நேர்காணல்: புற்றுநோய் மற்றும் மனச்சோர்வு, இடையேயான தொடர்பு என்ன?

நேர்காணல்: புற்றுநோய் மற்றும் மனச்சோர்வு, இடையேயான தொடர்பு என்ன?

புற்றுநோய் கொண்ட நபர்களிடம் உள்ள பொதுவான மனநலப் பிரச்னைகள், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பயம். வைட் ஸ்வான் அறக்கட்டளையின் பூர்ணிமா BV , புற்றுநோய்க் கவனிப்பின்போது மனநலப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை குறித்து அழுத்தம் கொடுக்கும் ரங்கதோர் நினைவு மருத்துவமனையின் ஆலோசனை மனநல நிபுணர் Dr M N சுந்தரேசன் அவர்களிடம் பேசுகிறார்.

புற்றுநோய் கொண்ட நபர்களுடன் பணியாற்றும் ஒரு மனநல நிபுணராக, அவர்களுடைய மன நலப் பிரச்னைகளை எதிர்கொள்வதில் உங்கள் அனுபவம் எவ்வாறு இருக்கிறது?

புற்றுநோய் கொண்ட நபர்கள் மனச்சோர்வு, பதற்றம், பயம், சைக்கோஸிஸ், உடல் தோற்றப் பிரச்னைகள் போன்றவற்றைச் சந்திக்கின்றனர். இந்த பிரச்னைகள், அவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் நிபுணர்களுக்கு மன நலப் பிரச்னைகள்பற்றிய விழிப்புணர்வின்மை காரணத்தாலோ நேரமின்மை காரணத்தாலோ குறைவாகக் கையாளப் படுகின்றன – அல்லது முழுவதும் சிகிச்சையளிக்கப்படுவதில்லை. இது ஏற்றுக் கொள்ள முடியாதது.

நோயாளி மனநல ஆதரவு மற்றும் சிகிச்சையளிக்கக் கூடிய தகுதிபெற்ற மனநல நிபுணரை ஆலோசிப்பதன்மூலம் இந்த எல்லா நிலைகளுக்கும் எளிதில் சிகிச்சையளிக்க முடியும். உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் சிகிச்சையளிப்பது, உடலுக்கோ மனதிற்கோ மட்டும் சிகிச்சையளிப்பதைவிட மிகவும் முக்கியமானது என்று இங்கு வலியுறுத்தவேண்டும். 

புற்றுநோயின் மன நல அம்சங்களை எதிர்கொள்வது நோயை எதிர்த்துப் போராடுவதில் உதவ முடியுமா?

மனநலம் மற்றும் அதிகரித்த உடல் நோயெதிர்ப்புத் திறன் இடையே ஒட்டுறவு உள்ளது. உண்மையில், நோயாளியின் நோயெதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்போது, அவர்கள் நோயை எதிர்த்துப் போரிடும் திறனும் அதிகரிக்கிறது என்பது நன்கு நிறுவப்பட்டுள்ளது. இது, அவர்கள் முதன்மை நோய்க்கு பெற்றிக் கொண்டிருக்கும் சிகிச்சையோடு இணைந்து செயல்புரியும். மனச்சோர்வுக்குச் சிகிச்சையளிக்க முடியும் என்பதை நான் இங்கே வலியுறுத்திக் கூறவேண்டும். அது பல ஆண்டு ஆய்வுக்குப்பிறகு நன்கு நிறுவப்பட்டுள்ளது – குறிப்பாக மார்புப் புற்றுநோய் கொண்ட நபர்களுடைய மன நோய்க்குச் சிகிச்சையளிப்பது நோயெதிர்ப்புத் திறனை அதிகரிப்பதுடன் குறிப்பிட்ட மருந்து மற்றும் சிகிச்சைக்கான எதிர்வினையையும் அதிகரிக்கிறது. புற்றுநோய் கண்டறியப்பட்டவர்கள், அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் எல்லாரும் முதலில் ஒரு மன – புற்றுநோயியலாளரால் மீள்பார்வை செய்யப்பட வேண்டும். 

உங்கள் அனுபவத்தில், புற்றுநோய் கண்டறியப்படும்போது மக்கள் மனநல நிபுணரை ஆலோசிப்பதில் திறந்த மனத்துடன் இருப்பதைக் கண்டுள்ளீர்களா?

மருத்துவமனைக்கு வருகை தரும் பெரும்பாலான நபர்கள், அவர்களுடைய உறவினர்கள் மற்றும் கவனித்துக்கொள்கிறவர்கள் உட்பட, மனநல மருத்துவரைச் சந்திக்க மாட்டார்கள். மேற்கத்திய நாடுகளில், புற்றுநோய் உள்ள நபர்களில் கிட்டத்தட்ட எல்லாரும் மனநலப் பகுதியை எதிர்கொள்ள மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்காக மன- புற்றுநோயிலாளர்களிடம் செல்கின்றனர். புற்றுநோய் கொண்டவர், அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கும் ஆதரவு மற்றும் கவனிப்பு வழங்க உடனடித் தேவை உள்ளது. அவர்கள் எந்த அளவு விரைவாக மனநல ஆதரவு பெறுகிறார்களோ அந்த அளவு நல்லது. மனநல நிபுணரின் முறையான மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்குப்பிறகு, அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்கிறது, அதுபோல் வாழ்நாளும் அதிகரிக்கிறது.

இந்தியாவில், மனநலம் குறித்துப் போதிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வின்மை உள்ளது, மருத்துவ நபர்களிடம்கூட. எல்லாச் சமூகங்களிலும் – கற்றவர்கள் மற்றும் கல்லாதவர்களிடமும் – மனநலப் பிரச்னைகள் குறித்துப் பயம், ஒவ்வாமை, அறியாமை உள்ளது. மனநல மேலாண்மை, அதன் நன்மைகள் குறித்து நம்முடைய நாடு முழுவதும் போதிய விழிப்புணர்வு இல்லை. இதற்குக் காரணம் இந்தத் துறையில் போதிய கல்வியின்மை மற்றும் மருத்துவர்களுடைய தீவிர பற்றாக்குறை ஆகும்

அவர்கள் உங்களைச் சந்திக்க வரும்போது, அவர்களுடைய எண்ணங்கள், கவலைகள், பதற்றங்கள் என்னவாக இருக்கும்?

பலர் எங்களைச் சந்திக்க வருவதற்குக் காரணம், அவர்களுடைய உறவினர்களோ கவனித்துக்கொள்கிறவர்களோ அவர்களை வற்புறுத்துகிறார்கள் – அவர்கள் பெரும் பயம், குறிப்பிட இயலாத உடல் வலி ஆகியவற்றை அனுபவிக்கின்றனர் – அவர்கள் சோர்வு, உணர்வு மாற்றம், உதவியற்ற உணர்வு, மோசமான அல்லது அதிகரித்த தூக்கம், குற்ற உணர்வு, சோம்பேறித்தனம், தினசரி வழக்கமான செயல்களில் ஆர்வமின்மை ஆகியனவற்றைக் கொண்டுள்ளனர். அவர்கள் மோசமான சமூக மற்றும் தனிப்பட்ட இயங்குதிறனுடன் வருகின்றனர். மேலும் அவர்கள் ஆரோக்கியமற்ற எண்ணங்களைக் கொண்டுள்ளனர் – அவர்கள் உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என்று எண்ணுகின்றனர்.

புற்றுநோய்ச் சிகிச்சைக்கு பிறகு சிலர், மனநோய் மற்றும் மருத்துவர் தங்கள் உடல் பாகங்களை எடுக்கிறார்கள் என்ற காரணமில்லாப் பயத்துடன் வருகின்றனர். அவர்களில் சிலர் பயம் மற்றும் பதற்றத்தால் மதுவுக்கு அடிமையாகிறார்கள்.

மனநல ஆதரவு அளிக்கும்போது குடும்பத்தை ஈடுபடுத்துவது எவ்வளவு முக்கியமானது?

கவனித்துக்கொள்கிற ஒவ்வொருவருக்கும், அவர்கள் அந்த நபரை எப்படி ஆதரிக்கலாம் மனச்சோர்வின் தொடக்கத்திற்கு முன் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை எப்படி அடையாளம் காணலாம், அவர்கள் மனநல நிபுணரை நாடுவதற்குமுன் தாங்களே ஓரளவுக்குக் கையாளுவது எப்படி என்றெல்லாம் முறையாக் கற்றுத்தருவது முக்கியம்.

கவனித்துக்கொள்கிறவர்களுக்கு ஆதரவளிப்பது, கற்றுத்தருவது மற்றும் சிகிச்சையளிப்பது மிக முக்கியமாகும். அவர்கள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தைச் (சமூக, உடல் மற்றும் நிதி) செலவிட்டு, நோயுற்றவர்களுக்கு மிக அதிகமாக உதவுகிறார்கள். போதிய ஆதரவில்லாவிட்டால், கவனித்துக்கொள்கிறவர்கள் தீய நடத்தை, மறுப்பு மற்றும் தவிர்த்தல், சிலநேரங்களில் இதைச் சமாளிப்பதற்காக்க குடிப்பழக்கத்தில் விழுதல், தங்களைத் தாங்களே மோசமான உடல்நிலைக்கு இட்டுச் செல்லுதல் போன்றவற்றைப் பின்பற்றத் தொடங்கலாம். அதுபோன்ற நிகழ்வுகளில், குடும்பம் மற்றும் கவனித்துக்கொள்கிறவர்கள் ஆகியோர்தான் ஆதரிக்கப்பட வேண்டும். 

சிலநேரங்களில், அல்லது எப்போதும், புற்றுநோய் கொண்ட நபரின் மனநலத் தேவைகளை, புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்கும் முன் நிறைவு செய்ய வேண்டுமா?

புற்றுநோய் கண்டறியப்படுவதைத் தொடர்ந்து, புற்றுநோய் கொண்ட நபர் மற்றும் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு மனநல மதிப்பீடு நடத்தப்பட வேண்டும். இதனைப் பின்பற்ற மரபுகள் உள்ளன – மனநலப் பகுதிகளை மதிப்பிடக் கேள்வி  பதில் பட்டியல் கொண்ட ஓர் எளிய படிவத்தைப் பயன்படுத்தலாம். ஒரு செவிலியர் இந்த வேலையைச் செய்யலாம். மனநலப் பகுதியை மதிப்பிட்டதும், ஆழமான கண்டறிதலுக்கும் புரிதலுக்கும் அதனை ஒரு மனநல நிபுணரிடம் அனுப்பலாம். துரதிருஷ்டவசமாக, இந்த மரபுகள் இருந்தாலும், அவை பின்பற்றப்படுவதில்லை. புற்றுநோயைக் கையாளும் புற்றுநோய் நிபுணர்கள் இந்த நோயாளிகளை மனநல நிபுணர்களிடம் பரிந்துரைக்க நேரமோ ஆர்வமோ கொண்டிருக்கவில்லை – புற்றுநோய் மருத்துவமனைகளில் இந்த மதிப்பீடுகள் அவசியம் செய்யப்பட வேண்டும்.

ஒருவரை மனச் சோர்வில் தள்ளுவதற்குப் புற்றுநோய்தான் பொறுப்பா?

ஆம், குறிப்பிட்ட வகைப் புற்றுநோய்களான – கருப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், விந்தகப் புற்றுநோய் மற்றும் சில, சுரப்பிகளில் பாதிப்புக்கொண்டுள்ளன, இவை மனநோய்க்கு, குறிப்பாக மனச்சோர்வுக்கு இட்டுச்செல்கின்றன. புற்றுநோய்ச் சிகிச்சைகளான – அறுவைச் சிகிச்சை, மருந்துகள், கதிரியக்கம் ஆகியன பல்வேறு வகை மற்றும் நிலைகளில் சிகிச்சைக்குப் பிறகு மனநோயை வளர்ப்பவையாக அறியப்படுகின்றன. இவற்றைப்பற்றியும் மற்ற பக்க விளைவுகளைப்பற்றியும் சிகிச்சைக்குமுன்பே தெரிவிக்கப்படவேண்டும். புற்றுநோய் உடைய நபர்கள் மற்றும் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், சிகிச்சைக்குச் சேர்க்கும் முன் மருத்துவர்களிடமிருந்து இதனை அறியக் கோர வேண்டும்.

பெண்கள் மற்றும் புற்றுநோய்பற்றி என்ன தெரிந்துகொள்ளவேண்டும்? குறிப்பாக, அதிகரித்துவரும் மார்பகப் புற்றுநோய்ப் பரவல் குறித்து?

அது மிகவும் அறியப்பட்ட புற்றுநோயாக இருந்தாலும், ஆரம்பகால மார்பகப் புற்றுநோய்க் கண்டறிதல் பெரும் உதவியாக இருந்துவந்துள்ளது (சுய பரிசோதனை மற்றும் பொருத்தமான சிகிச்சைத் தேர்வுகள் உடன்). இருப்பினும், தவிர்த்தல் மற்றும் குற்றவுணர்ச்சி மற்றும் பொருத்தமில்லாத கண்டறிதல்களால் சில பெண்கள் வாழ்வின் பிற்பகுதியில் புற்றுநோய் நிபுணர்களிடம் வருகிறார்கள் – இது பல சமூக மற்றும் தனிப்பட்ட சிக்கல்களுக்கும் மாற்றிக்கொள்ளாத பழக்கங்களுக்கும் இட்டுச் செல்கிறது. சில நிகழ்வுகளில், மார்பகப் புற்றுநோய் கொண்ட பெண்கள் தாங்கள் பெண் என்ற அடையாளத்தை இழந்து விட்ட உணர்வில் வருகின்றனர். இந்தக் கவலைகளை முதலில் சரிசெய்ய வேண்டும். சிலநேரங்களில் காதல், விவாகரத்து மற்றும் பல சிக்கல்கள், விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் சமூகத் தாக்கங்களும் உள்ளன. இந்த எல்லாப் பிரச்னைகளும் மனநல நிலையில் ஒரு தாக்கம் கொண்டுள்ளன.

மேலும், இந்தப் பெண்கள் தங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பைத் தராமல், கூடவரும் ஆண்கள் பேசிக்கொண்டேயிருப்பது துரதிருஷ்டவசமானது.

மனநல ஆதரவு புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்குமா?

புற்றுநோய் உடைய நபர்களுக்கு மனநல இடையீடு மற்றும் ஆதரவு வழங்கினால் அவர்களுடைய வாழ்வின் தரம் உயர்வதும், வாழ்நாள் நீடிப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நன்கு நிறுவப்பட்ட உண்மை ஆகும். மோசமான மனநல ஆதரவு மற்றும் கண்டறியப்படாத உடல்நோய் உடையவர் மோசமான வாழ்க்கைத் தரத்தையும் அதிகரித்த நோய்த்தன்மையும் கொண்டுள்ளனர். அவர்கள் பின்னர் மோசமான முன்கணிப்பு மற்றும் மருந்துகளுக்கு மோசமான பதிலளிப்பிற்கு இட்டுச் செல்லும் மாற்ற இயலாத நடத்தையை வளர்த்துக் கொள்பவர்களாக அறியப்பட்டுள்ளனர்.

அவர்கள் மனத்தளவில் வலிமை பெற்றிருக்கும்போது வலியைச் சிறப்பாகத் தாங்க முடியுமா?

ஆம், அவர்கள் விழிப்புணர்வுடன் கற்பிக்கப்பட்டு நோயின் மனநலப் பகுதிகளுக்கு முறையாகச் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தால், அவர்கள் நிச்சயமாகத் தங்களுடைய உடல் மற்றும் மனவலியைக் கையாள முடியும் – தங்களுடைய வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்நாளை அதிகரிக்க முடியும். அதனைச் சரிசெய்ததும், புற்றுநோய் உடைய நபரும் கவனித்துக்கொள்கிறவரும் சூழ்நிலையை எதிர்கொள்ளச் சிறப்பாகத் தயாரானவர்களாக மாறுகின்றனர். 

ஒரு மனநல நிபுணராக, புற்றுநோய் உடைய நபருக்கு உங்கள் அறிவுரை என்ன?

நான் நம்பிக்கை இழக்காதீர்கள் என்று கூறுவேன். உதவியைக் கேளுங்கள், மனச்சோர்வுக்கு எளிதில் சிகிச்சையளிக்க முடியும் மேலும் அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் குறிப்பிடத்தக்க அளவில் உயரும். புற்றுநோய்ச் சிகிச்சைக்கான பதில் முடிவுகளும் மனநல ஆதரவுடன் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்தச் சிகிச்சையைக் கோரிப் பெறுவது அவர்களுடைய உரிமை. நோயைப் பற்றி, சிகிச்சை மற்றும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறிந்திருப்பது அவர்களுடைய உரிமை. சிகிச்சை பற்றிய எல்லாத் தொடர்புடைய மருத்துவத் தகவல்களைப் பெற்றதும், அவர்கள் தங்கள் மனத்தைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டும். சிகிச்சை எடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டவராகவோ போதிய அறிவின்றி சிகிச்சையை மறுப்பவராகவோ பயத்தால் மறுப்பவராகவோ இருக்கவேண்டாம். புற்றுநோய் உடைய ஒவ்வொரு நபருக்கும் அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கும் இந்த அறிவு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org