்ற பத்திரிகை பதிப்பித்துள்ள ஓர் ஆய்வு, ராணுவத்தினரை ஆராய்ந்தது. அவர்கள் எட்டு வாரம் நீடித்த மனமுழுமைப் பயிற்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, மற்றவர்களைவிட அவர்களுடைய ஞாபகத்திறன் மேம்பட்டது, எதிர்மறை உணர்வுகள் குறைந்தன. அதேநேரம், நரம்பியல்ரீதியில் மனமுழுமைப் பயிற்சி எப்படிப் பணியாற்றுகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.  

நமது தினசரி நலனை மேம்படுத்துவது, குறிப்பிட்ட ஆரோக்கியப் பிரச்னைகளைக் குணப்படுத்துவது என இரண்டிலுமே, அடித்தளமான கருத்து ஒரேமாதிரியானதுதான்: நிகழ்காலத்தில் நாம் அதிகம் வசிக்க வசிக்க, கடந்தகாலம் அல்லது எதிர்காலத்தைப்பற்றிய எண்ணங்களைக் குறைக்கக் குறைக்க, நாம் அதிகம் ஆரோக்கியமாகிறோம். ஒருவர் தன்னுடைய சுவாசத்தில் கவனம் செலுத்தியபடி சிந்தனைகள் தடையின்றிக் கடந்துசெல்ல அனுமதிப்பது போன்ற முறைகள் இந்த இலக்கை அடையும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே, மனமுழுமைப் பயிற்சியைப்பற்றி ஒரு நிருபரிடம் கபாட்-ஜின் இப்படி விவரித்தார், "[மனரீதியில்] செல்வதற்கு எந்த இடமும் இல்லை. செய்வதற்கு ஏதுமில்லை. சும்மா அமர்ந்திருக்கவேண்டும், அமர்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கவேண்டும், அவ்வளவுதான்... [ஆனால், அது எளிதல்ல.] மனத்துக்குத் தனி வாழ்க்கை உண்டு. அது இங்குமங்கும் சென்றுகொண்டுதான் இருக்கும்."

மனமுழுமையைப்பற்றிப் பல பத்தாண்டுகளாக ஆராய்ந்துள்ள இன்னொரு முன்னணி உளவியல் நிபுணர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் எல்லென் லாங்கெர். 1970களில் தொடங்கி, லாங்கெருக்கு மனமுழுமையின்மீது ஆர்வம் பிறந்தது. மக்கள் தங்களையும் அறியாமல் விவரங்களை எப்படிச் செயல்முறைப்படுத்துகிறார்கள் என்பதை அப்போது அவர் ஆராய்ந்துகொண்டிருந்தார். "இந்தத் துறையைச்சேர்ந்தோர் [அறிவாற்றல் நிபுணர்கள்] மக்கள் சிந்திக்கும் வெவ்வேறு வழிகளைப்பற்றிக் கவலைகொண்டிருந்தார்கள்" என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் லாங்கெர். "அப்போது நான் ஒரு கேள்வி கேட்டேன்: நாம் எப்போதாவது சிந்திக்காமல் இருக்கிறோமா?" இதுபற்றிப் பின்னர் லாங்கெர் நிகழ்த்திய ஆய்வின்மூலம், மனமுழுமைபற்றிய அவருடைய சொந்த, தாக்கம் நிறைந்த அணுகுமுறை உருவானது. "மனமுழுமையும் முட்டாள்தனமும் ஒன்றல்ல..." என்கிறார் லாங்கெர், "நீங்கள் ஒரு தானியங்கி பைலட் முறையில் இருக்கிறீர்கள்... கடந்தகாலத்தில் நீங்கள் கண்ட மாறுபாடுகள், வகைபாடுகளில் கவனம் செலுத்துகிறீர்கள், அதனால், கடந்தகாலமானது உங்களுடைய நிகழ்காலத்தை அளவுக்கதிகமாகத் தீர்மானிக்கிறது. நீங்கள் ஓர் ஒற்றைக் கண்ணோட்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

இதுபற்றி லாங்கெரும் அவருடைய சக ஊழியர்களும் பலவிதமான ஆய்வுகளை நிகழ்த்தினார்கள், அவற்றின்மூலம், சிறந்த அறிவாற்றல் செயல்பாடானது மனமுழுமையைச் சார்ந்திருப்பதைக் கண்டறிந்தார்கள். அதாவது, ஒற்றைத்தன்மை கொண்ட, அல்லது ஒரேமாதிரியான சிந்தனையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளுதல். அவர்கள் மனமுழுமையை வாழ்க்கைபற்றிய ஒரு மனப்போக்காகவே காண்கிறார்கள், அதனை ஒரு மனத்தளர்வு அல்லது சுவாச உத்தியாகக் காண்பதில்லை. நம்மைச்சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை விநாடிக்கு விநாடி அறிந்திருத்தலை மேம்படுத்தும் முறைகளைவிட, நமது இப்போதைய ஊடாடல்களில் கவனம் செலுத்துவது என நமக்கு நாமே உறுதிசொல்லிக்கொள்வது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், மற்றும் பிறருடனான கடந்தகாலத்தைச் சரிசெய்வதைவிட இது சிறந்தது.  

பல நேரங்களில், மற்றவர்கள் நம்முடைய வாழ்க்கையில் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்காமல், கடந்தகாலத்தில் எப்போதோ அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதில் நாம் கவனம் செலுத்துகிறோம் என்கிறார் லாங்கெர். "அநேகமாக நாம் எல்லாரும், எப்போதும், நிகழ்காலத்தில் இருப்பதில்லை" என ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார், "[இது ஒரு முக்கியமான விஷயம்,] ஏனெனில், நம்முடைய தனிப்பட்ட, பிறருடனான, சமூகம் சார்ந்த துயரங்கள் எல்லாமே நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த மனமுழுமையைச் சார்ந்திருக்கின்றன."

லாங்கெர் நிகழ்த்திய ஆய்வில் அளவிடப்பட்டபடி, தினசரி வாழ்க்கையில் மனமுழுமையானது நான்கு வெவ்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கிறது: புதுமையை நாடுதல், புதுமையை உருவாக்குதல், நெகிழ்வுத்தன்மை மற்றும் ஊடாடல். இதனால், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லெஸ்லி புர்பீ தலைமையில் நிகழ்ந்த ஓர் ஆய்வில், திருமணமான ஆண்கள், பெண்களின் திருப்தியுணர்வானது பெருமளவு மனமுழுமையைச் சார்ந்திருப்பது தெரியவந்தது. இந்த விஷயத்தில் மற்ற எந்தப் பண்பையும்விட இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக, கணவன், மனைவி இருவருடைய ஆளுமைகளும் எந்த அளவு ஒத்துப்போகின்றன என்கிற உணர்வைவிட, மனமுழுமை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.  அதாவது, யாரெல்லாம் மனத்தளவில் ஊடாடினார்களோ, புதிய அனுபவங்களுக்குத் தயாராக இருந்தார்களோ, புதிய பின்னணிகளை அறிந்திருந்தார்களோ, அவர்களெல்லாம் அதிகத் திருப்தியான, முழுமையான உறவுகளை அனுபவித்தார்கள். காதலைப் பொறுத்தவரை, ஆட்டோ-பைலட் முறை எப்போதும் ஆகாது.

டாக்டர் ஜான் கபாட்-ஜின் உருவாக்கிய அணுகுமுறை பெரும்பாலும் புத்தமதம் சார்ந்தது. லாங்கெரும் தன்னுடைய அணுகுமுறைக்கு மனமுழுமை என்கிற அதே சொல்லைத்தான் பயன்படுத்துகிறார். அதேசமயம், அவர் இன்னொரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறார், "மனமுழுமைபற்றிய என்னுடைய பணியானது கிட்டத்தட்ட முழுமையாகவே மேற்கத்திய அறிவியல் பார்வையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நான் மனமுழுமையிலும், தினசரி வாழ்க்கையில் அது எப்படி அமைகிறது என்பதிலும் கவனம் செலுத்தினேன்... அதேசமயம், மனமுழுமைபற்றிய கிழக்கத்தியக் கொள்கைகளின் பண்புகளும் என்னுடைய பணியின் பண்புகளும் ஒரேமாதிரி அமைந்துள்ளன."

வழிநடத்தப்படும் செயல்பாடு

ஒரே ராத்திரியில் அதிக மனமுழுமையைப் பெற்றுவிட இயலாது. அதேசமயம், கெஸ்டால்ட் தெரபியில் இடம்பெற்றுள்ள இரண்டு பழைய முறைகள் எளிதானவை. முதல் முறையில், தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு (உதாரணமாக, 10 நிமிடங்களுக்கு) ஒரு நேரங்காட்டியை அமைத்துக்கொள்ளவேண்டும், அந்த நேரத்தில் அமைதியாக அமர்ந்து, கண்களை மூடிக்கொள்ளவேண்டும். அப்போது கவனம்முழுவதும் உடலின்மீதுதான் இருக்கவேண்டும். மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டும், எண்ணங்களைக்கூட நிறுத்திவிடவேண்டும். இரண்டாவது முறையும் கிட்டத்தட்ட இதேமாதிரியானதுதான். ஆனால், இங்கே முற்றிலும் வெளிச் சூழலில் கவனம் செலுத்தவேண்டும். உதாரணமாக, ஒலிகள், மணம் போன்றவை. இரண்டு செயல்பாடுகளுக்கும், பத்து நிமிடம்தான் செலவிடவேண்டும் என்று கட்டாயமில்லை. சவுகர்யப்படி இந்த நேரத்தை அதிகரித்துக்கொள்ளலாம். இதைப் பின்பற்றுவோர் சில வாரங்களுக்குள் தங்களுடைய புலன்களில் நன்மைகளைக் காணலாம்.

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன், நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் உளவியல் கூடுதல் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தனியே ஆலோசனை வழங்கும் உரிமம் பெற்ற உளவியல் மருத்துவ நிபுணரான இவர், உளவியல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  டாக்டர். ஹாஃப்மன் சமீபத்தில், டாக்டர். வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து எழுதியுள்ள நூல், நேர்வித உளவியல்: மகிழ்ச்சி மற்றும் மலர்ச்சியின் அறிவியல். நேர்வித உளவியலுக்கான இந்திய சஞ்சிகை மற்றும் மனிதத்தன்மை சார்ந்த உளவியல் சஞ்சிகைக்கான ஆசிரியர் குழுவிலும் இவர் பணியாற்றுகிறார். நீங்கள் அவருக்கு எழுத இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org