மனநிலை சரியில்லையென அதிகம் உண்கிறீர்களா?

மனநிலை சரியில்லையென அதிகம் உண்கிறீர்களா?

நீங்கள் கடைசியாக சோர்வாக உணர்ந்தது அல்லது உணர்வுரீதியில் தளர்வாக உணர்ந்தது எப்போது என்று நினைவிருக்கிறதா? அப்போது நீங்கள் சூடுபறக்கும் கிச்சடிக்குக் ஏங்கியதை நினைவுபடுத்த முடிகிறதா? அல்லது நீங்கள் எரிச்சலுற்று, சலித்துப்போய், ஒரு சீஸ் பிட்சா அல்லது எண்ணெய் நிறைந்த உருளைக்கிழங்கு வறுவலைச் சாப்பிட விரும்பிய நேரம் நினைவிருக்கிறதா? தேர்வில் நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்தபோது அல்லது, ஒரு நல்ல வணிக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டபோது, அதைக் கொண்டாட இனிப்பான எதையாவதை சாப்பிட விரும்பியுள்ளீர்களா? அல்லது, மழை நேரத்தில் பக்கோடா மற்றும் இஞ்சித் தேநீரை விரும்பியதுண்டா?

உணவு என்பது நமது உணர்வுநிலைகளுடன் ஆழமாக இணைந்துள்ளது ஏன்?

உணவு நமது வாழ்வின் மையப் பகுதியாகும். நாம் புதிதாகப் பிறந்தபோது, நம் தாய் நமக்குத் தாய்ப்பால் ஊட்டினார். அப்போதிலிருந்து, உணவு என்பது வெறுமனே வாழ்வாதாரம், ஊட்டச்சத்து சார்ந்த விஷயமில்லை, அதில் கதகதப்பு, அன்பு, இணைப்பும் இருக்கிறது. படிப்படியாக, நாம் வளர்ந்தோம், உணவு அதிகத் தேவைகளை நிறைவுசெய்தது: நாம் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் உண்ணும்போது, அவர்களுடன் வலுவான பிணைப்பை உருவாக்குகிறோம்; நாம் உணவைத் தயாரிக்கும்போது, அது நமக்கு உணர்ச்சிகரமான மகிழ்ச்சிகளைத் தருகிறது; நாம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சிறப்பு நிகழ்வுகளில் சாப்பிடும்போது, உணவு கொண்டாட்டத்தின் பொருளாகிறது.

சில நேரங்களில், நாம் பதற்றமாக, சோர்வாக, வருத்தமாக அல்லது தளர்வாக உணரும்போது, நாம் உணரும் உணர்ச்சிகளிலிருந்து நம்மைத் திசை திருப்ப நாம் எதையாவது உண்ணலாம். அழுத்தம் அல்லது உணர்வுகளைக் கட்டுப்படுத்தச் சில குறிப்பிட்ட உணவுகள் நமக்கு உதவுகின்றன. ஆனால், அது நீண்டநாள் பயன்படாது. சிலநேரங்களில், குறிப்பிட்ட உணர்ச்சிகள் உணவு உட்கொள்ளல் குறைவிற்கும் இட்டுச் செல்லலாம். நீங்கள் ஒரு நேர்காணல் அல்லது தேர்வைப் பற்றிப் பதற்றமாக இருந்த காரணத்தால் உணவைத் தவிர்த்திருந்தால், நீங்கள் இதனை உணர்ந்திருப்பீர்கள்.

“ஒவ்வொரு நபரும் மனநிலை மற்றும் உணர்ச்சிகளைச் சமாளிக்க வெவ்வேறான வழிகளைக் கொண்டுள்ளனர்,” என்கிறார் மருத்துவ மனநல மருத்துவர் போனா கொலகோ. "நாம் கோபமாக, வருத்தமாக அல்லது பதற்றமாக இருக்கும்போது, நாம் நன்கு உணர்வதற்காகப் பல விஷயங்களை முயன்றுபார்க்கிறோம். உணவு நம்மை உடனடியாக நன்றாக உணரவைக்கும் விஷயங்களுள் ஒன்றாகும்.” சில உணவுகள் (எடுத்துக்காட்டாக, சர்க்கரை) நமது மூளையில் டோபமைனை வெளியேற்றுவதன்மூலம் வெகுமதி அமைப்பைச் செயல்படுத்துகின்றன. இதனால், இவற்றைச் சாப்பிடும்போது நாம் நன்றாக உணர்கிறோம் – குறிப்பாக இனிப்பு நிறைந்த உணவுகள். எனவே சில நேரங்களில், நாம் சோகமாக, வருத்தமாக அல்லது எரிச்சலாக உணரும்போது, நாம் நன்றாக உணர்வதற்குச் சிலவற்றை உண்ணலாம்.

அழுத்தம், கவலை மற்றும் பதற்றம் போன்ற உணர்வுகள் பெரும்பாலும் உணர்ச்சிகரமான உண்ணுதலுடன் தொடர்புள்ளவை என்று ஆய்வுகள் காட்டியுள்ளன.

ஆனால், இது தீங்கு விளைவிக்குமா?

உணர்வுகளைச் சமாளிப்பதற்கு உண்ணும் இந்த நடத்தையைக் குறிக்கச் சில நிபுணர்கள் ‘உணர்ச்சிகரமான உண்ணுதல்’ என்ற தொடரைப் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக நாம் ‘எதிர்மறை’ என்று பார்ப்பவற்றை. ஏனெனில், உணவானது நம் வெகுமதி அமைப்பைத் தூண்டுகிறது, நம்மை நன்கு உணரச்செய்கிறது. இதனால், நமக்கு அழுத்தம், பதற்றம் வரும்போதெல்லாம் நாம் உண்ணக்கூடும். நாம் நன்றாக உணர்வதில் கவனம் செலுத்தும் அதேவேளையில், நாம் இந்த நடத்தைக்கு இட்டுச் சென்ற உண்மையான உணர்ச்சி நிலையைக் கவனிப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் உண்ணும்போது, நாம் உடனடிப் பிரச்னையைமட்டுமே (அசௌகர்யமான உணர்வு) சரி செய்ய முயல்கிறோம், அதன் காரணத்தை அல்ல.

உணர்ச்சிகரமான உண்ணுதல் என்பது, நீண்ட காலத்தில் உடல் நலப் பிரச்னைகளுக்கு இட்டுச் செல்லலாம், குறிப்பாக நாம் இனிப்பு நிறைந்த அல்லது இயல்பில் ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடும்போது. இனிப்பு நிறைந்த உணவிற்குப் பின் அதன் உடனடித் தாக்கம், அக்கறையின்மை மற்றும் மந்தநிலையாக இருக்கலாம்.

சில நிகழ்வுகளில், உணர்ச்சிகரமான உண்ணுதலைப் பதற்றம் அல்லது மனச்சோர்வுடன் தொடர்புபடுத்தலாம். ஒருவர் இந்த அறிகுறிகளை உணர்ந்திருந்தால், தயவுசெய்து உடனடியாக மனநல நிபுணரின் உதவியை நாடவேண்டும்.

சிலர், வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு நேரும்போது, உணவில் நிம்மதியைத் தேடலாம்: அன்புக்குரிய ஒருவரின் மரணம், அல்லது, ஓர் உறவின் முறிவு. அது போன்ற சூழல்களில், அவர்கள் தங்களுடைய இழப்பைச் சரிசெய்ய உதவும் துக்க ஆலோசகர்களின் உதவியை நாடுவது பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் ஒருவர் பசியாக இருப்பதால் உண்கிறாரா, அல்லது உணர்ச்சிகரமாக இருப்பதால் உண்கிறாரா என்று அறிவது எப்படி?

உடலில் என்ன நடக்கிறது என்று கவனிப்பதுதான் இதற்கு விடையாகும் என்று கொலகோ கூறுகிறார். “நாம் பசியாக இருக்கும்போது தோன்றும் உணர்வுகள் குறித்து விழிப்பாக இருக்கலாம். வளர்சிதை செயல்முறைகள் மற்றும் வயிற்றுச் சுருக்கங்கள் பசி சமிக்ஞைகளை அதிகரிக்கின்றன. நாம் சாப்பிடும்போது, இந்த சமிக்ஞைகள் தளர்த்தப்படுகின்றன மேலும் நாம் முழுமையாக அல்லது நிறைவாக உணர்கிறோம். இந்த உணர்வுகள் குறித்து விழிப்பாவதால், நாம் உடலின் பசி உணர்விற்காக உண்ணுகின்றோம், மேலும் நாம் ‘நன்றாக உணர்வதற்காக’ உண்ணுகின்றோம் என்பதை உணர இயலும்.”

உதவியை நாடலாம்

ஒருவர் மன அழுத்தத்துடன் இருக்கும்போது உணவை நாடுவதாக நினைத்தால், இந்த பாணியை மாற்ற நினைத்தால், அவர் தன்னுடைய மன நல நிபுணருடன் தொடர்பில் இருக்கவேண்டும். அவர்களால் உணர்வுகள் மற்றும் சிக்கல்களை ஆராய இயலும், மேலும், அவற்றைச் சமாளிக்கச் சிறந்த வழிகளை அடையாளம் காண உதவ முடியும். 

அவர்களே தங்களுடைய சொந்த சமாளிக்கும் முறைகளை வளர்க்கத் தொடங்கலாம்: 

உடல்ரீதியில்: வழக்கமான உணவு வேளைகளில் சத்தான உணவுகளை உண்பதை உறுதிப்படுத்தலாம். போதுமான அளவு தூங்குதல், வழக்கமான உடற்பயிற்சி அல்லது உடல் சார்ந்த செயல்களில் ஈடுபடுதல். வழக்கமான உடற்பயிற்சியானது, நன்றாக உணரும் விளைவுக்காக மூளையில் என்டார்ஃபின்களைத் தயாரிக்கும், மேலும் அது ஒருவருடைய உணவுச் சார்பினை வலுவிழக்கச் செய்ய உதவும்.

மனரீதியில்: தன்னை உணவை நாடச்செய்யும் அழுத்தக் காரணிகளை அடையாளம் காணவும், தன்னைத் தானே கண்காணிக்கவும் முயற்சி செய்யலாம். தியானம் அல்லது மன நிறைவைப் பயிற்சி செய்யலாம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடைய உதவியை நாடலாம் அல்லது அவர்கள் அனுபவிக்கும் செயல்களில் (வரைதல், குறிப்பு எழுதுதல் அல்லது இசை) பங்குபெறலாம்.

IMAGE : DO NOT TRANSLATE

இந்தக் கட்டுரை, மருத்துவர் பௌலோமி சுதிர், கூடுதல் பேராசிரியர், மருத்துவ மனநலத் துறை, NIMHANS; மற்றும் போனா கொலகோ, பதிவுபெற்ற மருத்துவ மனநல நிபுணர் ஆகியோர் வழங்கிய கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org