ஆனந்தக் கண்ணீர்

எதனால் ஆனந்த கண்ணீர்?

என்னுடைய 5ம் பிறந்தநாள் கொண்டாட்டம் பல ஆண்டுகளுக்குமுன்னால் நடைபெற்றது. ஆனால், இப்போதும் எனக்கு அந்த நாள் நினைவிருக்கிறது: என் தாத்தா, பாட்டி (என் தாயின் முதிய பெற்றோர்) எனக்காக ஒரு பிறந்தநாள் கேக் செய்து அதில் மெழுகுவர்த்திகளை வைத்திருந்தார்கள். அவர்களுடைய வெள்ளைநிற ஃபார்மிகா சமையலறை மேசையில் நான் கம்பீரமாக அமர்ந்திருந்தேன். தளர்ந்திருந்த என் தாத்தா மேலே இருந்த ஃப்ளோரசன்ட் விளக்கை அணைத்தார். மென்மையான குரலி, ‘அந்த மெழுகுவர்த்திகளை ஊதி அணை’ என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் அதைச் செய்தபோது, அவர்கள் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துச்சொல்லிப் பாடினார்கள். மீண்டும் அந்தப்  பிரகாசமான விளக்கை அவர்கள் எரியவிட்டபோது, அவர்கள் இருவரும் அழுதுகொண்டிருப்பதை நான் கண்டேன். அந்தச் சிறு வயதில், அழுகை என்றாலே வலி என்றுதான் நான் நினைத்தேன். ஆகவே, அவர்களிடம் ‘என்னாச்சு? ஏன் அழறீங்க?’ என்று விசாரித்தேன். என்னுடைய பாட்டி புன்னகையோடு பதில்சொன்னார், ‘எதுவும் ஆகலை. நீ வளர்ந்தப்புறம் புரிஞ்சுப்பே.’

நீங்கள் எப்போதாவது மகிழ்ச்சியால் அழுததுண்டா? அருமையான இசை, கலை அல்லது இலக்கியத்தைப் பார்க்கும்போது உங்கள் கண்களில் நீர் துளிப்பதுண்டா? அல்லது, உங்களுக்குப் பிடித்த விளையாட்டு அணி வெல்லும்போது நீங்கள் அழுததுண்டா? சில திரைப்படங்களில் எழுச்சியான காட்சிகள் வரும்போது நீங்கள் அழுத நினைவிருக்கிறதா? என் தாத்தா, பாட்டி அனுபவித்த அந்த ஆனந்தக் கண்ணீரைப் பல மத நூல்கள், இலக்கிய நூல்களில் காணலாம். ஆனால், ஆச்சர்யமான விஷயம், மனிதர்களிடையே நிகழும் முக்கியமான இந்த விஷயத்தை நவீன உளவியல் கண்டுகொள்வதே இல்லை. இந்தச் சூழ்நிலை ஏன் இப்படித் தொடர்ந்துவந்திருக்கிறது என்பதை விவாதிப்பது நம் நோக்கமில்லை. அதேசமயம், தனிப்பட்ட மலர்ச்சி மற்றும் நலனில் அறிவியல் ஆர்வம் அதிகரித்துவருகிற சூழ்நிலையில், ஆனந்தக் கண்ணீர் உள்ளிட்ட நேர்விதமான உணர்வுகளை ஆய்வாளர்கள் அதிகம் கவனிக்கிறார்கள், அவை பெறவேண்டிய கவனத்தைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இது சரித்திரத்தில் எப்படி நடைபெற்றுவந்திருக்கிறது என்று சுருக்கமாகப் பார்ப்போம். அதன்பிறகு, இப்போதைய அறிவியல் ஆய்வின் சில புதிர்களை ஆராய்வோம்.

மத மற்றும் இலக்கியப் பார்வைகள்  

இந்திய இலக்கியங்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைய உண்டு. ஆகவே, இந்தியர்களுக்கு இது நன்றாகத் தெரிந்த ஒரு விஷயம். பழங்கால இந்தியாவின் சமஸ்கிருதக் காவியமான மஹாபாரதம், “வானத்திலிருந்து பிறந்த நன்றியுணர்வுள்ள குரல்களை ப்ரீதா கேட்டாள், அவளுடைய மார்பில் அன்புப்பால் நிறைந்த்து, கண்ணில் ஆனந்தக்கண்ணீர் துளித்த்து” என்கிறது. கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய இலியாடில், டெமோடகஸ் பிரபு ட்ரோஜன் குதிரையின் கதையை விவரிக்கும்போது, ஒடீசியஸ் மகிழ்ச்சியில் அழுகிறான்.  அவன் தன்னுடைய தோழர்களை, நேரத்தை இழந்ததை எண்ணி வலியை அனுபவித்தாலும், இந்தக் கண்ணீர் ஆனந்தத்தால் பிறந்ததுதான்.  பின்னர், விர்ஜில், ப்ரொபெர்டியஸ் போன்ற முதல் நூற்றாண்டு கிரேக்கக் கவிஞர்கள், கண்ணீரைக் காதல் பிணைப்பின் சின்னமாக, காதலர்களை நெருக்கமாக்கக்கூடியதாகக் கொண்டாடினார்கள். ஹீப்ரூ பைபிளில், ஆனந்தக் கண்ணீர் பல விவரிப்புகளில் வருகிறது. உதாரணமாக, கனவு காணும் ஜோசஃப், தன்னுடைய அன்புக்குரிய சகோதரர் பெஞ்சமினைப் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது, பாபிலோனியச் சிறையிலிருந்து விடுபட்ட பழங்கால ஹீப்ரூக்கள் தங்களுடைய புனித ஆலயமான ஜெருசலேம் மீண்டும் அமைக்கப்படுவதைப் பார்க்கும்போது. இந்த உதாரணங்களிலிருந்து நமக்குப் புரிகிற விஷயம், மக்கள் நெடுங்காலமாக மகிழ்ச்சியில் அழுதிருக்கிறார்கள்.

பழங்கால இலக்கியங்களிலும் இந்த உண்மைக்குப் பல உதாரணங்கள் உண்டு. உதாரணமாக, ஜொஹனான் வுல்ஃப்காங் வான் கோதெ சிறுவயதில் மிகவும் திறமைபெற்று விளங்கினார், எட்டு வயதுக்குள் கிரேக்க மொழி, லத்தீன் மொழி, ஃப்ரெஞ்சு மொழி மற்றும் இத்தாலிய மொழியைக் கற்றுக்கொண்டார். ஆனால், அவர் தனது இருபதுகளின் மத்தியில் இருக்கும்போதுதான், மேற்கத்திய இலக்கிய உலகை வியப்பில் ஆழ்த்தினார். அவரது முதல் நாவல் ‘இளம் வெர்தெரின் சோகங்கள்’ 1774ல் வெளியானது, அவரைப் பிரபலமாக்கியது. பகுதியளவு சுயசரிதையாக எழுதப்பட்ட இந்த நாவல், அதன் காதல்வயப்பட்ட நாயகன் வாழ்க்கைமீது கொண்டுள்ள பேரார்வத்தால் அவ்வப்போது அழுவதைத் தெளிவாகக் காட்டியது. ”ஓ, என் இதயத்தில் புயல்வீசிக்கொண்டிருக்கும் அனைத்து உணர்வுகளையும் உன்னுடைய கழுத்திலே ஆயிரம் ஆனந்தக் கண்ணீர்த்துளிகளாக என்னால் கொட்டிவிடமுடிந்தால்...” வெர்தெர் தன்னுடைய நண்பன் வில்ஹெல்முக்கு எழுதும் கடிதத்தில் இப்படி மகிழ்ச்சியாக எழுதுகிறான், லொட்டெமீது தான் வைத்துள்ள காதலின் தீவிரத்தைக் குறிப்பிடுகிறான்.

ஆனந்தக் கண்ணீர்மீது கோதெ கொண்டிருந்த ஈர்ப்பால், பின்னர் வந்த ஐரோப்பிய, அமெரிக்க எழுத்தாளர்கள் பலர் கவரப்பட்டார்கள், தூண்டப்பட்டார்கள். இங்கிலாந்தில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், சார்லெஸ் டிக்கென்ஸ் போன்ற மேதைகளில் தொடங்கி, அமெரிக்காவின் அருமையான எழுத்தாளரான எட்கர் ஆலென் போ-வரை இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. போ எழுதிய நம்பிக்கையூட்டி ஏமாற்றமளிக்கும் ஒரு கட்டுரை, கவிதைக் கொள்கை. இதில் அவர் ஓவியம், சிற்பம், கட்டடக்கலை, நடனம், குறிப்பாக இசை ஆகிய அழகியல் நுட்பங்கள் அனைத்தும் மக்களை அழவைக்கக்கூடிய சிறந்த திறன் கொண்டவை என்று எழுதுகிறார். ஆனால், இது எதனால் நிகழ்கிறது? போ-வைப் பொறுத்தவரை, நமது அழகுணர்வானது வெறும் உள்ளார்ந்த விஷயம் அல்ல, அது முக்கியமாக எல்லைதாண்டுவதற்கான மனித ஏக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. “ஒரு கவிதையோ இசையோ நம்மை உருகி அழச்செய்யும்போது... நாம் அழுகிறோம்... அது அதீத மகிழ்ச்சியால் வரும் அழுகை அல்ல... கவிதையோ இசையோ அந்த தெய்விக மற்றும் பேரானந்த மகிழ்ச்சியின் ஒரு சிறிய மற்றும் விடைகாண இயலாத துளிகளைமட்டுமே வழங்குகின்றன... அவற்றை நம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லையே என்பதால் அழுகிறோம்.” அதாவது, போ-வின் கருத்து, அழகியல் விஷயங்கள், குறிப்பாக இசை, மனித அனுபவத்தின் மிக அருமையான எல்லைகளுக்கும் நமது சாதாரணமான தினசரி வாழ்க்கைக்கும் நடுவிலுள்ள இடைவெளியைப்பற்றி நம்மை அதிகம் உணரச்செய்கின்றன, இந்தப் புரிந்துகொள்ளலால்தான் நாம் அழுகிறோம்.

ஆனந்தக் கண்ணீர்பற்றிய புதிய கண்டுபிடிப்புகள்

ஆரோக்கியமான மனிதச் செயல்பாடுகளில் நேர்விதமான உணர்வுகளின் பங்களிப்பை உளவியலாளர்கள் நெடுங்காலமாக அலட்சியப்படுத்திவந்தபோதும், இந்தச் சூழ்நிலை இப்போது விரைவாக மாறிக்கொண்டிருக்கிறது. உதாரணமாக, தன்னைக்கடந்த உளவியல் சஞ்சிகையில் டாக்டர் ரோஸ்மேரி ஆண்டெர்சன் நன்றியுணர்வு, மகிழ்ச்சி மற்றும் வியப்பு ஆகியவற்றோடு தொடர்புடைய அழுகையின் ஒன்பது பண்புகளை அடையாளம் கண்டார். உதாரணமாக, தன்னுடைய சுயத்தின் இழந்த பகுதிகளோடு மீண்டும் இணையும் உணர்வு, உள் சுதந்தரம் அல்லது பரந்து விரிந்த தன்மை உணர்வு போன்றவற்றைக் குறிப்பிடலாம். அதே சஞ்சிகையில், இத்தகைய அனுபவங்களை ஒரு பரந்து விரிந்த தத்துவ-மதப் பின்னணியில் வைத்துப் பேசுகிறார் டாக்டர் வில்லியம் ப்ராவ்ட். இவர் மகிழ்ச்சியான அழுகையை பிரமிப்பு, இரக்கம், நன்றியுணர்வு, காதல் மற்றும் ஏக்கம் போன்ற நேர்வித உணர்வுகளோடு இணைத்தார். இத்தகைய கண்ணீர் உடலியல்ரீதியில் மனித உயிரினத்தில் ஆழ வேரூன்றியிருக்கக்கூடும் என்று ப்ராவ்ட் கருதுகிறார். “என்னைப்பொறுத்தவரை, வியப்பு-மகிழ்ச்சிக் கண்ணீர் என்பது உண்மையிலேயே முக்கியமான ஒன்றைச் சந்திக்கிற, பாராட்டுகிற செயல்களின் எதிர்வினைகள்... ‘பச்சாதாபம் காட்டி’ அல்லது ‘இரக்கம் காட்டி’ அல்லது ‘நன்றியுணர்வுக் காட்டி’ என்று சொல்லலாம்” என்றார் இவர்.  

கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆனந்தக் கண்ணீரின் காரணங்கள், சாத்தியமுள்ள பலன்களை இன்னும் நன்கு புரிந்துகொள்வதற்காக நான் ஒரு சர்வதேசக் குழுவை வழிநடத்தியுள்ளேன். இந்த நிகழ்வு இதுவரை பொருத்தப்படவில்லை என்பதால், எங்களுடைய ஆரம்ப இலக்கு, மக்கள் எந்தெந்த வகைச் சூழல்களில் உண்மையாகவே மகிழ்ச்சியில் அழுகிறார்கள் என்பதைக் கண்டறிவதுதான். எங்களுடைய முதல் அனுபவ ஆய்வில் இந்திய ஆண்களும் பெண்களும் பங்கேற்றார்கள். இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, என்னுடைய சக ஊழியர்கள் நீதா ரெல்வானி கார்க், ஜெனிஃபர் கொஞலெஜ் முஜிகா மற்றும் நான் இணைந்து நிகழ்த்திய ஆய்வில், இந்தியாவில் பிறந்தவர்களில் கிட்டத்தட்ட 85% பேர் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் மகிழ்ச்சியில் அழுதுள்ளார்கள் என்பதைக் கண்டறிந்தோம். இதற்கு நாங்கள் 18 வெவ்வேறு பிரிவுகளையும் கண்டறிந்தோம். அதில் சில பிரிவுகளை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மிகப் பொதுவான ஆனந்தக் கண்ணீர் நிகழ்வுகள், காதல் சம்பந்தமில்லாத அன்புசார்ந்தவை. உதாரணமாக, ஒருவருடைய திருமணத்தில் கலந்துகொள்வது, அல்லது பட்டம் பெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது, அதன்பிறகு, ஒரு தனிப்பட்ட சாதனை, குழந்தைப் பிறப்பு, பிரிந்த ஒருவருடன் சேர்வது, காதல், ஒரு திரைப்படம் அல்லது வேறு ஊடகத்துடன் நெருக்கமாக உணர்வது ஆகியவை. இந்தியாவில் அதிகம் காணப்படாத ஆனந்தக் கண்ணீர் நிகழ்வுகள், ஒரு குழந்தையைக்  கவனிப்பது, தன்னுடைய வாழ்க்கையை எண்ணிப்பார்ப்பது, அன்புக்குரிய ஒருவர் நோய் அல்லது காயத்திலிருந்து குணமாவது மற்றும் அழகியல் இன்பம். நிறைவாக, ஒன்றிரண்டு பேர் இத்தகைய “தூண்டுதல்”களைக் குறிப்பிட்டார்கள்: தனிப்பட்டமுறையில் ஒரு நோய் அல்லது காயத்திலிருந்து குணமாகி வருவது, பொருள் சம்பாதிப்பது, ஓர் ஆன்மிக அனுபவத்தை அடைவது, குழு நகைச்சுவையில் இணைவது, அல்லது, அறம் சார்ந்த நல்ல செயல் ஒன்றைப் பார்ப்பது.        

ஆனந்தக் கண்ணீர் என்பது, அபூர்வமான நிகழ்வல்ல என்று நாங்கள் கண்டோம். அதேசமயம், நாட்டுக்கு நாடு இது வெவ்வேறுவிதமாக அமைகிறது. உதாரணமாக, அமெரிக்கா, வெனிசுலாவைச் சேர்ந்த வயதுவந்தோரில் 30% பேர் முந்தைய மாதத்தில் மகிழ்ச்சியால் அழுதுள்ளதாகக் குறிப்பிட்டார்கள். 250 ஜப்பானியக் கல்லூரி மாணவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது 10% பேர் இப்படிச் சொன்னார்கள். பொதுவாக, ஆனந்தக் கண்ணீரை அனுபவித்த மக்கள் அதன்பிறகு உடல்ரீதியில் நன்கு உணர்ந்ததாகவும், பல நேரங்களில் தங்களுடைய மன அழுத்தம் குறைந்திருப்பதாகத் தோன்றியதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதில் புதிரான விஷயம், தங்களை உணர்வுரீதியில் வலுவானவர்களாகச் சொல்லிக்கொள்கிறவர்கள்தான் ஆனந்தத்தில் அடிக்கடி அழுவதாகச் சான்றுகள் இருக்கின்றன. அதேபோல், மற்றவர்களைவிட இவர்களுக்குதான் இந்த அனுபவத்தின் பலன்கள் அதிகம் கிடைக்கின்றன.      

அத்தகைய மகிழ்ச்சிப் பொழிவுகளை நம்மால் திட்டமிட இயலுமா? இதற்குமுன் எப்போது நாம் மகிழ்ச்சியில் அழுதோம், அதைத் தூண்டியது எது என்று யோசித்து, அதன்மூலம் அந்நிகழ்வு ஏற்படும் சாத்தியத்தை நிச்சயமாக அதிகரிக்கலாம். அப்போது நாம் தனியாக இருந்தோமா, அல்லது, பிறரோடு இருந்தோமா? ஆனந்தக் கண்ணீர் வந்தபோது, நம் உடல் எப்படி உணர்ந்தது?? வருங்காலத்தில் இந்த நேர்வித அனுபவத்தைப் பெறுவதற்கு இந்தப் பதில்கள்தான் நல்ல வழிகாட்டி.

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன், நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் உளவியல் கூடுதல் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். டாக்டர் ஹாஃப்மனின் சமீபத்திய புத்தகம், மகிழ்ச்சிக்கான பாதைகள்: தினமும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைச் சேர்க்க 50 வழிகள். உளவியல், அதுதொடர்பான துறைகளில் அவர் 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்/தொகுத்துள்ளார். டாக்டர் ஹாஃப்மன் தன்னுடைய மனைவி, இரு குழந்தைகளுடன் நியூ யார்க் நகரத்தில் வசிக்கிறார். அவருடைய ஓய்வுநேர ஆர்வங்கள், புல்லாங்குழல் வாசித்தல் மற்றும் நீந்துதல்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org