கவனித்துக்கொள்வோருக்குக் கிடைக்கும் நிதி ஆதரவு

மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்வோருக்குப் பலவிதமான ஆதரவுகள் கிடைக்கின்றன

மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர் உடலளவிலும் உணர்வளவிலும் சிரமங்களை அனுபவிக்கிறார். அத்துடன், அவர்களுடைய நிதிநிலைமையிலும் துண்டு விழக்கூடும். ஒருவருக்கு மனநலப் பிரச்னை வந்துவிடுகிறது, அவருடைய உறவினர் ஒருவர் அவரைக் கவனித்துக்கொள்கிறார் என்றால், இப்போது அவர் தன்னுடைய கவனித்துக்கொள்ளும் பொறுப்புகளையும் தொழில்முறை இலக்குகளையும் சமநிலைப்படுத்தவேண்டும். மனநலப் பிரச்னை கொண்டவர் படுக்கைவசமாக இருக்கிறார் என்றால், அவருக்குத் தொடர்ச்சியான கவனிப்பும் அக்கறையும் தேவைப்படுகிறது என்றால், அவரைக் கவனித்துக்கொள்கிறவர் பணிக்குச் செல்வதற்குமுன்னால் அவருடைய தேவைகளை நிறைவேற்றவேண்டும். இதனால், அவர்கள் இந்தக் கவனிப்புப்பணிக்காகக் கூடுதல் விடுமுறைகளை எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கலாம், சில நேரங்களில் வேலையையே விட்டுவிட்டுத் தங்களுடைய நேரம்முழுவதையும் கவனிப்புப்பணிகளுக்கு அர்ப்பணிக்கவேண்டியிருக்கலாம்.

மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு ஏற்கெனவே நிதி நெருக்கடி இருக்கக்கூடும். ஆரம்பத்தில் அவர்கள் எப்படியோ சமாளித்துவிடுவார்கள். அதேசமயம், 'வருங்காலத்தில் இந்தச் செலவுகள் அதிகரித்துக்கொண்டேபோகுமே' என்று கவலைப்படுவார்கள். மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்குப் பணம்பற்றி ஏற்படும் மிகப்பெரிய கவலைகள்:

  • சிகிச்சை மற்றும் மருந்துகளின் செலவு அதிகரித்தல்

  • சம்பாதிக்கும் திறன் குறைதல் (பணியிலிருந்து ஓய்வுபெற்ற முதியவர்கள் பிறரைக் கவனித்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலைகளில்)

  • அதிகமாகிவிட்ட நிதிச்சுமை (மனநலம் பாதிக்கப்பட்டவர்தான் இதுவரை தன் குடும்பத்திற்காகச் சம்பாதித்துக்கொண்டிருந்தார், இப்போது இந்தப் பிரச்னையால் அவருக்கு வேலை இல்லை என்றால்)

  • மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு வேலை இல்லாத நிலைமை அல்லது, அடிக்கடி வேலைக்கு விடுப்பு எடுக்கவேண்டியிருக்கும் சூழ்நிலை

நிதி உதவி கிடைக்கிறது

பொதுவாக, மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய செலவுகளைச் சமாளிக்க இவற்றையெல்லாம் செய்கிறார்கள்:

  • ஓய்வூதியங்களுக்கு விண்ணப்பித்தல்

  • ஊழியர் சேமநல நிதி (EPF) போன்ற ஓய்வு நிதிகளிலிருந்து பணமெடுத்தல்

  • பரஸ்பர நிதிகள், நிரந்தர வைப்புகள் மற்றும் பிற சேமிப்புகளில் முதலீடு செய்தல்

  • குடும்பத்தினர், நண்பர்களிடம் கடன்வாங்குதல்

  • தனிநபர் கடன் வாங்குதல்

இத்துடன், மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்னை இருந்தால், கவனித்துக்கொள்ளுவதே களைப்புத்தரும் விஷயமாக, ஓர் ஆபத்தாகக்கூட ஆகிவிடலாம். தங்களுடைய அன்புக்குரியவரைக் கவனித்துக்கொள்ளும் முனைப்பில் அவர்கள் தங்களுடைய சொந்த ஆரோக்கியத்தைக் கவனிக்காமலிருந்துவிடலாம். மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்தபடி நிதி விவகாரங்களையும் கையாள்வது ஒருவருக்கு மிகவும் அழுத்தம் தருவதாக இருக்கலாம். ஆனால், உதவி கிடைக்கிறது என்பதைத் தெரிந்துவைத்திருப்பது முக்கியம்.

மனநலப் பிரச்னை கொண்டோருக்கு உதவும் பல திட்டங்கள் இருக்கின்றன. இவற்றின்மூலம் பின்வரும் செலவுகளைச் சமாளிக்கலாம்:

  • சிகிச்சைச் செலவுகள்

  • குணமாகிவிட்டவர்களுக்குச் சுய வேலைவாய்ப்பின்மூலம் வாழ்க்கை அமைத்துத்தருதல்

  • பாதிக்கப்பட்டோருக்குப் புனர்வாழ்வு வசதிகள்

குறிப்பு: இந்தக் கட்டுரையில், மனநலப் பிரச்னை கொண்டோருக்கான பல திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டத்தைப்பற்றியும் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்கு நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரமுள்ள அதிகாரியைத் தொடர்புகொள்ளலாம்.

சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கான வசதிகள்

மாவட்ட மனநலத் திட்டத்தின்கீழ்(DMHP) மாவட்ட மருத்துவமனைகளில், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு இலவச மருத்துவமும் மனவியல் மருந்துகளும் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.

  • யாருக்குத் தகுதியுண்டு?: BPL அட்டை கொண்ட நபர்கள் அல்லது குடும்பத்தினர், மற்றவர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படலாம்.

நலக் காப்பீடு

பல பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் மனநலப் பிரச்னை கொண்டோருக்கு நலக் காப்பீடு வழங்குகின்றன. மனநலப் பிரச்னை கொண்ட குழந்தைகளின் பெற்றோர் தங்களுக்கோ குழந்தைக்கோ காப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம்.

நிராமயா திட்டம்

இந்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி, உடல் மற்றும் மனநலக் குறைபாடு கொண்டோர் சிகிச்சைச் செலவுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகளுக்காக ரூ 1 லட்சம்வரை காப்பீடு பெறலாம்.

  • யார் விண்ணப்பிக்கலாம்?: ஆட்டிசம், மனநலப் பாதிப்பு, செரிபெரல் பால்ஸி, பல ஊனங்கள் கொண்டோர் அல்லது ஆட்டிசம், மனநலப் பாதிப்பு, செரிபெரல் பால்ஸி, பல ஊனங்கள் கொண்ட குழந்தைகளின் குடும்பத்தினர்.

  • யாரை அணுகுவது: சேவா இன் ஆக்‌ஷன், NGO, பெங்களூரு.

ஸ்வவ்லம்பன் திட்டம்

மனநலக் காப்பீட்டுக்கான புரட்சிகரமான திட்டங்களில் ஒன்று ஸ்வவ்லம்பன் நலக் காப்பீடு. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனமும் இணைந்து இதனைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தின.

  • யார் விண்ணப்பிக்கலாம்?: மனநலப் பிரச்னை அல்லது மனநலப் பாதிப்பு கொண்டோர், அவர்களுடைய குடும்பத்தினர், அவர்களுடைய வருடாந்திர வருவாய் ரூ3லட்சத்துக்குக் குறைவாக உள்ளபோது.

  • வழங்கப்படும் ஆதரவின் அளவு: ஒவ்வொரு நபருக்கும் அல்லது ஒவ்வொரு குடும்பத்துக்கும் காப்பீட்டுத்தொகையாக ரூ355 செலுத்தவேண்டும். மனநலப் பிரச்னை கொண்டோர் அல்லது அவருடைய குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர் ஓர் அடையாளச் சான்றிதழ் மற்றும் ஊனத்துக்கான சான்றிதழைச் சமர்ப்பிக்கவேண்டும்.

  • யாரை அணுகுவது: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் விவரங்களை இங்கே பெறலாம்.

ஆட்டிசத்துக்கான ஸ்டார் நலக் காப்பீடு

ஆட்டிசம் வகைக் குறைபாடுகளைக்கொண்ட குழந்தைகளுக்காக ஸ்டார் ஹெல்த் மற்றும் அல்லைட் இன்ஷூரன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள குழுக் காப்பீட்டுத் திட்டம் இது. இந்தக் காப்பீடு ஆட்டிசம் வகைக் குறைபாடுகளைக்கொண்ட சிறுவர் குழுக்களுக்குப் பொருந்தும். இந்தத் திட்டத்தில் ஆட்டிசத்துடன் தொடர்புடைய மருத்துவ மற்றும் அறுவைச்சிகிச்சை சிக்கல்களுக்கான மருத்துவமனையில் தங்கிப் பெறும் சிகிச்சைகளுக்குக் காப்பீடு வழங்கப்படுகிறது. உதாரணமாக, வலிப்பு, மென் திசு மற்றும் எலும்புக் காயங்கள், தசைப் பிடிப்புகளுக்கான மருத்துவ மற்றும் அறுவைச்சிகிச்சைச் செயல்முறைகள் மற்றும் அனைத்துத் தொற்றுநோய்களும்.

  • யார் விண்ணப்பிக்கலாம்?: ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள், ஏற்கெனவே இந்தப் பிரச்னை உள்ளது கண்டறியப்பட்டோர் உள்பட. வருவாய் உச்சவரம்பு இல்லை

  • வழங்கப்படும் ஆதரவின் அளவு: குழுவில் உள்ள குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ரூ 1லட்சம்

  • யாரை அணுகுவது: அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஸ்டார் ஹெல்த் மற்றும் அல்லைட் இன்ஷூரன்ஸ் அலுவலகம்

வாழ்க்கைக்கான உதவி

மாற்றுத்திறனாளிகள் சொந்தத் தொழில் தொடங்குவதற்கு வங்கிக்கடன் கோரி விண்ணப்பிக்கலாம். இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கின்றன, சில திட்டங்களுக்கு மாநில அரசுகளின் மானிய ஆதரவும் உண்டு.  

மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் அதிலிருந்து மீண்டுவிட்டால், அவருடைய ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் முன்னேற்றம் காணப்பட்டால், அவர் தொழில்சார்ந்த புனர்வாழ்வைப் பெறலாம். இங்கே அவருக்குத் தொழில்சார்ந்த திறன்களில் பயிற்சியளிக்கப்படும், பணித்திறன்கள் கற்றுத்தரப்படும், பணியில் அமர்த்தப்படும், அங்கே அவரைத் தக்கவைப்பதற்கான உதவிகள் வழங்கப்படும். ஆனால், ஒருவேளை அவர்கள் சொந்தமாகத் தொழில்தொடங்க விரும்பினால், இந்தத் திட்டங்கள் நிதி உதவி வழங்குகின்றன:

ஆதாரா திட்டம்

இந்தத் திட்டத்தைக் கர்நாடக அரசின் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான அதிகாரமளித்தல் துறை வழங்குகிறது.

  • நிதி உதவியின் அளவு: தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் சொந்தத் தொழில் தொடங்குவதற்கு ரூ2-5 லட்சம்வரை கடன் பெறலாம், குறைந்த வட்டி விகிதத்தில் அதனைத் திரும்பச்செலுத்தலாம்.

  • யார் விண்ணப்பிக்கலாம்?: இந்தத் திட்டத்துக்கு யார் தகுதிபெறலாம் என்பது ஒருவருடைய வருடாந்திர வருமானம், ஊனமுற்றோர் சான்றிதழ் மற்றும் பிற அம்சங்களைச் சார்ந்து அமைகிறது.

உத்யோகினி திட்டம்

கர்நாடக அரசின் சுய வேலைவாய்ப்புத் திட்டம் இது. சுய வேலைவாய்ப்பின்மூலம் ஒருவர் சொந்தக்காலில் நிற்க உதவுகிறது.

  • யார் விண்ணப்பிக்கலாம்?: எந்தவிதமான ஊனத்தைக்கொண்ட பெண்களும்

  • நிதி உதவியின் அளவு: இவர்கள் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்தியக் கிராம வங்கிகளிடமிருந்து(RRBகள்) ரூ 1லட்சம்வரை கடன் பெறலாம். பெண் மாற்றுத்திறனாளிகள் இந்தக் கடனைப் பெற எந்த வருவாய் உச்சவரம்பும் தெரிவிக்கப்படவில்லை. இத்துடன், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கடனில் முப்பது சதவிகிதத்தை மாநிலப் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மானியமாக வழங்குகிறது. அவர்கள் லாபம் தரக்கூடிய எந்தவொரு தொழில் திட்டத்தையும் மேற்கொள்ளலாம். உதாரணமாக, பேக்கரி வைத்தல், பட்டு நெசவு, செருப்புகள் தயாரித்தல், இன்னும் பல.

  • யாரை அணுகுவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இயக்குநரகம். விவரங்களை இங்கே பெறலாம்.

தங்குதல்/பாதுகாப்புக்கான உதவி

மானஸ கேந்த்ராக்கள்

மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்வதற்காகக் கர்நாடக அரசு அமைத்துள்ள விசேஷ இல்லங்கள் இவை. வெள்ளோட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசாங்கம் ஐந்து மாவட்டங்களில் மானஸ கேந்த்ராக்களை அமைப்பதாக முன்வைத்துள்ளது: பெங்களூரு, பெல்காம், பெல்லாரி, ராய்ச்சூர் மற்றும் ஷிமோகா. மார்ச் 30, 2016 நிலவரத்தின்படி, பெங்களூரு மையம் அமைக்கப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது.

  • யார் விண்ணப்பிக்கலாம்?: எந்தவொரு மனநலப் பிரச்னை கொண்டவரின் BPL குடும்பங்கள்

  • நிதி உதவியின் அளவு: இந்த மையங்கள் பாதிக்கப்பட்டோருக்கு உணவு, இருப்பிடத்தை வழங்குகின்றன. கேந்த்ராக்களில் நீண்டகால மற்றும் குறுகியகாலப் புனர்வாழ்வு மையங்கள் உள்ளன.

  • யாரை அணுகுவது: ஒருவர் தனக்கு அருகே உள்ள கேந்த்ராவைப்பற்றி அறிய விரும்பினால், அந்த மாவட்டத்தின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரைத் தொடர்புகொள்ளலாம்.

இத்துடன், சட்டப்படி ஒவ்வொரு மாவட்ட ஆளுநரும் மாதத்தில் அரை நாள் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள், பிரச்னைகளைக் கவனித்து ஆவன செய்யவேண்டும். மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அதேபோன்ற மற்றவர்களைத் தொடர்புகொண்டு ஒன்றாக மாவட்ட ஆளுநரைத் தொடர்புகொள்ளலாம், தங்களுடைய பிரச்னைகளைப் பேசலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org