ஆரோக்கியமான பணியிடத்தில் என்னவெல்லாம் இருக்கும்?

ஆரோக்கியமான பணியிடத்தில் என்னவெல்லாம் இருக்கும்?

ஒருவர் ஆரோக்கியமான பணியிடத்தைப்பற்றிய தன்னுடைய உணர்வுகளைச் சிந்திக்கிறார். அப்போது அவருக்குள் பல எண்ணங்கள் வருகின்றன: பணியிடங்கள் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஒருவரை எளிதாக, வசதியாக உணரச்செய்கிறவையாக இருக்கலாமா? பணியிடங்கள் உண்மையில் ஊழியர்கள்மீது அக்கறை காட்டுகின்றனவா? அவர் எடுத்துக்கொள்ள இயலுவதைவிட அதிக வேலை அவர்மீது சுமத்தப்படுமா? அவருக்கு இந்த இடம் பிடிக்குமா? சூழல் எப்படி இருக்கும்?

பணியிடத்தைப்பற்றி ஒவ்வோர் ஊழியருக்கும் ஐயங்கள் இருந்தாலும், ஓர் ஆரோக்கியமான பணியிடத்தை உருவாக்குதல் என்பது ஓர் இருவழிப் பாதை. இதை உண்மையாக்குவதற்கு ஊழியர், நிறுவனத்தார் ஆகிய இருவரும் பங்களிக்கவேண்டும்.   ஏற்றுக்கொள்ளப்படுதல் ஒரு பெரிய வேறுபாட்டை உண்டாக்குகிறது செஸ்ட்நட் க்ளோபல் பார்ட்னர்ஸ் (CGP) இந்தியாவின் திட்ட இயக்குநரான லைனெட்டெ நாசரெத் ஓர் ஊழியர் உதவித் திட்ட(EAP)க் கூட்டணியாளர் ஆவார், பல பணியிடங்களுடன் இவர் பணிபுரிந்துவருகிறார். பணி-வாழ்க்கைச் சமநிலை, பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கல், ஊழியர்களுடைய உடல், மன மற்றும் உணர்வு நலனுக்கான ஆரோக்கியம் ஆகியவற்றைக் கையாளும் திட்டங்களை அவர் நடத்துகிறார். லைனெட்டெ சொல்கிறார், “ஒரு பணியிடம் தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்று, வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுதல்; அவை தொழில்சார்ந்த வேறுபாடுகளாக இருந்தாலும் சரி, வகிக்கும் பொறுப்புசார்ந்த வேறுபாடுகளாக இருந்தாலும் சரி, அல்லது ஆளுமை வேறுபாடுகளாக இருந்தாலும் சரி. இந்த வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுவதே ஓர் ஏற்றுக்கொள்ளல் பண்பாட்டை உருவாக்க உதவுகிறது." பணியிடங்கள் ஒரு பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கல் கொள்கையையும் அமல்படுத்தலாம், இது மக்கள் பணிபுரியும் விதத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும். எடுத்துக்காட்டாக:

  • உடல்சார்ந்த, மனம்சார்ந்த அல்லது உணர்வு நலன் பிரச்னை காரணமாக மக்களால் வேலைக்கு வர இயலாத நாட்களில், மக்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கலாம், இந்த விஷயத்தில் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கலாம்.

  • அடிமைத்தனத்திலிருந்து மீண்டவர்களுக்கு வேலை வழங்கலாம், பணிபுரியத் தேவையான பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கலாம்

  • ஊழியர்கள் தங்களையும் அறியாமல் சாய்வுகளை வெளிப்படுத்துவதைக் குறைக்க அவர்களுக்குப் பயிற்சியளிக்கலாம்

  • எண்ணங்கள், யோசனைகளில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கலாம்

  • அனைத்துப் பண்பாடுகள், பாரம்பரியங்களையும் ஏற்றுக்கொள்ளலாம் பணியிடம் எந்த அளவுக்கு அதிகம் உள்ளடக்குவதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுதல் அதிகரிக்கும்.

தலைமைப்பண்பு ஊக்கப்படுத்தப்படுகிறது பணியிடங்கள் ஒவ்வொரு நிலையிலும் தலைமைப்பண்பை ஊக்கப்படுத்துவது முக்கியம்; இதன்மூலம், ஊழியர்கள் தங்களுடைய சொந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்புகளை எடுத்துக்கொள்ளலாம். மேலாளர்கள் இந்த விஷயத்தில் முன்னின்று தங்களுடைய குழு உறுப்பினர்களுக்கு உதவலாம்; குறிப்பாக, மன நலப் பிரச்னைகளைச் சமாளிக்க முயன்றுகொண்டிருக்கும் ஊழியர்களுக்கு ஒரு சிறப்புப் புரிந்துகொள்ளுதல் தேவைப்படலாம். எடுத்துக்காட்டாக, அவர்களுக்கு ஓர் உதவிக்கரம் நீட்டுவதும், அவர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு சட்டகத்தை வழங்கி, அதற்குள் அவர்களைப் பணிபுரிய அனுமதிப்பதும் அவர்கள் சொந்தக் காலில் நிற்க உதவும்.

நலன் மற்றும் பாதுகாப்புத் தரங்கள் எட்டப்படுகின்றன ஊழியர் நலன், பாதுகாப்புக்கான குறிப்பிட்ட அடிப்படை எட்டப்படும்போது, மக்கள் அடுத்த நாள் மகிழ்ச்சியுடன் பணிக்குத் திரும்புகிறார்கள்; விரைவாக வெளியேறவேண்டும் என்று நினைப்பதில்லை. அவர்களுடைய மகிழ்ச்சியானது, பணியின் இயல்பு, பணித் தேவை தன்னுடைய திறன் தொகுப்புடன் பொருந்துதல், பணி நெறிமுறைகள் பின்பற்றப்படுதல் மற்றும் உடல்சார்ந்த வசதியுணர்வு, அதாவது, அவர்களை வசதியாக உணரச்செய்கிற இருக்கைகள் மற்றும் காற்றோட்டம் ஆகியவற்றால் உண்டாகிறது.

உட்கார வசதியான பணியிடம் அனைத்து ஊழியர்களிடமும் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை உண்டாக்குகிறது. உடல்சார்ந்த நலப் பிரச்னைகள், உடல்சார்ந்த குறைபாடுகள் மற்றும் உணர்வுப் பிரச்னைகள் கொண்டோருக்கு இவை இன்னும் அதிகம் பயன்படுகின்றன. "இதனால் ஊழியர்கள் தங்கள்மீது அக்கறை செலுத்தப்படுவதாக உணர்கிற வாய்ப்பு கிடைக்கிறது; தங்கள்மீது அக்கறை செலுத்தும் நிறுவனங்களுக்கு அவர்கள் தங்களுடைய 200%ஐ வழங்குகிறார்கள்.” என்கிறார் லைனெட்டெ.

பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக அமைந்துள்ள பணியிடங்கள் அனைத்து ஊழியர்களுகும் இதைப் பாதுகாப்பாக, அணுகக்கூடியதாக ஆக்குகின்றன. இத்துடன், அனைத்துவிதமான மக்களுடனும் இணங்கிப்போகிற, அவர்களிடம் நட்பாக இருக்கிற கொள்கைகளை அமைப்பது நலனை மலரச்செய்கிறது. எடுத்துக்காட்டாக, பணி-வேலைச் சமநிலைக் கொள்கை, இல்லத்திலிருந்து பணியாற்றுதல் கொள்கை, கருவிகள் மற்றும் பணிக் கருவி அணுகல் கொள்கை, துன்புறுத்தலுக்கு எதிரான கொள்கை, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கொள்கை போன்றவற்றை அறிமுகப்படுத்துதல். இவை உண்மையாக உள்ளடக்கும் தன்மை கொண்டவை மனநலப் பிரச்னை கொண்டவர்கள், உடல்நலப் பிரச்னை கொண்டவர்கள், உடல் குறைபாடு கொண்டவர்கள், LGBTQIA+ சமூகத்தினர், பெண்கள், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகிற மக்கள், வேறொரு இனத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் அடிமையாதலிலிருந்து மீண்டுகொண்டிருக்கும் மக்கள் எனப் பலவிதமான மக்களுடைய தொகுப்பு, களங்கப்படுத்தப்படுகிற, துன்புறுத்தப்படுகிற அல்லது கொடுமைப்படுத்தப்படுகிற அச்சமில்லாமல் ஒன்றாகப் பணியாற்ற இயலுகிற பணியிடங்கள்தான் உண்மையாக உள்ளடக்கும் தன்மை கொண்டவை. ஏற்றுக்கொள்ளுதல், பச்சாத்தாபம் மற்றும் நுண்ணுணர்வு ஆகியவை, தேவைப்படும் ஆதரவை வழங்க அவசியமானவை.

“இன்றைக்கு நாம் மாறுபட்ட விழைவு கொண்ட சமூகத்தின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதைப்பற்றிப் பேசுகிறோம், LGBT சட்டங்களைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த மாற்றமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றால், அவர்கள் வெறுமனே மாறுபட்ட நோக்குநிலையைக் கொண்ட மக்கள் என்று நமக்குத் தெரியும். உண்மையில் அதுதான் மன நலம்” என்கிறார் லைனெட்டெ.

சிலரால் பணிபுரிய இயலும், ஆனால், அவர்களுக்குச் சில வரம்புகள் இருக்கும், இதிலும் நிறுவனங்கள் தங்களுடைய மனத்தைத் திறந்துவைக்கவேண்டும். இத்துடன், மனநலப் பிரச்னை கொண்டவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு பணியைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பைக் கொடுத்தல், அதற்கு முதலில் அவர்களை மனிதர்களாக மதித்தல் ஆகியவை ஓர் ஆரோக்கியமான பணியிடத்தை உருவாக்கத் தேவையானவை.

தகவல் தொடர்பு வாசல்கள் தெளிவாகவும் திறந்தும் இருக்கின்றன தெளிவான ஒரு பணிப் பொறுப்பை வரையறுப்பது, எதிர்பார்ப்புகளை அமைப்பது; ஊழியர்கள் தங்களுடைய பணியில்மட்டும் கவனம் செலுத்தாமல், அதன் எல்லையைத் தாண்டிச் செல்வதற்கு ஊழியர்களுடைய ஊடாடலை ஊக்குவிப்பது, பிறரிடம் பச்சாத்தாபத்துடன் இருக்கும்படியான நுண்ணுணர்வை அவர்களிடம் உண்டாக்குவது போன்றவை அவர்களை மனத்தளவில் மகிழ்ச்சியாக வைக்கலாம். துயரத்தில் இருக்கிற/சிரமங்களைச் சந்திக்கிற ஊழியர்களை அடையாளம் காணவும், தங்களுக்குத் தேவையான உதவியை நாடும்படி அவர்களை ஊக்குவிக்கவும் மேலாளர்களுக்குப் பயிற்சி கொடுத்தால், அது வெளியேறும் விகிதத்தைக் குறைக்கிறது, இணக்கத்தன்மையை, மகிழ்ச்சியை, செயல்திறனை, பணியிடத்தில் நலனை அதிகப்படுத்துகிறது, அதன்மூலம் எல்லாருக்கும் உதவுகிறது.

இத்துடன், நேர்விதமாகச் சிந்தித்தலை ஊக்குவித்தல், ஏதாவது நல்லது நடக்கும்போது மக்களைப் பாராட்டுதல் ஆகியவை ஓர் ஆரோக்கியமான பணியிடத்துக்கு அவசியமானவையாகும்.

CGP இந்தியாவின் திட்ட இயக்குநர் லைனெட்டெ நாசரெத் வழங்கிய குறிப்புகளுடன். அவர் பணி-வாழ்க்கைச் சமநிலை, பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்குதல், ஊழியர்களுடைய உடல், மன மற்றும் உணர்வு நலனுக்கான ஆரோக்கியம் ஆகியவற்றைக் கையாளும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட திட்டங்களை நடத்துகிறார்

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org