நான் பரபரப்பாகவும் எரிச்சலாகவும் உணர்கிறேன்: அதற்கு ஹார்மோன்கள்தான் காரணமா?

மனநிலை மாறுபாடுகள், எரிச்சலைடதல், பித்துப் பிடித்தநிலை – பெண்களில் இந்த நடத்தைகள் வழக்கமாக ஹார்மோன்கள் அல்லது PMS உடன் தொடர்புடையான. நாம் ஹார்மோன்கள் நமது நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை உணர்ச்சி வசப்படச் செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொள்கிறோம் – ஆனால் அவற்றின் தொடர்பு என்ன? நமது உணர்வுநலன் நமது உடலின் ஹார்மோன்களுடன் இணைந்துள்ளது எப்படி?

ஹார்மோன்கள் என்றால் என்ன?

ஹார்மோன்கள் நமது மூளையிலிருந்து உறுப்புகளுக்கு செய்திகளை எடுத்துச் செல்லும் வேதிப்பொருட்கள் ஆகும், அவை இந்த உறுப்புகளின் செயல்பாடு மற்றும் நலனைக் கட்டுப்படுத்துகின்றன. அவை வெவ்வேறு உறுப்புகளின் செல்கள் அவற்றின் வேலையைச் செய்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் உடலின் அமைப்பு ஆகும். ஹார்மோன்கள் அடிப்படை மனிதச் செயல்கள் (சாப்பிடுதல், தூங்குதல் போன்றவை), சிக்கலான செயல்பாடுகள் (பாலியல் ஆசை மற்றும் இனப்பெருக்கம்), மற்றும் நமது உணர்ச்சிகள் மற்றும் மனநிலையைக் கட்டுப்படுத்துகிறது.

ஹார்மோன்கள் எங்கிருந்து வருகின்றன?

ஹார்மோன்கள் நாளமில்லாச் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாளமில்லா சுரப்பி அமைப்பு குறிப்பிட்ட இலக்குகளைக் கொண்ட பல வகைச் சுரப்பிகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, பிட்யூட்டரி சுரப்பி வளர்ச்சிக்கான ஹார்மோன்களை வெளியிடுகிறது; கணையச் சுரப்பி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக இன்சுலினை உற்பத்தி செய்கிறது;  அண்டம் மற்றும் விந்தகச் சுரப்பிகள் முறையே பெண் மற்றும் ஆண் பாலுணர்வு ஹார்மோன்களை வெளிவிடுகின்றன. ஒவ்வொரு சுரப்பியினால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் இரத்த்தின் வழியாக உடலினுள் கடத்தப்படுகிறது.

ஆனால் ஹார்மோன்கள் எனது உணர்வுகள் குறித்து என்ன செய்கின்றன?

பெண்கள் அவர்களின் கருவுறுதல் மற்றும் மாதவிடாய் சுழற்சிகளை கட்டுப்படுத்தும் இரு இனப்பெருக்க ஹார்மோன்களாக: ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரானைப் பெற்றுள்ளனர். இவை தவிர, நமது உடலில் பல்வேறு வேதிச்செயல்களைக் கட்டுப்படுத்தும் பல்வேறு ஹார்மோன்களும் உள்ளன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹார்மோன்கள் அதிகமாக வேலைசெய்யும் போது (அவை சில இனப்பெருக்க வாழ்வு நிலைகளைச் செய்வதால்),மூளை வேறு சில ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் ஈடுகட்டலாம் – அவை நமது உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் செரட்டோனின் மற்றும் எண்டோர்பின் போன்றவை.

இந்த இனப்பெருக்க வாழ்வு காலகட்டங்களில் புதிய மன அழுத்தம் ஏற்படுத்துவையும் நமது வாழ்வில் நுழைகின்றன. பருவமடைவதின் போது, ஒருவரின் பாலியல் குறித்தான சக அழுத்தங்கள் மற்றும் குழுப்பங்களால் ஏற்படும் சவால்கள்; தாய்மையடையும் போது, குழந்தையைப் பற்றிய கவலைகள், வேலை மற்றும் பொறுப்புகளை சமாளிப்பது குறித்தான கவலைகள். ஒருவரின் ஹார்மோன் மாறுபாடுகள் மற்றும் சூழலில் உள்ள மன அழுத்தங்களை ஏற்படுத்துபவையின் கலவையானது அவளை உணர்வுரீதியில் சரியால்லாதுபோலும், அவளது உணர்வுகள் குறித்து அவளது கட்டுப்பாடு குறைந்ததாகவும் உணரச் செய்கிறது, அத்துடன் மனநல நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளவராக உருவாக்குகிறது.

பதின்பருவத்தினர் உற்சாகம் இன்றி, மந்தமாக மற்றும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருப்பது ஏன்?

பருவமைடதின் போது, பிட்யூட்டரி சுரப்பி ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைச் சுரக்கத் தொடங்குகிறது. பருவமடைதின் போது ஹார்மோன் அளவில் ஏற்படும் மாறுபாடுகள் ஒரு பெண்ணை கவலையாக உணரச் செய்யலாம் அல்லது மந்தமாக வைத்திருக்கலாம். பருவமடைவதின் போது, மூளை இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது; இதற்கு வளரிளம் பருவத்தின் தங்களின் உணர்வுத் தூண்டல்கள் மீது வலுவான கட்டுப்பாட்டினைப் பெற்றிருக்கவில்லை. இதனுடன் பருவமடைவதின் போது ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளும் இணைந்து ஒரு பருவ வயதினரை மன அழுத்தத்துக்குள்ளாக்குகிறது. 

இந்த நிலையில், ஹார்மோன்கள் பிற காரணிகளுடன் இணைந்து, இளம் பெண்ணின் அழுத்தங்களை அதிகரிக்கலாம்.  அவையாவன:

  • மாதவிடாயைப் பற்றிய உணர்வதன் கடினத்தன்மை
  • மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாறுபாடுகள்: டிஸ்மெனோரரியா உடைய இளம்பெண்கள் அவர்களின் மாதவிடாயை மன அழுத்தம் மிகுந்ததாக காண்கின்றனர்
  • மார்பகம், பருக்கள், உடல் முடிகளின் வளர்ச்சி, உடல் எடை அதிகரிப்பு அல்லது குறைவிற்கான சாத்தியங்களால் ஏற்படும் உடல் தோற்றப் பிரச்சினைகள்
  • அவர்களின் பாலியல் குறித்த அதிக விழிப்புணர்வு, மற்றும் எதிர் பால் (தன் பால்) இனத்தவர் மீதான ஈர்ப்பு; இது அனுமதிக்கப்படாத உறவுகள் குறித்து அவர்கள் கேள்விப்படும் செய்திகள் அல்லது அவர்களின் பெற்றோர் காதல் உறவுகளில் ஈடுபட அனுமதிக்காமை ஆகியவற்றுடன் முரண்பாடை ஏற்படுத்தலாம்.
     

நான் எனது மாதவிடாய்க்கு முன்பு பித்துப்பிடத்தது போல் உணர்வது ஏன்? அது PMS ?

பருவமைடைந்ததிலிருந்து மாதவிடாய் நிற்றல் வரை, ஒரு பெண்ணின் ஹார்மோன்கள் அவளின் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகின்றன. ஒரு சுழற்சியின் போது, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் மற்றும் டெஸ்டோஸ்டிரான் – என்னும் மூன்று ஹார்மோன்கள் – குறிப்பிட்ட அமைப்பில் அதிகரித்துக் குறைகிறது. முதல் இரண்டு வாரங்களில், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து, உங்கள் மனநிலை மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது. இரண்டாம் வாரத்தில், டெஸ்டோஸ்டிரான் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த அதிக ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரான் அளவுகளின் கலவையானது நல்ல மனநிலைக்கும் பாலுணர்வுச் செயலுக்கும் இட்டுச் செல்லும். மூன்றாம் வாரத்தில், புரோஜெஸ்டிரான் அதிகரிக்கிறது (ஈஸ்ட்ரோஜன் குறைகிறது) மற்றும் மந்தமான மனநிலைக்கு வழிவகுக்கிறது; சில பெண்கள் இந்தக் காலகட்டதில் உணர்வுரீதியாக மந்தமாக உணரலாம். நான்காம் வாரத்தில், ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது; இது எரிச்சல், உடல் வலி மற்றும் உணர்வுநிலைக்கு இட்டுச் செல்லலாம். அதேவேளையில், புரோஜெஸ்டிரான் அளவும் குறைவதால், சில பெண்கள் ஆற்றலுடன் உணரலாம்.

மாதவிடாய் முந்தைய குறிகள்(PMS) என்பவை பெண்கள் அவர்களின் மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் உணரும் அறிகுறிகளின் தொகுப்பு ஆகும். இந்த நேரத்தில் பெரும்பாலான பெண்கள், சோர்வாக, எரிச்சலைடைபவர்களாக அல்லது ஓய்வற்றவர்களாக உணர்வார்கள். அவர்கள் வழக்கத்தை விட அழுத்தங்களுக்கு குறைந்த சகிப்புநிலை அல்லது அதிக எதிர்வினையுடன் இருப்பார்கள். இந்த சுகமின்மை அவர்களின் மாதவிடாய் தொடங்கியதுடன் மட்டுப்படுகிறது. பெரும்பாலான பெண்கள், அவர்களின் PMS ஐச் சமாளிப்பதற்கு உதவுவதற்காக ஓய்வு, உணவு மற்றும் உணவுமுறை போன்ற சமாளிக்கும் முறைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.

மிகக் குறைந்த விழுக்காடு பெண்களே மாதவிடாய்க்கு முந்தைய அமைதியின்மைக் குறைபாட்டை Premenstrual Dysphoric Disorder (PMDD) உணர்கின்றனர். PMDD உடைய பெண்கள் அவர்களின் மாதவிடாய்க்கு முன்பு மனச்சோர்வின் அறிகுறிகளை உணரலாம்:

  • இக்குறைபாடுகளால் ஏற்படும் வேதனை மிக அதிகமாக இருப்பது
  • மந்தமாக அல்லது கவலையாக உணர்தல், விட்டு விட்டு கண்ணீர்
  • உணர்வுகளை சமாளிக்க முடியாமை; அவர்களால் வலுவிழந்ததாக உணர்தல்
  • கடும் உடல் வலிகள்
  • சில பெண்களுக்கு தற்கொலை எண்ணங்களும் இருக்கலாம்

PMDD குறைந்த விழுக்காடு பெண்களை மட்டுமே பாதிக்கிறது. நீங்கள் உங்கள் மாதவிடாய்க்கு முந்தைய வேதனைகளை நீங்கள் வழக்கமாகச் செய்யும் செயல்களான (வேலைக்குச் செல்லுதல், சந்திப்புகளில் கலந்து கொள்ளுதல், சில குறிப்பட்ட பணிகளைச் செய்தல் இன்னும் பலவற்றை) தவிர்ப்பதின் மூலம் சமாளிக்க முயற்சித்தால், உங்கள் நிலையைக் குறித்து உங்களின் மகளிரியல் மருத்துவரிடம் பேசுங்கள். அவர்கள் உங்களிடம் சில மாதங்களுக்கு ஒரு மனநிலை அட்டவணையை வைத்து, உங்களின் தினசரி மனநிலைகளை உங்கள் மாதவிடாய் சுழற்சியின் நாட்களுடன் பதிவுசெய்யும் படி பரிந்துரைக்கலாம். இது உங்கள் மனநிலை மாற்றங்கள் உங்கள் மாதவிடாயுடன் தொடர்புடையதா என்பதைக் கண்டறிந்து, உதவியை நாடுவதில் உங்களுக்கு உதவலாம்.

கர்ப்பகாலத்தில் சில பெண்கள் மின்னுகிறார்கள், ஆனால் மற்றவர்கள் சிலர் மந்தமாகவும் கவலையாவும் இருக்கிறார்கள் ஏன்?

கர்ப்பகாலத்தில், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் உற்பத்தியில் அதிகரிப்பு நிகழ்கிறது. இது பெண்களின் வாழ்வில் மற்ற காலகட்டங்களை விட அதிக ஹார்மோன் மாறுபாடுகள் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். ஈஸ்ட்ரோஜென் கருவுக்கு சத்துக்களைக் கடத்துவதில் கருப்பை மற்றும் நஞ்சுக்கொடிக்கு உதவுகிறது, மேலும் வயிற்றிலிருக்கும் குழந்தையின் நலனையும் உறுதிப்படுத்துகிறது. மூன்றான் பருவத்தின் கடைசியில், ஈஸ்ட்ரோஜன் பால் குழல்களின் வளர்சியில் உதவுகிறது. இருப்பினும், கர்ப்பகாலத்தில் உற்பத்தியாகும் ஈஸ்ட்ரோஜெனின் அளவு, ஒரு பெண் கர்ப்பமில்லாமல் இருக்கும் போது சுரப்பதை விட மிக அதிகம். இது குமட்டலுக்கு இட்டுச் செல்லலாம்.

புரோஜெஸ்டிரான் அளவும் அதிகரிக்கிறது, இந்த ஹார்மோன் மூட்டுகள் மற்றும் தசைநார்களை இளகச் செய்கிறது, மேலும் மூன்று பருவங்களாகச் சுரந்து கருப்பையை குழந்தையைத் தாங்குவதற்காக விரிவடையச் செய்தற்காக தயார் செய்கிறது.

இவை தவிர மற்ற ஹார்மோன்களும் செயலில் உள்ளன. புரோலாக்டின் உடலினை தாய்ப்பால் கொடுக்கத் தயாராவதற்கு உதவுகிறது, மேலும் ஆக்சிடோசின் குழந்தை நகர்வுக்கானத் தசைச்சுருக்கங்களைத் தூண்டுகிறது.

இந்த நேரத்தில், பெரும்பாலான ஹார்மோன்கள் பாதுகாப்பவையாக உள்ளன; அவை தாய் மற்றும் குழந்தையின் நலத்தை உறுதிப்படுத்துவதற்காகப் பணியாற்றுகின்றன. ஆனால் உள்ளார்ந்த மற்றும் வெளிப்படையான அழுத்தக்காரணிகள் உணர்ச்சித் துன்பங்களை ஏற்படுத்தலாம்:

  • குழதையின் நலத்தை பற்றிய தாயின் கவலை
  • உடல் தோற்றப் பிரச்சினைகள்
  • குழந்தைப் பெறுவதை பற்றிய பயம்
  • உறவு அல்லது குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள்
  • தாய்மை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டையும் சமாளிப்பது பற்றிய கவலை
  • பொருளாதாரம் பற்றிய கவலை
  • குடும்பத்திலிருந்து ஆண் குழந்தை வேண்டுமென்ற அழுத்தம்

ஹார்மோன் மாறுபாடுகளால், பெண்கள் எரிச்சலடைபவர்களாகவும் அல்லது மந்தமாகவும் இருக்கலாம். இது வழக்கத்திற்கு மாறானதோ அல்லது அசாதாரணமானதோ அல்ல. தூக்கப் பிரச்சினைகளால், அவள் வழக்கத்தை விட அதிக மறதியுடனும் உணர்சிவயப்பட்டும் இருக்கலாம்.

புதிய தாய்மார்கள் எப்போதும் சோர்வாக அல்லது தூக்கமின்றி இருக்கிறார்கள் ஏன்?

கர்ப்பகாலத்தின் பிந்தைய நிலைகளில், உடல் அதிக அளவு ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரான் அளவுகளைப் பெற்றுள்ளது. குழந்தை பிறந்த பிறகு, இந்த ஹார்மோன்களின் அளவு கடுமையாகச் சரிகிறது. இந்த நேரத்தில் உருவாகும் ஹார்மோன்கள் (ஆக்சிடோசின், தாய் மற்றும் குழந்தையின் பிணைப்பை ஊக்குவிக்க) குழந்தையின் கவனிப்பை நோக்கமாகக் கொண்டு உருவானவையாக உள்ளன. பெண்கள் தாய்மைக்கு தன்னைச் சரிசெய்து கொள்வதற்கும் போராடுகின்றனர்; மேலும் போதுமான தூக்கம் மற்றும் உணவைப் பெறுவது கடினமாக உள்ளது. அது தாய் எளிதில் பாதிக்கப்படும் காலகட்டமாக உள்ளது; எனவே குழந்தைப் பேறுக் கவலைகள் சாதாரணமாவை. சில பெண்களுக்கு குழந்தைப் பிறப்புக்குப் பிந்தைய மனச்சோர்வும் ஏற்படலாம் postpartum depression.

சில தனிப்பட்ட அழுத்தக் காரணிகளும் இந்தக் காலகட்டத்தில் உள்ளன:

  • குழந்தையை நன்றாகக் கவனிக்க இயலுமா என்ற தாயின் கவலை
  • குழந்தையின் பாலினம், அளவு, நிறம் குறித்து தாயைக் குற்றம் சாட்டுதல் அல்லது குடும்பத்தில் கருத்து வேறுபாடு
  • குழந்தையைக் கவனிப்பதில் ஆதரவு குறைபாடு – குறிப்பாக தனிக்குடும்பங்களில்
  • உணர்வுரீதியிலான ஆதரவின்மை
  • அவள் சோர்வாக மற்றும் உணர்வுரீதியில் மந்தமாக இருப்பினும் தாய்மையின் மகிழ்ச்சியால் மினு மினுக்க வேண்டிய அழுத்தம்
     

அவள் உணர்ச்சிகரமாக இருக்கிறாள். அது மாதவிடாய் நிற்றலாகத் தான் இருக்க வேண்டும்

பெரும்பாலான பெண்களுக்கு,  மாதவிடாய் நிற்றல் அவர்களின் நாற்பதுகளின் இறுதியிலிருந்து கடைசிவரை நிகழ்கிறது. மாதவிடாய் நிற்றிலின் போது, ஈஸ்ட்ரோஜென் அளவு உடலில் குறையத் தொடங்குகிறது, கருவகங்கள் வேலை செய்வதை நிறுத்தத் தொடங்குகின்றன. சில ஆய்வுகள் ஈஸ்ட்ரோஜென் நினைவு நிலைகளைப் பாதிக்கலாம் என்கின்றன.  மாதவிடாய் நிற்றலின் போது நிகழும் ஹார்மோன் மாறுபாடுகள் பெண்களில்  பின்வருனவற்றைத் தூண்டலாம்: தூக்கப் பாதிப்புகள், எரிச்சலடைதல், மனநிலை மாற்றங்கள், நினைவு இழப்பு மற்றும் கவனம் செலுத்துவது கடினமாதல்.

மாதவிடாய் நிற்றல் பெண்கள் பல்வேறு அழுத்தக்காரணிகளை எதிர்கொள்ளும் நேரமும் ஆகும். ஒரு பெண் மாதவிடாய் நிற்றலின் போது பெற்றோர் அல்லது கணவரின் இழப்பு; குழந்தைகள் வீட்டை விட்டு செல்லுதல் போன்ற குறிப்பிடத்தகுந்த வாழ்க்கை மாற்றங்களைச் சந்திக்கின்றனர். ஏற்கனவே குழந்தைகள் இருப்பினும், கருவளத்தை இழப்பது பெண்களுக்கு வேதனையானதாகும். கடும் ஹார்மோன் சிதைவுகளுடைய பெண்கள் மனச்சோர்வு அல்லது கவலையால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

நான் அறிந்திருக்கவேண்டிய வேறு ஏதேனும் ஹார்மோன்கள் உள்ளனவா?

தைராய்டு

இந்த ஹார்மோன் எல்லா உறுப்புகளும் சரியாக வேலை செய்வதை உறுதிப்படுத்துகிறது, மேலும் உடலின் உணவை ஆற்றலாக மாற்றுகிறது. குறைந்த செயல்பாடுடைய தைராய்டு சுரப்பி என்பது உடலின் செயல்முறைகள் வழக்கதை விட மெதுவாக வேலைசெய்வதைக் குறிக்கிறது; இது ஒரு நபரை சோம்பேறியாக, மந்தமாக மற்றும் உணர்வுரீதியில் குறைந்தவராக் இருப்பதற்குக் காரணமாகலாம். குறைந்த தைராய்டு அளவுள்ள நபர்கள் (ஐப்போதைராய்டிசம்) மனநிலைக் குறைவு மற்றும் மனச்சோர்வால் பாதிக்கப்படலாம்.

தைராய்டு அதிகமாக செயல்பாட்டிலுள்ளபோது, ஒரு நபர் பதற்றமாக, எரிச்சலாக அல்லது ஓயவின்றி உணர்வார், அதிக இதயத் துடிப்பு வீதம் இருக்கும், மேலும் எளிதில் எடை குறையலாம். அத்தகைய நபர்கள் கலக்கமான மனக் குறைப்பாட்டால் பாதிக்கப்படலாம்.

கோர்டிசால்

இது அழுத்த ஹார்மோன் என்றும் அறியப்படுகிறது. கோர்டிசால் பல செயல்பாடுகளைக் கொண்டுள்ளது: இது வளர்சிதைமாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கர்ப்பகாலத்தில், கருப்பையின் வளர்ச்சியல் உதவுகிறது. அதிகப்படியான கோர்டிசால் அளவு கடும் எடை அதிகரிப்பு மற்றும் இரத்த அழுத்த அதிகரிப்புக் காரணமாகலாம். உணர்வுரீதியில், இது கவலை மற்றும் மனச்சோர்வுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. குறைந்த கோர்டிசால் அளவுள்ள நபர் மனநிலை மாறுதல்களை உணரலாம்.

ஆக்சிடோசின்

இது காதல் அல்லது அணைப்பு ஹார்மோன் என்று அறியப்படுகிறது. குழைந்தைப் பெறுதலை தூண்டுதல் மற்றும் பால் சுரப்பை ஊக்குவிப்பதுடன், ஆக்சிடோசின் தாய் மற்றும் குழந்தைப் பிணைப்பில் உதவுதலுக்கும் அறியப்படுகிறது. இது சமூக தொடர்புகள் மற்றும் பாலுணர்வுத் தூண்டுதல்களை இயக்குகிறது. குறைந்த ஆக்சிடோசின் மனச்சோர்வு அறிகுறிகளுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.

இப்பகுதி மரு அருணா முரளிதர், மூத்த உடல்பருமன் மற்றும் மகளிரியல் ஆலோசகர், ஃபோர்டிஸ் லா ஃபெம்மே, பெங்களூர்; மரு அஸ்லேசா பகாடியா, குழந்தைப்பிறப்பு சார்ந்த உளவியலாளர், பெங்களூர் ஆகியோரின் உள்ளீடுகளுடன் எழுதப்பட்டது.

உசாத்துணைகள்

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org