முக்கியக் கேள்விகள்

என் மகனுக்கு 24 வயது ஆகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக அவனுக்கு ஸ்கிஸோஃப்ரேனியா பிரச்சனை இருந்துவந்தது. இப்போது அவன் அந்தப் பிரச்சனைக்குச் சிகிச்சை பெற்று வருகிறான். சரியான மனநிலையில் தன்னுடைய வேலைகளைச் செய்துகொண்டு வாழ்ந்துவருகிறான். அவனுக்குத் திருமணம் செய்துவைக்க நாங்கள் விரும்புகிறோம். அவனுடைய மனநலப்பிரச்சனை காரணமாக இந்தத் திருமணத்தில் ஏதேனும் இடைஞ்சல்கள் வருமா? வருங்காலத்தில் ஏதாவது பிரச்சனைகள் வரக்கூடுமா? நாங்கள் இதற்கு என்ன செய்யவேண்டும்?

உளவியல் சமூகக் குறைபாடுகளைக் கையாள்வதற்கு முக்கியமான தேவைகள் புரிந்து கொள்ளுதலும் நம்பிக்கையும்தான். ஆகவே நீங்கள் உங்கள் மகனுக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணினால், உங்களுக்கு வரப்போகும் மருமகளிடம் இதைப்பற்றி முழுமையாகப் பேசவேண்டும். இதற்கு இரண்டு காரணங்கள் : முதல் காரணம், திருமணம் செய்யப்போகும் இருவருக்கும் இடையே நல்ல நம்பிக்கை இருக்கவேண்டும், திருமணத்திற்குப் பிறகு உங்கள் மகனுக்கு அவர் தரப்போகிற ஆதரவுக்கு அவர் தயாராக இருக்கவேண்டும். இரண்டாவது காரணம், ஒருவேளை நீங்கள் இப்போது இதைப்பற்றிப் பேசாவிட்டால், பின்னர் பெரும் சட்டச்சிக்கல்கள் வரக்கூடும். உதாரணமாக உண்மையை மறைத்துத் திருமணம் செய்ததாக பெண்வீட்டார் உங்கள் மீது குற்றம் சாட்டக்கூடும், அதைப் பயன்படுத்தி அவர்கள் திருமணத்தை ரத்து செய்யக்கூடும்.

அதைவிட மோசமான ஒரு சூழ்நிலை இந்தத் திருமணத்தின் மூலம் நீங்கள் அந்தப் பெண்ணை மனத்துன்புறுத்தலுக்கு ஆளாக்கிவிட்டதாக பெண்வீட்டார் குற்றம் சாட்டக்கூடும், இந்திய தண்டனைச் சட்டம் (பிரிவு 498A) அல்லது பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைச்சட்டம், 2005 இன் கீழ் உங்களுக்கு எதிராக அவர்கள் வழக்குத்தொடரக்கூடும்.  

இப்போதைய இந்தியச்சட்டங்களின் படி, உங்களுடைய மகனின் திருமணம் பதிவு செய்யப்படும்போது அவருக்கு எந்தவிதமான உளவியல், சமூகப் பிரச்சனை இல்லை என்றாலே போதும், அந்தப் பதிவு முழுமையாகச் செல்லும். திருமணத்திற்கு முன்பாக உங்கள் மகனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருந்தது என்று நீங்கள் தெரிவித்திருந்தாலே போதும், பின்னர் இதைக்காரணம் காட்டி பெண்வீட்டார் இதை ரத்து செய்ய இயலாது.

அதேசமயம், ஒருவேளை உங்கள் மகனுக்கு இந்தப் பிரச்னை மீண்டும் வந்து அவரால் திருமண உறவைத் தொடர முடியாது என்று அவர் மனைவி குற்றம் சாட்டினால், அப்போது திருமணத்தை ரத்துசெய்கின்ற சூழ்நிலை ஏற்படலாம். வெறுமனே ஒருவருக்கு மனநலப் பிரச்சனை உள்ளது என்பதைக் கண்டறிகிற காரணத்தால்மட்டும் (அது முன்பே கண்டறியப்பட்டிருந்தாலும் சரி, இப்போது கண்டறியப்பட்டிருந்தாலும் சரி) விவாகரத்துக் கோர இயலாது.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், சட்டபூர்வமான தடைகளை தாண்டுவது பற்றி இப்போது நீங்கள் கவலைப்படுவது தவறு. ஓர் இனிமையான திருமண வாழ்வை சட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்த இயலாது. அதற்குப் பதிலாக இப்போது உங்கள் மகனையும் அவருக்கு மனைவியாகப்போகிறவரையும் உரையாடச்சொல்லுங்கள் அந்த உரையாடல் ஒரு நேர்மையான உரையாடலாக இருக்கட்டும், தேவைப்பட்டால் அந்த உரையாடலின்போது அவர்களுடன் ஓர் ஆலோசகர், பொது நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரும் இருக்கலாம். இந்த உரையாடலின்போது, ஒருவேளை இந்தப் பிரச்னை மீண்டும் வந்தால் உங்கள் மகனுக்கு எந்தமாதிரியான ஆதரவு தேவைப்படும் என்பதையும், எந்தெந்தச் சிகிச்சை முறைகளை அவர் விரும்புகிறார் என்பதையும் தெரிவிப்பது நல்லது. தற்போது இந்தியச் சட்டம் ஒருவரை மருத்துவமனையில் சேர்த்து வலுக்கட்டாயமாக சிகிச்சை தருவதை அனுமதிப்பதால், இது ஒரு மிக முக்கியமான உரையாடல் ஆகும். இது உங்கள் மகனுடைய சட்ட உரிமைகளை மதிக்கிறது. குடும்பத்திடமிருந்து அவர் ஆதரவு பெற உரிமையுடையவர் என்பதை வலியுறுத்துகிறது.

அம்பா சலேல்கர், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், ஊனம் சார்ந்த சட்டம் மற்றும் கொள்கைகளில், விசேஷ விருப்பத்துடன் இயங்கிவருகிறார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org