பணிக்குத் திரும்புதல்: மனநலப் பிரச்னை உடைய நபர்களை நிறுவனங்கள் எப்படி ஆதரிக்கலாம்

வேலையில் நீடித்தல் அல்லது திரும்புதல் என்பது, மனநோயை அனுபவித்த ஒரு நபரின் மீட்சியில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்கிறது. வேலைக்குச் செல்வது, வழக்கங்களைக் கொள்வது மேலும் திறனுடன் இருப்பது போன்றவை அந்நபர்கள் நோக்க உணர்வு, தங்களுடைய நம்பிக்கையை அதிகரித்தல் மற்றும் சுய மரியாதை கொண்டிருத்தல் ஆகியவற்றில் உதவுகிறது.

அதேசமயம், பெரும்பாலான நிறுவனங்கள் மனநலப் பிரச்னை கொண்ட நபர்களை உள்ளடக்குவதில்லை என்று கூறப்படுகிறது. பல நிறுவனங்கள் மனநலப் பிரச்னை உடைய பணியாளர்களை நிகழ்வுகளின் அடிப்படையில் ஆதரிக்கின்றன, மேலும் பரந்த அளவில் பிரச்னையை எதிர்கொள்ளும் ஒழுங்குமுறை அல்லது நிறுவனக் கொள்கைகள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. இதனால், மனநலப் பிரச்னை கொண்ட நபர்களுக்கும், நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும் இது சவாலாக ஆகிறது. மனநலப் பிரச்னை உடைய நபர்களுக்கு, இது அவர்களுடைய பணிப்பாதுகாப்பில் நிலையற்றதன்மையைக் குறிக்கிறது, பணியில் உணர்வு நலத்தைப் பாதிக்கிறது; நிர்வாகம் மற்றும் மனித வளப்பிரிவுக்கு, கொள்கைகள் இல்லாமை என்பது, இந்தப் பணியாளரை ஆதரிக்க அவர்கள் மிகக் குறைந்த அமைப்புகளையே கொண்டுள்ளார்கள், அல்லது எந்த அமைப்பையும் கொண்டிருக்கவில்லை என்பது பொருளாகும்.

மனநலப் பிரச்னை உடைய நபர்கள் வேலைக்குத் திரும்பும் நேரத்தில் பின்வரும் பிரச்னைகள் குறித்து மனக் கவலைகளை அனுபவிக்கலாம்:

  • நான் மதிப்பிடப்படுவேனா அல்லது அவமானப்படுத்தப்படுவேனா?
  • நான் வேலையை இழந்துவிடுவேனா அல்லது பதவியிறக்கப்படுவேனா?
  • எனது சக பணியாளர் என்னையும் நான் எதிர்கொள்ளும் சவாலையும் புரிந்துகொள்வாரா?
  • நான் வேலையின் அழுத்தத்தைச் சமாளிக்க முடியுமா?
  • நான் பிற சூழ்நிலை அழுத்தங்களையும், பணி அழுத்தத்தையும் சமாளிக்க இயலுமா?

இந்தக் கவலைகளை எதிர்கொள்ள மற்றும் மனநலப் பிரச்னை உடைய நபர்களுக்கு அதிக உள்ளடக்குதலை உருவாக்க நிறுவனங்கள் என்ன செய்யலாம்?

நாங்கள் இதுபற்றிப் பல நபர்களிடம் பேசினோம் : பிரச்னையிலிருந்து மீண்டு வாழ்கிறவர்கள், HR நபர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் – மனநலப் பிரச்னை உடையவர்களுக்கு ஆதரவான பணிச் சூழலை உருவாக்க நிறுவனங்கள் எப்படிப்பட்ட அமைப்புகளைக் கொண்டிருக்கலாம் என்பது பற்றிய அவர்களுடைய பரிந்துரைகள் இதோ:

  • பெரும்பாலான நிறுவனங்கள் பணியாளர் உதவித் திட்டங்களை (EAP) அமைத்துள்ளன. மனநலத்தையும் EAP திட்டங்களின் ஒரு பகுதியாகக் கொள்வது இழிவைப் போக்கி மனநலம் குறித்த உரையாடல்களை உருவாக்குகிறது.
  • தேவைப்படுபவர்களுக்கு அழைப்பின்மூலம் ஆதரவு பெற மனநல நிபுணர்களைக் கொண்டிருத்தல் அவசியம். இந்தத் தகவலைப் பணியிடம் முழுவதும் பரவலாகக் காட்சிப்படுத்தவேண்டும், அதில் அவசர மனநல ஆதரவு எண்ணும் இடம்பெறவேண்டும். இரகசியத்தன்மை காக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்.
  • மூத்த நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் உட்பட அனைத்துப் பணியாளர்களுக்கும் மனநலக் கல்வி மற்றும் உணர்வினை வழங்குதல்.
  • பணியாளர்களுக்கு அவர்களுடைய குறைபாடு அல்லது நோயின் காரணமாக எந்தப் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலும் இருக்காது என்பதை உறுதிப்படுத்தல்.
  • மனநோயை எதிர்கொள்ளும் பணியாளர்களை எதிர்கொள்ளும்போது, நெகிழ்வான தேர்வுகளை ஆராய்ந்து அவர்களுக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தராத தீர்வுக்கு வருதல்.
  • மனநலப் பிரச்னை உடைய நபர்களுடன் பணியாற்றும் நிர்வாகிகளுக்கு வேண்டிய ஆதரவை வழங்குதல். இதன்மூலம், அவர்கள் சிக்கலான சூழலை எதிர்கொள்ளும்போது நிபுணர்களைத் தொடர்புகொள்ளலாம்.

பெங்களூரைச் சேர்ந்த ஆலோசர் மவுலிகா சர்மா, பணியாளருடைய மனநலம் குறித்து நிறுவனத்தின் கொள்கைகளில் வலியுறுத்தல் இருந்தால் இவை அனைத்துமே அடையக்கூடியவை என்று நம்புகிறார். “மேலாளர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு, மனநோயின் அடையாளங்களைக் கருத்தில் கொள்வது, மதிப்பிடாத பாணியில் நடப்பது மற்றும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் இருப்பது ஆகியவற்றில் பயிற்சியளிக்க முடியும். இந்த வழியில் மனநலப் பிரச்னைகள் குறித்துத் தெளிவான பார்வை இருக்கும், மேலும் மக்கள் இழிவாக உணரமாட்டார்கள்.  பணியாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஆகியோர், சக பணியாளருக்கு ஆதரவு தேவைப்படும் எந்தச் சூழலையும் கனிவுடன் எதிர்கொள்ள வலிமைப்படுத்தப்படுவார்கள்.”

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org