மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

மனநலப் பிரச்னை கொண்டோர் வேலைக்குச் செல்லுதல்

மனநலப் பிரச்னை கொண்டோர் எப்படி வேலைசெய்யத் தொடங்குவது அல்லது எப்படி வேலைக்குத் திரும்புவது?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

வேலைக்குச்செல்வது என்கிற விஷயத்துக்கு எல்லாரும் ஓரளவு முக்கியத்துவம் தருகிறார்கள். அதனால் வருகிற சம்பளம்மட்டும் முக்கியமில்லை, அத்துடன் கிடைக்கும் பிற விஷயங்கள், வாழ்க்கைக்கு ஒரு நோக்கம், கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு, பிறருடன் சேர்ந்து பணியாற்றுகிற வாய்ப்பு போன்றவை. ஆனால், மனநலப் பிரச்னை கொண்டோருக்கு வேலைசெய்யும் வாய்ப்பு கிடைக்குமா?

பெரும்பாலான மனநலப் பிரச்னைகள் 15-35 வயதுள்ளோருக்குதான் வருகின்றன. சில மனநலப் பிரச்னைகளுக்கு நீண்டகாலத் தாக்கங்கள் உண்டு, இதனால், ஒருவருடைய வாழ்க்கையின் மிகவும் சிறந்த, அவர் பணிபுரிய ஏற்ற ஆண்டுகள் பாதிக்கப்படலாம். மருத்துவ மனச்சோர்வு மற்றும் பதற்றம் தொடர்பான பிரச்னைகள் போன்ற மனநலப் பிரச்னைகள் கொண்டோர் சிறிதுகாலத்துக்குப்பின் மீண்டும் வேலைக்குச் செல்லலாம். ஆனால், ஸ்கிஜோஃப்ரெனியா அல்லது இருதுருவக் குறைபாடு போன்ற தீவிர மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுடைய சமூகத் திறன்கள், அறிவாற்றல் சாத்தியங்கள் மற்றும் அவர்கள் தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக்கொள்ளும் திறன் போன்றவை பாதிக்கப்பட்டிருக்கலாம். ஒருவருக்கு இதுபோன்ற ஒரு பிரச்னை வரும்போது, அவர் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளும் திறமை பாதிக்கப்படலாம், அல்லது, பிரச்னை வருவதற்குமுன் அவர் கற்றுக்கொண்ட திறன்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு வேலைவாய்ப்பைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படலாம்.

மனநலப் பிரச்னை கொண்டோர் எப்படி வேலைசெய்யத் தொடங்குவது அல்லது எப்படி வேலைக்குத் திரும்புவது?

மனநலப் பிரச்னை கொண்டோருக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுடன், அவர்களுக்கான பணிசார்ந்த புனர்வாழ்வு என்கிற செயல்முறையும் பின்பற்றப்படுகிறது. இது ஓர் அமைப்புசார்ந்த, ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக அமையும் திட்டமாகும். இதில் பணிசார்ந்த ஆலோசனை, பணிசார்ந்த திறன்களை மதிப்பிடல், வேலைத்திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், பணியில் அமர்த்துதல், பணியில் தக்கவைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவை இடம்பெறுகின்றன. புனர்வாழ்வுச் செயல்முறையின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டோர் மதிப்பிடப்படுகிறார்கள், அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது, அவர்களுடைய மற்றும் அவர்களுடைய குடும்பத்தின் வளங்கள், தேவைகளுக்கேற்ப அவர்கள் வேலையில் அமர்த்தப்படுகிறார்கள்.

ஒருவர் வேலைக்குச்செல்கிறார் என்றால், தன்னைப்பற்றிய சுயமதிப்போடு இருக்கிறார் என்று பொருள், இந்த உணர்வு ஒரு முக்கியமான ஊக்குவிப்பாகத் திகழலாம். இது ஒரு நம்பிக்கையுணர்வைத் தரலாம், அவர் மனநலப் பிரச்னையிலிருந்து மீள்வதற்கு இது உதவலாம். பொதுவாகச்சொல்வதென்றால், மனநலப் பிரச்னை கொண்டோருக்கு ஒரு தொழில்பயிற்சி வழங்கப்படும்போது:

 • அவர்கள் தங்களுடைய அறிகுறிகளைக் கவனிக்காமல் வேலையில் கவனம் செலுத்தத்தொடங்குகிறார்கள்

 • அவர்கள் குழுவாக வேலைசெய்யக் கற்றுக்கொள்கிறார்கள், அவர்கள் தங்களைத் தாங்களே தனிமையில் இருத்திக்கொள்ளும் வாய்ப்பு குறைகிறது.

 • ஒரு வேலையைக் கவனித்தல், செய்கிற வேலையில் கவனம்செலுத்துதல், ஞாபகத்திறன் போன்ற அவர்களுடைய அறிவாற்றல் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன

 • ஒரு வேலையைத் திரும்பத்திரும்பச் செய்யும்போது, அவர்களுக்கு ஒரு பணிப்பழக்கம் ஏற்படுகிறது

 • அவர்களுக்குச் சம்பளம் (பணமாகக்) கிடைக்கும்போது, அவர்கள் ஊக்கமடைகிறார்கள்

 • அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கிறது; தாங்கள் பயனுள்ளவர்கள், தங்களுக்கு மதிப்புண்டு என்று உணர்கிறார்கள்

 • அவர்களுடைய ஒட்டுமொத்தச் செயல்பாட்டு நிலை மேம்படுகிறது

NIMHANS மனநல மருத்துவச் சமூகப் பணித்துறைத் துணைப் பேராசிரியரான டாக்டர் ஆர்த்தி ஜகந்நாதன் சொல்கிறார், "இந்தியாவில், சமீபகாலம்வரை மனநலப் பிரச்னை கொண்டோருக்கான பணிசார்ந்த புனர்வாழ்வு என்பது, அவர்களுக்குச் சில வேலைகள் அல்லது பணிகளைக் கொடுத்து அதிலேயே ஈடுபடுத்திவைத்திருப்பதாகதான் இருந்தது. சென்ற ஓராண்டாக, மனநல மருத்துவமனைகளும் மனநலப் புனர்வாழ்வு மையங்களும் மனநலப் பிரச்னை கொண்டோருக்கு வேலை கிடைப்பதற்கேற்ற சிறப்புத் திறன்களில் பயிற்சி தரவேண்டும் என உணர்ந்துள்ளார்கள், அந்தத் தேவையில் கவனம் செலுத்தத்தொடங்கியுள்ளார்கள். இந்த வகையில், NIMHANS ஒரு தொழில்சார்ந்த மதிப்பீட்டுப் படிவத்தை உருவாக்கியுள்ளது. இதன் பெயர் UDYOG ( இளைஞர்களுக்கு லாபசாத்தியமுள்ள வேலைக்கான தனித்துவமான தரவுத்தளம்). இது தற்போது தரமயமாக்கப்படும் செயல்முறையில் உள்ளது."

"அதேசமயம், பாதிக்கப்பட்டவர் வேலைக்குச்செல்ல ஆர்வமாக உள்ளாரா, அவரால் வேலை செய்ய இயலுமா, வேலை செய்ய அவர் தயாராக உள்ளாரா என்பதையெல்லாம் மனநல நிபுணர்கள் முதலில் மதிப்பிடவேண்டும், அதன்பிறகுதான் அவர்களுக்கு எந்தவொரு தொழிலிலும் பயிற்சி தர இயலும். மனநலப் பிரச்னையின் மாறக்கூடிய இயல்பையும் கருத்தில்கொள்ளவேண்டும், ஒருவருக்குப் பயிற்சி தந்து வேலையில் அமர்த்தியபிறகும் அவரைத் தொடர்ந்து கவனித்துவரவேண்டும்" என்கிறார் இவர். NIMHANSல் மனநலப் பிரச்னைக்குச் சிகிச்சை பெற்றுவருகிறவர்களுக்குத் தற்போது UDYOG படிவம் வழங்கப்படுகிறது.

புனர்வாழ்வுக்குத் தயார்தன்மை மதிப்பீட்டின்மூலம், மனநல நிபுணர்கள் இந்த மூன்றில் ஒன்றைத் தீர்மானிக்கிறார்கள்:

 • அவரிடம் பிரச்னைக்கான அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால், அவர்கள் பின்னால் வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது

 • அவர் தொழில்சார்ந்த புனர்வாழ்வுக்கு இன்னும் தயாராக இல்லை என்றால், மனநலக் குறைபாடு கொண்டோருக்கான ஒரு பகல்நேரப் பராமரிப்பு மையத்துக்குச் செல்லுமாறு அவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது

 • அவர் தொழில்சார்ந்த புனர்வாழ்வுக்குத் தயாராக இருக்கிறார் என்றால், அவர் தொழில்சார்ந்த ஆலோசனைக்குச் செல்லலாம், தேவைப்படும் பணித்திறன்களில் பயிற்சிபெறலாம் மற்றும் பொருந்தும் வேலைக்குச் செல்லலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது

மனநலப் பிரச்னை கொண்டோர் பணிக்குச்செல்லும் தன்மை

மனநலப் பிரச்னை கொண்டோர் எந்த வேலைக்குச் செல்லலாம் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. அவர்கள் போட்டியுள்ள ஒரு பணிச்சூழலுக்குப் பொருந்துவார்களா, அல்லது, அவர்கள் ஒரு தொழில்சார்ந்த மையம் போன்றதொரு பாதுகாப்பான பணிப்பட்டறைக்குச் செல்லலாமா, அல்லது, அவர்கள் சொந்தமாகத் தொழில்செய்யலாமா, அல்லது, அவர்கள் வீடு-சார்ந்த ஒரு வேலையைச் செய்யலாமா, அல்லது ஒரு கூட்டுறவு அமைப்பில் பணியாற்றலாமா என்பதையெல்லாம் அவர்களுடைய செயல்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கலாம்.

தனிநபர்களின் செயல்பாட்டை எப்படித் தீர்மானிப்பது? இதற்குப் பல கேள்விகளைக் கேட்கவேண்டும். அவர்களுக்கு வந்துள்ள பிரச்னை எப்படிப்பட்டது, அது எத்தனைநாளாக உள்ளது, அவர்கள் எந்த அளவு மருந்து சாப்பிடுகிறார்கள், அந்த மருந்துகளை எந்த அளவு சரியாக எடுத்துக்கொள்கிறார்கள், எந்த அளவு தன்னைத்தானே கவனித்துக்கொளிறார்கள், மற்றவர்களுடன் பழகுகிறார்கள், சமூகத்திறனோடு இருக்கிறார்கள், வேலை நேரம் அவர்களுக்குப் பொருந்துமா, அவர்களால் இவையெல்லாம் இயலுமா:

 • சுதந்தரமாகப் பயணம்செய்தல்

 • தரப்படும் வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்ளுதல்

 • சுயேச்சையாகத் தீர்மானமெடுத்தல்

 • தன்னுடைய பணத்தைத் தானே கையாளுதல்

எனேபிள் இந்தியாவின் திட்ட ஒருங்கிணைப்பாளரான வித்யா ஹெச் ஆர், மனநலப் பிரச்னை கொண்டோர் பலருக்குப் பயிற்சியளித்துள்ளார். இந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் சொல்வது, "பல நேரங்களில் நான் கவனித்திருக்கிற விஷயம், அவர்களால் ஒரு வேலையைச் செய்யமுடியாது என்றல்ல, அவர்களுக்கு வந்துள்ள மனநலப் பிரச்னையால், அல்லது, அதற்காக அவர்கள் சாப்பிடும் மருந்துகளின் பக்க விளைவுகளால் அவர்களுக்குப் பணிசெய்வதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. எனேபிள் இந்தியாவில் நாங்கள் அனைவரும் நம்புகிற ஒரு விஷயம், மாற்றுத்திறனாளிகளுக்குப் பரிதாபவுணர்ச்சி தேவையே இல்லை: அவர்கள் வளர்வதற்கும், தங்களுடைய தேவைகள், சாத்தியங்கள் மற்றும் கனவுகளைப் பூர்த்திசெய்வதற்கும் ஆதரவளிக்கும் ஒரு சூழல்தான் அவர்களுக்குத் தேவை."

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org